TNPSC Thervupettagam

காந்திஜியின் கனவு.. அருட்செல்வரின் அறிவுரை!

April 24 , 2020 1727 days 1466 0
  • "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்' என்பது வள்ளுவம். அந்த வகையிலே முறைசெய்து காக்கக்கூடிய பணியிலே நம்முடைய அரசுகள் நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றன.
  • அந்த அரசுகளின் கீழ் நடைபெறும் ஆட்சிகளில் மக்களால் மக்களுக்காக மக்களே நடத்துகின்ற சிறப்புடையது உள்ளாட்சி ஆகும்.
  • மத்திய அரசு ஆட்சியும் மாநில ஆட்சியும் இருந்தாலும்கூட தற்சார்பு ஆட்சியாக மிகச் சிறப்பாகப் போற்றக்கூடிய வகையில் அமைந்திருப்பது உள்ளாட்சி அமைப்பு ஆகும்.
  • இந்த உள்ளாட்சி அமைப்புகள் நீண்டகாலமாக நம்முடைய நாட்டிலே இருந்து வந்துள்ளன.

உள்ளாட்சி அமைப்புகள்

  • நம்முடைய மக்களாட்சி முறை என்பது தமிழகத்தில் இனக் குழு சமுதாய ஆட்சிமுறை நடைபெற்ற காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. மக்களை மக்களே தேர்ந்தெடுக்கின்ற முறை, குடவோலை முறை, ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்று இருக்கக்கூடிய அமைப்புகள் மக்களின் அமைப்புகளாக இருந்து செயல்பட்டவை.
  • பிற்காலத்தில் கிரேக்கத்திலும், இந்தியாவிலும் மக்களாட்சி முறை மலர்வதற்கு இதுவே அடிப்படையாக அமைந்தது.
  • இதற்கான சான்றுகளாகக் கல்வெட்டுகள் பல இடங்களில் கிடைத்துள்ளன.
  • ""ஒரு லட்சிய கிராமத்தை உருவாக்குவது என்பது எந்த வகையிலும் ஒரு லட்சிய இந்தியாவை உருவாக்குவதை விடச் சளைத்ததல்ல. ஒரு லட்சிய கிராமத்தை உருவாக்க ஒரு மனிதனின் முழு வாழ்நாள் தேவைப்படும். இத்தகைய பணியில் ஈடுபடும் மனிதன் இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே ஓர் அற்புதமான வழிகாட்டியாக விளங்குவார்'' என்பது மகாத்மா காந்தியடிகளுடைய கருத்து (அரிஜன் 4.2.1942).
  • இத்தகைய பஞ்சாயத்து அமைப்புகள் குறித்ததாக இருக்கக்கூடிய கருத்துப்போக்கு நான்கு கட்டங்களிலும் அமைந்திருப்பதை நாம் பார்க்கின்றோம்.
  • முதலாவதாக நமது அரசியலமைப்புச் சட்டம் இயற்றுவதற்கு முன்பாக இருந்த ஒரு நிலை. அந்த நிலையிலே பஞ்சாயத்துக்களுக்கு பெரிய அதிகாரங்கள் வழங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகமாக முன்வைக்கப்படவில்லை.
  • நம்மிடத்திலே இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டும் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய மக்களினுடைய கல்லாமை போன்றிருக்கக்கூடிய காரணங்களைக் கொண்டும் 1950களுக்கு முன்னதாகவும் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோதும் கூட கிராம பஞ்சாயத்து முறைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

பஞ்சாயத்து ராஜ்

  • பின்னர் நடைபெற்ற இரண்டு மூன்று கூட்டங்களிலேதான் பஞ்சாயத்து ராஜ் பற்றிச் சிந்தித்தார்கள்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாற்பதினுடைய அடிப்படையிலே பஞ்சாயத்துகளுக்கு உண்டானதாக இருக்கக்கூடிய அதிகாரங்களை வழங்குவதைச் செய்திருக்கிறார்கள். அதன் காரணமாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 40-ஆவது பிரிவு அது குறித்துக் குறிப்பிடுகிறது.
  • இது, மாநிலங்கள் தனியான அரசியல் சட்டத்துடன் கொண்டுவருவதற்கான வழிமுறையைக் கூறுகிறது. அந்த அடிப்படையில் இந்த பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் எல்லாம் செயல்பட்டன.

ஊராட்சி

  • தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டமும் அதனடிப்படையில் 1950-இல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு ஊராட்சி அமைக்கப்பட்டது. அதிலும் மற்றும் இருக்கக்கூடிய ஒன்றிய அளவிலும் மாவட்ட அளவிலும் பல்வேறு வகையான அமைப்புகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்றன.
  • இந்தச் சூழலில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கு அதிக முதன்மை கொடுத்தார்.
  • அதன் அடிப்படையில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றப்பட்டது. எனினும், மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாத காரணத்தால் சட்டமாக்கப்படவில்லை. அது சட்டமாக்கப்பட்டு அமலுக்கு வந்தது 1992, ஏப்ரல் 24-ஆம் நாளாகும்.
  • இந்த நாளைத் "தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள்' என்று கொண்டாடி வருகிறோம். இந்நாளில் பஞ்சாயத்துகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் அதிகாரங்களை முழுமையான அளவிலே வழங்காமல் இருக்கிறோம்.
  • பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நமது அரசியலமைப்புச் சட்டத்தில் அரசுகளுக்குப் பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கிராம சுயராஜ்யம்

  • மத்திய அரசின் அதிகாரத்தில் ராணுவம், அயல்நாட்டு உறவு, நாணயம் உள்ளிட்ட 97 துறைகள் உள்ளன. இவை அனைத்தும் குறித்த சட்டத்தை மத்திய அரசால்தான் இயற்றப்பட முடியும். அதேபோல மாநில அரசுகளுக்கு நிலம், கல்வி, நூலகம், நீர்ப்பாசனம், சுகாதாரம் முதலிய 65 துறைகள் இருக்கின்றன. இந்த இரு பிரிவுகளுக்கும் இல்லாமல் பொதுவாக இருக்கக்கூடிய பட்டியலும் உண்டு. அதில் 40 அட்டவணைகள் உள்ளன. அதில் 11-ஆவது அட்டவணையில் 29 துறைகள் உள்ளன. இவைதான் பஞ்சாயத்து ஆட்சிக்கு ஒதுக்கப்பட்டவை. அந்த வகையிலே அரசியலமைப்புச் சட்டத்தின் 73, 74- ஆவது சட்டத் திருத்தங்கள் மூலமாக இது நடைமுறைக்கு வந்தது. காந்தியடிகளின் கனவு, "கிராம சுயராஜ்யம்' என்று சொல்லக்கூடிய உள்ளாட்சி அமைப்பைக் கொண்டு வருவதுதான். அதைக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும்கூட இன்னும் பஞ்சாயத்து எல்லாம் மாநிலங்களிலும் சிறப்பாகச் செயல்படாமல் இருக்கிறது.

அரசியல் என்பது இல்லை

  • பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமல்படுத்தப்பட்டு ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் உள்ளாட்சிகளுக்குப் போதுமான நிதி அதிகாரமோ தேவையான நிர்வாக அதிகாரமோ இதுவரை தரப்படவில்லை. நீண்ட காலமாக பஞ்சாயத்துத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து தற்போதுதான் நடத்தப்பட்டு முடிவுகள் வந்திருக்கின்றன.
  • இந்திய அளவிலே 2,34,676 பஞ்சாயத்துகள் இருக்கின்றன. அதில் தமிழகத்தில் 12,620 பஞ்சாயத்துகள் இருக்கின்றன. இந்திய அளவில் 6,079 ஒன்றியப் பஞ்சாயத்துகளும் அவற்றில் தமிழக அளவில் 385 ஒன்றியப் பஞ்சாயத்துகளும் இருக்கின்றன. மாவட்டப் பஞ்சாயத்துகள் இந்திய அளவில் 537-ம் அதில் தமிழக அளவில் 29-ம் இருக்கின்றன. இந்த பஞ்சாயத்துகள் மக்களாட்சி முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.
  • நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்ற போது கட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில் அரசியல் இருக்கிறது. ஆனால் கிராமப் பஞ்சாயத்தில் தான் அரசியல் என்பது இல்லை.
  • வேட்பாளர்கள் கட்சி சாராமல் சுயேட்சையாகப் போட்டியிடுவது இம்முறையில்தான் அதிகம். அந்தவகையில் தமிழகத்தில் 12,620 பஞ்சாயத்துகளில் தற்போது 27 மாவட்டங்களில் பஞ்சாயத்துகளுக்கு மட்டுமே தேர்தல்கள் நடைபெற்றன.
  • கரோனா தொற்றுநோய்த் தாக்கத்தால் இன்னும் சில மாவட்டங்களில் தேர்தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அசோக் மேத்தா கமிட்டி

  • இருந்தாலும்கூட தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவரும் இந்நாளில் தங்களின் கடமைகள், அதிகாரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
  • 1977-இல் அமைக்கப்பட்ட அசோக் மேத்தா கமிட்டி ஓர் அறிக்கையை வழங்கியது.
  • வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரங்களை பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டும் என்பதையும் அதிகாரிகளும் பஞ்சாயத்து ராஜின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வேண்டும் என்பதையும் தன்னார்வ நிறுவனங்கள் மக்கள் ஒருங்கிணைப்பில் செயலாற்ற வேண்டும் என்பதையும் பஞ்சாயத்துக்கு மாநில அரசின் கீழ் ஒரு அமைச்சு அமைக்கப்பட வேண்டும் என்பதையும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கருத்துரைகளை இக்குழு வழங்கியது.

பஞ்சாயத்து ராஜ் சட்டம்

  • 1992-ஆம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றப்பட்டபோது இக்குழுவின் கருத்துகள் பல செயல்படுத்தப்பட்டன.
  • மக்களாட்சிக்கும் வளர்ச்சிக்கும் பஞ்சாயத்து அரசுகளை மறுசீராய்வு செய்யும் குழு என்று ஒரு குழுவினை 1986-ஆம் ஆண்டு மத்திய அரசு எல்.எம்.சிங்வி என்பவரின் தலைமையிலே மத்திய அரசு அமைத்தது.
  • இக்குழுவின் பரிந்துரைகள் பஞ்சாயத்து ராஜ் எனப்படும் உள்ளாட்சி அமைப்பிற்கு ஊக்கம் தரக்கூடிய வகையில் அமைந்தன.
  • பஞ்சாயத்து அரசாங்கங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் முறையாக, முழுமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அருகருகில் உள்ள கிராமங்களை இணைத்து நீதிப் பஞ்சாயத்துகளை ஏற்படுத்தலாம் என்றும் நேரடி ஜனநாயகத்தின் வெளிப்பாடாக கிராம சபை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கிராமப் பஞ்சாயத்திற்கு அதிக நிதி ஆதாரங்கள் வழங்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு பரிந்துரைகளை சிங்வி தலைமையிலான குழு பரிந்துரைத்தது.

சில விவரங்கள்

  • மத்திய அரசு கிராமப் பஞ்சாயத்திற்கு வழங்கக் கூடிய நூறில் பதினேழு விழுக்காடு மட்டுமே கிராமத்திற்குப் போய்ச் சேர்கிறது என்றும் ஆறில் ஒரு பங்கு அரசின் நிர்வாகச் செலவிற்கே போகிறது என்றும் செலவிடும் மொத்தப் பணத்தில் 83 சதவீதம் வீணாகப்போவதாகவும் ஒரு கருத்தைச் சொன்னார்கள். "தில்லியில் இருந்து யானை அனுப்பினால் அதன் வால்தான் ஒரு கிராமத்தைச் சென்றடையும்'”என்று இந்த நிலையை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வேடிக்கையாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
  • மேலும் அவர் நாம் மக்களிடம் நம்பிக்கை கொண்டுள்ளோம், நல்லெண்ணம் கொண்டுள்ளோம், மக்களே நமது தலைவிதியை நிர்ணயிக்கக்கூடியவர்கள், இந்திய மக்களுக்கு அதிக அளவில் குடியாட்சியையும் பொறுப்புணர்வையும் உறுதிப்படுத்துவோம் என்று பஞ்சாயத்துச் சட்டம் 63-ஆவது சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள்.
  • மக்களவையில் அது கொண்டு வந்தாலும் கூட மாநிலங்களவையில் அது நிறைவேற்றப்படாமல் இருந்தது. பின்னர் 1993-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் நாளன்று கொண்டுவரப்பட்ட 73-ஆவது சட்ட திருத்தத்தில்தான் இது அரசியலைப்புச் சட்டமாகக் கொண்டுவரப்பட்டது.

காந்தியடிகள் கனவு

  • பஞ்சாயத்து ராஜ் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு எவ்வாறு இருக்கும் என்று காந்தியடிகள் குறிப்பிடுகையில், எனது கனவு நிறைவேறுமானால் இந்தியாவில் உள்ள 7 லட்சம் கிராமங்களிலும் படிக்கத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் இருக்காது.
  • அனைவரும் தேசத்தின் பயனுக்கான பணியில் ஈடுபட்டிருப்பர். அனைவருக்கும் ஊட்டமான உணவு, பாதுகாப்பான இருப்பிடம், சுகாதாரமான வாழ்க்கை, தமது தேவைகளைத் தாமே தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் ஆகியவை உறுதி செய்யப்பட்டிருக்கும்(அரிஜன் 1922) என்று கூறுகிறார்.

அருட்செல்வர் குறிப்பிடுவது

  • அருட்செல்வர் நா.மகாலிங்கம் குறிப்பிடும்போது, கிராமப் பஞ்சாயத்து குறித்து காந்தியடிகள் கூறிய கருத்தை செயல்படுத்தியிருந்தால் சீனாவிற்கு முன்பே நாம் கிராம அபிவிருத்தியைப் பெருக்கியிருக்க முடியும்.
  • முடியாமல் போனதற்குக் காரணம் நமது ஆட்சிமுறை ஜனநாயகம் சார்ந்ததாகவும், சீனாவின் ஆட்சிமுறை சர்வாதிகாரம் சார்ந்ததாகவும் அமைந்துவிட்டதே.
  • அதனால்தான் பொருளாதாரத்திலே சீனாவின் வேகம் அதிகமாகச் சென்றுவிட்டது. நாமும் கிராம சுய ஆட்சியைக் காந்தியடிகளின் நோக்கில் செயல்படுத்தினால் பொருளாதாரத்தில் முன்னேறலாம் என்பதில் ஐயமில்லை என்று கூறியுள்ளார்.

முயற்சிகளை எடுக்கவேண்டும்

  • இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த பஞ்சாயத்து ராஜ் நாளில் நிறைய முயற்சிகளை எடுக்கவேண்டும்.
  • இந்தச் சட்ட திருத்தம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நல்ல ஒரு உயிரோட்டத்தைத் தந்துள்ளது.
  • அதேபோல மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை பல்வேறு ஆலோசனைக் குழுக்கள் மூலம் எல்லா மாநிலங்களிலும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.
  • அதனடிப்படையில் மத்திய அரசின் திட்டக் குழு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் அந்தந்த மாநிலங்களில் செயல்படும் பஞ்சாயத்து அமைப்புகளைக் கண்காணித்து அதற்கேற்ப மாநில அரசு நிதியுதவி வழங்கி கட்டுபாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.
  • தமிழகத்தில் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு ஒரு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மக்களும் பிரதிநிதிகளும் இணைந்து பங்கேற்க போதுமான கால அவகாசம் கிடைக்கவில்லை.
  • அடுத்த கிராமசபைக் கூட்டம் மே 1-ஆம் தேதி நடைபெற இருக்கும் சூழலில் சமூக இடைவெளியுடன் அரசு இதை நடத்த முடிவு எடுக்குமானால் அனைவரும் கலந்துகொள்ள இது ஓர் அரிய வாய்ப்பாக அமையும்.

உணர்ந்து செயல்பட வேண்டும்

  • ஊரடங்கு உத்தரவால் மக்கள் பெரும்பாலும் அவரவர் ஊர்களில் இருப்பர். அதனால் முடிந்த அளவு அனைவரும் சமூக இடைவெளியுடன் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
  • இப்பொழுது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடிய கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களும் அங்கு இருக்கக்கூடிய உறுப்பினர்களும் தம்முடைய கடமைகளையும் செயல்பாடுகளையும் நல்ல முறையிலேயே உணர்ந்து செயல்பட வேண்டும்..
  • அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே ஊராட்சி மன்றத் தலைவருக்கென்று நிறைய அதிகாரங்களை வழங்கப்பட்டுள்ளன.
  • அவ்வாறு வழங்கப்பட்டுள்ள அந்த அதிகாரங்களை எல்லாம் நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
  • பஞ்சாயத்துத் தலைவர்கள், உறுப்பினர்களின் முக்கியக் கடமைகளை பஞ்சாயத்துராஜ் சட்டம் வலியுறுத்தி இருக்கிறது.
  • அக்கடமைகளில் முக்கியமானவை கிராம சாலைகள், விளக்குகளை அமைத்தல், கழிவுநீர் வசதி, அதற்குண்டான வகையில் சாக்கடை கட்டுதல், தெருக்களைச் சுத்தமாக வைத்தல், பொதுக் கழிப்பறைகளை ஏற்படுத்துதல், இடுகாடுகள் பராமரிப்பு, குடிநீர் ஆதாரங்களை ஏற்படுத்துதல் போன்றவை.

நிதி ஒதுக்க வேண்டும்

  • மாநில அரசினுன் வருவாயில் இப்போது 10 சதவீதத்துக்கும் குறைவான அளவுதான் கிராமப் பஞ்சாயத்துக்களுக்காக ஒதுக்கப்படுகின்றன. அதில் சுமார் 13,000 பஞ்சாயத்துக்களுக்கும் 40 ஒன்றியங்களுக்கும் இந்த நிதி தரப்படுகிறது. இதில் ஒட்டுமொத்தமாக செல்லுகிறபோது மிகக் குறைவான அளவுதான் கிராம பஞ்சாயத்துக்கு சென்று சேருகிறது.
  • அறிஞர் பெருமக்கள் குறைந்தது மாநில அரசினுடைய வருமானத்தில் 30 சதவீத நிதியாவது பஞ்சாயத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய கருத்தினைத் தெரிவித்து வருகிறார்கள்.
  • அந்த வகையிலேயே கிராமங்களுக்கு இந்த அதிகாரப் பகிர்வும் நிதிப்பகிர்வும் அதிகமாக்கப்பட்டால்தான் இன்னும் அங்கே நல்ல வளர்ச்சிகள் எல்லாம் நடைபெறுவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
  • மேற்கூறிய பணிகளுக்குத் தேவையான அளவு மாநில அளவிலேயும் மத்திய அளவிலேயும் நிறைய நிதி ஆதாரங்கள் இருக்கின்றன.
  • இந்த நிதி ஆதாரங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அப்படிப் பயன்படுத்துவதற்குத் தடையாக இருப்பது ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பது போல போதுமான அதிகாரங்கள் இல்லாமல் இருப்பது.
  • நிதி ஆதாரம் குறைவாக இருக்கிறது. அடிக்கடி இந்த பஞ்சாயத்து அமைப்புகள் கலைக்கப்படுகின்றன. பல ஆண்டுகள் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதையெல்லாம் கண்கூடாகக் கண்டோம்.

மக்களினுடைய பங்கேற்பு இல்லை

  • அதேபோல கிராம மக்களினுடைய பங்கேற்பு இல்லை. கிராமசபை கூட்டங்களில் மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். அப்படி பங்கேற்கிறபோதுதான் அந்த கிராமத்தின் உள்ளாட்சி முறை மிகச் சிறப்பாக அமையும்.
  • அதேபோல மக்களிடத்திலே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு உண்டான முயற்சிகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இளைஞர்களிடத்தில் இந்த மக்களாட்சி குறித்ததாக இருக்கக்கூடிய ஒரு விழிப்புணர்வு பெருகி இருக்கிறது.
  • அந்த விழிப்புணர்வின் காரணமாக இளைஞர்களிடத்தில் கிராமசபைக் கூட்டங்களை நடத்துவது, அதனுடைய நடவடிக்கைகளைக் கவனிப்பது போன்ற பணிகளை எல்லாம் செம்மையான முறையில் செய்திருக்கிறார்கள். கிராமப் பஞ்சாயத்து என்பது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆகியும் இன்னும் முழுமையான முறையில் கிராமங்களிலே உள்ளாட்சி முறை மேம்படுத்தப்படாமல் இருக்கக்கூடிய நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. அவற்றை நாம் மாற்றவேண்டும்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்

  • அதேபோல இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு வாய்ப்பு என்னவென்று சொன்னால் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் மூலமாக இந்த சமுதாயத்தில் இருக்கின்ற, உள்ளாட்சியில் இருக்கின்ற மக்களுக்கெல்லாம் மக்களினுடைய தேவைக்கு ஏற்ற வகையில் நிறைய வசதிகளை செய்து கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை நினைவில் கொண்டு அந்தந்தப் பகுதியில் இருக்கக்கூடிய தன்னார்வத் தொண்டர்களை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை.
  • அனைவருக்கும் கல்வி, அனைத்துக் குடும்பங்களும் அடிப்படை சுகாதார வசதி, அனைவருக்கும் மின்சார வசதி, அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு வசதி (ஆயுள் காப்பீடு வசதி), பாதுகாக்கப்பட்ட குடிநீர், 100 சதவீத பசுமை மற்றும் தூய்மை கிராமம், எல்லோருக்கும் வேலைவாய்ப்பு, குடிப்பழக்கமற்ற பஞ்சாயத்து ஆதியனவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டு தன்னார்வத் தொண்டர்களை ஊக்குவித்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு ஒவ்வொரு கிராமமும் செயல்படலாம்.
  • இப்போது கரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கும் ஊரடங்கு காலங்களில் பல கிராமங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றன.
  • இந்த நிலை அப்படியே தொடர்ந்தால் ஒவ்வொரு கிராமமும் ஒரு சிறு குடியரசாக மாறும். இதுபோன்ற காலங்களிலும் கிராம வளர்ச்சி குறித்த செயல்பாடுகளிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை இணைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
  • இயற்கை வேளாண்மை, பனை வளர்ப்பு, கால்நடைகள் வளர்த்தல், வேளாண் பொருள்களை மதிப்பூட்டப்பட்ட பொருள்களாக உருவாக்குதல், சுய உதவிக் குழுக்களை வளப்படுத்துதல், இளைஞர்களுக்கான தொழில்களைத் தொடங்குதல் ஆதிய பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டால் தற்சார்புப் பொருளாதாரம் உயரும்.

ஊராட்சிமன்றமும் முக்கியம்

  • ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, அந்த நாட்டின் ஊராட்சி மன்றப் பொருளாதார வளர்ச்சியைப் பொருத்தே அமையும் என்பார் மகாத்மா காந்தி.
  • ஒரு நாட்டுக்கு நாடாளுமன்றமும் சட்டப்பேரவையும் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஊராட்சிமன்றமும் முக்கியம் என்பது சான்றோர்கள் கருத்து.
  • அந்த வகையில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவரும் தங்கள் பணியின் பொறுப்பையும் அதிகாரத்தையும் உணர்ந்து கடமைகளைச் செவ்வனே செய்தால் கிராமங்கள் வளம் பெறும்; கிராமங்கள் வளம் பெற்றால் ஒன்றியங்கள் வளம் பெறும்; ஒன்றியங்கள் வளம் பெற்றால் மாவட்டங்கள் வளம் பெறும்; மாவட்டங்கள் வளம் பெற்றால் மாநிலங்கள் வளம் பெறும்; மாநிலங்கள் வளம் பெற்றால் நாடு வளம் பெறும்.
  • அதிகாரம் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளப்பட்டால் அன்றி, மக்களாட்சியை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. அதிகாரம் சராசரி கூலியிடமும், தாழ்த்தப்பட்டவரிடமும், பிற நலிவுற்ற பிரிவினரிடமும்கூட பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்”என்ற காந்தியடிகளின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில் அதிகாரப் பகிர்வு என்பது கிராம உள்ளாட்சி வரை வரக்கூடிய நாள் மக்களின் வாழ்க்கையில் பொன்னான நாளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
  • (இன்று ஏப்.24 - தேசிய பஞ்சாயத்துராஜ் நாள்)

நன்றி: தினமணி (24-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்