கவிஞர் சக்திக்கனல் நாட்டுப்புறக் காவியம் தந்த கவிஞர்
- கவிஞர் சக்திக்கனல் கடந்த வாரம் காலமானார். 1931இல் பிறந்த சக்திக்கனல், தனது நெடிய வாழ்வில் பரவலான இலக்கிய, பண்பாட்டு ஈடுபாடுகளைக் கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டின் தனிப்பெரும் நாட்டார் காப்பியமான அண்ணன்மார் கதையின் எழுத்து வடிவத்தை உருவாக்கியவர் என்கிற முறையில் மிகுந்த கவனம் பெற்றவர். ‘அண்ணன்மார் சுவாமி கதை’ புத்தகம் 1971இல் வெளிவந்தது. தமிழில் வெளியான ஒரே நாட்டார் காப்பியம் அண்ணன்மார் கதை.
- சக்திக்கனல் ‘அண்ணன்மார் சுவாமி கதை’யை 1971இல் வெளியிடுவதற்கு முன்பே 1965இல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர் பிரெண்டா பெக் அக்கதையின் வாய்மொழி வடிவத்தைச் சேகரித்திருந்தார். அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து தாராபுரத்தை அடுத்த ஓலப்பாளையம் என்னும் கிராமத்தில் தங்கி, எரிசனம்பாளையம் ராமசாமி என்பவர் பாடிய கதையைப் பதிவுசெய்திருந்தார். ஆனால், அதன் உரைநடை வடிவம் 1992இல்தான் வெளிவந்தது. 1971இல் வெளிவந்த சக்திக்கனலின் புத்தகம் கொங்குப் பகுதியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
- கோவை வானொலி நிலையம் 1977 அக்டோபர் 2இல் ‘நாட்டுப்புறத்திலே’ என்னும் பகுதியில் இக்கதையைப் பாட்டு வடிவத்தில் ஒலிபரப்பியது. கவிஞர் புவியரசுவின் தொகுப்புரையுடன் அண்ணன்மார் கதையின் மிகச்சிறந்த பாடகரான பூளவாடி பொன்னுசாமி குழுவினர், தொடர்ந்து சில வாரங்களுக்குப் பாடியபோது, அது மக்களிடம் செவ்வியல் காப்பியங்களுக்கு நிகரான செல்வாக்கைப் பெற்றது. நீண்ட காலக் காலனிய மரபைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில், வாய்மொழிப் பண்பாடுதான் மக்கள் பண்பாடாக இருக்க முடியும் என்ற கருத்தை நிரூபிப்பதுபோல் அது இருந்தது.
- வாய்மொழிப் பண்பாடு ஓர் இனத்தின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல் காலப்போக்கில் அது சந்தித்த சோதனைகளையும் சொல்வது. ஒரு கதை வாயிலாக அதன் வரலாறு சொல்லப்படும்போது, ஒட்டுமொத்த இனமே தன்னை அதில் அடையாளம் காண்கிறது. இத்தகையதொரு அடையாளத்தைத் தமிழ்ப் பண்பாட்டுக்குக் கொடுத்த முன்னோடிகளில் ஒருவர் சக்திக்கனல்.
- தமிழின் ஒரே நாட்டுப்புறக் காப்பியம் ‘அண்ணன்மார் கதை’தான். மற்றவையெல்லாம் கதைப்பாடல்கள். இப்போது வழக்கொழிந்து போனவை. ஒரு நாட்டுப்புறக் காப்பியத்திற்கு மூன்று வடிவங்கள் உண்டு. ஒன்று, வாய்மொழி வடிவம். இரண்டாவது, நிகழ்த்து வடிவம். மூன்றாவது, சடங்கு வடிவம். இதில் முதலாவது வடிவம், மற்ற இரண்டு வடிவங்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது. அந்த வகையில் சக்திக்கனலின் புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.
- ‘அண்ணன்மார் கதை’ மீது சக்திக்கனல் கொண்ட ஈடுபாடு, அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்திருந்தது. அந்தக் கதையைப் பாட்டாகப் பாடும் பல குழுக்களுடன் அவர் தொடர்புகொண்டிருந்தார். கதை நாயகர்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் மனப்பாங்கு அவருக்கு இருந்தது. அதனாலேயே தனது புத்தகத்திற்கு அண்ணன்மார் சுவாமி கதை (1971) என்று பெயரிட்டார். தொடர்ந்து அவர் எழுதிய புத்தகங்களின் தலைப்புகளிலும் (மசைச்சாமி குன்றுடையான் – 2007, அண்ணன்மார் சுவாமி கும்மி-2018) அண்ணன்மார் ‘சாமி’களாகவே இருந்தார்கள்.
- மு.கருணாநிதி அண்ணன்மார் கதையை நாவலாக எழுதியபோது, அவருக்கு சக்திக்கனல் பெரிதும் உதவினார். கலைஞரின் நாவல் ‘பொன்னர்-சங்கர்’ (1988) கொங்கு மக்களிடையே வரவேற்பு எதையும் பெறவில்லை. கருணாநிதியின் நாவல் ‘பொன்னர்-சங்கர்’ என்னும் திரைப்படமாக எடுக்கப்பட்டு, 2011இல் வெளியானது. சக்திக்கனல் ஏட்டுச்சுவடியிலிருந்து அண்ணன்மார் கதையைப் பதிப்பித்திருந்தாலும், இடையிடையே தன் சொந்தச் சரக்கையும் அவர் சேர்த்திருக்கிறார் என்று பிரெண்டா பெக் குற்றம்சாட்டினார் (The Three Twins: The Telling of a South Indian Folk Epic:1982).
- ஆனால், கதையின் மையக்கருத்தைச் சிதைக்காமல் நாட்டார் காப்பியம் தனது வளர்ச்சிப் போக்கில் இணைத்தல், நீக்கல்களைச் செய்துகொள்ளலாம் என நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த நோக்கில் பார்த்தால், சக்திக்கனலின் கவித்துவம் அப்புத்தகத்தில் பல இடங்களில் வெளிப்படுவதைப் பார்க்கலாம். பல தனித்த மரபுகள் சேர்ந்து கலந்ததுதான் இந்தியப் பண்பாடு. இதைப் புரிந்துகொள்வதற்கான தனது பங்களிப்பைச் செய்தவர் சக்திக்கனல். இதற்காகவே அவரை நன்றியோடு நாம் நினைவுகூர வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 09 – 2024)