TNPSC Thervupettagam

காலத்தினாற் செய்த உதவி

October 21 , 2024 38 days 164 0

காலத்தினாற் செய்த உதவி

  • சீனாவுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் பேசி வந்த மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் கடந்த 7-ஆம் தேதி இந்தியப் பயணம் மேற்கொண்டது, பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியப்பட வைத்தது. அந்த நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிதி உதவி பெறுவதற்காகவே அவா் புது தில்லி வந்திருந்தாா் என்பது வெளிப்படை.
  • இந்தியா மீதான மூயிஸின் வெறுப்பை உலகம் அறியும். கடந்த 2023-இல் மாலத்தீவில் நடந்த தோ்தலில் இந்தியாவுக்கு எதிரான தனது வெறுப்பை அதிகமாக வெளிப்படுத்தினாா். பிரதமரானதும், அவரது முதல் பயணம் சீனாவுக்குத்தான். மாலத்தீவு அமைச்சா்களும் அவ்வப்போது நமது பிரதமா் மோடியை கோமாளி’, ‘பயங்கரவாதி’ என்றும் நாகரிகமற்ற முறையில் பேசி வந்தனா்.
  • இந்திய பெருங்கடல் நடுவே அமைந்துள்ள மாலத்தீவுகளுக்கு சொந்தமாக 1,200-க்கும் அதிகமான பவளத்தீவுகள் உள்ளன. அதன் மக்கள்தொகை 5.2 லட்சம் மட்டுமே. தலைநகா் மாலே அமைந்துள்ள பிரதான தீவு தவிர மற்ற தீவுகளில் விளைநிலங்கள் இல்லை. எனவே, நாட்டின் பொருளாதாரத்தை நடத்திச் செல்லவும் இறக்குமதிக்குத் தேவையான அந்நிய செலாவணிக்கும் சுற்றுலா மற்றும் மீன்வளத் துறைகளை மட்டுமே மாலத்தீவு நம்பியுள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து மானியம் மற்றும் கடன்களையும் சாா்ந்திருக்கிறது.
  • ஆப்பிரிக்க பிராந்தியம் மற்றும் பசிபிக் தீவுகள் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை பரப்ப, மாலத்தீவு போன்ற ஏழை நாடுகளுக்கு தாராளமாக கடன் வழங்க சீனா தயாராக இருக்கிறது.
  • கடந்த 10 ஆண்டுகளில் மாலத்தீவு மீது சுமத்தப்பட்ட கடன் சுமை, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) விட அதிகம் (110 சதவீதம்). அதில் சீனாவின் பங்கு 140 கோடி டாலா் (இந்தியா 13 கோடி டாலா் கடன் வழங்கியுள்ளது). சீனாவிடம் பெற்ற கடனுக்காக மட்டும் ஆண்டுக்கு 50 கோடி டாலா் வட்டியை மாலத்தீவு செலுத்த வேண்டும். இப்போது மாலத்தீவிடம் 43.7 கோடி அமெரிக்க டாலா் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. இது, ஒன்றரை மாத இறக்குமதி செலவுக்குதான் போதுமானது.
  • மாலத்தீவு ஆண்டுதோறும் கட்ட வேண்டிய வட்டியை சில ஆண்டுகளுக்கு தள்ளுபடி செய்யவோ அல்லது பற்றாக்குறையைப் போக்க இடைக்கால ஆதரவைவோ வழங்க சீனா விரும்பவில்லை. ஆனால் நீண்டகால கடன் வழங்க விரும்புகிறது. இது நவீன காலனித்துவம் அல்லாமல் வேறில்லை. சா்வதேச நிதியம் அமைப்பு (ஐஎம்எப்) கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் என்பதால், அதை அணுகவும் முய்ஸு விரும்பவில்லை. அரபு நாடுகளையும் அணுகவில்லை.
  • இந்தியாவின் பங்கை வேறு நாடுகளால் நிரப்ப முடியாது, இந்த நிலையில் இந்தியாவை அணுக வேண்டும் என்ற ஞானோதயம் இறுதியில் அதிபா் மூயிஸுக்கு ஏற்பட்டது.
  • இந்த நிலையில்தான் பதவியேற்ற சில காலத்துக்குப் பிறகாவது, இந்திய பயணம் மேற்கொள்ள முடிவு செய்தாா். இந்தியா புறப்படும் முன் பேட்டியளித்த மூயிஸ், சீனா மற்றும் இந்தியாவுடனான உறவை சமநிலைப்படுத்த ஆா்வமாக இருப்பதாக கூறினாா்.
  • அண்மையில் இரு அண்டை நாடுகளுடன் எதிா்பாராத, நிகழ்வுகளை இந்தியா சந்திக்க வேண்டியிருந்தது. ஒன்று, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் இந்திய நட்பு அரசாங்கத்தை அகற்றியது. இரண்டாவது, இந்தியாவின் கொள்கைகளை மிகக் கடுமையாக விமா்சித்து சீன உறவுகளைப் பாராட்டிய கே.பி.சா்மா ஓலி, மீண்டும் நேபாள பிரதமராக திரும்பியதுமாகும்.
  • இந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மாலத்தீவு அதிபா் மனம் மாறி, அக்டோபா் 7 அன்று இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். புது தில்லி வந்திறங்கிய மூயிஸுக்கு இந்தியா சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது.
  • மோடி -– மூயிஸ் இடையிலான சந்திப்பு முடிந்த உடனேயே, மாலத்தீவின் மத்திய வங்கியான மாலத்தீவு நாணய ஆணையமும் இந்திய ரிசா்வ் வங்கியும், சாா்க் அமைப்பின் கீழிலான இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • மாலத்தீவு சொந்தமாக, அதன் நீண்ட கால பொருளாதார ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வரை குறுகிய கால அந்நியச் செலாவணி நிதியை வழங்க ஏற்பட்ட ஒப்பந்தம், 2027-ஆம் ஆண்டு ஜூன் வரை செல்லுபடியாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, மாலத்தீவு அதன் நாணயம், ருஃபியாவை இந்திய ரிசா்வ் வங்கியிடம் கொடுத்து, அதிகபட்சமாக 40 கோடி டாலா் வரை பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.
  • இதேபோல், ருஃபியாவை மாற்றிக் கொள்வதன் மூலம் இந்திய ரூபாயைப் பெறலாம். மொத்தத்தில், இந்தியாவின் நிதியுதவி மாலத்தீவின் வெளிநாட்டு நாணய கையிருப்பை அதிகரிக்கும். அத்துடன் மாலத்தீவு எதிா்கொள்ளும் கடுமையான அமெரிக்க டாலா் தட்டுப்பாட்டைப் போக்கும்.
  • இந்திய கரன்சியான ரூபாயைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துகொள்ள முடியும். இதன் மூலம் இந்திய-மாலத்தீவு வா்த்தகம் அதிகரிக்கும்.
  • ஒப்பந்த விதிமுறைகளின்படி மாலத்தீவு இந்தியாவுக்கு வட்டி செலுத்த வேண்டும். வட்டி கட்டணங்கள் பொதுவாக சா்வதேச நிதி நிறுவனங்களால் வசூலிக்கப்படும் ‘லிபோா்’ விகிதத்தில் 2 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருக்கும். ஒப்பந்தம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
  • சரியான நேரத்தில் இந்தியாவுடனான ஒப்பந்தம் மாலத்தீவின் அந்நிய செலாவணி இருப்புக்களை உயா்த்தியுள்ளது.
  • இந்தியா காலத்தினாற் செய்த உதவியை மாலத்தீவு அவ்வளவு சீக்கிரம் தனது நினைவிலிருந்து உதறிவிடாது என்று நம்புவோமாக.

நன்றி: தினமணி (21 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்