TNPSC Thervupettagam

காலத்தால் அழியாத பாடல்களை தந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

October 29 , 2019 1901 days 1840 0
  • பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு.
  • இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன.
  • பிறப்பு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் பெற்றோர் அருணாச்சலம் - விசாலாட்சி ஆகியோரின் இளையமாக 13.04.1930 இல் பிறந்தார்.
  • இவருக்கு கணபதி சுந்தரம் என்கின்ற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர்.

படிப்பு: 

  • தொடக்க கல்வியை சகோதரர் கணபதிசுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டார்.

இயக்கம்: 

  • கம்யூனிச விவசாய சங்கத்தில் ஈடுபாடு கொண்டு. அச்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அடித்தட்டு மக்களின் ஆசைகளையும், ஆவேசங்களையும் பிரதிபலித்தார்.

குடும்பம்: 

  • 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – கௌரவம்மாள் திருமணம் சென்னையில் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.
  • 1958ஆம் ஆண்டு மே 3ஆம் நாள் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குமாரவேலு என கவிஞரின் தந்தையார் பேரனுக்குப் பெயர் சூட்டினார்.
  • அதே ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள், மக்கள் வாழ்வில் விடியலைக் கூவி அறிவித்த கவிஞரின் வாழ்வு முடிவடைந்தது.

கற்றல்:  

  • கவிஞர் 1952 இல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார். அதன் நினைவாக கவிஞர் மனைவிக்குக் கடிதம் எழுதும்போது தனக்குத் தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுத்தான் தொடருவாராம்.

பட்டுக்கோட்டையின் பன்முக பரிமாணங்கள்:     

  • தொடக்கத்தில் விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர் என பன்முக பரிமாணங்கங்களைக் கொண்டவர் நாடக நடிகராக மாறி இறுதியில் கவிஞர் என்ற பெரும் பெயரையும் புகழையும் பெற்றார்.

"கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி 

எடுக்கிற அவசியம் இருக்காது

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப்

போனால் பதுக்கிற வேலையும் இருக்காது

உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா

கொடுக்கிற நோக்கம் வளராது" 

என்னும் பொதுவுடைமைச் சித்தாந்தங்களை காலத்தால் அழியாத பாடல்களை எளிமையாகப் பாடியவர்.

மகத்துவம்: 

  • தனது 19 வது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர் பட்டுக்கோட்டையார். இவருடைய பாடல்கள் கிராமிய மணம் கம்ழுபவை. பாடல்களில் உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர்.
  • திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைக் கனவுகளையும், ஆவேசத்தையும், அற்புதப் பாடல்களாக வடித்தார். இவர் இயற்றிய கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டது.
    1955 ஆம் ஆண்டு 'படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
  • உழைப்பாளி மக்களும், அறிவால் உழைக்கும் மக்களும் கூட தங்களுக்காக திரையுலகிலே குரல் கொடுத்து வாழ்வை மேம்படுத்த முன்னின்ற பாடலாசிரியராக‌ இவரைக் கண்டனர்.

வல்லமை

  • பட்டுக்கோட்டை பாடுவதிலும் வல்லவர். நாடகம், திரைப்படம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுந்தவர். கற்பனை வளமும் இயற்கை ரசனையும் நிறைந்தவர். இதுவே இவரை இயல்பாகவே கவிதை புனைய வைத்தது. 1946இல் தனது 15வயதில் ஏற்பட்ட அனுபவத்தை அவரே கூறுகிறார்.
  • 'சங்கம் படைத்தான் காடு என்ற எங்கள் நிலவளம் நிறைந்த சிற்றூரைச் சேர்ந்த துறையான்குளம் என்ற ஏரிக்கரையில் நான் ஒரு நாள் வயல் பார்க்கச் சென்று திரும்பும் போது வேப்பமரநிழலில் அமர்ந்தேன். நல்ல நிழலோடு குளிர்ந்த தென்றலும் என்னை வந்து தழுவவே எதிரிலிருக்கும் ஏரியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.
  • தண்ணீரலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள் "எம்மைப் பார், எம் அழகைப் பார்" என்று குலுங்க, ஓர் இளங்கெண்டை பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் கிடந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்தவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. அதுவரை மெளனமாக இருந்த நான் என்னையும் மறந்தவனாய்ப் பாடினேன்” என்றார்.
  • அதுதான் இது. "ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே - கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே - கரை தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே" இவ்வாறு ஆரம்பித்த நான் வீடு வரும்வரை பாடிக்கொண்டு வந்தேன். அப்பாடலை பலரும் பலமுறை பாடச் சொல்லி மிகவும் ரசித்தார்கள் என்றார்.

இறுதிக்காலம்: 

  • 08.10.1959 ஆம் ஆண்டு தனது 29-ஆம் வயதில் காலமானார்.
  • திமுகவின் மேடைப் பாடகர். அவர் நடித்த நாடகம் "என் தங்கை, கவியின் கனவு".

பட்டம்: 

  • கோயமுத்தூர் தொழிலாளர் சங்கம், மக்கள் கவிஞர் என்ற பட்டத்தையும், பாவேந்தர் விருதினை தமிழக அரசும் வழங்கிக் சிறப்பித்துள்ளது. இவரது பாடல்கள் தமிழகத அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
  • திரைப்பட உலகில் 180 பாடல்கள்தான் எழுதினார் என்றாலும் அவற்றில் பல காலத்தால் அழியாதவை. கால் நூற்றாண்டுகளாக புகழ்பெற்ற திரையுலக சகாப்த கவிஞர்.
  • 1959 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் அவருக்கு மக்கள் கவிஞர் என்று அளித்த பட்டம் மிகப் பொருத்தமாய் நிலைத்தது.
  • 1981 ஆம் ஆண்டு தமிழக அரசு, கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. மறைந்த முன்னாள் முதல்வரும் மக்கள் கவிஞரின் நெருங்கிய நண்பருமான எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து கவிஞரின் மனைவி கௌரவம்மாள் பாவேந்தர் விருதைப் பெற்றுக் கொண்டார். 
  • 1993 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தவாறு கவிஞரின் அனைத்துப் பாடல்களும் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

மணி மண்டபம்: 

  • தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் 2000 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது.
  • இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை, அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள் அங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி (29-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்