- அற்றுப்போய்க்கொண்டிருக்கும் சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அதன் பழைய புத்தகக் கடை ஒன்றில் சில வாரங்களுக்கு முன் மேய்ந்துகொண்டிருந்தேன். கையில் அகப் பட்டது பைண்டு செய்யப்பட்ட ஒரு நூல். அசிரத்தையுடன் புரட்டியபோது, ‘விஞ்ஞான அறிவு நூல் - நம்மைச் சூழ்ந்துள்ள கடல் - விலை ரூபாய் ஒன்று’ என்கிற அட்டைப்படம் துணுக்குற வைத்தது. ‘ரேச்சல் கார்சனின் நூலாக இருக்குமோ?’ என அவசரமாகத் திருப்பி ஆசிரியர் பெயரைப் பார்த்தபோது, திகைக்கவைக்கும் வகையில் என்னுடைய அனுமானம் சரியாகவே இருந்தது.
- ‘மௌன வசந்தம்’ (The Silent Spring) என்கிற நூலின் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மேற்குலகில் தீவிரமடையக் காரணமாக இருந்தவர் ரேச்சல் கார்சன். அவர் கடல் பற்றி எழுதிய மூன்று நூல்களில் (Sea trilogy) ஒன்றின் தமிழ் மொழிபெயர்ப்பைத்தான் நான் கண்டெடுத்திருந்தேன். வெ.ச.அநந்த பத்மநாபன் என்பவரின் மொழிபெயர்ப்பில், தென் இந்திய சயன்ஸ் கிளப் என்கிற அமைப்பின் வழியாக ஹிக்கின்பாதம்ஸ் வெளியீடாக ஆகஸ்ட் 1966இல் இந்நூல் (The Sea Around Us, 1951) வெளியாகியிருக்கிறது.
- ‘விஞ்ஞான அறிவு நூல்’ என்கிற வரிசையில் இது 13ஆவது நூல். நவீன சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த சொல்லாடல் மேற்கத்திய நாடுகளிலேயே தொடக்க நிலையில் இருந்த அக்கால கட்டத்தில், இத்துறை சார்ந்து வெளியான முக்கிய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு தமிழுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
- இந்நூலைக் கண்டெடுத்த கிளர்ச்சியில், ‘விஞ்ஞான அறிவு நூல்’ வரிசையில் வெளியான பிற நூல்களைத் தேடிய பயணத்தில் ஹிக்கின்பாதம்ஸ் தொடங்கி எல்லா இடங்களிலும் ஏமாற்றமே மிஞ்சியது; நூல்களைப் பற்றிய குறிப்புகளைக்கூட காணமுடியவில்லை. காலநிலை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்த புரிதல் தமிழ்நாட்டில் இன்றைக்கு ஓரளவுக்குப் பரவலாகிக்கொண்டிருக்கிறது; எனினும், அதில் போதாமை நிலவுகிறது என்பதை அதில் இயங்கிவருபவர்களே ஒப்புக்கொள்வார்கள். சுற்றுச்சூழல் கரிசனம் தமிழ்நாட்டில் உருப்பெறுவதற்கு வெகு காலம் முன்பே மேற்கொள்ளப்பட்ட ‘விஞ்ஞான அறிவு நூல்’ போன்ற முயற்சிகள் தொடராமல் போனது, இன்று நிலவும் போதாமைக்கு ஒரு முக்கியக் காரணம்.
எங்கே நிற்கிறோம்?
- இந்தப் பின்னணியில், சுற்றுச்சூழல் சார்ந்த மேம்பட்ட புரிதலை வெகுமக்களிடம் உருவாக்குவது எப்படி என்பதற்கு விடை, ஊடகங்கள்தாம். ஆனால், சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் தமிழ் ஊடகங்களின் செய்தி வழங்கும் முறையோ பெருவருத்தம் தருகிறது: ‘சென்னை உள்பட 8 மாவட்டங்களில் நாளை பொளந்து கட்டப்போகும் கனமழை’ என்கிற தமிழ் செய்தித் தொலைக்காட்சி அலைவரிசையின் செய்தி ஒன்று சமீபத்திய உதாரணம்.
- காலநிலை மாற்றத்தின் விளைவுகள் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழ் ஊடகங்கள் செய்தி வழங்கும் தன்மையில், அடிப்படையாக மொழியிலிருந்தே மறுகட்டமைப்பு செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் சார்ந்து அவ்வப்போது எழும் பிரச்சினைகள் பற்றிய செய்தி வழங்கல் என்பது அந்தந்த நேரத்துக்கான செய்திகளாகவே சுருங்கிவிடுவது, வெகுமக்களின் புரிதலில் நீண்ட காலத்தில் எவ்வித நல்விளைவு களையும் ஏற்படுத்தப் போவதில்லை.
- அச்சு, காட்சி, இணையம் என எந்த வகையான ஊடகத்துக்கும் அடித்தளம் மொழிதான் என்கிற வகையில், சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றி அறிவியல்பூர்வமாகப் பேசுவதற்குக் கூருணர்வு மிக்க மொழியை ஊடகங்கள் கைகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஆக்கபூர்வமும் திசைதிருப்பலும்
- இந்திய மாநிலங்களில், பொருளாதாரத்தில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி, 2020-21 நிதியாண்டில் ரூ.20.65 லட்சம் கோடி; இது 2022-23இல் ரூ.23.5 லட்சம் கோடியைத் தொடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பொருளியலை 2030-31 நிதியாண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது.
- பொருளாதாரம் சார்ந்த மிகப் பெரும் இலக்குகளை வகுத்துக்கொண்டுள்ள அதே வேளையில், காலநிலை மாற்றம் சார்ந்தும் தமிழ்நாடு அரசு கவனம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே முதல் முறையாக, காலநிலை மாற்றம் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி நிதி திரட்டும் வகையில் ‘தமிழ்நாடு காலநிலை மாற்ற நிதி’யைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது; மேலும், ‘காலநிலை அறிவு இயக்கம்’, ‘காலநிலை மாற்ற நிர்வாகக் குழு’, ‘தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டம் - 2023’, ‘மாநிலப் பேரிடர் மேலாண்மைக் கொள்கை’ போன்ற முன்னெடுப்புகளும் பாராட்டத் தக்கவை.
- ஆனால், தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, ‘நிலவில் இருந்து பார்க்கும்போதும் தெரியும் வகையில், 100 ஏக்கர் பரப்பளவில் ‘தமிழ்’ என்கிற வார்த்தை அமைப்பில் மாதிரிக் காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும்’ எனச் சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சில மாதங்களுக்கு முன் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆக்கபூர்வமான பல்வேறு முன்னெடுப்புகளுக்கு இடையே இதுபோன்ற விளம்பர நோக்கிலான அறிவிப்பு கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்தது.
இது ஒரு போர்
- இந்தியாவுக்கான ‘காலநிலை மாற்றத்துக்கான தேசிய செயல் திட்ட’த்தை (NAPCC) மத்திய அரசு 2008இல் உருவாக்கியது; ‘காலநிலை மாற்றத்துக்கான மாநில செயல் திட்ட’த்தைத் (TNSAPCC) தமிழ்நாடு 2014இல் உருவாக்கியது. ‘சென்னை காலநிலை செயல்திட்ட அறிக்கை’க்கான வரைவு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.
- “காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பேரிடர்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்து இந்தியர்களிடையே விழிப்புணர்வு இல்லை. பொறுப்பற்ற திட்டமிடல், வளர்ச்சி நடவடிக்கைகளால், குறிப்பாக நகரங்களில் பொருளாதார இழப்புகள் பல ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன” என தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் வி.திருப்புகழ் பேசியிருந்தார். இந்தப் பின்னணியில், ஊடகங்களின் முதன்மைக் கடமை என்ன என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டு துலக்கமாகிறது.
- காலநிலை மாற்றத்தின் பிடியில் உள்ள இந்தக் காலத்தில் நாம் செய்ய வேண்டியது யாது என எழுத்தாளர் நக்கீரன் உரைப்பதை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்: “பண்பாட்டு ரீதியில் பெரிய போர் நம் மீது தொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பண்பாட்டுப் போர் என்பது தமிழ் இனக்குழுவின் மீது, தமிழ் நிலத்தின் மீது, தமிழ் மொழியின் மீதான போர்; இன்னும் சொல்லப் போனால் இதற்குள் சுற்றுச்சூழலும் அடங்கியிருக்கிறது.
- சூழலியல் சார்ந்த புரிதல் இங்கு வந்துவிட்டது; ஆனால், அதை முழுமைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. பண்பாட்டுப் போரை எதிர்த்து போராடக்கூடிய ஒரு காலகட்டம் வரப் போகிறது. அப்படிப் போராடக்கூடிய வருங்காலத் தலைமுறைக்கு, அந்தப் போராட்டத்துக்குத் தேவையான கருத்து ஆயுதங்களைத் தயாரித்துக் கொடுக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.”
நன்றி: இந்து தமிழ் திசை (12– 08 – 2023)