TNPSC Thervupettagam

காரணம், கண்காணிப்பின்மை

March 6 , 2024 139 days 90 0
  • உக்ரைனுக்கு எதிரான ரஷியப் படையெடுப்பில், ராணுவத்தின் பல்வேறு கடைநிலைப் பணிகளுக்காக இந்தியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள் என்கிற திடுக்கிடும் தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. சுமார் 20 இந்தியத் தொழிலாளர்கள் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டபோதுதான் இந்த உண்மை வெளிப்பட்டது.
  • வாக்னர் கூலிப்படையினரால் இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் பலர் ஒப்பந்த முறையில் ராணுவப் போர் முகாம்களில் வாகன ஓட்டிகளாகவும், சமையலறை உதவியாளர்களாகவும், துப்புரவுத் தொழிலாளிகளாகவும், கடைநிலை ஊழியர்களாகவும் வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். இடைத்தரகர்கள் மூலம் அவர்கள் வேலைவாய்ப்புப் பெற்றதாகத் தெரிகிறது.
  • 20 தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் மேலும் பலர் ரஷிய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் போர்முனையில் பணி செய்யக்கூடும். இந்தியர்கள் இன்னொரு நாட்டு ராணுவத்தில் பணிபுரிவது என்பது தேசிய அவமானம். இதை அனுமதித்தல் ஆகாது.
  • அவர்களை எங்ஙனம் இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வருவது என்பது அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. அவர்களை அடையாளம் காண்பதேகூடக் கடினமான செயல். கத்தாரில் இருந்து எட்டு தூக்குத்தண்டனைக் கைதிகளை விடுவித்துக் கொண்டுவந்ததைவிட இது சிரமமானதாக இருக்கும்.
  • உலகளாவிய அளவில் கூலித் தொழிலாளர்களாகவும், தேயிலை, ரப்பர் தோட்டப் பணியாளர்களாகவும் இந்தியாவிலிருந்து பலரை பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் கங்காணிகள் அழைத்துச் சென்றது அந்தக் காலம். இப்போது, இடைத்தரகர்கள் பலர் வேலை வாங்கித் தருவதாகப் பெரும் பணமும் பெற்றுக் கொண்டு பல இந்திய இளைஞர்களுக்கு ஆசை காட்டுகிறார்கள்.
  • உலகளாவிய அளவில் வேலைக்காகப் புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்களுக்குத்தான் முதலிடம். 2020 புள்ளிவிவரப்படி, வெளிநாடுகளில் 1.79 கோடி இந்தியர்கள் பணிபுரிந்து வந்தனர். சர்வதேச அளவில், வெளிநாடுவாழ் குடிமக்கள் மிக அதிக அளவில் தாய்நாட்டுக்குப் பணம் அனுப்புவதிலும் இந்தியர்கள்தான் முதலிடம் வகிக்கிறார்கள்.
  • உலக வங்கியின் 2023 ஆய்வுப்படி, வெளிநாட்டிலிருந்து அங்கே பணிபுரியும் இந்தியர்கள் தங்களது தாய்மண்ணுக்கு அனுப்பிவைத்த சேமிப்பின் அளவு 125 பில்லியன் டாலர்கள். சர்வதேச அளவில் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் ஒவ்வொரு 100 டாலரிலும் 19 டாலர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாக இருக்கிறது.
  • உயர் கல்வி பயிலாத இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புத் தேடுவதே தங்களது ஊதியத்தின் கணிசமான பகுதியை சேமித்து தங்களது குடும்பங்களுக்கு அனுப்ப முடியும் என்பதால்தான். பணம் சேமிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியத் தொழிலாளர்கள், படித்த, வசதிபடைத்த திறன்சார் பணியாளர்களைப்போல, பணிபுரியும் நாடுகளில் குடியுரிமை பெற்றுத் தங்கி விடுபவர்கள் அல்ல என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
  • உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கும் போதுமான வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதும்கூட, வெளிநாடுகளில் வேலைவாய்ப்புத் தேடுவதற்கு முக்கியமான காரணம் என்று கூறவேண்டும். இந்தியாவில் பல ஆண்டுகளாகத் தரமான வேலைவாய்ப்பு உருவாகவில்லை என்பது வேதனையான உண்மை. நகர்ப்புறங்களிலேயேகூட, 40% வேலைவாய்ப்புகள் சுயதொழில் வேலைவாய்ப்புகள் என்கிறது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.
  • ஊரகப் பகுதிகளின் ஊதிய அளவு உச்சமடைந்துவிட்டது. இதற்கு மேலும் ஊதியம் வழங்கினால், விவசாயமோ, ஏனைய தொழில்களோ நடத்த முடியாது என்பதுதான் நிலை. குறைந்த மக்கள்தொகை இருந்தபோது அனைவருக்கும் விவசாயம் வேலைவாய்ப்பு வழங்கியது. இப்போது அதுவல்ல நிலைமை. மக்கள்தொகைக்கு ஏற்ப விவசாய நிலங்களின் பரப்பளவை அதிகரிக்க முடியாது. போதாகுறைக்கு, பாகப்பிரிவினைகளால் தனியொருவரின் வேளாண்மைக்கான நிலப்பரப்பு சுருங்கிக் கொண்டே வருகிறது.
  • விவசாயத்தில் இருந்து கணிசமான பகுதியினரை அகற்றி, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு வழங்கத் தொழில் துறை வளர்ச்சி அடைய வேண்டும். அது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழிற்சாலைகள் உருவாக வேண்டும். இந்தியாவில் தொழில்நுட்பம் சார்ந்த சேவைத் துறை வளர்ச்சி அடைகிறதே தவிர, உற்பத்தித் துறை வளர்ச்சி அடையாததால், வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.
  • கடந்த கால இறுதி நிலவரப்படி, இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8%. ஒருபுறம் இந்தியாவின் ஜிடிபி, உலகத்தின் பெரிய பொருளாதாரங்களை எல்லாம் ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் வளர்ச்சி அடைகிறது. இன்னொருபுறம் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது. அதாவது, வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி ஏற்படுவதால்தான், நமது இளைஞர்கள் பலர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்காகத் தவிக்கிறார்கள்.
  • இந்தியாவின் குடியேற்றச் சட்டத்தை (இமிக்ரேஷன் சட்டம்) முறையாகக் கடைப்பிடித்து, நடைமுறைப்படுத்தினாலே தவறான வழியில் வேலைவாய்ப்புகள் வழங்குவது தடுக்கப்படும். அந்தச் சட்டத்தின்படி, இந்தியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு ஒப்பந்தம் செய்யும் முகவர்கள் குடியேறுபவர்களுக்கான பாதுகாப்பு ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்த கண்காணிப்பு அரசுத் தரப்பில் இல்லாதததுதான், ரஷியப் போர்முனையில் இந்திய இளைஞர்கள் சிக்கிக் கொண்டதற்குக் காரணம். இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும். அதேநேரத்தில், அவர்கள் ஏமாற்றப்படாமல் இருப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி: தினமணி (06 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்