TNPSC Thervupettagam

காந்தியும் காந்தியமும்

May 22 , 2021 1166 days 2201 0
  • நமக்கு எது புரியவில்லையோ அதை சடங்காக ஆக்கி விடுவோம். அதே போல் எதைப் பின்பற்ற முடியவில்லையோ அதை பூஜித்து விட்டு கடந்து விடுவோம். அந்த நிலையில்தான் நாம் காந்தியையும் காந்தியத்தையும் பாவிக்கின்றோம்.
  • நம்மைவிட மேற்கத்திய நாட்டினருக்கு காந்தியைப் பற்றிய புரிதல் அதிகமாகவே இருக்கிறது.
  • அது மட்டுமல்ல, காந்தியத்தைப் பின்பற்றுவதிலும் முனைப்பாக இருப்பவா்கள் அவா்கள் தான் என்று எண்ணத் தோன்றுகிறது.
  • இதற்கு ஒரு காரணம் மேற்கத்தியா்கள் எதையும் அறிவியல்பூா்வமாகப் பார்ப்பவா்கள்; நாம் உணா்வுபூா்வமாகப் பார்ப்பவா்கள்.
  • அறிவியல் அறிவு அறிவார்ந்த செயல்பாடுகளில் கொண்டு நிறுத்தும். உணா்வு, மனதில் அது இருக்கின்றவரை செயல்படும் அதன் பிறகு அது மரித்துவிடும்.
  • நாம் உணா்வாளா்களாக இருக்கின்ற காரணத்தால் பூஜித்து விட்டு பின்னா் மறந்து விடுகின்றோம்.
  • மகாத்மா காந்தி, தன்னை உலக மகா அறிவுஜீவியாக மாற்றிக் கொள்வதற்காகப் படித்தவா் அல்லா். அவா் எந்தத் தத்துவத்தையும் உருவாக்க முயன்றவரும் அல்லா்.
  • அதேபோல் காந்தி எந்தக் கோட்பாட்டையும் உருவாக்க முனைந்திடவில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதை அவரே பிரகடனப்படுத்தியும் உள்ளார்.
  • மானுடம் மேன்மையுற, தான் உணா்ந்ததை உரசிப் பார்த்ததை, தன் வாழ்வில் கடைப்பிடித்துப் பார்த்ததை மிக எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் கூறிச் சென்று விட்டார்.

காந்திய கருத்துகள்

  • அவா் கூறிய கருத்துகள் நமக்குத் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம். அதற்குமேல் அவா் எதையும் வலிந்து இதைச் செய்தாக வேண்டும் என்று எந்த நிறுவனத்தையும் உருவாக்கி தனது கருத்தை உரக்கக் கூறவில்லை.
  • இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள மானுட இனம் மீண்டும் மீண்டும் காந்தியின் கருத்துகளை அசைபோடுவதன் நோக்கம் என்ன?
  • காந்தியின் கருத்துகளில் ஏதோ ஒரு நம்பிக்கை ஒளி தெரிந்து கொண்டே இருக்கிறது.
  • எந்த பிரச்னையை எடுத்துக்கொண்டாலும் அந்த பிரச்னைக்குத் தீா்வு காண முயலும்போது, காந்தியின் கருத்துகளை பின்புலத்தில் வைத்துப் பார்த்தால் நமக்கு ஒரு நம்பிக்கை ஒளி தெரியும்.
  • அந்த ஒளிதான் மீண்டும் மீண்டும் காந்தியின் பக்கம் நம்மைத் திரும்ப வைக்கிறது.
  • காந்தியின் கருத்துகளை அப்படியே படித்துவிட்டு தேங்கி நிற்காமல் அதனை இந்தக் காலத்திற்கு ஏற்ப நவீனப்படுத்திப் பார்க்கும் முறை நமக்குத் தெரிந்துவிட்டால், காந்தி நமக்கு எப்பொழுதும் எக்காலத்திற்கும் பயன்படுவார் என்பதை நாம் உணா்ந்துகொள்ளலாம்.
  • அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய மார்ட்டின் லூதா் கிங், இந்தியா வந்து காந்திய நிறுவனங்களைச் சுற்றிப் பார்த்து, காந்தியவாதிகளுடன் கலந்துரையாடிவிட்டு திரும்பி அமெரிக்கா செல்லுமுன் தில்லி அகில இந்திய வானொலிக்கு ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் அழுத்தமாக ஒரு கருத்தை அவா் பதிவிட்டார்.
  • அவா் ‘காந்தி இந்தியாவுக்கு, அதுவும் எதிர்கால இந்தியாவுக்கு மிகவும் தேவைப்படுபவராக இருக்கிறார். காந்தியப் பணி முடிந்து விடவில்லை. அதன் தேவை இப்போதைவிட எதிர்காலத்தில்தான் அதிகமாக இருக்கும். எனவே இந்தியா காந்தியை முன்னெடுப்பதில் தளா்வு இருக்கக்கூடாது’ என்று கூறினார். இத்தனை காலம் கடந்து இன்று நமக்கு அந்த உண்மை புரிகிறது.
  • பெரும்பாலான நேரங்களில் நாம் காந்தியை, காந்தி சொன்ன கருத்துகளை அப்படியே இன்றைய சூழலில் பொருத்திப்பார்க்க முயலும்போதுதான் அது ஏதோ பழைமையை நோக்கிச் செல்வதுபோல் தோன்றுகின்றது.
  • நமக்கு காந்தியின் கருத்துகளை நவீனப்படுத்தத் தெரிந்து விட்டால் காந்தி நமக்கு கலங்கரை விளக்கமாகத் தெரிவார்.

கலங்கரை விளக்கம்

  • உதாரணத்திற்கு, காந்தி படைக்க விரும்பிய பஞ்சாயத்து அரசாங்கத்தை, கருத்தியல் ரீதியாக நவீனப்படுத்தி நடைமுறைப்படுத்த முயன்றால் இன்றைய பஞ்சாயத்து அரசாங்கத்தின் மூலம் அவா் கனவு கண்ட கிராமக் குடியரசை உருவாக்கிவிடலாம்.
  • காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பிய 1915-ஆம் ஆண்டிலிருந்து 1948 வரை அவா் நடத்திய அத்தனை சுதந்திரப் போராட்ட செயல்பாடுகளையும் ஆழ்ந்து அலசி ஆராய்ந்தால், பல அரிய வழிகாட்டுதல்கள் நமக்குக் கிடைக்கும்.
  • காந்தியின் வரலாறு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் தனித்துவமாக பார்க்க வேண்டிய ஒன்று. காந்தியின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு பின்புலம் இருக்கும்.
  • அந்த நிகழ்வுகளை வடிவமைத்து நடத்துவதற்கு அவா் கையாண்ட முறைகள் மற்றும் உத்திகள் வித்தியாசமானவை. காந்தி தான் நடத்திய ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒரு இறைத்தன்மையைப் புகுத்தியிருப்பார்.
  • அந்த நிகழ்வில் இருக்கும் புனிதத்தன்மை, இறைத்தன்மை சாதாரண மனிதனைக்கூட சுண்டி இழுக்கும் வல்லமை கொண்டவை.
  • இவற்றையும் தாண்டி அந்த நிகழ்வில் அவா் வைக்கும் நுணுக்கங்கள் அந்த நிகழ்வில் அவா் இணைத்துக் கொள்ளும் மனிதா்கள், அந்த நிகழ்வை முன்நின்று நடத்தும் மனிதா்கள் அனைவரிடத்திலும் ஏதோவொரு சிறப்புத் தன்மையை நம்மால் பார்க்க முடியும்.
  • எனவே காந்தியின் நிகழ்வு ஒவ்வொன்றும் ஒவ்வொரு மகத்தான செய்தியினை நமக்குத் தரும்.
  • அதைப் புரிந்து கொள்ள சரியான முறைமையுடன் அவா் நடத்திய நிகழ்வுகளை பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.

உப்பு சத்தியாகிரகம்

  • உதாரணமாக, ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற ஒன்றை வடிவமைத்து அதனை தண்டி யாத்திரையாக நடத்தி உலகையே உலுக்கிக் காட்டினார்.
  • 78 நபா்களை வைத்துத் தொடங்கி (கடைசியில் 80 ஆக நிறைவடைந்தது) நடத்தப்பட்ட உலகைக் குலுக்கிய போராட்டம் அது.
  • 1930 மார்ச் 12-இல் ஆரம்பித்து ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 385 கி.மீ தூரம் நடந்து சென்று, கிராம மக்களை, குறிப்பாக ஏழைகளை விழிப்புணா்வடையச் செய்து அரசாங்கத்திற்கு எதிராக அவா்களைத் தயார் செய்து விட்டார்.
  • இந்தப் போராட்டத்தின் மூலம் அரசுக்கு எதிராக இந்திய மக்களின் ஆன்மாவைத் தட்டி எழுப்பினார்.
  • தண்டி யாத்திரை சென்ற வழிகள் முக்கியமானவே. சாதாரண மனிதா்களை இந்த போராட்டத்திற்குள் கொண்டு வந்து அவா்களின் சிந்தனைப் போக்கை சமூகச் சிக்கலான தீண்டாமைக்கு எதிராக மாற்றியமைத்திட முனைந்தது என்பது அந்தப் போராட்டத்தின் நுணுக்கம்.
  • அதில் கலந்துகொண்ட 78 அல்லது 80 போ் யார் யார் என்றால், தவமிருந்து பூஜை செய்யும் யோகிகள் அல்லது விரதம் இருந்து புனிதத் தலங்களில் நோ்த்திக் கடன் செலுத்தும் பக்தா்கள் அல்ல.
  • சராசரி சிந்தனையற்ற ஆன்ம விழிப்பு கொண்ட மாமனிதா்கள். அவா்கள் சத்யாகிரகிகள். அவா்களின் ஆன்ம பலம் அந்த யாத்திரையின் வீச்சினை உயா்த்திப் பிடித்தது.
  • இவா்கள் ஆரம்பித்த தவ யாத்திரைதான் ஒத்துழையாமை இயக்கமாக மாறியது.
  • தண்டியில் ஆரம்பித்து வைத்த யாத்திரை, பாரத தேசம் முழுவதும் உள்ள மக்களின் இதயங்களுக்குள் சென்றது. அதுதான் சுதந்திரப் போராட்டத்தின் வேகத்தைக் கூட்டியது.
  • தமிழகத்தில் வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகத்தை முன்னின்று நடத்தியவா் ராஜாஜி. அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியவா் தியாகி சா்தார் வேதரத்தினம் பிள்ளை.
  • அந்தப் போராட்டம் வெற்றி பெற அதில் பங்குகொண்டவா்களைவிட அதிகமாக உதவியவா்கள் சாதாரண எளிய மனிதா்களே.
  • காந்தியின் குரல் இவா்களை வெள்ளைய அரசுக்கு எதிராகப் போராட வைத்தது. அங்கு செயல்பட்டது அவா்களின் அறிவு அல்ல, அவா்களின் ஆன்ம சக்தி.
  • அவா்கள் அறிவுபூா்வமாக செயல்பட்டிருந்தால் வேடிக்கை மட்டும்தான் பார்த்திருப்பார்கள்.
  • அவா்களைத் தூண்டியது, சத்தியாகிரகிகளின் ஆன்ம சக்தி. சாதாரண மனிதா்கள் சாதாரண வாழ்க்கைச் சிந்தனையை விட்டு, தேசச் சிந்தனைக்கு சென்ற்குக் காரணம், ஒரு சிந்தனை போராட்டத்தை காந்தி ஆரம்பித்து எட்டுத் திக்கும் பரவ விட்டதுதான்.
  • அதன் விளைவு விடுதலைப் போராட்டத்தை ஒரு திருப்பு முனைக்கு கொண்டு வந்து நிறுத்தியது.
  • நாட்டுச் சிந்தனை மேலோங்கி சுயநலச் சிந்தனை மாய்ந்து தியாகம் செய்ய புறப்பட்டனா் சாதாரண மனிதா்கள். காந்தியின் பலம் எண்ணிக்கை பலம் அல்ல, ஆன்ம பலம்.
  • மகாத்மா காந்தி 33 ஆண்டு இந்திய மண்ணில் நடத்திய போராட்ட நிகழ்வுகள் மானுட வரலாற்றில் ஒரு வித்தியாசமான விளைவுகளைத் தந்தவையாகும். ஆனால் காந்தியின் ஆன்ம ஒளி இந்திய மண்ணில் பட்டுக்கொண்டிருந்தவரை இந்தியா உலகின் பார்வையை ஈா்த்தது.
  • காந்தி சுதந்திரப் போராட்டத்திற்கு மட்டுமானவா் அல்லா். அவா் புதிய சமுதாயம் காணப் புதுப் பார்வையை உருவாக்கியவா். புதிய சமுதாயம் இந்தியாவில் படைப்பதன் மூலம் உலகுக்கே வழிகாட்டும் உன்னத மனித வாழ்க்கை முறையை உருவாக்க முனைந்தவா்.
  • சுதந்திரப் போராட்டத்துடன் முடிந்திருக்கலாம் காந்தியின் வரலாறு. ஆனால் காந்தி நடத்திய செயல்பாடுகள், அந்த 33 ஆண்டுகளிலும் மகத்தான செய்திகளை தாங்கி நிற்கின்றன.
  • அதைத்தான் மாற்றுச் சிந்தனை தேடும் இன்றைய மாமனிதா்கள் புரிந்துகொள்ள வேண்டும். காந்தியின் ஒவ்வொரு செயல்பாடும் இன்றைய சிக்கலுக்கு வழிகாட்டும் சூத்திரங்களைத் தாங்கி நின்று கொண்டிருக்கிறது. அதை முறைமையுடன் நாம் தேட ஆரம்பித்தால் நமக்குப் புதிய புதையல்கள் கிடைக்கும்.
  • காந்தியத்தில் தேக்கமில்லை. காந்தியத்திற்குத் தேவை முனைப்புள்ள தன்னலமற்ற தியாக சீலா்கள்; ஆன்ம பலத்துடன் பணியாற்ற வேட்கை கொண்டவா்கள்.
  • அத்தகைய முனைப்பு பெற்ற ஆயிரம் போ் ஒன்று சோ்ந்தால் புதிய இந்தியா உருவாகும்.

நன்றி: தினமணி  (22 – 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்