- தமிழகம் - கர்நாடகம் இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரம் வழக்கம்போல நிகழாண்டும் தொடர்வது வேதனையான விஷயம். காவிரியில் விநாடிக்கு 24,000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையைப் பரிசீலிக்காமல் வெறும் 5,000 கனஅடி நீர் மட்டும் அடுத்த 15 நாள்களுக்கு திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்ததும், அதை ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருப்பதும் ஏற்க முடியாதது மட்டுமன்று, குறுவை சாகுபடியைத் தொடங்கி நீருக்காக காத்திருக்கும் டெல்டா விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலுமாகும்.
- காவிரி நதிநீர் தீர்ப்பாயம் 5.2.2007-இல் அளித்த இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் மாற்றியமைத்து 16.2.2018-இல் பிறப்பித்த உத்தரவின்படி, காவிரி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டன. கர்நாடகம் மாதந்தோறும் காவிரியில் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய பங்கீட்டு நீரை உறுதிப்படுத்துவதுதான் இவற்றின் பணி. அதன்படி, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் பிலிகுண்டுலு பகுதியில் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு கணக்கிடப்பட்டு வருகிறது.
- நடப்பு (ஆகஸ்ட்) மாதத்துக்கான நதிநீர் பங்கீட்டின்படி, கடந்த 9-ஆம் தேதி பிலிகுண்டுலு பகுதியில் திறந்துவிடப்பட்டிருக்க வேண்டிய நீரில் 37.971 டிஎம்சி பற்றாக்குறை உள்ளது. ஆக. 10-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில், பிலிகுண்டுலு நீர் அளவைப் பகுதியில் ஆகஸ்ட் 11 முதல் அடுத்த 15 நாள்களுக்கு விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இந்த நீர் அளவு தில்லியில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகம் கேட்டுக் கொண்டதன்பேரில் விநாடிக்கு 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
- இதுதான் நிகழாண்டு காவிரி பிரச்னையைத் தீவிரமாக்கி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆக. 14-ஆம் தேதி புதிய மனு தாக்கல் செய்ய வித்திட்டது. கர்நாடகத்தின் நான்கு முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி அணைகளில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நிலவரப்படி அவற்றின் மொத்த இருப்புக் கொள்ளளவான 114.671 டிஎம்சியில் 93.535 டிஎம்சி (82 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது. எனவே, பிலிகுண்டுலுவிலிருந்து 24 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்பது தமிழக அரசுத் தரப்பின் வாதம்.
- ஆனால், தென்மேற்குப் பருவமழைப் பற்றாக்குறையால் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்புக் குறைவு, குடிநீர்த் தேவை போன்றவற்றைக் கருத்தில்கொண்டு விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு வழங்க முடியும் என்பது கர்நாடக அரசுத் தரப்பின் வாதம்.
- கர்நாடக அரசு அளித்த தரவுகளின்படி, காவிரி ஒழுங்காற்றுக் குழு கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஒரு செயல் திட்டத்தை உருவாக்கியது. அதன்படி, கர்நாடகத்தின் நான்கு அணைகளில் கடந்த 30 ஆண்டுகளின் சராசரி நீர்வரத்தின்படி, ஆகஸ்ட் 9-ஆம் தேதி 42.54 சதவீதம், ஆகஸ்ட் 27-ஆம் தேதி 51.22 சதவீதம் நீர்வரத்துப் பற்றாக்குறை என ஒழுங்காற்றுக் குழு கணக்கிட்டது. இதன் அடிப்படையிலாவது விநாடிக்கு 14,200 கனஅடி தண்ணீரை வழங்க வேண்டும் என்கிற தமிழகத்தின் கோரிக்கையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. இறுதியில், ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி அடுத்த 15 நாள்களுக்கு (ஆக. 29- செப். 12) பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வருவதை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தார் உத்தரவிட்டார்.
- டெல்டா பாசன விவசாயத்துக்காக கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்தது. ஆக. 30-ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் 51 அடியாகச் சரிந்துவிட்டது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாகச் சென்றடையவில்லை. இதனால், நடவு செய்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.
- நிகழாண்டு குறுவை சாகுபடி இலக்காக 5.20 லட்சம் ஏக்கரை தமிழக வேளாண் துறை நிர்ணயித்தது. இதற்காக குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டமும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தண்ணீர்ப் பற்றாக்குறை அபாயம் கருதி, இதில் சுமார் பாதியளவுக்கே டெல்டாவில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டிருக்கிறது. கர்நாடக அரசியல் கட்சிகள் கூறுவதுபோல டெல்டாவில் பாசனப் பரப்பை தமிழக அரசு அதிகரித்திருக்கிறது என்பது உண்மையில்லை என்பதை இதிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.
- காவிரி பிரச்னையைப் பொறுத்தவரை கர்நாடகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதே எதார்த்த நிலையாக உள்ளது. பாஜக அரசாக இருந்தாலும், காங்கிரஸ் அரசாக இருந்தாலும் காவிரி நிலவரத்தில் ஒரே மாதிரி நிலைப்பாட்டை எடுக்க அவை தவறுவதில்லை. உச்சநீதிமன்றம், காவிரி ஒழுங்காற்றுக் குழு, மேலாண்மை ஆணையம் என இத்தனையையும் தாண்டி அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து பிரதமரைச் சந்தித்து முறையிடுவது என கர்நாடக அரசு தீர்மானித்திருக்கிறது.
- தமிழக அரசும் அதுபோன்று அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து பிரதமரைச் சந்தித்து முறையிடும் வாய்ப்பை முன்னெடுக்க வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்க முடியாது எனவும், உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். காவிரி விவகாரத்தில் போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.
நன்றி: தினமணி (31– 08 – 2023)