TNPSC Thervupettagam

கார்ல் பொலானி: மாபெரும் சமூக மாற்றம்

June 19 , 2023 384 days 249 0
  • ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த அறிஞர் கார்ல் பொலானி [Karl Polanyi 1886-1964], இரண்டாம் உலகப் போருக்குப் பின் நியூ யார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். ஒரு பல்துறை அறிஞராக இருந்தாலும், பொலானியைப் பொருளாதார மானுடவியலாளர் [Economic Anthropologist] என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
  • மானுடவியல் கோணத்தில் பொருளாதாரப் பிரச்சினைகளை அணுக விரும்பும் யாருக்கும் தவிர்க்க இயலாத நூலாக விளங்குவது, அவரது ‘மாபெரும் சமூக மாற்றம்’ [The Great Transformation (1944)] என்ற நூலாகும். இது வெளியானது இரண்டாம் உலகப் போரின் இறுதியில், பிரெட்டன்வுட் என்ற இடத்தில் புதிய உலகப் பொருளாதார அமைப்பின் முக்கிய நிறுவனங்களான சர்வதேச நிதியமும் [International Monetary Fund], உலக வங்கி [World Bank] ஆகியவை உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த அதே காலத்தில்தான். அந்த நிறுவனங்களை உருவாக்கியவர்கள் பொலானியின் சிந்தனைகளை உள்வாங்கியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறார் பொருளாதாரத்தில் நோபல்பரிசுபெற்ற ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ் [Joseph Stiglitz, 1943].

எந்த மாற்றத்தைக் குறித்து பொலானியின் நூல் பேசுகிறது?

  • மிக அடர்த்தியான சிந்தனைகள் அடங்கிய இந்த நூலைச் சுருக்கித் தருவது சாத்தியமில்லை என்றாலும், அவர் குறிப்பிடும் மாற்றத்தைச் சுருக்கமாக உள்வாங்கத்தான் வேண்டும். பல பரிமாணங்கள் உள்ள சமூக வாழ்வின் ஓர் அங்கமே பொருள் உற்பத்தி, பரிமாற்றம், நுகர்வு ஆகியவற்றாலான பொருளாதாரம் என்ற நிலை, பொருளாதாரச் செயல்பாடுகளால், அதாவது உற்பத்தி, வர்த்தகம், நுகர்வு ஆகியவற்றால் கட்டமைக்கப்படுவதே சமூகம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதுதான் இந்த நூல் சுட்டிக்காட்டும் ‘மாபெரும் சமூக மாற்றம்’ எனலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கனவுப் பாய்ச்சல்:

  • ஐரோப்பாவில் 1815 முதல் 1914 வரையிலான நூறாண்டுகள் பிரம்மாண்டமான மாற்றங்களின் காலமாக விளங்கியது. தொழிற்புரட்சியின் விளைவாகப் பண்டங்களின் உற்பத்தியும் உலக வர்த்தகமும் பல பத்து மடங்கு பெருகின. நீராவி இயக்குவிசையும் போக்குவரத்து வசதிகளும் வரலாறு காணாத அளவு மூலப்பொருள்களையும் பண்டங்களையும் உலகெங்கும் எடுத்துச் சென்றன. ஐரோப்பிய அரசுகள், அரசர்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தங்கள் இந்த வளர்ச்சிக்கான போர்களற்ற சூழலையும் உருவாக்கித் தந்தன. இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட பல பகுதிகளில் சிறிய அரசுகள் ஒருங்கிணைந்து புதிய தேசங்களாகப் பரிணமித்தன. உலகின் பெரும்பாலான பகுதிகள் ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கத்துக்குள் வந்தன. ஆப்பிரிக்கக் கண்டத்தை ஐரோப்பிய நாடுகள் துண்டு போட்டுக்கொண்டன.
  • இந்நிலையில், பதினெட்டாம் நூற்றாண்டில் உருவான இரண்டு முக்கியச் சிந்தனைகள் வலுப்பெற்றன. இவை இரண்டுமே ‘லிபரலிசம்’ என்ற சுதந்திரவாதத்தின் இரண்டு பக்கங்கள் எனலாம்: ஒன்று, மக்கள் தங்களைத் தாங்களே பிரதிநிதிகள் மூலம் ஆண்டுகொள்ளும் மக்களாட்சி [Democracy]; மற்றொன்று, தன்னைத் தானே தகவமைத்துக்கொள்ளும் சுதந்திர சந்தைப் பொருளாதாரம் [self-regulating Free market economy].
  • மக்களாட்சி அரசு என்பது அரசியல் கட்சிகளின் சமூக அணிதிரட்டல் மூலம், அவற்றின் பிரதிநிதிகளின் தேர்தல் மூலம் உருவாவது. சந்தை விதிகள் என்பவை அதைவிடப் பூடகமானவை. அவையாவன: தேவையும் உற்பத்தியும் சந்திக்கும் புள்ளிகளில் பண்டங்களின் மதிப்பு உருவாகும் என்பதும், அந்த மதிப்பு உயர்வதும் தாழ்வதும் தேவை [Demand], உற்பத்தி [Supply] ஆகிய இரண்டையும் கூட்டியும் குறைத்தும் சமன் செய்துகொள்ளும் என்பதுமாகும். சுதந்திர மக்களாட்சி அரசுக்கும், சுதந்திரச் சந்தைக்கும் உள்ள உறவு என்ன என்பதை முடிவுசெய்வதில்தான் மிகப்பெரிய அரசியல் கேள்வி உருவானது. ஏனெனில், பண்டங்களின் மதிப்பு உயர்வதும் தாழ்வதும் மக்கள் தொகுதிகளின் வாழ்வைப் பாதிக்கக் கூடியது. மக்கள் நலன்களைக் காக்க அரசு தலையிடத்தானே வேண்டும்? மக்களில் எந்தப் பிரிவினரின் நலன்களுக்காக அரசு தலையிடுகிறது என்பதுதானே அரசியல்?

கலைந்த கனவும் உலகப் போர்களும்:

  • எப்படி இந்தப் பொருளாதார வளர்ச்சியும் சுதந்திரவாதச் சிந்தனைகளும் கற்பனாவாத சுதந்திரச் சந்தையும் பெரும் அழிவினை உருவாக்கிய இரண்டு உலகப் போர்களில் கொண்டு போய் விட்டன என்பது பொலானியின் முக்கிய ஆய்வாகிறது. மக்களாட்சி அரசுகள் என்பவை தேசிய அரசுகளாகவும் விளங்குபவை. சர்வதேசச் சந்தை என்பது உள்நாட்டுச் சந்தையைப் பாதிக்கக்கூடியது என்னும்போது, உள்நாட்டுச் சந்தைப் பாதுகாப்புக்காகச் சர்வதேச வர்த்தகக் கட்டுப்பாடுகளை அரசுகள் விதிப்பதும், அவரவர் பொருள்களுக்கான சந்தையைக் கைப்பற்றுவதுமான போட்டிகள் வரலாறு காணாத பகைமையை மெல்ல உருவாக்கின.
  • முதலாம் உலகப் போரில் [1914-1918] இது பரவலாக வெளிப்பட்டது என்றால், அதன் பிறகு உருவான சர்வதேச உறவுகள் மேலும் பிரச்சினையைத் தீவிரப்படுத்தவே செய்தன. இத்தாலியில் பாசிசம், ஜெர்மனியில் நாசிசம், ரஷ்யாவில் கம்யூனிசம் என தேசிய மொத்தத்துவ [Totalitarian] அரசுகள் சுதந்திரவாத அரசியலுக்கும், சுதந்திரச் சந்தைக்கும் எதிர்வினையாக உருவாயின. இந்த முரண்பாடுகள் அழிவின் கோரத் தாண்டவமான இரண்டாம் உலகப் போருக்கு [1939-1945] இட்டுச் சென்றன.

உற்பத்தியின் நோக்கம் என்ன?

  • மானுட சமூக வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் மாற்றத்தின் மையப்புள்ளியாகப் பொலானி காண்பது ஓர் எளிய உண்மையைத்தான்: நவீனகால முதலீட்டியச் சந்தை உருவாக்கத்துக்கு முன்பு உற்பத்தியின் நோக்கம் வாழ்வியல் பயன்பாடாக மட்டும் இருந்தது; லாபமாக இருக்கவில்லை. பண்டைய சமூகங்களில் இல்லறத் தன்னிறைவு, ஈகைப் பரிமாற்றம், சமூகப் பகிர்தல் ஆகியவையே சமூகவயப்பட்ட உற்பத்தி, பரிமாற்றம், நுகர்வின் அடிப்படைகளாக இருந்தன. சுதந்திரச் சந்தைப் பொருளாதார நிபுணர்கள் கற்பித்துக்கொண்டபடி பண்டமாற்று (barter) என்பது எல்லாக் காலத்திலும் வாழ்வின் அடிப்படையாக இருக்கவில்லை. அது நிகழ்ந்தபோதும் அது லாபத்தை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை; அதனால் வர்த்தகப் போட்டியும் இல்லை. சுதந்திரச் சந்தைப் பொருளாதாரக் கோட்பாடுகளே இவற்றை நிரந்தர மானுடப் பண்புகளாகக் கற்பித்தன என்று சாடுகிறார் பொலானி. பல பரிமாணங்கள் கொண்ட சமூக உறவுகளில் உட்பொதிந்தாக (embedded) பொருளாதாரம் இருக்க வேண்டும் என்பதே அவர் பரிந்துரை.

நன்றி: தி இந்து (19 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்