- காற்று மாசு காரணமாக 2021ஆம் ஆண்டில் மட்டும் 81 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் அதிக ஆபத்தை எதிர்கொள்வதாகவும் யுனிசெஃப் வெளியிட்டிருக்கும் தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் மட்டும் 21 லட்சம் பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.
- மரணத்தை ஏற்படுத்தும் காரணிகளில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் காற்று மாசு பாதிப்பு இருப்பதாக யுனிசெஃப் வெளியிட்டிருக்கும் உலக அளவிலான காற்றுத் தர நிலை தொடர்பான அறிக்கை (State of Global Air) தெரிவித்திருக்கிறது. இந்தப் பிரச்சினையை உலக நாடுகள் தீவிரமாக அணுக வேண்டிய அவசியத்தை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.
- ஜூன் 19இல் அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட்’ (ஹெச்.இ.ஐ.) நிறுவனத்துடன் இணைந்து ஐ.நா.வின் துணைஅமைப்பான யுனிசெஃப் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையின்படி, 2021இல் உலக அளவில் ஐந்து வயதுக்கு உள்பட்ட 7 லட்சம் குழந்தைகள் காற்று மாசு பாதிப்புகளின் காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். சீனாவில் 23 லட்சம் பேரும், இந்தியாவில் 21 லட்சம் பேரும் மரணமடைந்திருக்கிறார்கள்.
- இரண்டு நாடுகளிலும் ஒரு நிமிடத்துக்கு 4 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதன் மூலம், உலக அளவில் நிகழும் மரணங்களுக்கு - உயர் ரத்த அழுத்தத்துக்கு அடுத்தபடியாக - இரண்டாவது இடத்தில் காற்று மாசு இடம்பெறுகிறது.
- மொத்த உயிரிழப்புகளில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், மயன்மார், வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், எகிப்து, நைஜீரியா ஆகிய நாடுகள் மட்டும் 70% பங்கு வகிக்கின்றன. ஓசோன் தொடர்பான 14,000 மரணங்கள் அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கின்றன. அதிக வருவாய் கொண்ட நாடுகளிலேயே மிக அதிகமான எண்ணிக்கை இது.
- ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,000 குழந்தைகள் உயிரிழக்க, காற்று மாசு காரணமாகியிருக்கிறது. காற்று மாசுபாட்டால் குறைப்பிரசவம், குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறப்பது, ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் ஏற்படுவதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. காற்று மாசு காரணமாக ஏற்படும் தொற்றாநோய்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. கோடிக்கணக்கானோர் நாள்பட்ட நோய்களுடன் வாழ வேண்டியிருக்கிறது.
- பி.எம். 2.5 என்ற நுண்துகள்தான் காற்று மாசடைவதற்கு மிக முக்கியக் காரணம். இந்தத் துகள்கள் 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்டவை. சுவாசம் மூலம் உள்ளிழுக்கப்படும் வகையில் அளவில் நுண்ணிய அளவிலானவை. வாகனப் புகை, அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், காட்டுத் தீ போன்றவற்றிலிருந்து இந்தத் துகள்கள் உருவாகின்றன.
- ஏழை மக்களின் வீடுகளில் மரக்கட்டை, வேளாண் கழிவுகள், நிலக்கரி போன்ற திட எரிபொருள்களைச் சமையலுக்குப் பயன்படுத்துவதால் ஏற்படும் மாசும் உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. ஓசோன் (ஓ3), நைட்ரஜன் டையாக்ஸைடு போன்றவையும் காற்று மாசை ஏற்படுத்துகின்றன.
- சுகாதார அமைப்புகள், பொருளாதாரம், சமூகம் எனப் பல்வேறு தளங்களில் காற்று மாசு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், பசுமை எரிசக்தியைப் பரவலாக்குவது, சுகாதாரத் திட்டங்களை மேம்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான கொள்கை முடிவுகள் போன்ற முன்னெடுப்புகள் அவசியம். 2010ஆம் ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடும்போது காற்று மாசால் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மரணமடைவது 35% குறைந்திருக்கிறது; வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள்களால் நிகழும் காற்று மாசும் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையின் சாதக – பாதகங்கள், நடைமுறைச் சிக்கல்கள் என அனைத்தையும் பரிசீலித்து உறுதியான தீர்வை எட்ட உலக நாடுகள் மனம்கொள்ள வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 07 – 2024)