TNPSC Thervupettagam

கவனம் சிதறிவிடலாகாது!

July 20 , 2020 1642 days 724 0
  • எத்தனை எத்தனையோ பிரச்னைகளுக்கும் பின்னடைவுகளுக்கும் இடையிலும்கூட, ஒரேயடியாகத் தளர்ந்துவிடாமல் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே மிகப் பெரிய ஆறுதல்.

  • கொவைட்-19 கொள்ளை நோய் பரவத் தொடங்கியதுமுதல், உலகிலுள்ள எல்லா சுகாதாரப் பணிகளும் முடங்க நேரிட்டன. சுகாதாரப் பணியாளர்களின் ஒட்டுமொத்த கவனமும் அதிவேகமாகப் பரவிவரும் கொவைட்-19 -ஐ எதிர்கொள்வதில் குவிந்திருக்கிறது.

  • அதையும் மீறி, நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடவில்லை என்பதில் சற்று ஆறுதல்.

இந்தியாவில் சிசு மரணம்

  • இந்திய மக்கள்தொகை ஆணையர் வெளியிட்டிருக்கும் மாதிரிப் பதிவேடு திட்டப் புள்ளி விவரம் ("எஸ்ஆர்எஸ் டேட்டா') நம்பிக்கையளிக்கிறது. இந்தியாவில் சிசு மரணம் குறித்த புள்ளிவிவரங்கள் அடங்கிய அறிக்கை அது.

  • அந்த அறிக்கையின்படி, 2013-இல், 1000 குழந்தைகளுக்கு 40 குழந்தைகள் என்றிருந்த சிசு மரண எண்ணிக்கை 2018-இல் 1000 குழந்தைகளுக்கு 32-ஆகக் குறைந்திருக்கிறது.

  • ஆண்டு சராசரி, 1.6 புள்ளிகள் குறைந்திருப்பதாகத் தெரிகிறது. நிகழாண்டில் நிலைமை எப்படியிருக்கப்போகிறது என்று தெரியாவிட்டாலும்கூட, 2018 வரை நிலைமை முன்னேறி வந்திருப்பது மகிழ்ச்சிதானே!

  • இந்த மாற்றத்துக்கு, பல்வேறு காரணங்களைக் கூறமுடியும். தாய்-சேய் நலனில் இப்போது மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

  • கர்ப்பிணிகளுக்கும், பிரசவம் முடிந்த தாய்மார்களுக்கும் அரசு, பல்வேறு திட்டங்களை வகுத்து அவர்களது நலன் பேணுவது மிக முக்கியமான காரணம். பல குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதும், அரசு மட்டுமல்லாமல் தனியார் தொண்டு நிறுவனங்களும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும், மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும்கூட இதற்குக் காரணங்கள்.

கவலையளிக்கும் தகவல்கள்

  • அதேநேரத்தில், இந்த அறிக்கை சில கவலையளிக்கும் தகவல்களையும் வழங்கியிருக்கிறது. நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையே தாய்-சேய் நலனிலும் சரி, சிசு மரணத்திலும் சரி, ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகள் நலனிலும் சரி வேறுபாடு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

  • அதேபோல, மாநிலங்களுக்கு இடையேயும் சமச்சீரான நிலைமை காணப்படவில்லை. தேசிய அளவில், பிறக்கும் குழந்தைகளில் 31 குழந்தைகளில் ஒரு குழந்தை முதலாண்டில் உயிரிழக்கிறது என்றால், அதுவே கிராமப்புறங்களில் 28 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்கிற நிலைமை காணப்படுகிறது.

  • நகரங்களில் ஆண்டுதோறும் சராசரியாக 42 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழக்கிறது.

  • அந்த அறிக்கை வெளியிட்டிருக்கும் இன்னொரு செய்தி, பெற்றோரின் மனப்போக்கில் மாறுதல் ஏற்பட்டிருப்பதை காட்டுகிறது. 2015-17 இல், 1000 ஆண் குழந்தைகளுக்கு 896 பெண் குழந்தைகள் பிறப்பு என்கிற நிலைமை, 2016-18 இல் 899 பெண் குழந்தைகள் என்று அதிகரித்திருக்கிறது.

  • இது மிகச்சிறிய அளவிலான மாற்றம்தான் என்றாலும்கூட, முன்னேற்றத்தின் அறிகுறி என்று எடுத்துக் கொள்ளலாம்.

  • பெண் குழந்தைகளின் சிசு மரணம் ஆண் சிசுக்களின் மரணத்தைவிட அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறித்த தீவிர ஆலோசனை தேவைப்படுகிறது.

  • சிசு மரண அறிக்கையின்படி, இந்தியாவிலேயே மிக மோசமான நிலை, மத்தியப் பிரதேசத்தில்தான் காணப்படுகிறது. அங்கு, பிறக்கும் 1000 குழந்தைகளில் 48 குழந்தைகள் முதலாண்டிலேயே உயிரிழக்கின்றன. அதேபோல, ஐந்து வயதுக்குக் கீழேயுள்ள குழந்தை மரணங்களிலும் மத்தியப் பிரதேசம் முன்னிலை வகிக்கிறது.

  • இதேபோல, வட மாநிலங்கள் பலவற்றிலும் மிகக் குறைந்த அளவே மாற்றங்கள் காணப்படுகின்றன. அவற்றுடன் ஒப்பிடும்போது, தென்னிந்திய மாநிலங்களில் நிலைமை எவ்வளவோ மேல்.

  • சொல்லப்போனால், இந்தியாவிலேயே, தமிழகமும் கேரளமும் ஏனைய மாநிலங்களைவிட, தாய்-சேய் நலனில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.

மாற்றப்பட வேண்டிய நிலைமை

  • ஒரு மாநிலத்தில், 1000 குழந்தைகளில் ஒரு குழந்தை மரணம் என்பது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் மாநில அளவில் ஆண்டுதோறும் பிறக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளைக் கணக்கிலெடுக்கும்போது, தேசிய அளவில் இதுவே பல லட்சம் குழந்தைகள் ஆகும் என்பதை மறந்துவிடக் கூடாது.

  • சிசு மரண விகிதமும் குழந்தைகள் மரண விகிதமும் மிகக் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு, அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

  • உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலின்படி, பிரசவ கால தாய்மார்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, அவர்களுக்கு ஊட்டச்சத்தும் போதிய மருத்துவக் கண்காணிப்பும் வழங்கப்படுகின்றன. பிரசவங்களும் முன்புபோல அல்லாமல் பாதுகாப்பான மருத்துவமனைப் பிரசவங்களாக மாறியிருக்கின்றன.

  • இவ்வளவெல்லாம் இருந்தும்கூட, சிசு மரணம் தொடர்கிறது என்பது, நமது திட்டங்கள் பல மாநிலங்களில் மேலும் முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது.

  • நகர்ப்புறங்களைவிட, கிராமப்புறங்களில் சிசு மரண எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் குறைந்திருப்பது மிகப்பெரிய வெற்றி என்றுதான் கூற வேண்டும். கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையே காணப்படும் சமச்சீரற்ற நிலைமை மாற்றப்பட வேண்டியது மிக மிக முக்கியம்.

  • யுனிசெஃப் நிறுவனம், உலகில், அடுத்த ஓராண்டில் ஐந்து வயதுக்கு கீழேயுள்ள ஆயிரம் குழந்தைகளில் 80 குழந்தைகள் போதுமான மருத்துவ உதவியோ, தடுப்பூசியோ இல்லாமல் உயிரிழக்கக்கூடும் என்று தெரிவிக்கிறது. அவற்றில் பெரும்பான்மையான குழந்தைகள் இந்தியாவில் காணப்படலாம்.

  • அதைத் தடுப்பதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டாக வேண்டும். கொவைட்-19 அதற்குத் தடையாக இருந்துவிடக் கூடாது!

 

நன்றி: தினமணி (20-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்