- மகான்களுக்கு மரணமில்லை, யுகங்களைக் கடந்தும் உலகினை அவர்கள் உயிர்ப்பிக்கிறார்கள். மக்களுக்காகத் தங்கள் உயிரைப் பலிகொடுத்த தியாகிகளை நடுகற்களாக, குடிகாக்கும் குலதெய்வங்களாக எளிய மக்கள் வழிவழியாக வழிபட்டுவருகின்றனர். பாரத நாட்டின் ஒருமைப்பாட்டினைக் காக்கத் தன் உயிரைப் பலியாகத் தந்த காந்தி, நமது நாட்டின் காவல் தெய்வமானார்.
- சாக்ரட்டீஸும் இயேசுநாதரும் மக்களுக்கு உண்மையைச் சொன்னபோது, சொந்த மண்ணில் உயிர்ப் பலி கொடுக்கப்பட்டனர். கீதையைத் தந்த கிருஷ்ணர் இறுதிக் காலத்தில் தனது சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு, தனிமையில் இருந்தபோது வேடுவனால் கொல்லப்பட்டார். மகான் புத்தரின் கொள்கைகள் அவரது நாட்டை விட்டு அகற்றப்பட்டன. சாக்ரட்டீஸ், இயேசு, கிருஷ்ணர், புத்தர் ஆகியோர் காலங்களையும் காடுகளையும் கடந்து உலகுக்கே வழிகாட்டிவருகின்றனர்.
- இன்றைய இந்தியாவின் சிக்கல்களுக்கு காந்தியின் தேவை என்ன என்ற கேள்வி எழுகிறது. காந்தி காலாவதியான காசோலை எனச் சிலர் கருதலாம். ஆனால், உண்மை அதுவல்ல. இந்தியாவுக்கும் உலகுக்கும் காந்தி அதிக அளவு தேவைப்படுகின்றார். இந்தியா எனும் பெருங்கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்களில் மையத்தூணாக காந்தி நிற்கிறார்.
- அப்பெருந்தூண் இல்லை எனில், இந்தியா எனும் கட்டமைப்பு வலுவிழக்கும் என்ற பேருண்மையை இன்று பலரும் அறிந்திருக்கவில்லை. இந்தியச் சமூகம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பிளவுபட்டுக் கிடந்தது. பல வகைகளில் இந்தியா பிரிந்து கிடந்தது. நூற்றுக்கணக்கான மதங்கள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், ஆயிரக்கணக்கான சாதிகள், எத்தனையோ இனக்குழுக்கள், மொழிகள் இங்குள்ளன. எனவே, அலைஅலையாகப் படையெடுப்புகள் இந்தியாவுக்கு வந்த வண்ணம் இருந்தன.
- ஆங்கிலேயர்கள், இந்தியாவின் பல பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அரசினை உருவாக்கினார்கள். அவர்கள் இந்திய தேசத்தை உருவாக்கவில்லை. திலகர், கோகலே, அரவிந்தர், மதன்மோகன் மாளவியா, பிபின் சந்திரபால், அன்னி பெசன்ட் போன்றவர்கள் இந்தியாவில் பரவலாகத் தேசிய உணர்வினை ஏற்படுத்தினர்.
எல்லைகளைக் கடந்தவர்
- காந்தியின் வருகைக்குப் பின்னர் இந்திய தேசியம், மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. இந்தியாவின் பட்டிதொட்டிகள், சிற்றூர்கள், நகரங்கள், மாநகரங்கள் எனப் பல்வேறு பகுதிகளுக்கு காந்தி சென்றுவந்தார். அவருக்கு முன்பிருந்த தலைவர்கள் பலருக்கு மத, சாதி, மொழி, பிரதேச எல்லைகள் இருந்தன. மத, இன, சாதி எல்லைகளைக் கடந்து ஒன்றுபட்ட மிக வலுவான இந்திய தேசியத்தைக் கட்டமைக்க அவருக்கு இணையாகப் போராடியவர்கள் அவரது சமகாலத்திலோ, அவருக்கு முன்னரோ, பின்னரோ இல்லை எனலாம். புதிய, நவீனமான தேசியத்தை அவர் இந்திய மக்களுக்கு அளித்தார்.
- ‘ஜாதி மதங்களைப் பாரோம்
- உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தின ராயின்’ -
- என்று இந்தப் புதிய தேசியத்தின் வருகையை பாரதி அறிவித்தான்.
- ‘விடுதலை தவறிக் கெட்டுப்
- பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
- வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!’ - என பாரதி காந்தியை வரவேற்றான்.
- ‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
- முழுமைக்கும் பொது உடைமை
- ஒப்பிலாத சமுதாயம்
- உலகத் துக்கொரு புதுமை’ - என்றான் பாரதி. மத, சாதி, இன அடிப்படையிலான இந்தியா அகன்று, புதுமையான பொது உடமையான இந்தியச் சமூகம் மலர்ந்தது என பாரதி அறிவிக்கின்றான்.
உலகமயமும் உண்மையும்
- உலகமயமாதல் சுனாமி போல் புகுந்த பின்னர் உயரிய மானிடப் பண்புகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதீதமான தேசிய இனவெறி உலகமயமாதலுக்குப் பின் பொய்யான, புதிய நெறியாக வளர்க்கப்படுகிறது. ஊடகப் பெருக்கம் புனைவுகளை உண்மைகள்போல் பரப்புவதை ஊக்குவிக்கின்றது. ‘உண்மை கடந்த’ காலத்தில் (Post Truth) உலகம் இன்று பயணிக்கின்றது. உண்மையைக் கடந்துவிட முடியாது. எவ்வளவு திறமையாக, வலிமையாக, கூட்டமாக, வெற்றிகரமாக உண்மையை மறைத்தாலும், உண்மை வெளிவந்தே தீரும்.
- ‘வாய்மையே வெல்லும்’ என்ற சத்திய வாக்கை பாரத தேசம் தாங்கியுள்ளது. ஆனால், மனிதர்களைப் பிளவுபடுத்துதல், அவர்களுக்கு இடையே பேராசையை வளர்த்தல், வெறுப்பினை அரசியல் பயன்களுக்காக வளரச் செய்தல், கட்டற்ற நுகர்வுக்கு உள்ளாக்குதல், உணர்வு நிலையில் சமூகத்தைத் தள்ளி உண்மையினைப் புறக்கணித்தல் உள்ளிட்ட போக்குகளை உலகமெங்கும் பார்க்கின்றோம். பண்புகளை நீக்கி, நுகர்வு, உணர்வு, வெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான சமூகத்தை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் நெருக்கடிகள், போர்கள், வன்முறை, பயங்கரவாதம், பிளவுபடுதல், சமூகச் சிதைவு ஆகிய எதிர்வினைகளும் வேகமாக வளர்ந்து உலகினை அச்சுறுத்துகின்றன.
எளிய மாற்றுகள்
- ஒன்றுபட்ட இந்தியா,அனைத்து இனக்குழுக்களுக்கும் பொதுவுடமையான, சம உரிமை தரும் இந்தியாவினைப் பிளவுறச் செய்யும் போக்கு மிக ஆபுத்தானது. இத்தகைய சிக்கலான காலத்தில் காந்தியின் அடிப்படையான கருத்துகள் அதிகமாகத் தேவைப்படுகின்றன.
- அதீத நுகர்வு, அதீத தேச - இன உணர்வு, அதீத மதப்பற்று ஆகிய பெருநோய்களுக்கான எளிய மாற்றுகளை காந்தி நம் முன் வைக்கின்றார். உண்மை, அன்பு என்னும் பொதுநெறிகளுக்கு உட்பட்ட நுகர்வு, தேசப்பற்று, சமய உணர்வு ஆகியவற்றை காந்தி முன்னெடுக்கிறார்.
- நெறிகளுக்கு உட்பட்ட நுகர்வு, தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கும், நீடித்த வளர்ச்சிக்கும், செழுமையான சுற்றுச்சூழலுக்கும், வறுமை நீக்கத்துக்கும் வழிவகுக்கும். நிறைவான, நீடித்த வளத்தைப் பெற்றுத் தரும். நெறிகளுக்கு உட்பட்ட தேசபக்தி நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், பாதுகாப்பையும், வளமுள்ள வாழ்வினையும் தரும்.நெறிகளுக்கு உட்பட்ட சமய உணர்வு, ஆன்ம மேம்பாடு, மகிழ்வான, நிறைவான வாழ்வு, நல்லிணக்கம், செம்மையான குடும்ப, சமூக உறவுகள் எனக் கணக்கிலடங்காத பயன்களைப் பெற்றுத் தரும்.
- காந்தி முதல் பாரதி வரை பலரும் வளமிக்க சமூகம், தேசபக்தி, ஆன்மிக நலன் ஆகியவற்றையே வளர்ச்சிக்கான இலக்குகளாக முன்வைக்கின்றனர். மனிதகுல ஒற்றுமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் கனவு கண்ட மகாத்மா, அறநெறிகளின் வாயிலாக உலகம் உள்ளளவும் வாழ்வார்; மகாத்மாவுக்கு மரணமில்லை.
- ஜனவரி 30: காந்தியின் 75ஆம் நினைவுநாள்
நன்றி: தி இந்து (30 – 01 – 2023)