- ஓர் ஆண்டில் பொதுவெளியில் அதிகம் புழங்கிய, உரையாடல்களில் அதிகத் தாக்கம் செலுத்திய சொல், ‘ஆண்டின் சொல்’லாகத் (Word of the Year) தேர்வுசெய்யப்படுகிறது. 1970களில் ஜெர்மனியில் தொடங்கிய இந்த வழக்கம் (Wort des Jahres), 1990களில் ஆங்கில மொழியில் தீவிரம் பெறத் தொடங்கியது. ஆக்ஸ்போர்டு, காலின்ஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற ஆங்கில மொழி அகராதிகள், ‘ஆண்டின் சொல்’லைத் தேர்வுசெய்யும் பணியில் முதன்மையாக ஈடுபட்டுள்ளன.
- அந்த ஆண்டில் புதிதாக உருவாக்கப் பட்ட ஒரு சொல், ஆண்டின் சொல்லாக இருக்க வேண்டியதில்லை; மாறாக, அந்த ஆண்டின் போக்கில் மேலெழுந்த உரையாடலில் முக்கியத்துவம் பெற்ற சொற்கள், ‘ஆண்டின் சொல்’லாகப் பெரும்பாலும் தேர்வாகின்றன. அப்படி, 2023ஆம் ஆண்டின் சொற்களாக ‘Rizz’ (ஆக்ஸ்போர்டு), ‘Artificial Intelligence’ (காலின்ஸ்), ‘Authentic’ (மெரியம்-வெப்ஸ்டர்) ஆகியவை உரையாடலில் மேலெழுந்தன.
குழந்தைகளுடைய ஆண்டின் சொல்
- வெகுஜன உரையாடல் மையம்கொண்டுள்ள புள்ளியைத் துலக்கப் படுத்தும் இந்த நடைமுறை, குழந்தை களிடம் பயிலும் சொற்களைப் படிப்பதற்கும் கையாளப்படுகிறது. குழந்தைகளின் மொழி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ்ஸின் ‘Oxford Children’s Dictionaries and Children’s Language Data Team’ என்கிற குழு, பிரிட்டனில் கடந்த பத்து ஆண்டுகளாகக் குழந்தைகளுடைய ஆண்டின் சொல்லை (Children’s Word of the Year) வெளியிட்டுவருகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டின் குழந்தைகளுடைய சொல்லாக – நீங்கள் ஊகித்தது சரிதான் – ‘காலநிலை மாற்றம்’ தேர்வாகியிருக்கிறது.
- 2023ஆம் ஆண்டின் குழந்தைகளின் சொல்லைத் தேர்வுசெய்யும் செயல் பாட்டில், பிரிட்டன் முழுவதிலும் இருந்து 6-14 வயதுக்கு உள்பட்ட 5,458 குழந்தைகள் பங்கெடுத்தனர். அந்த ஆண்டின் முக்கியத்துவம் வாய்ந்த சொற்கள் எனக் குழந்தைகள் பட்டியலிட்டவற்றில் இருந்து காலநிலை மாற்றம் (Climate Change), முடிசூட்டு விழா (Coronation), போர் (War) ஆகிய சொற்கள் முதற்கட்டமாகத் தேர்வுசெய்யப்பட்டன.
- இறுதியில், மூன்றில் ஒருவர் என்கிற அளவில் குழந்தைகள் தேர்வுசெய்த ‘காலநிலை மாற்றம்’ என்கிற சொல், 2023ஆம் ஆண்டின் குழந்தைகளுடைய சொல்லாக அறிவிக்கப்பட்டது.
- ‘காலநிலை மாற்றம் என்பது நாம் எல்லாரும் விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டிய ஒரு தீவிரமான அச்சுறுத்தல்’; ‘நாம் இப்போதே செயல்பட்டாக வேண்டும்’; ‘பூவுலகு காப்பாற்றப்பட வேண்டியது முக்கியம்’; ‘உலகம் பற்றி எரிகிறது’; ‘என்னுடைய எதிர்காலத்தின் மீது பெரிய தாக்கம் செலுத்தக்கூடியது’ - என காலநிலை மாற்றம் பற்றிய தங்கள் எண்ணங்களைக் குழந்தைகள் இந்த ஆய்வில் பகிர்ந்துள்ளனர்.
- காலநிலை மாற்றம் பற்றிய சிந்தனை குழந்தைகளிடம் வேர்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதையே இது உணர்த்துகிறது. மேலும், கடந்த பத்தாண்டுகளில் Queen (2022), Coronavirus (2020), Brexit (2019), Plastic (2018), Trump (2017), Refugee (2016) போன்ற ஆண்டின் சொற்கள், உலக நிகழ்வுகள் பற்றிய அறிதல் குழந்தைகளிடம் ஆழம்பெற்று வருவதை உணர்த்துகின்றன.
- காலநிலைச் செயல்பாட்டின் உலகறிந்த முகங்களில் ஒருவராக இன்றுமாறிவிட்ட ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பர்க், பள்ளி மாணவியாக 2018இல் முன்னெடுத்த ‘எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்’ என்கிற பள்ளி வேலைநிறுத்தப் போராட்டம், பள்ளி மாணவர்கள் - இளையோரிடம் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஆழப்படுத்தியது; கிரெட்டாவின் போராட்ட முறை பெரியவர்களையும் காலநிலைச் செயல்பாட்டுக்குள் இழுத்துவந்தது.
- இளம் தலைமுறையினரின் மனதில்என்ன இருக்கிறது என்பதைப் பெரியவர்கள் அறிந்துகொள்வதற்கான வழிமுறைகளில் ஒன்றாகக் குழந்தைகளுடைய ஆண்டின் சொல் போன்ற முன்னெடுப்புகள் உதவுகின்றன என இந்த ஆய்வுக்குப் பங்களித்த ஆசிரியர்கள் ஆக்ஸ்போர்டு குழுவினரிடம் தெரிவித்தனர். தங்கள் குரல் கேட்கப்படுகிறது, தங்கள் அனுபவங்களைப் பெரியவர்கள் பரிசீலிக்கிறார்கள் என்கிற எண்ணத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்துவது முக்கியம், இல்லையா?
கருவில் தொடங்கும் பாதிப்புகள்
- காலநிலை மாற்றத்தின் விளைவுகள் ஒவ்வொரு தலைமுறைக் காலத்துக்கும் தீவிரமடைந்துவரும் நிலையில், நாளைய தலைமுறையினரான இன்றைய குழந்தைகள் மிகப் பெரிய வாழ்வாதார அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்; அதைவிட அதிகமாக, இன்னும் பிறக்காத தலைமுறையினரும்கூட காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் கருவிலேயே எதிர்கொண்டுள்ளனர்.
- அமெரிக்காவின் நியூ யார்க்கில் 2012 அக்டோபரில் வீசிய சாண்டி புயலின் போது கருவுற்றிருந்த தாய்மார்களை மகப்பேறு கால மன அழுத்தம் (Stress in Pregnancy) தொடர்பாக உளவியலாளர் யோகோ நோமுரா (Yoko Nomura) மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் திகைக்கவைக்கின்றன.
- ‘Journal of Child Psychology and Psychiatry’ என்கிற ஆய்விதழில் வெளியான நோமுராவின் ஆய்வு, (தற்போது பள்ளிக்குச் செல்லும் வயதில் உள்ள) சாண்டி புயலின்போது கருவிலிருந்த சிசுக்கள் புயலின் விளைவுகளால் இன்று மன அழுத்தம், பதற்றம், கவனச் சிதைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் சார்ந்த ஆபத்து காரணிகளுக்கு அதிக அளவில் உள்ளாகியிருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
- நோமுரா குழுவினரின் இந்த ஆய்வு, காலநிலை மாற்றத்தின் பக்கங்களில் புதிய வரலாற்றை எழுதத் தொடங்கியிருக்கிறது: மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்டு மாறிவரும் காலநிலை, நம்முடைய வாழிடத்தின் தன்மையை மட்டும் மாற்றியமைக்கவில்லை. மாறாக, நம்முடைய மூளை தொடங்கி நரம்பு மண்டலம் வரை அதன் பாதிப்புகள் நீள்கின்றன. உயரும் வெப்பநிலை தொடங்கி அதிதீவிர வானிலை நிகழ்வுகள் எனப் புதைபடிவ எரிபொருள்பயன்பாட்டினால் விளைந்த காலநிலை தாக்கங்கள், நம்முடைய மூளைச் செயல்பாட்டில் தாக்கம் செலுத்துவது மட்டுமல்லாது நினைவு தொடங்கி மொழியின் இயக்கம், அடையாள உருவாக்கம், மூளையின் அமைப்பில் மாற்றம் வரை நம்பமுடியாத பல பாதிப்புகளைக் கொண்டுவந்திருக்கின்றன.
கேள்விக்கென்ன பதில்?
- பார்க்கும்தோறும் மனதை நொறுங்கவைக்கும் ஒரு காட்சி ‘கேப்பர்னம்’ (Capernaum, 2018) என்கிற லெபனியத் திரைப்படத்தில் உண்டு. இந்த உலகத்துக்குத் தன்னைக் கொண்டுவந்ததற்காக, தன்னுடைய பெற்றோர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என 12 வயது ஜாய்ன் நீதிமன்றத்தில் முறையிடுவான்.
- அரசியல், சமூகம், பொருளாதாரம் என ஒரு குழந்தையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணிகளின் வரிசையில், சுற்றுச்சூழல் இன்று முதலிடத்துக்கு வந்துவிட்டது. ஏற்றத்தாழ்வு, வறுமை, போர்ச் சூழலால் ஏற்படும் இடப்பெயர்வு போன்றவற்றைக் காலநிலை மாற்றம் தீவிரப்படுத்துகிறது; இந்தப் பாதிப்புகள் முழுவதுமாக குழந்தைகளின் தலையில் இறங்குகின்றன.
- காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் இன்று தாய்மார்களின் கருவறைக்குள் நுழைந்துவிட்டன; இந்தப் பாதிப்புகளின் ஊடாகப் பிறந்து வளரும் குழந்தைகள், ‘என்னை ஏன் இந்த உலகுக்குக் கொண்டுவந்தீர்கள்?’ என்று இன்றோ நாளையோ நம்மிடம் கேட்கக்கூடும்.
- அதற்கு உரிய பதில் இருக்கிறதா நம்மிடம்?
நன்றி: தி இந்து (30 – 03 – 2024)