TNPSC Thervupettagam

காப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்

July 29 , 2021 1099 days 461 0
  • அரசின் தனியார்மயமாக்கல் செயல்திட்டம் கரோனா காலத்திலும் சுணங்கவில்லை. சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட ‘யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்’ நிறுவனம், தனியார்வசம் ஒப்படைக்கப்படலாம் என்பதை நிதி ஆயோக் பரிந்துரைகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
  • நிதித் துறை சார்ந்து எடுக்கப்படுகிற நடவடிக்கைகளின் வளர்ச்சியை இந்த இடத்தில் பார்க்க வேண்டியுள்ளது.
  • 1971-ல் தேசியமயம், 1999-ல் மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி, 2017-ல் நியூ இந்தியா என்கிற அரசுக் காப்பீட்டு நிறுவனத்தின் பங்கு விற்பனை என்று நகர்ந்த கடிகார முள், 2021-ல் அரசு நிறுவனமொன்று தனியார் கைகளில் ஒப்படைக்கப்படும் இடத்துக்கு வந்து நிற்கிறது.
  • இதன் விளைவுகள் என்ன என்பதை வரலாற்றுப் பின்புலத்தோடு பேச வேண்டியிருக்கிறது.

வரலாற்றுச் சக்கரம்

  • அரசுக் காப்பீட்டு நிறுவனங்கள் பொன் விழாவைக் கொண்டாடுகிற நேரமிது.
  • 1950-களில் ஆயுள் காப்பீட்டு தேசியமய விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போதே, அன்றைய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.
  • 1971-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, காப்பீட்டு நிறுவனங்களை தேசியமயமாக்கும் முடிவை எடுத்தார். 107 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஷுரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நான்கு அரசு நிறுவனங்கள் பிறந்தன.
  • பொதுத் துறைக் காப்பீட்டு நிறுவனங்கள் நெடிய வரலாற்றைக் கொண்டவை. 1972-ல் காப்பீட்டு நிறுவனங்கள் வணிக தேசியமயச் சட்டத்தின் அடிப்படையில் நான்கு நிறுவனங்கள் உருவானபோது, அரசு இட்ட முதலீடு ரூ.19.5 கோடி மட்டுமே.
  • இன்று அந்த நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது. 1971-ல் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த அலுவலகங்களின் எண்ணிக்கை 784, இன்று 8,000 அலுவலகங்கள் என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது.
  • அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த நிறுவனங்களின் பங்களிப்பு ரூ. 1,78,977 கோடி.

மீண்டும் தனியார்மயம்

  • 1991-ல் பொருளாதாரத் தாராளமயமாக்கலை நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அனுமதித்தது. தொடர்ச்சியாக 1999-ல் வாஜ்பாய் அரசு தனியார், அந்நியக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது.
  • இன்று 21 தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களும், ஆறு தனியார் சிறப்பு மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும் வணிகப் போட்டியில் உள்ளன. இந்த நிறுவனங்கள் சாதாரண மக்களுக்கான காப்பீட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
  • முதல் நிலை, இரண்டாம் நிலை நகரங்களில் மட்டுமே இந்த நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
  • மூன்றாம், நான்காம், ஐந்தாம் நிலை நகரங்கள், சிற்றூர்கள், கிராமங்களில் அரசுக் காப்பீட்டு நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன.
  • அத்துடன் பயிர்க் காப்பீடு உள்ளிட்டவற்றிலும் அரசுக் காப்பீட்டு நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றன.
  • காப்பீட்டுத் துறை பரவலாக்கல், அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற சமூகநலச் சுமைகளை அரசுக் காப்பீட்டு நிறுவனங்களே செயல்படுத்திவருகின்றன.
  • தலைமையகம் சென்னையில் இருப்பதால் தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் காப்பீட்டுப் பரவலுக்கு வழிவகுத்துவரும் நிறுவனம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம்.
  • தமிழக முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமே நிர்வகித்து வருகிறது.
  • அகில இந்திய அளவில் அரசுக் காப்பீட்டு நிறுவனங்களே ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ – தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்து நடத்திவருகின்றன. அது போன்ற திட்டங்களில் லாபம் இருப்பதால்தான் தனியார் நிறுவனங்கள் அரசு நிறுவனப் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டிவருகின்றன.

விடையில்லாக் கேள்விகள்

  • நான்கு பொதுத் துறைக் காப்பீட்டு நிறுவனங்களும் இணைந்து 40 கோடி இந்தியர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் காப்பீட்டை வழங்கிவருகின்றன. உலகிலேயே இந்த அளவுக்குக் காப்பீடு வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை வேறு எந்த நாட்டிலும் கிடையாது.
  • தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள நபர்களுக்கு அளிக்கும் மருத்துவக் காப்பீடு, தனிநபர் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களால் பயனடைந்தோர் ஏராளம்.
  • இந்நிலையில் ஒரு காப்பீட்டு நிறுவனம், அதுவும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் காப்பீட்டு நிறுவனம் தனியார்மயமானால், மேலே கூறப்பட்ட சாமானிய மக்களுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் தொடருமா என்பது கேள்விக்குறியே!.
  • யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால், கடந்த நிதியாண்டில் ரூ.17,000 கோடிக்குத் தவணைத் தொகையைத் திரட்டியுள்ளது.
  • பெருந்தொற்றுக் காலத்திலும் இவ்வளவு தவணைத் தொகையைத் திரட்டியுள்ளதோடு, அரசின் கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.27,930 கோடி வரை முதலீடு செய்துள்ளது.
  • ஒன்றிய அரசுக்குத் தொடர்ந்து வருடா வருடம் கணிசமான அளவு ஈவுத்தொகையையும் அளித்து வருகிறது. இந்நிறுவனம் தனியார்மயமானால், இவை யெல்லாம் நீடிப்பதற்கான சாத்தியம் இல்லாமல் போகும். நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படுவதால் ‘அரசு நிறுவனம்’ என்ற அந்தஸ்து பறிபோகாது.
  • ஆகவே, இடஒதுக்கீடு தொடரும் என்று இவ்வளவு காலம் கூறப்பட்டுவந்தது. இப்போது ஒரு காப்பீட்டு நிறுவனமே தனியார்மயமானால் அரசு அந்தஸ்து பறிபோய்விடும்! ஓ.பி.சி./ எஸ்.சி./ எஸ்.டி. இடஒதுக்கீடு என்னவாகும் என்ற சமூகநீதி சார்ந்த கேள்வியும் எழுகிறது.
  • இந்தப் பேரிடர் காலத்தில் சமூகப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் காப்பீட்டு நிறுவனங்கள், அரசின் கைகளில் இருப்பதே மக்களுக்குப் பயனளிக்கும் ஒரே வழி என்பது உலக அளவில் நிரூபணமாகியுள்ளது.
  • அதைப் பாடமாக எடுத்துக்கொண்டு, காப்பீட்டு நிறுவனங்கள் அரசின் கைகளில் இருப்பதை ஒன்றிய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (29 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்