TNPSC Thervupettagam

காந்தி என்ற காதில் புகுந்த எறும்பு!

October 3 , 2019 1881 days 879 0
  • நம்முடைய புவிக் கோள் தப்பிப்பிழைப்பதற்கு அகிம்சையால் எப்படிப் பங்களிக்க முடியும் என்பதை நினைத்துப்பார்ப்பதற்கு காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு நிறைவுத் தருணம் நமக்கு வாய்ப்பு வழங்குகிறது.
  • அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தபோதும் மனித குலமானது வறுமை, பஞ்சம், ஊட்டச்சத்துக் குறைபாடு, கல்வி, சுகாதார வசதியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படுவது நீடித்துவருகிறது.
  • இனம், மதம், தேசரீதியான வேறுபாடுகளால் பிராந்தியரீதியிலும் தேசிய, சர்வதேச அளவிலும் பிரச்சினைகள் நிலவுகின்றன. ஜனநாயகத்தின் நம்பிக்கை வெளிச்சமாக இருந்த பல்வேறு நாடுகளில் தற்போது வெகுஜனவியம், மதம்சார்ந்த தேசியவாதம், மதப் பிரிவினைவாத மோதல்கள் போன்றவை அதிகரித்துள்ளன.
  • மறுக்கவே முடியாத வகையில், நாம் பெரும் இக்கட்டான காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அகிம்சை சிந்தனைகள், செயல்பாடுகளுக்கான தேவை முன்பைவிடத் தற்போது மிக அதிகமாக எழுந்துள்ளது.
  • எனினும், பிரதானக் கேள்வி இதுதான்: அதிகாரம், பணம், பிரபலங்கள் எல்லாம் புதிய கடவுளர்களாக இருக்கும் இன்றைய உலகத்தில் காந்தியாலும் அவரது அகிம்சையாலும் நமது சிந்தனையிலும் நமது வாழ்க்கை பாணியிலும் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?
காந்தியின் போதனை
  • வெளிப்படையாகப் பேசுவதென்றால், காந்தி இன்றைய உலகில் ஒரு மறக்கப்பட்ட ஆளுமை. ஆயினும், அவ்வப்போது அறிவுஜீவிகளுக்கு இடையிலான உரையாடல்களில் இடம்பெறவே செய்கிறார்.
  • மரபுகளுடனும் போக்குகளுடனும் மாறுபடாமல் ஒட்டி ஒழுகுவது, சுயதிருப்தி போன்றவற்றோடு வெகுஜனவியம், தேசியவாதம் போன்றவற்றின் முரசொலிச் சத்தத்தைத் தூரத்தில் தேட வேண்டியதில்லை நாம், வெகு அருகிலேயே அது ஒலிக்கிறது. நம் அண்டை அயல், பணியிடங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில்கூட அந்தச் சத்தத்தைக் கேட்க முடியும்.
  • ஆகவே, இந்தக் கேள்வி எஞ்சுகிறது: காந்தியத் தார்மீகத் துணிவுக்கும் மறுப்புடனான விமர்சனத்துக்கும் தற்போது இடம் இருக்கிறதா? காந்தியம் என்பது அரசியல் ஏமாற்றுப் பேர்வழிகள் விரித்திருக்கும் கடையோ, அடிப்படையில் நல்ல மனிதர்களாக இருப்பதன் மூலம் மட்டுமே தங்கள் மனசாட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முடியுமென்று நினைக்கும் மனிதர்களின் குழுவோ அல்ல.
  • மாறாக, காந்தி நமக்கு போதிப்பது என்னவென்றால் அகிம்சையானது மெல்லிய இதயத்தையும் உறுதியான மனதையும் இணைக்கிறது என்பதைத்தான்.
  • வரலாறு படைத்த உண்மையான காந்தியர்களான நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், அப்துல் கஃபார் கான், வச்லேவ் ஹவேல் போன்றோரெல்லாம் பிடிவாதமான மனிதநேயவாதிகள், காந்தியைப் போலவே தீவிரமான சுயவிமர்சகர்கள், அதேநேரத்தில் பிறருக்கான அறரீதியிலான அளவுகோலாக இருந்தவர்கள்.
  • உண்மை என்னவென்றால், இந்த உலகத்தில் காந்தியத் தலைவர்களுக்கு நிறைய தட்டுப்பாடு உள்ளது. இன்றைய வெகுஜனவியத் தலைவர்கள் விமர்சனமின்றி மக்கள்திரளின் போக்கைப் பின்தொடர்கிறார்கள், அல்லது மக்கள்திரள் தங்களை ஆட்டுமந்தைகள்போல பின்தொடரச் செய்கிறார்கள்.
  • நம் நூற்றாண்டின் பிரச்சினை என்னவென்றால் மிகச் சில அரசியல்வாதிகளே சிந்திக்கிறார்கள், இன்னும் மிகச் சிலரே மக்கள் தங்களின் சிந்தனை அனுபவத்தைத் தினசரி அடிப்படையில் பரிசீலித்துக்கொள்வதற்கு அழைக்கிறார்கள்.
  • இன்றைய உலகத்தில் தலைவர்களெல்லாம் குடிமக்களுக்கெல்லாம் மேலான குடிமக்களாக மெச்சப்படுகிறார்கள். அவர்களெல்லாம் தர்க்க பூர்வமாகச் சிந்திக்கிறார்கள் என்பதற்காக அல்ல
  • இது, நமது விதியைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகவே இப்படி மெச்சப்படுகிறார்கள்.
அரசியல் எனும் கலை
  • அரசியல்வாதிகள் தாங்கள் கேள்வி கேட்கப் படுவதை விரும்புவதில்லை. மக்கள்திரளுக்கும் அவர்களின் அரசியல் தலைவர்களுக்கும் இடையே இவ்விஷயத்தில் ஒரு ஒற்றுமையைக் காண்கிறோம் நாம்.
  • ஆனால், காந்தி நமக்கு போதித்த அரசியல் எனும் கலை என்பது இதிலிருந்து வெகுவாக விலகியதாகும். காந்தி இன்றைக்கும் பொருத்தப்பாடு உடையவராக இருக்கிறார் எனில், அதற்கு அவர் தனித்த ஒரு வழிமுறையைத் தேர்ந்தெடுத்ததுதான் காரணம்.
  • அந்த வழிமுறை என்பது அரசியலை அதிகாரத்தின் வெற்றிகொள்ளலாகப் பார்க்காமல் சமூகத்தை அகிம்சை வழியில் ஒருங்கிணைக்கும் கலையாக அவர் பார்த்ததுதான். இப்படித்தான் அவர் அரசியலை நடைமுறைப்படுத்துவதில், கோட்பாடாக்குவதில் உள்ள பழைய வழிமுறைகளைக் கேள்விக்குட்படுத்தினார்.
  • இங்கே விவாதிக்கப்படும் விஷயம் என்னவென்றால் அவர் என்ன சொன்னார், என்ன செய்தார் என்பது மட்டுமல்ல; எப்படி சொன்னார், எப்படி செய்தார் என்பதும்தான்.
  • இதுதான் மேலை நாடுகளின் அப்பட்டமான நகலாகவோ மதரீதியிலான சிந்தனையைப் பிரதிபலிக்கும் செயலாகவோ அரசியலைக் காணும் மரபுக்கு எதிராகச் சிந்திப்பதற்கான பிரக்ஞைபூர்வமான முயற்சியாக இருந்தது.
  • தேசியவாத சார்புநிலையோ மதவாத வெறித்தனமோ தன் கண்களை மறைத்திடாத வகையில் அரசியலை காந்தி பார்த்தார்.
கேள்வி கேட்பதும் மறுப்பும்
  • அரசியல் எனும் கலை குறித்த காந்தியின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் கேள்வி கேட்பதிலும் மறுப்பதிலும் சாக்ரட்டீஸ் பின்பற்றிய அணுகுமுறையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
  • காந்தியைப் பொறுத்தவரை உண்மைக்கும் நீதிக்குமான தேடல் என்பது தொடர்ந்து கேள்வி கேட்பதையும் புதிதாகப் பரீட்சித்துப் பார்ப்பதையும் உள்ளடக்கியது.
  • இது அபாயகரமாகச் சிந்தித்தலும் வாழ்தலும் ஆகும். அவர் பிறருடைய காதில் புகுந்த எறும்பாக இருந்தார் என்பதற்கும் பிற அரசியல் தலைவர்களையும் பெருந்திரள் மக்களையும் புகழ்வதைவிட அவர்களைச் சங்கடப்படுத்தும் கேள்விகளையே கேட்கத் துணிந்தார் என்பதற்கும் அவருடைய படுகொலையே சான்று.
காந்தியின் சாக்ரட்டீஸ் தருணம்
  • ஆகவே, காந்தியின் சாக்ரட்டீஸ் தருணம் எப்போது வருகிறதென்றால் எல்லோரும் பெருந்திரளின் பரவச வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் நிலையில் இருப்பதாகத் தோன்றும்போது அவர் மட்டும் நம்பிக்கைகளைத் தொடர்ந்து பரீட்சிக்கும்போது வருகிறது.
  • “உண்மையைவிட மேலான மதம் ஏதுமில்லை” என்று காந்தி நம்பியது அவர் தர்க்கபூர்வமான சிந்தனைமுறைக்கு உண்மையாக இருந்தார் என்பதையும், இந்து தேசியவாதமும் இஸ்லாமிய அடிப்படைவாதமும் இந்திய ஜனநாயகத்துக்கும் உலகத்துக்கும் பெரும் அச்சுறுத்தல்கள் என்று அவர் கருதினார் என்பதையும் காட்டுகிறது.
  • ஆனால், காந்தி எதிர்கால ஆபத்து என்று கருதியதுதான் நமது தற்காலம். எனினும், காந்தி இறுதித் தீர்ப்பளித்துவிடவில்லை.
  • அகிம்சையை நம்புவோர் அனைவருக்கும் காந்தியச் சொத்தான சந்தேகம் கொள்ளுதல், கேள்வி கேட்டல், சமாளித்தல் என்பது பெரும் சக்தியாக இருக்கிறது. காந்தியிடம் நாம் என்ன இன்னும் கற்றுக்கொள்ள முடியும் என்றால் ஜனநாயகமானது கேள்விகளின், ஐயங்களின் அரசாக இருக்குமென்றால் அது காதில் புகும் எறும்புகளின் இருப்பை நியாயப்படுத்தும் நம்பிக்கையின் சமூகமாகவும் இருக்கும் என்பதைத்தான்.
  • அந்த எறும்புகளின் வேலை என்பது அவநம்பிக்கையான தருணங்களில் மறைந்துபோவதல்ல; மக்கள்திரளைப் பேரழிவுகள் சூழ்ந்துவரும் வேளைகளில் அவர்களைச் சிந்திக்க வைத்து சுதந்திரத்தை நோக்கி அவர்கள் நகர்வதற்கு உதவுவதே ஆகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (03-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்