TNPSC Thervupettagam

காந்தஹார்: வாஜ்பாயின் ஒரே கேள்வி

September 15 , 2024 73 days 130 0

காந்தஹார்: வாஜ்பாயின் ஒரே கேள்வி

  • பிரதமர் வாஜ்பாய் உள்நாட்டுப் பயணம் முடித்து 1999 டிசம்பர் 24இல் பாலம் விமான நிலையத்திலிருந்து ரேஸ் கோர்ஸ் இல்லத்துக்குக் காரில் திரும்பிக்கொண்டிருந்தார், நானும் அதில் ஏறிக்கொண்டேன். அடுத்த நாள் அவருக்கு 75வது பிறந்த நாள், வழக்கம்போல ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். கார்கிலில் சந்தித்ததைவிட மிகப் பெரிய பிரச்சினையை அந்த வார இறுதியில் சந்திக்கப்போகிறோம் என்று அவருக்குத் தெரியாது. நவம்பர் மாதம்தான் அவருடைய தனி உதவியாளராகச் சேர்ந்திருந்தேன்.
  • பெர்லினில் இந்தியத் தூதரகப் பணியில் இருந்தபோது ஏப்ரல் முதல் நாளில் பிரதமர் அலுவலகத்திலிருந்து எனக்கு உத்தரவு வந்தது. பிரதமரின் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் உடனடியாக இந்தியா திரும்பி பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அது தெரிவித்தது. ஏப்ரல் முதல் நாள் என்பதால், என்னை முட்டாளாக்க அனுப்பப்பட்ட தகவல் என்றே நினைத்து, ‘பெர்லின் தூதரகத்தில் தொடங்கிய சில பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால், மேலும் சில மாதங்கள் அவகாசம் வேண்டும்’ என்று பதில் அனுப்பினேன். பெர்லினில் இந்தியத் தூதராகவும் எனக்கு மேல் அதிகாரியாகவும் இருந்த ரோனென் சென் இதை அறிந்து, “பிரதமர் அலுவலகத்திலிருந்துவரும் ஆணைகளை மறுக்கக் கூடாது” என்று கடிந்துகொண்டார்.
  • அந்த மாதம் மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு தோற்றது. இடைக்கால அரசுக்குத் தலைவரானார் வாஜ்பாய். இதனால், டெல்லி திரும்ப எனக்கு மேலும் சில நாள்கள் கிடைத்தது. பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலர் அந்தஸ்தில் சேர்ந்தேன். ஜூலை மாதத்தில் கார்கில் விவகாரம் முடிவுக்கு வந்தது. ஆனால், 1999 கிறிஸ்துமஸ் காலத்தில், நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்பதில் எனக்கு நேரடி அனுபவத்துக்கான வாய்ப்பு, காந்தஹார் விமானக் கடத்தல் சம்பவத்தின்போது கிடைத்தது.

உடனே கூப்பிடுங்கள்

  • பிரதமரின் இன்னொரு தனி உதவியாளரான ஆனந்தராஜன், சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் வலைதளத்திலிருந்து, எனக்குச் செய்தி ஒன்றை அனுப்பினார். “உடனே பேசுங்கள்” என்பது அந்தச் செய்தி. என்னவென்று அறிய உடனே, ஆனந்தராஜனைத் தொடர்புகொண்டேன். அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு மூச்சே நின்றுவிடும்போல இருந்தது. “நேபாளத்திலிருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்-லைன்ஸ் பயணிகள் விமானம் கடத்தப்பட்டு இப்போது அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது” என்றேன் பிரதமரிடம்.
  • அம்பாசடர் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த வாஜ்பாய், ‘ஓ’ என்று அதிர்ச்சி தெரிவித்தார். பிறகு ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். இதற்கிடையே நெருக்கடிகளைச் சந்திப்பதற்கான குழு அமைச்சரவைச் செயலர் தலைமையில் உடனே கூடியது, பிரதமரின் முதன்மைச் செயலர் பிரஜேஷ் மிஸ்ரா, ரேஸ்கோர்ஸ் சாலையிலேயே வழியில் காத்திருந்தார். அந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்று பிரதமருக்குத் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் பங்கு

  • இந்த விவகாரத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது முதலிலேயே தெரிந்துவிட்டது. அதற்கேற்ப, விமானத்தைக் கடத்தியவர்களும், “விமானம் அடுத்து லாகூரில் தரை இறங்க வேண்டும்” என்று கட்டளையிட்டனர். வாஜ்பாயின் 75வது பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாட செய்திருந்த ஏற்பாடுகள் அனைத்தும் உடனடியாக ரத்துசெய்யப்பட்டன. பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு அவசரமாகக் கூடி அடுத்தடுத்த உத்திகளை ஆலோசித்தது.
  • காத்மாண்டிலிருந்து டெல்லிக்கு வந்திருக்க வேண்டிய ‘ஐ.சி. 814’ என்ற அந்த விமானம், இறுதியாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள காந்தஹார் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதற்கும் முன் அமிர்தசரஸ், லாகூர், ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டின் விமான நிலையங்களுக்கும் சென்றது. தேன் நிலவு முடிந்து விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்த ருபின் கட்யால் என்ற இளைஞரை கடத்தல்காரர்கள் துடிக்கத் துடிக்க கத்தியால் குத்திக் கொலைசெய்தார்கள். ரத்தம் தோய்ந்த அந்தக் கத்தியை விமானத்தின் கேப்டன் தேவி சரணிடம் காட்டி, “நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஒரு பயணி இப்படித்தான் குத்திக் கொல்லப்படுவார்” என்றனர்.

பாகிஸ்தான் நடிப்பு

  • இந்த விவகாரத்தின் பின்னணியில் தீவிரமாகச் செயல்பட்டாலும் இதில் தங்களுக்குத் தொடர்பே இல்லாததுபோலவும் இந்தியா தங்கள் மீது அவதூறு கற்பிப்பதாகவும் டிசம்பர் 26 முதல், சர்வதேச ஊடகங்களில் பேசத் தொடங்கியது பாகிஸ்தான். ‘அக்டோபர் 12 முதலே எங்களைத் தனிமைப்படுத்த இந்தியா துடிக்கிறது. எங்களுடைய காமன்வெல்த் உறுப்பினர் பதவியை ரத்துசெய்ய வேண்டும் என்கிறது, சார்க் உச்சி மாநாட்டுக் கூட்டத்தைத் தன்னிச்சையாக ஒத்திவைத்தது, இப்போதோ விமானக் கடத்தலை நாங்கள் செய்ததைப் போல பொய்களை இட்டுக்கட்டிப் பேசுகிறது’ என்றது.
  • “முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கிழக்கு – மேற்கு பாகிஸ்தான் மீது பறப்பதற்கு பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்துக்கு (பிஐஏ) உள்ள உரிமையைப் பறிப்பதற்காக, ‘கங்கா’ என்ற இந்தியப் பயணிகள் விமானத்தைக் கடத்த நாங்கள் முயன்றதாக 1971 ஜனவரி 30இல் நடித்த நாடகத்தையே இப்போதும் இந்தியா அரங்கேற்றுகிறது” என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அப்துல் சத்தார் சர்வதேச நிருபர்களிடையே கூறினார்.
  • நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் பிஐஏ விமானத்திலிருந்து இறங்கித்தான் அந்தக் கடத்தல்காரர்கள் இந்திய விமானத்தில் ஏறினார்கள் என்ற உண்மையையும் பாகிஸ்தான் மறுத்தது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உண்மையிலேயே ஈடுபட்டிருக்கிறது என்பதற்கு அடுத்தடுத்து பல சான்றுகள் கிடைத்தன, அது இந்தியத் தலைவர்களைக் கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது. ‘கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை இந்திய அரசு உடனடியாக ஏற்க வேண்டும், தங்களுடைய உறவினர்களை பத்திரமாக, உடனடியாக உயிருடன் மீட்க வேண்டும்’ என்று வலியுறுத்தி, விமானத்தில் பிணைக் கைதிகளாக இருந்த பயணிகளுடைய உறவினர்கள் டெல்லியில் ஊர்வலமாகச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். இந்திய செய்தி சேனல்களும் (டி.வி.) அச்சு ஊடகங்களும் அவர்களுடைய உணர்ச்சிகரமான வேண்டுகோள்களுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து வெளியிட்டு அரசுக்கு நெருக்கடியை அதிகப்படுத்தின.
  • பத்தாண்டுகளுக்கு முன்னால் சில கடத்தல் முயற்சிகள் நடந்தும்கூட, இம்மாதிரியான தருணங்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் உள்துறை அமைச்சகத்திலோ அரசிலோ உருவாக்கப்படவில்லை. எனவே, ஒருங்கிணைந்து செயல்பட முடியாமல் வெவ்வேறு துறைகளின் இந்திய உயர் அதிகாரிகள் தடுமாறினர்.

பார்த்தசாரதி

  • பாகிஸ்தானில் அப்போது இந்திய ஹை-கமிஷனராக (தூதர்) இருந்த பார்த்தசாரதி, நடப்பது அனைத்தையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார். 1984இல் கராச்சியில் அவர் தூதரக அலுவலகத்தில் வேலை செய்தபோது இதேபோன்று நடந்த விமானக் கடத்தல் சம்பவத்தின் ‘மறு ஒளிபரப்பு’ போலவே இது அவருக்குத் தோன்றியது. அந்தச் சமயம், இறுதியாக துபாயில் விமானம் தரை இறங்கியது. அதற்கும் முன்னால் லாகூர் விமான நிலையத்தில் விமானத்தில் இருந்தவர்களுக்குக் குளிர்பானமும் மாத்திரைகளும் கொடுக்கில் சாக்கில், கடத்தல்காரர்களுக்கு பிஸ்டலைக் கொடுத்தது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ.
  • “இந்த முறை தங்களுடைய பங்களிப்பு வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்று கடத்தப்பட்ட விமானத்தை லாகூரில் நீண்ட நேரம் அனுமதிக்கமாட்டார்கள், அமிர்தசரஸுக்குப் பிறகு அந்த விமானம் லாகூர் சென்று பிறகு இறுதியாக துபாய் செல்லும்” என்று இந்திய அரசிடம் தனது ஊகத்தைத் தெரிவித்தார் பார்த்தசாரதி. அதற்கும் முன்னால் கடத்தல்காரர்களுடன் பேச, லாகூர் செல்ல உதவுமாறு பாகிஸ்தான் அரசையும் கேட்டுக் கொண்டார். அவரை ராவல்பிண்டியிலிருந்து லாகூருக்கு அழைத்துச்செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்வதைப் போல நடித்த பாகிஸ்தான் அரசு, லாகூர் விமான நிலையத்தை பார்த்தசாரதி அடைந்ததும் ‘அந்த விமானம் புறப்பட்டுப் போய்விட்டதே!’ என்று தெரிவித்தார்கள்.

இறுதியாக காந்தஹார்

  • தலிபான் சார்பில் சிலர், பாகிஸ்தானிலிருந்த இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் பேசினார்கள், அந்த விமானம் இறுதியாக காந்தஹாரில்தான் தரை இறக்கப்படும் என்றார்கள். ஒரு பயங்கரவாதியையும் விடுதலை செய்ய முடியாது என்றுதான் இந்தியத் தூதர் தலிபான் பிரதிநிதிகளிடம் தொடக்கத்திலிருந்தே திட்டவட்டமாகப் பேசினார். டிசம்பர் 28ஆம் நாள் டெல்லியிலிருந்து அவருக்கு உத்தரவு பறந்தது, “நீங்கள் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுங்கள், டெல்லியிலிருந்து நேரடியாகப் பேசிக்கொள்கிறார்கள்” என்று. இதற்கிடையே தலிபான்களுக்கும் ஐஎஸ்ஐக்கும் உள்ள தொடர்பு மேலும் தெளிவாகிவிட்டது.
  • இந்திய அதிகாரிகள் காந்தஹாரில், விமானம் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கே சென்று கடத்தல்காரர்களுடன் பேசினர். இஸ்லாமாபாதிலிருந்து ஏ.ஆர்.கண்ஷியாம் என்ற அதிகாரி பேச்சில் கலந்துகொண்டார். உருது சரளமாகப் பேசிய பாகிஸ்தானிதான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தலிபான்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருந்ததையும் பார்த்தார். விமானத்தையும் பயணிகளையும் விடுவிக்க, கடத்தல்காரர்கள் கோரியபடி மூன்று பயங்கரவாதிகளைச் சிறையிலிருந்து விடுவிக்க இந்திய அரசு உடன்பட்டுவிட்டது என்பதை பார்த்தசாரதி பிறகு அறிந்துகொண்டார்.

ஜஸ்வந்த் சிங்

  • பயணிகளையும் விமானத்தையும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதற்கு முன்னால் மீட்க விரும்புவதால், அவர்கள் கோரியபடி பயங்கரவாதிகளை விடுதலை செய்து விமானத்தில் கூட்டிச்சென்று, பயணிகளையும் மீட்டு அழைத்துவருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அமைச்சரவைக் குழுவிடம் தெரிவித்தார். வெளியுறவுத் துறை அமைச்சரே இப்படி அழைத்துச்செல்வது சரியாக இருக்குமா என்று கேட்கப்பட்டது. “கடத்தல்காரர்கள் ஒரு விமானத்தைத்தான் அனுமதிப்போம் என்கிறார்கள், எனவே வேறு வழியில்லை” என்று சுட்டிக்காட்டினார் ஜஸ்வந்த் சிங். 1999இன் இறுதி நாளில் 3 பயங்கரவாதிகளும் தலிபான்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ருபையா சய்யீத்

  • இந்தச் சம்பவம், 1990இல் காஷ்மீர் அரசியல் தலைவர் முஃப்தி முகம்மத் சையீதின் மகள் ருபய்யா சய்யீதை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்க, அவர்கள் கேட்டபடி சிறையிலிருந்த சில பயங்கரவாதிகளை விடுதலை செய்த முன்னுதாரணத்தை அப்படியே நினைவுபடுத்தியது. ‘இந்திய அரசு பயங்கரவாதிகளுடைய கோரிக்கைக்கு எப்போதும் இணங்கிவிடும் என்று இனி பேசப்படுமே’ என்று பார்த்தசாரதி கவலைப்பட்டார்.
  • காந்தஹார் பயணிகளுக்குப் பதிலாக விடுவிக்கப்பட்ட மூன்று பேருமே, காஷ்மீரில் பல படுபயங்கரமான கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். அவர்களில் மௌலானா மசூத் அசார், அதற்குப் பிறகு 2000வது ஆண்டில் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற பயங்கரவாதிகள் படையை உருவாக்கினார், 2001இல் இந்திய நாடாளுமன்றம் மீதும் பிறகு புல்வாமாவில் இந்திய ராணுவ வீரர்கள் மீதும் நடந்த தாக்குதலிலும் 2019இல் காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதல்களிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
  • முஷ்டாக் அமகது ஜர்கார், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் காஷ்மீர் பிரிவினைக்குத் துணைபோகும் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி தந்தார். உமர் ஷேக், 2008 நவம்பர் 9இல் மும்பை நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்தார். 2002இல் டேனியர் பேர்ல் என்ற அமெரிக்க நிருபரின் கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டார். உமர் ஷேக்குக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு குறைக்கப்பட்டது.

வாஜ்பாயின் கேள்வி

  • இந்திய விமானத்தைக் கடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அதற்கும் முன்னால் ஏழு முறை முயன்றுள்ளனர், எட்டாவது முறை முயன்றதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எதிர்கொண்ட முதல் பயங்கரவாத சம்பவம். 1970கள் 1980களில் அதற்கும் முந்தைய சம்பவங்கள் நடந்தன. உலகளாவிய அளவில் பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் இரக்கமின்றிச் செயல்படுகிறார்கள் என்பதை உணர்த்தும் இன்னொரு சம்பவம் அது.
  • மனித உரிமைகளை மீறும் இந்தச் செயலை ஊடகங்கள் தங்களுடைய ஒளிபரப்பு காட்சிகளுக்குரிய களமாகத் தேர்ந்தெடுக்கும் புதிய கோணமும் இதில் சேர்ந்துவிட்டது. இந்த நெருக்கடியைச் சந்தித்தபோதும், அதைத் தீர்த்த பிறகும் மிகவும் கவலைப்பட்டவராகவே இருந்தார் வாஜ்பாய். பயணிகள் விடுவிக்கப்பட்டார்கள் என்பதில் நிம்மதி அடைந்தாலும் பயங்கரவாதிகளின் கோரிக்கைகளுக்கு இணங்கியாக நேர்ந்ததே என்று மிகவும் துயரப்பட்டார்.
  • விமானத்தை மீண்டும் பயணிகளுடன் அழைத்துவந்த கேப்டன் தேவி சரணுக்குப் பாராட்டு விழா நடத்துகிறார்கள் என்று வாஜ்பாயிடம் கூறியபோது, “அவர் ஏன் அந்த விமானத்தை அமிர்தசரஸிலிருந்து உடனடியாக கிளப்பிச் சென்றார்?” என்ற கேள்வியைக் கேட்டார்.
  • வாஜ்பாயின் முதல் 13 மாத கால ஆட்சி, பிறகு இடைக்கால பிரதமராக ஆறு மாதங்கள் ஆகியவற்றின்போது வரலாற்றில் குறப்பிடத்தக்க பல சம்பவங்கள் நடந்தன. பாகிஸ்தானுடன் உறவைச் சுமுகமாக்க லாகூருக்கு பேருந்தில் பயணம்செய்தார், பொக்ரானில் அணுகுண்டு வெடித்து சோதித்துப்பார்த்தார். பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் கார்கில் மலைப்பகுதியை ஆக்கிரமித்தது, பிறகு நடந்த போரில் இந்தியா வென்றது. காந்தஹார் விமானக் கடத்தல் சம்பவம் இறுதியாக நடந்தது. பாகிஸ்தானுடன் சுமுக உறவு ஏற்பட அந்த நாடு எப்போதும் இடம்கொடுக்காது என்பதையே இச்சம்பவங்கள் தொடர்ந்து நினைவூட்டுகின்றன.

நன்றி: அருஞ்சொல் (15 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்