TNPSC Thervupettagam

காற்று மாசு நெருக்கடியின் தீவிரத்தை எப்போது உணரப்போகிறோம்?

March 4 , 2020 1778 days 725 0
  • உலக அளவில் மோசமான மருத்துவ அவசரச் சூழலை ஏற்படுத்தியிருக்கும் ‘கோவிட்-19’ வைரஸ் காரணமாக இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐத் தாண்டியிருக்கிறது. இதற்காக உலகம் எப்படிப் பதறிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். அதேவேளையில், காற்று மாசு காரணமாக ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் வரை இறந்துபோகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். சர்வதேச அளவில் சத்தமில்லாமல் நடக்கும் இந்தத் துயரத்தை ஒற்றை வரிச் செய்தியாகப் படித்துவிட்டு எப்படி நம்மால் கடந்துபோக முடிகிறது?
  • ‘இந்தியாவுக்குள் இந்தக் காற்று மாசு ஒரு பூதாகாரமான பிரச்சினையாகப் புகுந்துவிட்டது. இப்போதே நீங்கள் எச்சரிக்கையாக இருக்காவிட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் மிகப் பெரும் ஆரோக்கியக் கேடுகளைச் சந்திக்க வேண்டிவரும்’ என்று எச்சரித்துள்ளது, 2019-க்கான சர்வதேசச் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை. கடந்த வாரம் வெளிவந்துள்ள உலக காற்றுத் தரம் பற்றிய தகவல் அறிக்கை (World Air Quality Report 2019) இதற்கு வலுசேர்க்கிறது. விஷயம் என்னவென்றால், உலகிலேயே மிகவும் மோசமான காற்று மாசு நகரம் உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபாத் என்கிறது அந்த அறிக்கை. அத்தோடு நிற்கவில்லை… சர்வதேச அளவில் மோசமான காற்று மாசு உள்ள முதல் 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில் இருக்கின்றன என்பதையும், உலக நாடுகளில் மிக மோசமான காற்று மாசு உள்ள தலைநகரங்களுக்குப் புது டெல்லிதான் தலைமை தாங்குகிறது என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை இன்னும் சேரவில்லை என்றாலும், அதற்கான இடைவெளி குறைந்துவருகிறது என்கிறது புள்ளிவிவரம்.

நாம் எதிர்கொள்ளும் பாதிப்புகள்

  • உலக அளவில் வெளிப்புறக் காற்றில் அதிகரித்துவரும் சல்பேட், நைட்ரேட், கார்பன் நுண்துகள்களும் (Particulate Matter 2.5) ஓசோன் அளவுகளும் இந்தப் பிரச்சினைக்கு விதைபோடுகின்றன. இந்தியாவில் வீட்டுக்குள் உருவாகும் காற்று மாசும் இவற்றோடு சேர்ந்துகொள்கிறது. இந்தியாவில் வீட்டில் சமைக்கவும், குளிர்காலங்களில் தங்களைக் கதகதப்பாக வைத்துக்கொள்ளவும் சுமார் 85 கோடிப் பேர் எரிபொருட்களைப் பயன்படுத்துவது இதற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. சாலை ஓரங்களில் காய்ந்த வேளாண்மைக் கழிவுகளை எரிப்பதும், வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்ட புதைவடிவ எரிபொருள் பயன்பாடு அதிகரிப்பதும் காற்றின் தரத்தை இன்னும் மோசமாக்குகிறது என்கிறது அந்த அறிக்கை.
  • காற்று மாசால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பட்டியலில் இதய நோய்கள், ஆஸ்துமா, ஒவ்வாமை, நாள்பட்ட சுவாசத்தடை நோய், புற்றுநோய், பக்கவாதம், குறைப்பிரசவம் ஆகியவை முக்கிய இடத்தில் உள்ளன. காற்று மாசால் மட்டும் உலகில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 6 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் இறக்கின்றனர்; இதில் இந்தியாவின் பங்கு 1 லட்சம் குழந்தைகள். இந்த நூற்றாண்டைத் தீர்மானிக்கக்கூடிய பருவநிலை மாற்றத்துக்கும் பசுமை இல்ல வாயுக்கள் ஆதிக்கம் செலுத்தும் அசுத்தக் காற்றுதான் அடிப்படைக் காரணம்.
  • அடுத்த அச்சுறுத்தல் இது. இதுவரை அரிசி உணவையும் இனிப்புகளையும் அதிகமாகச் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். இப்போது நீரிழிவு வருவதற்குக் காற்று மாசும் ஒரு காரணம் என்கிறோம். நீரிழிவு இனி யாருக்கும் வரலாம் எனும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். அசுத்தக் காற்றில் அடங்கியிருக்கும் ரசாயனங்கள் நம் கணையத்தில் உட்கார்ந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக இன்சுலின் சுரப்பைத் தீர்த்துவிடுவதுதான் இதற்குக் காரணம். இது நம் ஆரோக்கியத்தை இன்னும் மோசமாக்குகிறது. ஒருவருக்கு நீரிழிவு வந்துவிட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் அவருக்கு 10-க்கும் மேற்பட்ட துணை நோய்கள் வந்துசேரும் ஆபத்து உள்ளது. ஏற்கெனவே நீரிழிவின் தலைநகரமாக இந்தியா இருக்கும் சூழலில், இது நம் அச்சத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.

தேவை புதிய அணுகுமுறைகள்

  • இந்தியாவில் காற்று மாசைக் கட்டுப்படுத்தப் போதிய சட்ட அமைப்புகளோ, நவீன தொழில்நுட்ப வசதிகளோ இல்லை என்பதுதான் நிலைமை இந்த அளவுக்கு மோசமானதற்கு அடிப்படைக் காரணம். மேலும், இப்போது நடைமுறையில் இருக்கும் பாதுகாப்பு அமைப்புகளில் போதாமைகளும் அதிகம். டெல்லியைப் பொறுத்தவரை பிரதான சாலைகளில் வாகனக் கட்டுப்பாடு மேற்கொண்டது, மாற்றுச்சாலைப் பயன்பாட்டை அதிகரித்தது, பதர்பூர் மின் நிலைய உற்பத்தியை நிறுத்தியது, சில தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்தது, கந்தகம் குறைந்த பி.எஸ்.6 எரிபொருள் கிடைக்க ஏற்பாடுசெய்தது ஆகியவை நல்ல முயற்சிகள். என்றாலும், புகை நகரமாகிவிட்ட டெல்லியின் உச்சகட்ட அசுத்தங்களைக் களைய இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்கிறது அந்த ஆய்வு.
  • காற்று மாசை முழுவதுமாகக் கட்டுப்படுத்துவதற்குத் தற்போதுள்ள தொழில்நுட்ப உத்திகளிலும் போதாமைகள் உள்ளன. அதனால், புதிய வழிகளைத் தேட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. காற்று மாசை 99% கட்டுப்படுத்தும் புதிய கருவி ஒன்றை இங்கிலாந்தில் உள்ள நட்டிங்காம் டிரெண்ட் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். உட்புறக் காற்றில் கலந்துள்ள மாசுப் பொருட்களை உறைய வைப்பதன் மூலம் இது சாத்தியம் என்கின்றனர். அவர்கள் கண்டுபிடித்திருக்கும் இந்த ‘கிரையோஜெனிக் கன்டென்ஸர்’, தனக்கு அருகில் வரும் மாசுப் பொருட்களை உறைய வைத்துக் காற்றில் பறப்பதைத் தடுத்துவிடும். எனவே, இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் காற்றில் கலந்திருக்கும் நுண்துகள்களைச் சிறைபிடித்துவிடலாம் என்கிறார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

  • இதேபோல் சென்னையில் தினகரன், அவருடைய தந்தை கெஜவரதன், நண்பர் துக்காராம் ஆகியோர் ‘நைட்ரோ பூஸ்ட்’ கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். ஆக்ஸிஜன் – ஹைட்ரஜனை வெளிவிடும் இந்தக் கருவியை வாகனத்தின் எரிபொருள் வாயுக்களுடன் இணைத்துவிட்டு வாகனத்தை இயக்கினால், அது வெளிவிடும் புகையின் அளவு குறைந்துவிடுகிறது; காற்று மாசைக் குறைக்கிறது. இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு அரசு முகம் கொடுக்க வேண்டும். மேலும், காற்று மாசைக் கட்டுப்படுத்தப் போர்க்கால நடவடிக்கைகளும் தேவை. மத்திய - மாநில அரசுகள் ஏற்கெனவே இருக்கும் மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டங்களைக் கடுமையாக்குவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உறுதிகாட்ட வேண்டியதும் காலத்தின் கட்டாயம். இப்போதுள்ள மாசுக் கட்டுப்பாடு அமைப்புகள் முறையான நடவடிக்கைகள் மூலம் சமூகம் காக்கப் பயன்பட வேண்டும் என்பது முக்கியம். குறிப்பாக, தொழிற்சாலைகளில் புகை கக்கும் குழாய்களில் வடிகட்டும் கருவிகளைப் பொருத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
  • காற்று மாசைக் கட்டுப்படுத்த மக்களின் எரிபொருள் பயன்பாட்டையும், பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்கள் மற்றும் வாகனங்களின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும். சைக்கிள், பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்தை மக்கள் விரும்பும் விதமாக நவீனப்படுத்துவதும் அதிகப்படுத்துவதும் முக்கியம். மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும். மத்திய - மாநில அரசுகள் பல்வேறு ஊடகங்கள் மூலம் இந்த விழிப்புணர்வைப் பொதுமக்களுக்குக் கொண்டுசெல்வதில் தீவிரம் காட்ட வேண்டும்.
  • ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேரின் உயிரைப் பறித்துச்செல்லும் காற்று மாசுப் பிரச்சினை ஏன் நம்முடைய அலட்சியத்தால் புறந்தள்ளப்படுகிறது? ஏனென்றால், பொதுமக்களின் புத்தியிலும் அரசாங்கத்தின் மத்தியிலும் அது ஒரு பிரச்சினையாகவே உணரப்படவில்லை என்பதுதான். கொடிய நோயைப் போல கோரமாக அன்றி சத்தமில்லாமல் அது உயிரைப் பறித்துச்செல்கிறது என்பதுதான். இப்படியெல்லாம் இருந்தால்தான் அதற்குச் செவிசாய்ப்போம் என்கிற நம் மனநிலை முதலில் மாற வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்