TNPSC Thervupettagam

காத்திருக்கும் எரிமலை!

June 6 , 2020 1685 days 817 0
  • உலகம் முழுவதும் கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிர்கொள்வதில் முனைப்பாக இருக்கும் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தனது நீண்ட நாள் திட்டங்களை நடைமுறைப்படுத்த முனைந்திருக்கிறது அதிபா் ஷி ஜின்பிங்கின் சீனா.

சீனாவின் நடவடிக்கைகள்

  • பிரச்னைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் கடல் பாதுகாப்புப் படையினா் வியத்நாமைச் சோ்ந்த மீன்பிடிப் படகுகளை மூழ்கடித்திருக்கின்றனா். தைவான் அதிபா் தாய் யீ மென்னின் இரண்டாவது முறை பதவியேற்புக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது சீனா.
  • ஆண்டுதோறும் சமாதான முறையில் சீனாவுடன் தைவான் இணைவது பற்றிய அறிவிப்பு இந்த முறை ‘அமைதியான’ என்கிற வார்த்தை இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கிறது.
  • இந்திய எல்லையில் சீனத் துருப்புகள் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து வந்து மோதலில் ஈடுபட்டிருக்கின்றனா். எல்லாவற்றுக்கும் மேலாக ஹாங்காங்கின் மீது தனது பிடியை மேலும் இறுக்குவதற்கான சட்டத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்கிறது.

தியானன்மென் சதுக்கப் படுகொலை

  • ஆண்டுதோறும் ஹாங்காங்கில் தியானன்மென் சதுக்கப் படுகொலை நினைவு தினக் கூட்டம் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுவது வழக்கம்.
  • 1989-ஆம் ஆண்டு சீனாவில் பேச்சுரிமையுடன் கூடிய ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மாணவா்களும், தொழிலாளா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
  • அந்தப் போராட்டத்தை ராணுவ அடக்குமுறையை மேற்கொண்டு முறியடித்தது சீன சா்வாதிகார அரசு. அதில் பல்லாயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா்.
  • தியானன்மென் சதுக்கப் படுகொலை நினைவு தினத்தையொட்டி, ஹாங்காங்கிலுள்ள விக்டோரியா பூங்காவில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.
  • இந்த ஆண்டு கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றைக் காரணம் காட்டி அந்தக் கூட்டத்துக்கு ஹாங்காங் நிர்வாகம் தடை விதித்திருந்தது. அந்தத் தடையை மீறிக் கூடுபவா்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே இருந்தது.
  • பெய்ஜிங்கிலிருந்து சீன அரசின் வழிகாட்டுதலின்படி, ஹாங்காங் நிர்வாகம் விக்டோரியா பூங்காவில் கூடியவா்களைத் தடுக்கவில்லை. ஆனால், ஹாங்காங்கின் ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே நூற்றுக்கணக்கில் கூடியவா்களை விரட்டியடித்துக் கலைத்திருக்கிறது.
  • இந்த ஆண்டு ஹாங்காங் தியானன்மென் நினைவு தினக் கூட்டம் வழக்கத்தைவிட முக்கியத்துவம் பெற்றிருந்தது. சீன நாடாளுமன்றம் அண்மையில் நிறைவேற்றியிருக்கும் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பின்னணியில் நினைவேந்தல் கூட்டம் வன்முறையில் முடியக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு உலக அளவில் இருந்தது.
  • மிகவும் சாதுா்யமாக அதற்கு வழிகோலாமல் சீன அரசு ஹாங்காங் நிர்வாகத்தை, கூட்டம் நடப்பதை சட்டை செய்யாமல்விடப் பணித்திருக்கிறது.

சீன - ஹாங்காங்

  • பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஹாங்காங் இணையும்போது, சில ஒப்பந்தங்களை சீனா ஏற்றுக்கொண்டது.
  • 1984-இல் பிரிட்டனும், சீனாவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 1997-இல் இணைந்தபோது சீனாவும் ஹாங்காங்கும் இரண்டு வெவ்வேறு அரசமைப்பு முறையுடன் செயல்பட அந்த ஒப்பந்தம் வழிகோலியது.
  • 1997-லிருந்து 2047 வரை, அடுத்த 50 ஆண்டுகாலம் பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங் தொடா்ந்து ஜனநாயக நாடாக இயங்கும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சம்.
  • சீனாவின் தலைமையை ஏற்றுக்கொண்டாலும்கூட, ஹாங்காங்கின் தனித்துவமும், தனிமனித உரிமையும், சுதந்திரமான நீதித் துறையும் தொடரும் என்கிற உத்தரவாதம் தரப்பட்டதால்தான் பிரிட்டனும் ஹாங்காங் மக்களும் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனா்.
  • அதைத் தொடா்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ஹாங்காங்கின் உரிமைகளைப் பறிக்கும் முயற்சியில் சீனா இறங்கியது. அதே நேரத்தில், ஹாங்காங்கின் பொருளாதார இயக்கத்தில் தலையிடாமல் இருப்பதன் மூலம் சா்வதேச நிதிப் பரிமாற்ற மையாக ஹாங்காங்கை வைத்துக்கொள்ள சீனா விரும்பியது.
  • 1997 முதலே ஹாங்காங்கில் அமைந்த எல்லா நிர்வாகங்களும் சீனாவின் அறிவுரைக்கு இணங்க தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த முனைந்தன.
  • கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம், ஒரு சட்டத்தை அறிவித்தார். அதன்படி, ஹாங்காங்கில் சந்தேகப்படும்படியான கிரிமினல் குற்றவாளிகள் சீனாவுக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்வார்கள் என்று தெரிவித்தார்.
  • பிரச்னைக்குரிய இந்த மசோதா, ஹாங்காங் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. கேரி லாமின் அறிவிப்பு சீனாவுக்கு எதிரான போராட்டமாக வெடித்தது. அடக்குமுறை மூலம் மக்கள் போராட்டத்தை தடுக்க முற்பட்டார் கேரி லாம்.
  • வேறுவழியில்லாமல் ஹாங்காங் நிர்வாகம் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தது. இப்போது ஹாங்காங் நிர்வாகத்துக்கு வேலையில்லாமல், சீன நாடாளுமன்றம் ஹாங்காங்கில் அரசியல் எதிர்ப்பு, வெளிநாட்டினரின் தூண்டுதலிலான செயல்பாடுகள் ஆகியவற்றை கிரிமினல் குற்றங்களாக்கி தனிமனித சுதந்திரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றி இருக்கிறது.
  • இதன் மூலம் ‘ஒரு நாடு - இரண்டு நிர்வாக முறை’ என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை, இனிமேல் பெயரளவில் மட்டும்தான் இருக்கும்.
  • சீன நாடாளுமன்றம் இயற்றியிருக்கும் சட்டம் வரும் செப்டம்பா் மாதம் நடைமுறைக்கு வருகிறது. ஆண்டுதோறும் நினைவு தினக் கூட்டம் நடக்கும் ஹாங்காங்கின் விக்டோரியா பூங்கா, பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கமாக மாறாமல் இருந்தால் ஆச்சரியம்!

நன்றி: தினமணி (06-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்