- நீங்களும் காந்தியும் உறவினர் என்பது தெரியுமா? நம்ப முடியவில்லையா? அதுதான் உண்மை. நீங்களும் காந்தியும் மட்டுமல்ல; நீங்கள், நான், தெருவில் செல்லும் மாடு, வாசலில் நிற்கும் மரம் அனைவருமே உறவினர்கள்தாம் என்று அறிவியல் சொல்கிறது. உங்களுடைய முன்னோர்கள் யார்? தாத்தா, பாட்டி. அவர்களுடைய பெற்றோர் யார்? அந்தப் பெற்றோரின் பெற்றோர் யார்? இப்படியே தேடிச் சென்றுகொண்டிருந்தால், இறுதியாக நீங்கள் நிற்கும் இடத்தில்தான் விடை இருக்கிறது.
பரிணாம வளர்ச்சி:
- நாம் அனைவரும் உறவினர்கள் என்பதை அறிய பரிணாம வளர்ச்சி உதவும். பரிணாம வளர்ச்சி என்பது உயிரினங்களில் தலைமுறை தலைமுறையாக நடைபெறும் மாற்றம். ஓர் உயிர் தனது பண்புகளை இனப்பெருக்கம் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது.
- அவ்வாறு கடத்தப்படும் பண்புகள் அந்த உயிர் பூமியில் உள்ள கடினமான சூழலை எதிர் கொண்டு வாழ உதவுகிறது. இந்தப் பரிணாம வளர்ச்சி எப்படி நடைபெறுகிறது? டி.என்.ஏ.க்கள் (DNA ) மூலம்.
- டி.என்.ஏ. என்பது சங்கிலித் தொடர்போல இருக்கும் ஒரு வேதிப்பொருள். இது நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறது. உயிரினங்களின் வரைபடம் போன்றது. ஓர் உயிரினம் எப்படி உருவாக வேண்டும் என்கிற திட்டத்தை டி.என்.ஏ. கொண்டிருக்கிறது.
- பறவைக்கு இறக்கைகள், யானைக்குத் தும்பிக்கை இருக்க வேண்டும் என்கிறதகவல்கள் டி.என்.ஏ.வில்தான் இருக்கும். அதைப் பின்பற்றித்தான் உயிரினத்தின் உடல் அமைப்பு, பண்பு உள்ளிட்டவை கட்டமைக்கப்படும்.
- உயிரினங்கள் இனப் பெருக்கம் செய்யும்போது தங்களுடைய டி.என்.ஏ.வை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகின்றன. இவ்வாறு டி.என்.ஏ. கடத்தப்படும்போது அதில் உள்ள தகவல்கள் அப்படியே செல்லாது. அதில் ஒரு சில மாற்றங்கள் நிகழும். இதைத்தான் நாம் மரபணு பிறழ்வு (Mutation) என்கிறோம்.
- இந்த மாற்றங்கள், உருவாகும் சிசுவின் உடல் அமைப்பிலும் பண்புகளிலும் சிறிய மாற்றங்களை உருவாக்கும். உதாரணமாக, உயரமான நாய்களுக்குப் பிறக்கும் குட்டிகளில் ஒன்றிரண்டு குள்ளமாக இருக்கும். சில குட்டிகளுக்கு மோப்ப சக்தி அதிகமாக இருக்கும்.
- இவற்றில் இயற்கையில் நீடித்திருக்க எந்தெந்த புதிய பண்புகள் ஓர் உயிருக்கு உதவுகின்றனவோ, அவை எல்லாம் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகின்றன. இப்படியாக ஏற்படும் சின்ன சின்ன மாற்றங்கள் நீண்ட காலத்துக்கு இடைவிடாது நடைபெறும்போது, அது வேறு ஓர் உயிரினமாகவே பரிணமித்துவிடுகிறது.
- புலியும் பூனையும் இவ்வாறு பரிணாம வளர்ச்சியின் மூலம்தான் வெவ்வேறு உயிரினங்களாக மாறியிருக்கின்றன. குரங்குகளில் ஏற்பட்ட சிறு சிறு மாறுதல்களால்தான் நாம் உருவாகியிருக்கிறோம். இப்படியாகப் பூமியில் முதலில் உருவான ஒரு செல் உயிரினங்கள் அடைந்த பரிணாம வளர்ச்சியால்தான் உயிர்கள் அனைத்தும் தோன்றியிருக்கின்றன.
- மனிதர்களை எடுத்துக்கொள்வோம். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த நம் முன்னோர்கள் தோற்றத்திலும் பண்பிலும் நம்மைப்போல இருந்திருக்க மாட்டார்கள். அவர்கள் காட்டில் வாழ்ந்தவர்கள் என்பதால் அந்தச் சூழலுக்குப் பிழைத்திருக்க ஏற்றாற்போல கடினமான மண்டை ஓட்டையும், இறைச்சிகளைப் பச்சையாகக் கடித்து உண்ணக்கூடிய கூரான பற்களையும் கொண்டிருப்பார்கள் (Paleolithic Man).
- இன்னும் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன் சென்றால் அப்போதுள்ள முன்னோர்கள் இன்றைய மனிதர்களாக (Homo Sapiens) இல்லாமல், ஹோமோ எரெக்டஸ் (Homo Erectus) இன மனிதர்களாக இருந்திருப்பார்கள்.
- இன்னும் சில லட்சம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும்போது, அப்போது இருக்கும் மூதாதையர்கள் குரங்காகவும் இல்லாமல், மனிதனாகவும் இல்லாமல் இருவருக்கும் பொது மூதாதையராக (Proconsul) இருந்திருப் பார்கள்.
- இப்படியே செல்லும்போது நம் முன்னோர்கள் லெமூர், பிளாட்டிபஸ், முதலை, ஆமை... இறுதியாக மீனாகத்தான் இருந்திருப்பார்கள். இன்னும் சென்றால் அந்த மீனும் ஒற்றை செல் உயிரினத்தில் இருந்துதான் வந்திருக்கும். இப்படியாக அந்த ஒற்றை செல் உயிரினத்தில் இருந்து பரிணமித்து வந்தவர்கள்தாம் நாம் அனைவரும்.
ஆதாரங்கள்:
- ஒற்றை மூதாதையரில் இருந்து பரிணாம வளர்ச்சி வழியே அனைத்து உயிரினங்களும் வந்திருக்கின்றன. இதை உயிரினங்களின் உடல்கூறுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் உடற்கூறியல், உயிரினங்கள் கருவில் வளரும் விதத்தை ஒப்பிட்டு அறிவது, படிவங்களை ஆராய்வது, டி.என்.ஏ. ஒப்பீடு உள்ளிட்ட பலதரப்பட்ட ஆய்வுகள் மூலம்தான் அறிந்துகொள்கிறோம்.
- டி.என்.ஏ. பரிசோதனைகளை எடுத்துக் கொள்வோம். நமது டி.என்.ஏ. 4 வகை நியூக்ளியோடைடுகளால் ஆனவை. இந்த நியூ க்ளியோடைடுகளின் இணைப்பு தொகுதிதான் மரபணுக்கள். உதாரணத்துக்கு அனைத்துப் பாலூட்டிகளிலும் FoxP2 என்கிற மரபணு இடம் பெற்றுள்ளது.
- இந்த மரபணுவில் நியூக்ளியோடைடுகள் 2 ஆயிரம் அடுக்குத் தகவல்களாக அமைந்திருக்கின்றன. இந்த மரபணுத் தகவல்களை மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன. வெறும் 9 தகவல்கள்தாம் வேறுபடுகின்றன.
- இதுவே மனிதனுக்கும் எலிக்கும் ஒப்பிடும்போது 2 ஆயிரம் தகவல்களில் 139 தகவல்கள் மாறுபடுகின்றன. இதனால்தான் நாம் அதிகமாக சிம்பன்சி போன்றும், குறைந்த அளவில் எலியைப் போன்றும் இருக்கிறோம்.
- இவ்வாறு ஒவ்வோர் உயிரினத்தையும் ஒப்பிட்டால் நாம் அனைவரும் பரிணாம வளர்ச்சியின் காரணமாகச் சிறுசிறு மரபணுத் தகவல்வேறுபாட்டைக் கொண்டவர்கள் தாம், ஒரே மூதாதையரில் இருந்து வந்தவர்கள்தாம்.
- இப்படிப் பார்க்கும்போது பூமியில் வெவ்வேறு நாடுகளில் உள்ள மனிதர்களும் நீங்களும் உறவினர்கள்தாமே? மனிதர்கள் மட்டுமல்ல குரங்குகள், எலிகள், மாடுகள், நத்தைகள், கழுகுகள், தாவரங்கள் அனைவரும் ஒன்றுவிட்ட உறவினர்கள்தாம்! நம் அனைவருக்கும் ஆதியில் ஒரே மூதாதையர்தான். வரும் வழியில் பிரிந்துவிட்டோம்.
நன்றி: தி இந்து (26 – 04 – 2023)