TNPSC Thervupettagam

காந்தியைப் பேசுதல்: கல்வியைப் பற்றி காந்தி என்ன சொல்கிறார்?

July 31 , 2019 1945 days 1358 0
  • இந்தியர்களுடைய வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை காந்தியம் உள்ளடக்குவதுபோல் கல்வியையும் உள்ளடக்குகிறது. காந்தியைப் பொறுத்தவரை ஒருவரிடமுள்ள சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வி. ஒருவரின் ஆன்ம மலர்ச்சிக்கு அன்றைய கல்வி முறையிலும் சரி, இன்றைய கல்வி முறையிலும் சரி, உரிய இடம் கொடுக்கப்படவில்லை. காந்தியோ ஒருவருடைய ஆன்ம வளர்ச்சிக்குக் கல்வி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். புத்தகங்களுக்குரிய இடத்தை ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில், மனித இனத்தைவிடச் சிறந்த புத்தகம் வேறு ஏதும் இருக்க முடியுமா என்று கேட்கிறார்.
  • கைகள், கால்கள், கண்கள், காதுகள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை உரிய விதத்தில் பயன்படுத்திப் பழக்குவதனால் மாத்திரமே உண்மையான கல்வி வர முடியும் என்பது காந்தியின் கருத்து. ஆனால், நம் கல்வி முறையோ உடலையும் அறிவையும் பிரித்துவிடுகிறது. இதனால்தான் அறிவு, அதாவது கல்வியின் மூலம் பெறும் அறிவு என்பது ஏட்டுச்சுரைக்காயாய் மாறி ஒன்றுக்கும் உதவாமல்போகிறது. பள்ளியில் +2 வகுப்பில் கணினியைப் பயன்படுத்தாமலேயே மாணவர்கள் கணினி அறிவியல் படிப்பதெல்லாம் சிற்றூர்களிலும் கிராமப்புறங்களிலும் சகஜம்.
  • அவர்களிடம் உண்மையான கணினியைக் கொடுக்கும்போது திணறிப்போகவே செய்கிறார்கள். எதைப் பற்றிப் படிக்கிறோமோ அதனுடன் பௌதிக அளவில் உறவு இல்லாமல்தான் பெரும்பாலான கல்வியும் நிகழ்கிறது. உடல் உழைப்பு என்று காந்தி கூறியிருப்பதைக் குறிப்பிட்ட துறை சார்ந்து படிக்கும்போது அந்தத் துறைக்கான பொருளுடன் ஒரு மாணவர் கொள்ளும் உறவாகக் கொள்ளலாம். அப்படி உறவு கொள்ளும்போது, அந்த மாணவரின் அறிவு சிறப்பாகவும் சீக்கிரமாகவும் வளர்கிறது.
  • ஆனால், மூளையும் உடலும் ஒன்றாக வளர்ச்சியடைந்து, அதற்கு ஏற்ப ஆன்மாவும் விழிப்படையாதுபோனால், மூளை வளர்ச்சி மாத்திரம், ஒருபக்கம் வளர்ந்து மற்றோர்புறம் வளராத பரிதாபகரமான காரியமாகவே ஆகிவிடும் என்கிறார் காந்தி. உள்ளத்தின் கல்வியையே அவர் ஆன்மப் பயிற்சி என்கிறார். ஆகவே, குழந்தையின் உடலானது, ஆன்மக் கல்வியுடன் சேர்ந்துபோனால்தான் மூளை சரியானபடி எல்லா வகையிலும் வளர்ச்சி அடையும் என்கிறார் அவர். உடலையும் அறிவையும் தனித்தனியாகப் பகுத்து கல்வி புகட்டுவதால், அபாயகரமான இடைவெளி ஏற்பட்டு ஒரு குழந்தையின் ஆன்ம வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும் என்கிறார் காந்தி.

குலக் கல்வி அல்ல

  • கைத்தொழில் மூலம் குழந்தைக்குக் கல்வி புகட்டுவது என்று காந்தி சொல்லும் தொழிற்கல்வியானது குலக்கல்வித் திட்டம் அல்ல. குழந்தைகளிடையே அவர்களது பிறப்பு சார்ந்து ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லாருக்கும் தொழிற்கல்வி கற்பிக்க வேண்டும் என்றே சொல்கிறார். தொழிற்கல்வி என்பது அவரது காலத்தில் நெசவு, விவசாயம், கைவினைப் பொருட்கள் என்றால், இப்போதைய காலத்துக்கேற்ப நவீனப் பொருட்களையும் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்கள் தேவைப்படும் இக்காலத்தில், சூழலுக்கு உகந்த காகிதப் பை, துணிப்பை போன்றவை செய்யக் கற்றுக்கொடுக்கலாம்.
  • ‘பயனுள்ள ஒரு கைத்தொழிலைச் சொல்லிக் கொடுத்து, பயிற்சி பெற ஆரம்பித்த சமயத்திலிருந்து உற்பத்தியைச் செய்ய முடியும்படி பார்ப்பதன் மூலம் குழந்தையின் கல்வியை நான் ஆரம்பிப்பேன். இவ்விதம் ஒவ்வொரு பள்ளிக்கூடமும் தனக்காகும் செலவைத் தானே சம்பாதித்துக்கொள்ளுவதாகச் செய்துவிட முடியும். இதற்கு ஒரே ஒரு நிபந்தனை - இப்பள்ளிக்கூடங்களில் தயாராகிற பொருட்களையெல்லாம் அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்’ என்கிறார் காந்தி. சில பள்ளிகளில் சூரிய ஒளியில் இயங்கும் வாகனங்கள் போன்றவற்றை மாணவர்கள் வெற்றிகரமாகத் தயாரிப்பதைப் பற்றிய செய்திகளையெல்லாம் பார்க்கிறோம். அவையெல்லாம் ஒருவகையில் காந்தியத் தொழிற்கல்வியின் நீட்சியே.
  • இத்தகைய கல்வி முறையின் கீழ் அறிவையும் ஆன்மாவையும் மிக உயர்ந்த வளர்ச்சிக்குக் கொண்டுவந்துவிட முடியும் என்று காந்தி கருதினார். ஒவ்வொரு கைத்தொழிலையும் இயந்திரம்போல் சொல்லிக்கொடுக்கக் கூடாது என்றும், விஞ்ஞானரீதியில் அவற்றைப் போதிக்க வேண்டும் என்றும் கூறினார். இதன்படி ஒவ்வொரு கட்டத்திலும் தான் செய்யும் கைத்தொழிலை ஏன் செய்கிறேன், எதற்காகச் செய்கிறேன் என்பனவற்றைக் குழந்தை அறிந்திருக்க வேண்டும். சரி, இப்படியெல்லாம் செய்வதால் வரலாறு, புவியியல் போன்றவற்றைப் புறக்கணிப்பதாக ஆகிவிடாது. அவற்றுக்கும் காந்தியக் கல்வியில் முக்கிய இடம் உண்டு.

முன்னோடிக் கல்வி முறை

  • இன்றைய செயல்வழிக் கற்றலுக்கு காந்தியக் கல்வி ஒரு முன்னோடி. மாண்டிசோரி கல்வி முறையின் சக காலத்தில் அதேபோல், ஆனால் சில வித்தியாசங்களுடன் இந்தியாவில் உருவாக்கப்பட்டது காந்தியக் கல்வி முறை. காந்திக்கு மாண்டிசோரி மீதும் அவருடைய கல்வி முறை மீதும் மதிப்பு இருந்தது. மாண்டிசோரி கல்வி முறையானது, பொம்மை போன்ற பொருட்களை வைத்து குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கிறது, தன்னுடைய கல்வி முறையோ உண்மையான பொருட்களைக் கொண்டே கல்வியைக் கற்பிக்கிறது என்று மாண்டிசோரிக்கு காந்தி கடிதம் எழுதினார். “குழந்தை, ருசிகளை ஒரு அளவுக்கு வளர்த்துக்கொண்டுவிட்ட பிறகு, கோதுமை இன்னது, உமி இன்னது என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டதற்குப் பின்னால், எழுத்துகளின் அடையாளங்களைப் போதிக்கலாம்.
  • இது புரட்சிகரமான யோசனை. ஆனால், இது எவ்வளவோ உழைப்பை மிச்சப்படுத்திவிடுகிறது. இன்னும் அதிக காலத்தில் ஒரு குழந்தை அறிந்துகொள்ளக்கூடியதை ஒரே ஆண்டில் தெரிந்துகொண்டுவிடுகிறது. எல்லா வகையிலும் சிக்கனம் செய்வதாகவும் இது ஆகிறது. உண்மையில், கைத்தொழிலைச் செய்யத் தெரிந்துகொள்ளும்போதே மாணவன் கணக்குகளையும் கற்றுக்கொள்கிறான்” என்று காந்தி சொல்வதைக் கொண்டு பார்க்கும்போது, மாண்டிசோரி கல்வி முறைக்கும் காந்தியக் கல்வி முறைக்கும் இடையிலான ஒற்றுமை நன்கு வெளிப்படுகிறது.

தாய்மொழிக் கல்வி

  • காந்தியக் கல்வி முறையின் இன்னொரு முக்கியமான அம்சம் தாய்மொழி வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்வியானது இந்தியாவை ஒட்டுமொத்தமாக அடிமையாக்கி, ஆங்கிலேயர்களுக்கான குமாஸ்தாக்களை இங்கு உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது என்று கருதினார். மூளை அளவிலும் இந்தியர்கள் அடிமையானதுதான் மிகவும் மோசம் என்கிறார் காந்தி. ஆகவேதான், அவருடைய ஆதாரக் கல்வியானது தாய்மொழிக்கு உயர்ந்த இடத்தைக் கொடுக்கிறது.
  • இந்திய மொழிகளில் கல்வி கற்பதையும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்வதையும் காந்தி தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறார். எனினும், அவரை ஆங்கிலத்துக்கு விரோதி என்று கருதிவிட முடியாது.
    ‘‘என் வீட்டைச் சுற்றி எல்லாப் பக்கங்களிலும் சுவர் எழுப்பிவிட்டுச் சன்னல்களையெல்லாம் இறுக அடைத்துவிட நான் விரும்பவில்லை. எல்லா நாடுகளின் கலாச்சாரங்களும் என் வீட்டுக்குள் தாராளமாக வீச வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆனால், அந்தக் காற்று என்னை அடித்து வீழ்த்திவிடுவதற்கு இடம்தர நான் மறுக்கிறேன்’’ என்றார் காந்தி.
  • காந்தியின் கல்விக் கொள்கைகளெல்லாம் ஒரு பெரும் வாழ்நாள் தேடலில் உருவானவை. தன்னுடைய வாழ்க்கையையே, இன்னும் சொல்லப்போனால் தன் பிள்ளைகளுடைய வாழ்க்கையையும் அவர் இந்தப் பரிசோதனையில் ஈடுபடுத்திக்கொண்டார். தனது கல்விச் சிந்தனையின்படியே தன் பிள்ளைகளுக்கு அநேகமாகக் கல்வி புகட்டினார்.
  • கல்லூரியில் சென்று பட்டம் பெறவில்லை என்றாலும், பெரிய காரியங்களை காந்தியின் பிள்ளைகளும் அவருடைய ஆசிரமத்தில் கல்வி பெற்றவர்களும் ஆற்றினார்கள். கிருபளானி, வினோபா பாவே என்று வளமாகத் தொடர்ந்த காந்தியக் கல்வி மரபு, தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசில காந்தியர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அதன் முக்கியத்துவத்தை இந்தியா உணரும்போது இந்தியக் கல்வித் துறையில் பெரும் மாற்றத்தை காந்தியக் கல்வி முறை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை(31-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்