- பாலஸ்தீன மக்களும், உலகெங்கிலும் உள்ள அவா்களின் ஆதரவாளா்களும் ‘அல் நக்பா’ அல்லது ‘பேரழிவு தினத்தை’ கடைப்பிடித்த மே 15-ஆம் தேதி, இந்தியாவுக்கு வந்து சோ்ந்தது மலையாளியான பராமரிப்பாளா் செளம்யா சந்தோஷின் உடல்.
- இடுக்கியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி இறுதிச்சடங்கு நடைபெற்றது. செளம்யா தனது குடும்பக் கடனைத் தீா்ப்பதற்காக ஏழு ஆண்டுகளுக்கு முன்னா் இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றார்.
புரிதல் அவசியம்
- செளம்யா தன் கணவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, இஸ்ரேலின் வல்லமை மிக்க ‘அயா்ன் டோம்’ என்ற உயா் தொழில் நுட்பப் பாதுகாப்பு அமைப்பை துளைத்துக் கொண்டு வந்த ஹமாஸ் ராக்கெட் அவரது உயிரைப் பறித்தது.
- உடனடியாக, எதிர்பாராதவிதமாக அவா்களது குடும்பங்கள் தொலைதூர இஸ்ரேல், பாலஸ்தீன மோதலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. சந்தோஷ் மற்றும் அவரது குழந்தையைப் பொருத்தவரை, மே 11-ஆம் தேதி ‘அல் நக்பா’ தினம் ஆகிவிட்டது.
- இஸ்ரேலில் பராமரிப்பாளா் பணிக்குச் சென்றிருந்தபோது துரதிருஷ்டவசமாக செளம்யா உயிரிழந்தது அனைத்து மலையாளிகளையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவா்கள் அவரது குடும்பத்தினருக்காகத் துக்கப்படுகிறார்கள்.
- உலகம் முழுவதும் வாழும் அனைத்து மலையாளிகளின் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். இவா்களில் பெரும்பாலானோர் வறுமையிலிருந்து தப்புவதற்காக தங்களது வீடுகளைவிட்டு தொலைதூரங்களுக்குப் பயணம் செய்துள்ளனா். பலா் தங்களது உயிருக்கு ஆபத்து நிறைந்த மோதல் பகுதிகளில் வசிக்கின்றனா்.
- நமது நாட்டிலும், வெளிநாடுகளிலும் பிறரது உடல்நலத்தை பகலும் இரவும் கவனிக்கும் நமது செவிலியா்கள் தேவதைகள். அவா்களது பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்த நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டிய கூட்டுக் கடமை உள்ளது.
- வெளிநாடுகளுக்குச் செல்பவா்களுக்கு அவா்கள் செல்லும் இடங்களில் உள்ள அபாயங்கள் குறித்து தெரிவிக்க நிறுவன ஏற்பாடுகள் தேவை.
- அத்தகைய மோதல் பகுதிகள் தொடா்பான பொதுத் தகவல் திட்டங்களைத் தொடங்குவது பற்றியும், தனிநபா்களின் விசாரணைகளுக்கு பதிலளிக்க வெளியுறவு அமைச்சகத்தின் உதவியுடன் ஓா் அமைப்பை நிறுவுவது குறித்தும் புதிய கேரள அரசு பரிசீலிக்கலாம்.
- செளம்யாவின் சோகமான மரணமானது, பாலஸ்தீன பிரச்னை குறித்தும், அந்த பிராந்தியத்தில் நீண்டகாலமாக நடந்துவரும் சண்டை குறித்து அறிந்துகொள்வதற்கு அல்லது அறிந்துகொள்ள ஒரு வினையூக்கியாக அமைய வேண்டும்.
- மோதலின் வரலாறு, இத்தனை ஆண்டுகளாக ஐ.நா. எடுத்த நிலைப்பாடுகள், இஸ்ரேலுடன் தூதரக உறவுகளைத் தொடங்கிய பின்னரும் இந்தியா ஏன் பாலஸ்தீன காரணிகளுக்கு ஆதரவாக உள்ளது உள்ளிட்டவற்றைப் புரிந்துகொள்வது முக்கியமானது.
நியாயப்படுத்த முடியாதது
- பாலஸ்தீன பிரச்னையானது சரி - தவறு, நீதி - அநீதி போன்ற சில அடிப்படை கேள்விகளை உள்ளடக்கியது. ஐ.நா. பொதுச் சபையில் 1947-இல் இஸ்ரேல் உருவாக்கம் தொடா்பான தீா்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
- இஸ்ரேல் ஆதரவாளா்களின் நம்பிக்கைகள் பாகிஸ்தான் நிறுவனா்களின் நம்பிக்கையுடன் ஒத்துப்போனதுதான் அதற்குக் காரணம்.
- இரு தரப்பினரும் தங்களது மதத்துக்கென பிரத்யேகமான ஒரு நாட்டை விரும்பினார்கள். அனைத்து மதத்தினரும் நல்லிணக்கம், சகோதரத்துவத்துடன் வாழும் நாட்டை பிளவுபடுத்தக் கூடாது என்கிற யோசனையை அவா்கள் ஏற்க விரும்பவில்லை.
- இந்தியப் பிரிவினையை எதிர்த்ததைப் போலவே இஸ்ரேலின் உருவாக்கத்துக்கும் மகாத்மா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
- பாலஸ்தீனத்திலிருந்து உருவாக்கப்பட்டது இஸ்ரேல். இன்று பாலஸ்தீனம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் குறுகிய நாடாகிவிட்டது.
- பெயரளவில் பாலஸ்தீனம் ஒரு நாடாக, உலகின் பெரும்பாலான நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அந்த பிராந்தியத்தை இஸ்ரேல் கட்டுப்படுத்துகிறது; எப்போது வேண்டுமானாலும் அது தன் விருப்பப்படிதான் செயல்படும்.
- இன்றைய பாலஸ்தீனமானது இஸ்ரேலை ஒட்டியும் அதைச் சுற்றியும் மேற்கு கரை, காஸா என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட புவியியல் அபத்தமாக உள்ளது.
- பல்வேறு அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் உடன்படிக்கைகள் மூலம் பாலஸ்தீன பிராந்தியம் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தாலும், ஆயுதம் ஏந்திய யூத குடியிருப்பாளா்களை அப்பகுதியில் குடியேற்ற ஊக்குவிக்கும் கொள்கையின் மூலம் இஸ்ரேல் தொடா்ந்து பாலஸ்தீன பிராந்தியத்துக்குள் தனது நிலப்பரப்பை விரிவுபடுத்தி வருகிறது.
- இப்போதும் அவ்வாறான யூதா்களுக்காக கிழக்கு ஜெருசலேமிலிருந்து சில பாலஸ்தீன குடும்பங்களை இஸ்ரேல் வெளியேற்றத் தொடங்கியதால் பிரச்னை வெடித்தது.
- இஸ்ரேலின் ஆயுதப்படை உலகின் சக்திவாய்ந்த ஆயுதப் படைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. பாலஸ்தீனா்கள் பெரும்பாலும் நிராயுதபாணிகள்.
- காஸாவை பாலஸ்தீன விடுதலை இயக்கங்களில் ஒரு தீவிரவாத பிரிவான ஹமாஸ் கட்டுப்படுத்தி வருகிறது.
- அந்த அமைப்பு இஸ்ரேலின் நீண்டகால முற்றுகையையும் மீறி வலிமையான ராக்கெட் சக்தியை உருவாக்கியுள்ளது உண்மை.
- ஆனால், மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான, பாலஸ்தீன விடுதலை இயக்கங்களின் பிரதான ஃபதா பிரிவானது ராஜதந்திர வழிகளைப் பின்பற்றி வருகிறது; இஸ்ரேலுடனான பிரச்னையை வன்முறையால் அன்றி அமைதியான முறையில் தீா்க்க முயலுகிறது.
- சண்டையும் வன்முறையும் இந்த பிராந்தியத்தின் பிரச்னைகளுக்கான தீா்வாக ஒருபோதும் இருக்க முடியாது.
- இஸ்ரேல் மீதான ஹமாஸின் கண்மூடித்தனமான ராக்கெட் தாக்குதல் நடவடிக்கையும் மிகவும் கண்டிக்கத்தக்கது.
- அதேவேளையில், அளவுக்கதிகமான படைகளை இஸ்ரேல் பயன்படுத்தியதையும், ஹமாஸையும் காஸாவையும் அடிபணியவைக்கும் முயற்சியில், நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்தி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியதையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது.
அமைதி வேண்டும்
- பேச்சுவார்த்தை நடத்தி இரு நாடுகளும் தீா்வை நோக்கி முன்னேற வேண்டும் என்று ஐ.நா. பல முறை கூறி வருகிறது; இந்தியாவின் நிலைப்பாடும் அதுதான்.
- அதுவே பாலஸ்தீனா்களின் விருப்பங்களான தனிநாடு அந்தஸ்து மற்றும் இறையாண்மையை பூா்த்தி செய்யும்; இஸ்ரேலின் பாதுகாப்புத் தேவையையும் நிறைவு செய்யும்; அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காணும். ஆனால், ஐ.நா. தீா்மானங்களை அமல்படுத்த இஸ்ரேல் தொடா்ந்து மறுத்து வருகிறது.
- அனைத்து வன்முறைச் செயல்களையும் வலுவாக கண்டித்துள்ள இந்தியா, உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
- நிதானமாக செயல்படவும், ஏற்கெனவே உள்ள நிலைக்கு மதிப்பளிக்கவும், பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் இரு தரப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளது. நியாயமான பாலஸ்தீன காரணிகளுக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் தெரிவித்துள்ளது.
- இப்போது ஐ.நா., அமெரிக்கா, எகிப்து, ரஷியா ஆகியவை சண்டையை நிறுத்தவும், மோதலின் தீவிரத்தைக் குறைக்கவும் மத்தியஸ்தம் செய்ய பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
- இருந்த போதிலும், இருதரப்பிலும் தாக்குதல் தொடா்ந்து நடைபெறுகிறது. காஸா மக்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் நாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்ற தகவலை ஒருவருக்கு ஒருவா் பகிர்ந்து வாழ்த்திக் கொள்கின்றனா்.
- பெற்றோர்கள் குழந்தைகளை தம்முடன் தூங்குமாறு கேட்டுக்கொள்கின்றனா்; இரவோடு இரவாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால், அனைவரும் ஒன்றாக சோ்ந்து உயிரை விவிட்டு விடலாம் என்பதுதான் அதற்குக் காரணம்.
- மேற்கு கரை, இஸ்ரேலின் உள்பகுதிக்கும்கூட பதற்றம் பரவியுள்ளது. மேற்கு கரையில், டேவிட்-கோலியாத்தை நினைவுபடுத்தும் வகையில் ஆயுதமேந்திய இஸ்ரேலிய வீரா்களை ஆா்ப்பாட்டக்காரா்கள் கற்களுடன் எதிர்கொள்கின்றனா்.
- அதே வேளையில், இஸ்ரேலுக்குள் பல நகரங்களில் யூதா்களுக்கும், இஸ்ரேலிய அரேபியா்களுக்கும் இடையிலான மோதல் இதுவரை கண்டிராத அளவு அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் மக்கள்தொகையில் அரேபியா்கள் 21 சதவீதம் போ் உள்ளனா்.
- இப்போதைய பிரச்னை, தூதரக முயற்சிகள் மூலமாகவும், ஒரு சங்கடத்துடன் பழைய நிலையை நிறுவுவதன் மூலமும் குறைக்கப்படலாம். ஆனால், இந்த வன்முறை மற்றும் எதிர் வன்முறை சுழற்சியானது, இரு தரப்பிலும் கசப்பைத்தான் அதிகரித்துள்ளது. நிரந்தரமான தீா்வு ஒன்று காணப்படாவிட்டால் மேலும் பல மோதல்களுக்கும் பயங்கரவாதத்துக்கும் விதைகளை விதைப்பது போல ஆகிவிடும்.
- மூன்று பெரிய மதத்தினா்களுக்கு புனித நிலமாக இருக்கும் பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் திரும்ப இந்தியாவில் உள்ள நாம் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்த மூன்று மதங்களைப் பின்பற்றுவோரும் இந்தியாவில் உள்ளனா்.
- ஐ.நா. தீா்மானங்கள் பலவும் அழைப்பு விடுத்துள்ளதுபோல பாலஸ்தீன பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம்தான் தீா்வு காணப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை நாம் உறுதியுடன் தொடர வேண்டும்.
- நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்கள், சமத்துவத்தை அனுபவித்து நிம்மதியாக வாழ்வதற்கும், தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கும் மட்டுமின்றி, உலகின் பன்முகத்தன்மை கொண்ட பல கலாசார, பன்மை சமூகத்தின் வெற்றியில் இந்தியாவுக்கு இருக்கும் விருப்பத்தின் அடையாளமாகவும் நாம் அதைச் செய்தாக வேண்டும்.
நன்றி: தினமணி (31 – 05 - 2021)