TNPSC Thervupettagam

காக்கும் கரங்கள்

August 4 , 2024 162 days 151 0
  • கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதில் இரண்டு பெண்கள் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றனர். இருவரும் இரு வேறு துருவங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால், துயரத்தில் இருப்போருக்குத் துணைநிற்பதில் இருவரும் ஒருவராகத் தெரிகிறார்கள். ஒருவர் ராணுவ அதிகாரி சீதா அசோக் ஷெல்கே. இன்னொருவர் குடும்பத்தலைவி பாவனா.
  • மீட்புப் பணிகளைத் துரிதமாக்க மீட்புப் படையினரால் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. அதில் ராணுவ வீரர்களோடு இரவும் பகலும் இணைந்து பணியாற்றிய ஒரே பெண் அதிகாரி சீதா. கொட்டும் மழையிலும் சுழன்றோடிய வெள்ளத்திலும் நாளெல்லாம் நின்றபடி பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். 190 அடி நீள பாலத்தை 16 மணிநேரத்தில் தன் குழுவினருடன் இணைந்து கட்டியெழுப்பிய சீதாவுக்குப் பாராட்டுகள் குவிந்தன.
  • மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவர், மெக்கானிகல் இன்ஜினீயர். பத்தாம் வகுப்பு படித்தபோது பெண் ராணுவ அதிகாரி ஒருவரைப் பற்றி நாளிதழில் வெளியான கட்டுரையை சீதா படித்தார். அவர் ராணுவத்தில் சேர்வதற்கு அதுதான் தூண்டுகோலாக அமைந்தது. 2012ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார்.
  • கேரள மீட்புப் பணி குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, “ராணுவத்தில் ஆண், பெண் என்கிற பாலின பேதமில்லை. நாங்கள் நாட்டுக்காக உழைக்கிறோம். நான் என் கடமையைத்தான் செய்தேன். என்னுடன் பணியாற்றிய ராணுவ வீரர்களோடு மாநில அரசும் உள்ளூர் மக்களும் எங்களுக்கு உதவினர். அந்தக் கூட்டத்தில் நானும் ஒருத்தி” என்று சொன்னார் சீதா.
  • நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பலரும் பல வகையில் உதவ, இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சாஜின் என்பவர் சமூக வலைதளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். நிலச்சரிவால் தாயைப் பிரிந்து வாடும் குழந்தைகளுக்குத் தன் மனைவி பாவனா தாய்ப்பால் அளிக்கத் தயாராக இருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு வயநாட்டில் இருந்து அழைப்பு வர, தங்கள் இரண்டு குழந்தைகளோடு நள்ளிரவில் 350 கி.மீ. பயணம் செய்தனர். தங்களை அழைத்த நபரை அவர்களால் தொடர்புகொள்ள முடியாததால் அருகில் இருந்த முகாமுக்குச் சென்றனர். தங்களால் முடிந்த அளவுக்கு உதவிவிட்டே இடுக்கி திரும்புவோம் என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்