TNPSC Thervupettagam

காந்தி லெனின்: ஒரு வரலாற்று ஒப்பீடு

January 30 , 2020 1810 days 912 0
  • சமீபத்தில் ராஜதந்திரி இவான் மெய்ஸ்கியின் நாட்குறிப்புகளைப் படித்துக்கொண்டிருந்தேன்; அவர் சோவியத் ரஷ்யாவின் பிரிட்டிஷ் தூதராக 1932 முதல் 1943 வரையில் பதவி வகித்தவர். வரலாற்றுப் பாடத்தில் அறிஞரான அவர், மொழியியல் அறிஞருமாவார். ஹிட்லர், ஸ்டாலின் வாழ்ந்த காலத்தில் அவரும் வாழ்ந்தார். சோவியத்துகளுக்கும் நாஜிக்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டபோதும் உடன்பாடு முறிந்தபோதும், இரண்டாவது உலகப் போரின் முதல் கட்டத்தில் தீவிரமாகப் போர் நடந்தபோதும் அவர் தூதராக இருந்திருக்கிறார்.

லெனின் மலை; காந்தி குப்பை

  • மெய்ஸ்கியின் நாட்குறிப்புகளைப் படித்து, சுருக்கிப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் இஸ்ரேலிய அறிஞர் கபிரியேல் கோரோடெட்ஸ்கி. இந்தப் புத்தகத்தின் 12-வது பக்கத்தில், இந்திய அரசியலர் ஒருவரைப் பற்றி மிகவும் கபடத்தனமாக ஒரு விமர்சனக் கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. வேறு யார்? காந்திதான் அந்த அரசியலர்.
  • காங்கிரஸிலிருந்து காந்தி (தற்காலிகமாக) விலகிவிட்டார் என்ற செய்திக்குப் பிறகு, 04.11.1934-ல் தனது நாட்குறிப்பில் மெய்ஸ்கி பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்: “காந்தி! என்னிடம் ‘லெனினும் காந்தியும்’ என்று பியூலாப் மில்லர் எழுதி வியன்னாவில் 1927-ல் வெளியான புத்தகம் உள்ளது.
  • அவ்விரு தலைவர்கள் குறித்தும் நூலாசிரியர் மிகுந்த திறமையோடு எழுதியிருக்கிறார். நம் காலத்தின் மிகப் பெரிய உச்சங்கள் என்று அவ்விருவரையும் அருகருகே வைத்து ஒப்பிட்டிருக்கிறார். ஏழு ஆண்டுகளுக்கு முன் இந்த ஒப்பீடு கம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டும்தான் அபத்தமாகத் தெரிந்திருக்கிறது.
  • இப்போது யாருக்காவது லெனினையும் காந்தியையும் ஒப்பிடத் துணிச்சல் வருமா? லெனின் வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட பெரிய ஆல்ப்ஸ் மலையாகவே தோன்றுவார்.
  • காந்தியோ அட்டையில் செய்யப்பட்ட செயற்கை மலையாகவும், வேகமாக உடைந்து சிதறுகிறவராகவும், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மக்களால் அறவே மறக்கப்பட்டு, வரலாற்றின் குப்பைக்கூடையில் மட்டுமே இடம்பெற்றவராகவும் தோன்றக்கூடும். விலையுயர்ந்த உலோகங்களையும் அவற்றைப் போலவே தோற்றம் தரும் போலிகளையும் காலமும் சம்பவங்களும்தான் பிரித்துக் காட்டுகின்றன!”

எஸ்.ஏ.டாங்கேவின் கணிப்பு

  • மெய்ஸ்கி எழுதியதற்கும் 13 ஆண்டுகளுக்கு முன் இந்திய இளைஞர் ஒருவர் அவரைப் போலவே லெனினையும் காந்தியையும் ஒப்பிட்டு, இருவரில் சிறந்தவர் லெனினே என்று எழுதினார். அவர்தான் அன்றைய பம்பாயைச் சேர்ந்த ஸ்ரீபாத அம்ரித் டாங்கே! 1921-ல் ‘காந்தியும் லெனினும்’ என்ற சிறிய புத்தகத்தை டாங்கே எழுதினார்.
  • “காந்தி தனிப்பட்ட முறையில் நேர்மையாளராக இருந்தாலும் பிற்போக்கான சிந்தனையாளர், மதத்திலும் தனிமனிதர்களின் மனசாட்சி மீதும் நம்பிக்கை வைப்பவர். லெனினோ பொருளாதார ஒடுக்குமுறைகளுக்குக் கட்டமைப்பிலேயே நிலவும் காரணங்கள் எவையென்று அறிந்தவர். அனைத்து மக்களையும் திரட்டி அந்தச் சுரண்டலுக்கு முடிவுகட்ட முயன்றவர். கடந்துவிட்ட பழைய காலத்தை மீண்டும் உருவாக்க முயல்கிறவர் காந்தி.
  • நவீன நாகரிகத்தில் கிடைத்த சாதனைகளை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுபவர் லெனின்” என்று எழுதினார் டாங்கே.
    முக்கியமான செய்தி என்னவென்றால், டாங்கே ஒருபோதும் ரஷ்யாவுக்குப் போனதுமில்லை; லெனினை நேரில் பார்த்ததுமில்லை. அவரையோ அவருடைய நாட்டையோ பற்றித் தெரியாமலும்கூட, “போல்ஷ்விக்குகள் தங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்கள். இருக்க இடம், உண்ண உணவு, நிம்மதியான வாழ்க்கை ஆகியவற்றை அவர்கள் அளித்துவிட்டனர்” என்று டாங்கேவால் எழுத முடிந்தது.

பகத் சிங்கின் அறிக்கை

  • 1929-ல் ‘இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி’ என்ற இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த பகத் சிங் டெல்லியில் நாடாளுமன்றத்தின் மீது வெடிகுண்டுகளை வீசியதற்காகக் கைதுசெய்யப்படுகிறார். “சாத்வீகப் போராட்டத்தின் மூலம் இந்த பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றிவிடலாம் என்ற உடோப்பிய முறை இத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்த முறையால் எந்தவிதப் பலனும் இல்லை என்று வளர்ந்துவரும் இளைய சமுதாயம் சந்தேகமே இல்லாமல் நன்கு உணர்ந்திருக்கிறது” என்று கைதுக்குப் பிறகு அறிக்கை வாயிலாகத் தெரிவிக்கிறார்.
  • “காந்தியைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிட்டு, லெனின் காட்டும் வன்முறை சார்ந்த புரட்சிகரப் பாதையைத் தேர்ந்தெடுங்கள்” என்று அறைகூவல் விடுக்கிறார்.
    சோவியத் நாட்டின் ராஜதந்திரி இவான் மெய்ஸ்கியைப் போல 1920-கள், 1930-களில் வாழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட்டுகளும் காந்தி என்றால் சீறி விழுந்தனர், லெனினை வழிபட்டனர். தங்களுடைய பழைய, புராதன, தேக்கமுற்ற இந்தியச் சமூகத்தை நவீன காலத்துக்குக் கொண்டுவர லெனின் மிகவும் பொருத்தமானவராக இருப்பார், மாயாவாதியான காந்தியைவிட என்று அவர்கள் நம்பினர்.
  • பின்னாளில் லெனினுக்குப் பிறகு ஸ்டாலின் சோவியத் ரஷ்யாவின் தலைவரானார். அரசுக்கு எதிராகச் செயல்பட்டார்கள் என்பதற்காகத் தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்களைக் கொடூரமாகப் பழிவாங்கினார். தெளிவான பார்வை கொண்டவர்களுக்கு, சோவியத் புரட்சி என்பது அரசியல் - பொருளாதாரரீதியிலான பேரழிவு என்பது புரிந்தது. ஆனால், சில மேற்கத்திய அறிவுஜீவிகளுக்கோ சோவியத் புரட்சிக்கு வித்திட்டவர் மீது ஒரு பாசம் நீண்ட காலத்துக்குத் தொடர்ந்தது. இலக்கிய விமர்சகர் சிரில் கானாலி லண்டனிலிருந்து வெளிவந்த ‘சண்டே டைம்ஸ்’ இதழில் 1972 ஜனவரியில் எழுதிய கட்டுரையைச் சமீபத்தில் படித்தேன்.
  • லெனின், காந்தி பற்றி எழுதப்பட்ட புதிய புத்தகங்களைச் சேர்த்தே சிரில் கானாலி விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். “இருவருமே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இரண்டு பெரிய நாடுகளுக்கு இருவருமே புதியதொரு திசையைக் காட்டியுள்ளனர். லெனின் 53 வயதிலேயே இறந்துவிட்டார். அவர் மட்டும் காந்தியைப் போல நீண்ட நாட்களுக்கு வாழ்ந்திருந்தால் ஸ்டாலினும் வந்திருக்க மாட்டார். ஹிட்லர் வரலாற்றில் இடம்பெற்றிருப்பார் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டிருக்கிறார்.
  • டாங்கேவைப் போலவே காந்தியையும் அவருடைய தனிப்பட்ட ஒழுக்கம், கண்ணியத்துக்காகப் பாராட்டுகிறார். ஆனால், டாங்கேவைப் போல நவீன உலகுக்கு மிகவும் பொருத்தமானவர் காந்தி அல்ல; லெனின்தான் என்கிறார்.
  • டாங்கே, மெய்ஸ்கி போல கானாலி கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர் அல்ல. பிரிட்டிஷ் நாட்டின் மேல்தட்டுக் குடிமகன். நல்ல சாப்பாடு, நல்ல மதுவை விரும்பிச் சுவைப்பவர். உண்மையில், பிரிட்டனில் லெனின் ஆட்சிக்கு வந்திருந்தார் என்றால், அவர்தான் முதலில் பாதிக்கப்பட்டிருப்பார். லெனின்கூட நல்ல உணவையும் மதுவையும் சுவைப்பதில் ஆர்வம் உள்ளவர். இந்திய கம்யூனிஸ்ட்டுகளால் பூர்ஷ்வா என்றும் வலதுசாரி என்றும் அர்ச்சிக்கப்பட்ட காந்தி, சாமானியர்களைப் போலவே எளிமையாக உடை உடுத்தியவர். சாப்பாடும் அப்படியே!

லெனின் – காந்தி: ஒப்பீடு

  • 1869 அக்டோபரில் காந்தி பிறந்தார். லெனின் அதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு பிறந்தார். இருவரும் சமகாலத்தவர்கள். அவர்கள் இருவரும் ஏன் ஒப்பிடப்பட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு காரணம். மிகப் பாரம்பரியமான கலாச்சாரப் பின்னணியும் வரலாறும் கொண்ட இரு பெரும் நாடுகளின் இணையற்ற தலைவர்கள் இருவரும். இருவருமே அரசியல் அடக்குமுறைக்கும் பொருளாதாரத் தேக்கநிலைக்கும் எதிராகப் போராடியவர்கள். மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.
  • இந்தியாவும் உலகமும் இப்போதுதான் காந்தியின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளன. காந்திக்குப் புகழாரங்கள் சூட்டப்பட்டன. சில நேர்மையான பாராட்டுகள்; சில உள்நோக்கமுள்ளவை. சிலர், காந்தி அந்தக் காலத்தில் செய்தது அல்லது செய்யத் தவறியதைக் குறிப்பிட்டு அவரைக் குறை கூறவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். லெனினின் 150-வது பிறந்த நாளை ரஷ்யாவும் உலகமும் எப்படிக் கொண்டாடப்போகிறது என்று பார்க்க வேண்டும்.
  • படித்தவர்கள் - பாமரர்கள் என்று அனைவரிடையேயும், இறப்புக்குப் பிறகு காந்தியின் புகழ், லெனினுடைய புகழைவிட அதிகம். தார்மீக, அரசியல் முன்னோடி, வெவ்வேறு மதங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் யார் என்றால், அது அகிம்சையைப் போதித்த காந்தியாகத்தான் இருக்க முடியுமே தவிர, ‘ஆயுதம் எடுத்துப் போரிடுங்கள், வர்க்கங்களுக்கிடையே போர் நடக்கட்டும்’ என்று கூறிய லெனின் அல்ல என்பது என்னுடைய கருத்து. ஆயிரம் ஆண்டுகளாகத் தழைத்து வளர்ந்த மனித குலத்துக்கே வழிகாட்டும் துருவ நட்சத்திரம் காந்தி மட்டுமே என்று நான் நம்புகிறேன்.

நன்றி: இந்து தமிழ் திசை (30-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்