TNPSC Thervupettagam

காற்று மாசு மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தலாக மாறிவருகிறது

September 11 , 2024 126 days 119 0

காற்று மாசு மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தலாக மாறிவருகிறது

  • காற்று மாசு மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தலாக மாறிவருகிறது. உலக அளவில் மாசடைந்த 100 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 80 நகரங்கள் இருப்பதாகச் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
  • ‘பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ வெளியிட்ட அறிக்கை, இந்தியாவில் ஓர் ஆண்டில் சராசரியாக 20 லட்சம் பேர் காற்று மாசினால் உயிரிழப்பதாகத் தெரிவிக்கிறது. உலகச் சுகாதார அமைப்பு பரிந்துரைத்த காற்றின் தரத்தைவிடக் குறைந்த தரத்தையுடைய காற்றையே இந்திய மக்களில் 90% சுவாசிக் கின்றனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் உருவாகும் காற்று மாசைப் பொறுத்தவரை, கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளில் 12% சாலைப் போக்குவரத்தினால் ஏற்படுகிறது. இதில், கனரக வாகனங்கள் நைட்ரஜன் ஆக்சைடை அதிக அளவு உமிழ்கின்றன.
  • அதோடு, சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் பிஎம் 2.5 (காற்றில் கலந்துள்ள 2.5 மைக்ரோமீட்டருக்குக் குறைவான விட்டம்கொண்ட நுண் தூசித் துகள்கள்) உமிழ்வுகளுக்குப் பங்களிக்கின்றன. இதனால் காற்று மாசடைவதுடன் சுவாசம் தொடர்பான நோய்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக நகர்ப்புறங்களில், காற்றில் பிஎம் 2.5 உமிழ்வுக்கு 60% முதல் 70% வரையிலும் நைட்ரஜன் ஆக்சைடு உமிழ்வுக்கு 40% முதல் 50% வரையிலும் கனரக வாகனங்கள் பங்களிக்கின்றன.

குழந்தைகளுக்குப் பாதிப்பு:

  • பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் வசிக்கும் குழந்தைகளே காற்று மாசினால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தெற்காசிய நாடுகள், கிழக்கு, மேற்கு, மத்திய ஆப்ரிக்காவில் காற்று மாசு காரணமாகக் குழந்தைகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
  • 2021இல் உலக அளவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளைப் பொறுத்தவரை, 7,00,000 இறப்புகள் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையவை. இந்தியாவில் ஒரு நாளில் 464 குழந்தைகள் காற்று மாசினால் உயிரிழப்பதாக ‘State of Global Air (SoGA) 2024’ அறிக்கை தெரிவிக்கிறது.

எரிபொருள் தர நிர்ணயம்:

  • இந்தியாவில் போக்குவரத்துத் துறை ஆண்டுக்கு 9.1% என்கிற அளவில் வளர்ச்சி அடைந்துவருகிறது. இவ்வளர்ச்சியினால் ஏற்படும் காற்று மாசைக் கட்டுப்படுத்தப் போக்குவரத்து வாகனங்களின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதில் ஒன்றுதான், 2017இல் அறிமுகப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் வாகனங்களின் எரிபொருள் பயன்பாடு தர நிர்ணய முறை (Corporate Average Fuel Efficiency/Economy (CAFE) Standards).
  • தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘CAFE 1’ விதியில் கார் போன்ற வாகனத்துக்கு ஒரு கிலோமீட்டருக்கு 130 கிராம் கார்பன் டை ஆக்சைடு உமிழலாம் என வரையறுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு ஒருமுறை வாகனங்களின் எரிபொருள் பயன்பாடு தர நிர்ணய விதிமுறை வெளியிடப்படுகிறது.
  • 2023இல் ‘CAFE 2’ விதியில் ஒரு கிலோமீட்டருக்கு 113 கிராம் கார்பன் டை ஆக்சைடு உமிழலாம் என நிர்ணயிக்கப்பட்டது. 2027இல் ‘CAFE 3’ விதியில் ஒரு கிலோமீட்டருக்கு 91.7 கிராம் கார்பன் டை ஆக்சைடு உமிழலாம், 2032இல் ‘CAFE 4’ விதியில் ஒரு கிலோமீட்டருக்கு 70 கிராம் கார்பன் டை ஆக்சைடு உமிழலாம் எனத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
  • இந்நடவடிக்கைகள் மூலம் எரிபொருள் பயன்பாடு குறைக்கப்பட்டு, கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு கட்டுப்படுத்தப்படும் என அரசு நம்புகிறது. மேலும், வாகனத்தின் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய இந்தியத் தர அளவுகோல்களே (Modified India Driving Cycle (MIDC)) கடந்த காலங்களில் பயன்பட்டன. ஆனால், வாகன மதிப்பீட்டில் இந்தியத் தர அளவுகள் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தாததால், வரும் காலத்தில் உலகத் தர அளவுகோல்களை (World Light Duty Vehicle Testing Procedure) நோக்கி இந்தியா நகர்வதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

பழைய வாகனங்களை அழித்தல்:

  • சுற்றுச்சூழல் மாசைக் குறைக்க, பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கையை (scrappage policy) 2022இல் மத்திய அரசு கொண்டுவந்தது. அதன்படி, மத்திய - மாநில அரசுகளுக்குச் சொந்தமான பொதுத்துறை வாகனங்கள் ‘தரம் மற்றும் மாசு உழிழ்வு’ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இச்சோதனையில், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் பரிசோதிக்கப்படும். இந்தத் தரப் பரிசோதனையில் தகுதி பெறாத வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு, அவ்வாகனங்களை அழிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.
  • இத்திட்டத்தில் மக்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க வரிச் சலுகைகளையும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு தனிநபர் பழைய வாகனப் பதிவை ரத்துசெய்து, சூழலுக்கு நன்மை பயக்கும் புதிய வாகனங்களை வாங்கும்போது சாலை வரியில் 25% தள்ளுபடி வழங்கப்படும். பழைய வாகனங்கள் அழிப்புத் திட்டம் கர்நாடகத்தில் தொடங்கப்படாமலே உள்ளது.
  • இத்திட்டத்தின்படி, கர்நாடகத்தில் 70 லட்சம் பழைய வாகனங்கள் அழிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாகனங்களில் பெரும்பாலானவை காவல், தீயணைப்பு, அவசர உதவி வாகனங்களாகத் தற்போதும் பயன்பாட்டில் இருப்பதால், பழைய வாகனங் களை அகற்றக் கூடுதல் கால அவகாசத்தை மத்திய அரசிடம் கர்நாடகம் கோரியிருக்கிறது.

பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தல்:

  • சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க வாகனங்களின் மாசு உமிழ்வு குறிப்பிட்ட வரம்புக்குள் இருப்பதை உறுதிப்படுத்த, சீரான இடைவெளியில் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். திறந்தவெளியில் குப்பைகள் எரிப்பதை வரைமுறைப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் வெளியிடும் பசுங்குடில் வாயுக்களின் அளவை அரசு கண்காணிக்க வேண்டும்.
  • சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவதன் மூலம்,காற்று மாசைக் குறைக்க முடியும் எனசுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்துவலியுறுத்திவருகின்றனர். பொதுப் போக்கு வரத்தை மேலும் விரிவுபடுத்த அரசு முன்வர வேண்டும்; மக்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்