TNPSC Thervupettagam

காட்டை நம்பி வாழும் இனம்

July 30 , 2020 1632 days 1621 0
  • இந்திய துணைக்கண்டத்தில் பசுமையாகத் தழைத்திருந்த காடுகளுக்கும் அவற்றை வாழ்விடமாகக் கொண்டிருந்த காட்டுயிர்களுக்கும் எமனாக வந்து சேர்ந்தது காலனிஆட்சி. துப்பாக்கிகளுடன் திரிந்த ஆங்கிலேயர்களுக்கு இந்தியக் காடுகள், காவலாளி யாருமில்லாத கருவூலங்களாகத் தெரிந்தன. காடுகளை சகட்டு மேனிக்கு அழிக்கத் தொடங்கினார்கள்.

  • தங்கள் நாட்டில் இயற்கைக் காடுகளை முற்றிலும் அழித்து விட்டவர்களுக்கு இது தவறாகத் தெரியவில்லை. அங்கு கப்பல் கட்டவும் இங்கே ரயில் பாதைகள் உருவாக்கவும் காடுகள் அழிக்கப்பட்டன.

  • மரங்களால் நிறைந்திருந்த மலைகள், தேயிலை, காப்பி தோட்டங்களுக்காக மொட்டையடிக்கப்பட்டன. அதே வேகத்தில், "சாகச வேட்டை' என்ற பெயரில், காட்டுயிர்களையும் கொல்லத் தொடங்கினர். காடுகளின் மேல் தங்கள் பிடியை அரசு இறுக்கத் தொடங்கியது.

  • இந்திய வனச் சட்டத்தை 1927-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம், மரங்கள் நிறைந்த எந்தவொரு பகுதியையும் "காடு' எனஅறிவிக்க அரசுக்கு அதிகாரம் கிடைத்தது.

  • நெடுங்காலமாகக் காட்டில் வசித்து வந்த பழங்குடியினரின் மரபு உரிமைகள் நீக்கப்பட்டன. அளப்பரிய செல்வத்தை உள்ளடக்கிய காடுகளைப் பாதுகாப்புக் காடுகளாக அறிவித்து, காடு சார்ந்த மக்களின் வாழ்க்கையை நசுக்கினார்கள்.

  • நாடு விடுதலை அடைந்த பின்னரும், இந்தப் போக்கு நிற்கவில்லை. காட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்தையே அரசு குறியாகக் கொண்டிருந்தது.

  • அது மட்டுமல்ல, வளர்ச்சி என்ற பெயரில் அணைகள் கட்ட, சாலைகள் போட, வெட்டுமரத் தொழிலுக்காக, பணப் பயிர்களுக்காக, கனிமங்களை சுரண்ட என பல காரணங்களுக்காக, பரந்திருந்த காட்டுப்பகுதிகள் அழிக்கப்பட்டன.

  • காட்டுயிர்களுக்காக சிலர் கவலைப்பட்டாலும், காடுகளில் வசித்த பழங்குடியினருக்காக எவரும் வாய் திறக்கவில்லை.

  • ஆண்டாண்டு காலமாக காட்டில் வசித்து வந்தாலும், மலைவாழ் மக்களிடம் நில உரிமைக்கான எந்த அத்தாட்சியும் இல்லை. காடுகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் அதிகாரிகளுக்குப் பயந்து பயந்து பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்தனர்.

  • தமிழ்நாட்டில், காட்டை நம்பி வாழும் பழங்குடி இனங்கள் பல உண்டு. இருளர், காடர், முதுவர், பளியர், கோத்தர், காணி, குரும்பர், மலையாளி என 36 பழங்குடிகள் உள்ளனர் என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது.

  • நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களின் காட்டு வாழ்க்கை முறை சீரழிவதைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை. காலனி ஆட்சியாளர்கள் பழங்குடியினரை எப்படி நடத்தினார்களோ அப்படியே நாமும் நடத்தினோம் நடத்தி வருகிறோம்.

காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம்

  • இந்நிலையில், சமீப காலமாக சிறிது சிறிதாக அவர்களின் வாழ்வாதாரங்களும் நில உரிமைகளும் நசுக்கப்பட்டு வருகின்றன.

  • சில ஆர்வலர்களும் சில அமைப்புகளும் காட்டுயிர் அழிக்கப்படுவது பற்றி மலைவாழ் சங்கத்தோடு இணைந்து குரல் கொடுத்து கொண்டுள்ளனர்.

  • இதன் விளைவாக வந்ததுதான் "காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் - 1972'. இன்று நம் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய பூங்காக்களும் நானூற்றுக்கும் மேற்பட்ட சரணாலாயங்களும் உள்ளன.

  • எண்ணிக்கை அதிகமாகத் தெரிந்தாலும் இது நாட்டின் மொத்தப் பரப்பில் வெறும் ஐந்து சதவீதம்தான்.

  • உயிரினங்களைப் பாதுகாப்பதற்கென கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம், பழங்குடியினரைப் பல விதங்களில் பாதித்துள்ளது.

  • முயல், காட்டுக்கோழி, பன்றி போன்ற சிற்றுயிர்களை வேட்டையாடி உண்டு வந்த அவர்களுக்கு இது பெருத்த அடியாக விழுந்தது. சிறு மனிதக்குழு உணவுக்காக மட்டுமே காட்டுயிரைக் கொல்வதனால், காட்டுயிர்களுக்குப் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படுத்துவதில்லை.

  • காட்டுயிர்ப் பாதுகாப்பு என்ற பெயரில் பழங்குடியினர் மீதானஅரசின் பிடி மேலும் இறுகியது.

  • இந்தப் பழங்குடியினர் ஒருவகையில் காட்டிற்குப் பாதுகாப்பாளர்கள்தான் என்பதையும் இவர்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டால் காட்டில் உள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க சமூக விரோதக் கூட்டம் தயாராக உள்ளது என்பதையும் அரசால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை?

காட்டுரிமைச் சட்டம்

  • இந்தக் காலட்டத்தில் பழங்குடியினருக்கு ஆதரவாக எழுந்த இயக்கங்களும், சூழல் ஆர்வலர்களின் முயற்சிகளும் அரசின் கவனத்தை இந்தப் பிரச்னையின் பக்கம் திருப்பின.

  • இதன் விளைவுதான், 2007இல் வந்த காட்டுரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் அடிப்படையான கருதுகோள்,பழங்குடியினருக்கும் காடுகளுக்கும் இருக்கும் பிணைப்பைப் பற்றியதாகும்.

  • காலனிய ஆட்சியிலும் நாடு விடுதலை அடைந்த பின்பும் பழங்குடியினருக்கு மரபு சார்ந்த நிலங்களின் மேலிருந்த உரிமை சரியாக உணரப்படவில்லை.

  • இதனால், பழங்குடியினர் பட்டியல் பிரிவு மக்களுக்கு, பெரும் வரலாற்று அநீதி இழைக்கப்பட்டது என்கிறது அந்தச் சட்டம். இதை சரி செய்தாக வேண்டும். இந்தச் சட்டம் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டியதாகும்.

  • நிலைமை இப்படியிருக்க, கனிம சுரங்க அதிபர்களுடன் பிரபல காட்டுயுரியலாளர்கள் சிலரும் இந்தச் சட்டத்தை எதிர்க்கத் தொடங்கினர்.

  • பழங்குடியினரைக் காட்டிலிருந்து வெளியேற்றினால்தான் காடுகளையும் காட்டுயிர்களையும் பாதுகாக்க முடியும் என்று அவர்கள் கூறினர்.

யோசமிட்டி உத்தி

  • அமெரிக்காவின் கலிபோர்னியாவில் "யோசமிட்டி' பள்ளதாக்கு என்ற காட்டில் காலங்காலமாக வசித்து வந்த அமெரிக்கப் பழங்குடியினரை வெளியேற்றி, அதை ஒரு தேசியப் பூங்காவாக அமெரிக்க அரசு அறிவித்தது.

  • அதனால், இவ்வாறு உள்ளூர் மக்களை விரட்டியடித்து காட்டுயிரைக் காப்பாற்றும் முறை "யோசமிட்டி உத்தி' என்று பெயர் பெற்றது.

  • நம் நாட்டிலும் இந்த உத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். சில தன்னார்வக் குழுக்களும் இதையே சொல்கின்றன.

  • ஆனால், காட்டையும் காட்டுயிர்களையும் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கும் சுற்றுலாத் தொழிலுக்கு எதிராக யாரும் குரல் எழுப்புவதில்லை.

  • முதுமலையைச் சுற்றி மட்டும், அனுமதியின்றிச் செயல்பட்டுக் கொண்டிருந்த 70க்கும் மேற்பட்ட விடுதிகள் சமீபத்தில் மூடப்பட்டிருக்கின்றன.

  • நாடு முழுவதும் இன்னும் மூடப்படாத எண்ணற்ற சட்டவிரோத விடுதிகள் உள்ளன.

  • இந்தச் சட்டத்தை எதிர்த்து, நம் நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  • இவை யாவும் ஒன்றாக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2019 பிப்ரவரி 13 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசு தரப்பில் வழக்குரைஞர் யாரும் இதில் ஆஜராகவில்லை.

  • இதற்கிடையில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 17 மாநிலங்களில் காட்டில் வசிக்கும் பழங்குடியினரை, காட்டிலிருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றமே தற்போது நிறுத்தி வைத்துள்ளது. இதுதான் இன்றைய நிலை. இனி, தன்னார்வக் குழுக்களும் அரசும் என்ன செய்யப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி: தினமணி (30-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்