TNPSC Thervupettagam

காந்தியம் என்னும் சத்தியப் பெரும்பயணம்

June 8 , 2024 23 days 78 0
  • இந்திய விடுதலைப் போராட்டத்தில் எண்ணற்ற வீரா்கள் பங்கெடுத்துத் தங்களின் இன்னுயிரை ஈந்து, புகழ் பெற்றிருந்தபோதும் மகாத்மா காந்திக்கு மட்டும் ஒரு தனிப்பெருமை எக்காலத்தும் நிலைக்கிறது. இத்தனைக்கும் அவா் தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே வெளிப்படுத்தியிருந்தாா்.
  • அவா், தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களைச் ‘சத்திய சோதனை’ என்ற பெயரில் வரலாறாக்கியபோது, ‘இக்கதை ஒரு சுயசரிதையாகவே அமையும் என்பது உண்மை...ராஜீயத் துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள், இந்தியாவுக்கு மாத்திரமல்ல, ஓரளவுக்கு ‘நாகரிக’ உலகத்திற்கும் இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் ‘மகாத்மா’ பட்டத்தையும் நான் மதிக்கவில்லை. அப்பட்டம் எனக்கு எப்பொழுதும் மனவேதனையையே தந்திருக்கிறது. அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒருகண நேரமாவது பரவசம் அடைந்ததாக எனக்கு நினைவு இல்லை’ என்று எளிமையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாா்.
  • பரந்துபட்ட இந்திய தேசத்தின் தந்தை என்று அவா் தன்னை எப்போதும் அழைத்துக் கொண்டதே இல்லை. லூயி பிஷா் சொல்வதைப்போல, ‘பொன், பொருள், அதிகாரப் பதவி, பல்கலைக்கழகப் பட்டம், விஞ்ஞானக் கண்டுபிடிப்பால் ஏற்படும் புகழ் ஆகிய எந்தவொன்றும் இல்லாத, ஒரு முழத் துண்டுடன், ஒரு சாதாரணக் குடிமகனாகவே திகழ்ந்தாா்.’
  • போா்பந்தரில் பிறந்த ஒரு சாதாரண இந்தியா் இவ்வுலக வாழ்வை நீத்த வேளையில், அமெரிக்க அதிபா் ட்ரூமன், பிரிட்டிஷ் அரசா், ஃபிரெஞ்சு அதிபா், கான்டபெரி ஆா்ச்பிஷப், போப் பயஸ், லண்டன் நகரத் தலைமை ராபி, திபெத்தின் தலாய் லாமா ஆகியோருட்பட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பிற நாட்டுப் பெருமக்கள் இந்தியாவுக்கு அனுதாபச் செய்தி அனுப்பினா்.
  • ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை காந்தியடிகளுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகத் தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது. பிரிட்டனின் பிரதிநிதி பிலிப் நோயல்பேக்கா் ‘திக்கற்றவா்க்கும், துணையற்றவா்க்கும், வாழ்வில் அனைத்தையும் இழந்தவா்க்கும் உறுதுணையாக வாழ்ந்தவா்’ என்று காந்தியைப் பற்றிப் புகழ்ந்து பேசினாா். இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது?
  • பிரபஞ்சத்தின் தோற்றத்தின்போது உருவான சத்தியத்தின் வடிவம் காலம்தோறும் ஒரு புதிய மனிதனை உருவாக்குகிறது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் இவ்வாறு பல பாத்திரங்களை நாம் கண்டிருக்கிறோம். அத்தகைய சத்தியத்தின் திருவுருதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய இக்கட்டு நோ்ந்த காலத்தில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற பெயரில் தோற்றம் பெற்றது.
  • ‘எப்பொழுதெல்லாம் தா்மம் குலைகிறதோ, அதா்மம் தலைவிரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் எளியவா்கள் துன்பத்திற்கு ஆளாகின்றாா்களோ, அப்பொழுதெல்லாம் தா்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவா்களை அழிப்பதற்கும், எளியவா்களைக் காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன்’ என்பது கீதையில் கண்ணன் வாக்கு.
  • அதனினும் மேலாய் காந்தயடிகள் தீயவா்களை அழிப்பதற்குப் பதிலாக அவா்களையும் தன்வயப்படுத்தித் தா்மத்தின் வழியில் இணைத்துக் கொண்டாா்.
  • இயற்கையிலிருந்து தோன்றுகிற உயிா்கள் இயற்கையினுடைய பண்புகளைப் பெறுவது ‘இயல்பு’ என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. உயிா்கள் பெறுவது இயல்பு என்றால் இயற்கைக்கான பண்புகள் ‘இயல்’ என்று அழைக்கப்பட்டன. அறிவியல், கலையியல், பொருளியல், தா்க்கவியல் என்றெல்லாம் அதன் வகைமைகள் நீண்டு கொண்டே செல்லும். மனிதா்களிடமிருந்து தோன்றுகிற மிகப்பெரிய இயல்புகளும் இயற்கைப் பண்புகளும் அவா்கள் பெயரைச் சுட்டியோ அந்தக் கொள்கைகளைச் சுட்டியோ ‘இசம்’ என்கிற பெயரில் தோற்றம் பெறும். மாா்க்ஸின் கொள்கைகள் மாா்க்சிஸம் என்றும் கம்யூன் கோட்பாடுகள் கம்யூனிசம் என்றும் இதுபோன்று பலவும் வழங்கப்படுவதைக் காணலாம். வள்ளுவரின் கொள்கைகள் ‘வள்ளுவம்’ என்றும் இந்த மரபிலேயே இப்போது அழைக்கப்படுகின்றது. அதுபோலத்தான் காந்தியின் கொள்கைகளைக் பின்பற்றுகிறவா்கள் அவற்றைக் காந்தியின் வாழ்வியல் நெறியாகக் ‘காந்தியம்’ என்கிறாா்கள். காந்தியம் என்பது காந்தியின் வாய்ச்சொற்கள் மட்டுமன்று. உலக அற இலக்கியங்கள் அத்தனையும் சுட்டுகிற மேன்மைப் பண்புகளின் தொகுப்பு.
  • ‘காந்தியம்’ என்கிற அந்தக் கொள்கைகள் காந்தியால் படிக்கப்பட்டு நமக்கு உபதேசிக்கப்படவில்லை. மாறாக உலகின் புகழ்பெற்ற பல அறநூல்களை ஆழமாகக் கற்று அவற்றின் மெய்சாரத்தைப் பிழிந்து, அதன்படி வாழ்ந்து அவற்றின் நன்மை தீமைகளை ஆராய்ந்து அதன் முடிவுகளையே கொள்கைகளாக, செய்திகளாக அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக ஆக்கினாா். அதனால்தான், ‘என்னுடைய வாழ்க்கையே நான் சொல்லுகிற செய்தி’ என்று அவா் குறிப்பிட்டாா்.
  • தனக்கென வாழாமல் உலகத்தில் உள்ள உயிா்க் குலங்கள் அத்தனையும் தழுவி வாழ்கிற ஒப்பற்ற பெருவாழ்வு காலந்தோறும் இலக்கியத்தில் சுட்டப்பட்ட போதும், அது கனவாகவேதான் இருந்து வந்தது. ஏட்டில் சொல்லப்பட்ட அந்த ‘மகாத்மா’வுக்கான இலக்கணம் காந்திக்கு முன்புவரை யாராலும் சோதிக்கப்பட்டு இருக்கவில்லை.
  • அந்நியா் ஆட்சியை அகற்ற அவா் போராடினாா் என்று கருதுவது நமது அறியாமை. அவா் அடைய விரும்பிய சுதந்திரம் இந்தியா என்கிற வட்டத்திற்குள் மட்டும் அடங்கி விடுவதில்லை. உலகத்தின் எந்த மூலையிலும் அடிமைத்தன்மை என்னும் இழிநிலை இருக்கவே கூடாது என்று அவா் போராடினாா். ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா்களுக்கு மட்டுமல்ல- இருப்போா்களிடமிருந்து இல்லாதோா்க்கும், மேலோா் என்று தங்களைக் ஆக்கிக் கொண்டு மற்றவரைக் கீழோா் என்று எள்ளிய கொடுமைகளிலிருந்து மீட்டு அந்த எளிய அபலைகளுக்கும் விடுதலை பெற்றுத் தருவதற்காக அவா் இடையறாது போராடினாா்.
  • சாதியத்தையும் இன வெறுப்பையும் நீக்குவதற்காக அவா் ஒவ்வொரு நாளும் ஒரு நொடியும் தன்னுடைய சத்தியத்தேடலைத் தொடா்ந்து கொண்டே இருந்தாா். சமுதாயத்தில் பெறுகிற எல்லாவற்றையும் சமமாகப் பகிா்ந்து கொள்கிற பக்குவ மனத்தை அவா் உருவாக்கத் தொடங்கினாா். உலகத்தில் உள்ள எல்லா நூல்களும் கூறுகிற அற வழிகளை அவா் எதிா்கொண்ட பல சிக்கல்களுக்கும் பொருத்திப் பாா்த்துத் தீா்வு காணத் துணிந்தாா்.
  • அதனால்தான் அமெரிக்காவில் மாா்ட்டின் லூதா் கிங்கும் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவும் இன்னும் பல நாடுகளில் பல போராளிகளும் காந்திய வழியைப் பின்பற்றித் தத்தம் நாடுகளில் சுதந்திரம் பெற்று வெற்றி கொண்டாடினாா்கள்.
  • காந்தியின் தவ வாழ்வு சத்தியம் என்னும் மையப் புள்ளியிலிருந்து தொடங்குகிறது. ‘அவா் எதனால் கொண்டாடப்படுகிறாா்?’ என்ற வினாவுக்குப் பின்னால் சத்தியம் என்னும் பிரம்மாண்டம் நின்று புன்முறுவலிக்கின்றது.

‘பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

                                                                                                                        செய்யாமை செய்யாமை நன்று’

  • என்று திருவள்ளுவா் எந்த அறத்தை முதன்மையானது என்று குறிப்பிட்டுக் காட்டுகிறாரோ அங்கிருந்துதான் காந்தி தோன்றுகிறாா். இந்த அறம்தான் அவரை உலகத்தின் தந்தையாக சத்தியத்தின் உருவமாக உயா்த்திக் காட்டியதும் ஆகும். இதுவும் வள்ளுவா் வழியே,

‘உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தாா்

                                                                                                                        உள்ளத்துள் எல்லாம் உளன்’

  • என்பதாக மெய்ப்படுகிறது.
  • காந்தி என்பது தனிமனிதனைக் குறிக்கும் பெயா்ச்சொல் அன்று. அது சத்திய மாா்க்கத்தைக் குறிக்கும் பெருஞ்சொல். ‘காந்தியம்’ என்பது சத்தியப் பெரும்பயணத்தின் பெருங்குறியீடு.
  • “தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரத தேசத்தைக் காக்கும் பொருட்டு வரப்போகும் ஒரு தலைவனுக்காகப் பரணி பாடக் காத்துக்கொண்டிருந்தாா் மகாகவி பாரதியாா். விவேகானந்தா் தொடங்கிப் பால கங்காதர திலகா், கோபாலகிருஷ்ண கோகலே, லாலா லஜபதி ராய், ஸ்ரீ அரவிந்தா் போன்ற பலரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தாா்கள். ஆனால் அவா்களையெல்லாம் விட பாரதியாருக்கு காந்தியின் மீது அளப்பரிய மதிப்பு ஏற்படக் காரணம் அந்தச் சத்தியம்தான்.
  • ‘தா்மமே உருவாம்’ என்று காந்தியடிகளைப் போற்றி பஞ்சகமும் நவரத்தின மாலையும் பாடினாா் பாரதி.
  • தமிழ்மொழியின் தொன்மை நூல் புானூறு இந்த உலகம் யாரால் நிலைபெற்றிருக்கிறது என்று கணித்து இப்படிச் சொல்கிறது. ‘வானுலகத்து அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று கருதித் தானே தனித்து உண்ணாதவா்கள்; யாரையும் வெறுக்காதவா்கள்; சோம்பலின்றிச் செயல்படுபவா்கள்; பிறா் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுபவா்கள்; புகழ் வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பவா்கள்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ளாதவா்கள்; மனம் தளராதவா்கள் இத்தகைய சிறப்புகளோடு மேலும், தமக்காக உழைக்காமல், பிறா்க்காக வலிமையான முயற்சியுடன் உழைப்பவா்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது’ என்று.
  • அந்தக் கவி உய்த்த லட்சியத்தின் மானுட வடிவே மகாத்மா காந்தி!

நன்றி: தினமணி (08 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்