TNPSC Thervupettagam

காலனியாதிக்கம் முதல் ஜனநாயகம் வரை

March 11 , 2024 310 days 212 0
  • ஆங்கிலேய காலனியாக விளங்கிய இந்தியாவை தங்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், இந்தியாவின் விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்கள் அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டன.
  • ஒன்றரை நூற்றாண்டு காலமாக இந்தியாவில் நடைமுறையில் இருந்துவந்த இம்மூன்று குற்றவியல் சட்டங்களும் குற்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்வதற்குப் பதிலாக, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதையே பிரதானமாகக் கொண்டுள்ளன என்றும், இதனால் இவற்றை மாற்றியமைப்பதற்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • வர்த்தகம் செய்து பொருள் ஈட்டுவதற்காக 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா வந்த ஆங்கிலேயர்கள், காலப்போக்கில் இந்தியாவைத் தங்களின் காலனி நாடாக மாற்றிக் கொண்டனர். வர்த்தகம், நிர்வாகம் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொண்டு, வர்த்தக வளர்ச்சிக்குத் துணைபுரிய, காவல் அமைப்பினை இந்தியாவில் ஆங்கிலேயர்கள் உருவாக்கினர்.
  • இந்தியாவில் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட காவல் அமைப்பானது ராணுவத்தைப் போன்று இரக்கமின்றி செயல்படும் அமைப்பாகவும், பொதுமக்களிடத்தில் வன்முறையுடன் அணுகும் தன்மையுடையதாகவும் விளங்கியது. ஆங்கிலேய நிர்வாகத்திற்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்துபவர்களை அடக்குவதும், பொதுமக்களை ஆங்கிலேய நிர்வாகத்தின் ஆணைகளுக்குக் கீழ்படிந்து செயல்படச் செய்வதும் காலனித்துவ காவல் அமைப்பின் முக்கிய கடமைகளாக இருந்துவந்தன.
  • களப் பணியாற்றும் காலனித்துவ காவலர்கள் பொதுமக்களிடத்தில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டு இருந்தனர். 24 மணி நேரமும் பணியாற்றுவதற்கு ஏற்ப, காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். காவல் அதிகாரிகளின் ஆணைகளை முழுமையாக ஏற்று, செயல்படுகின்ற விதத்தில் காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. காவல் உயரதிகாரிகள் பெரும்பாலும் ஆங்கிலேயர்களாக இருந்ததால், அவர்கள் காவலர்களிடம் பழகுவதில் இடைவெளியைக் கடைப்பிடித்தனர்.
  • இந்திய காலனியை ஆட்சி செய்ய ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த சட்டங்கள் பெரும்பாலும் எதேச்சதிகாரமானவையாக இருந்தன. ஆங்கிலேய நிர்வாகத்தின் விருப்பு வெறுப்புக்கு இணங்க செயல்படுத்தும் வகையில் அச்சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன. "தேசத் துரோகச் சட்டம்-1870', "ரௌலட் சட்டம்-1919' போன்ற சட்டங்கள் இதற்கு சான்றுகளாகும்.
  • காலனியாதிக்க நிர்வாகத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யும் இந்தியர்களை தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி சிறையில் அடைக்கவும், "வாரன்ட்' இல்லாமல் ஒரு இடத்தினுள் காவலர்கள் நுழைந்து திடீர் சோதனை நடத்தவும் காவல்துறைக்கு இச்சட்டங்கள் அதிகாரங்களை வழங்கியிருந்தன.
  • காலப்போக்கில் ஆங்கிலேயர்களின் எதிர்பார்ப்புகளை காலனித்துவ காவல் அமைப்பு முழுமையாக நிறைவேற்றாத சூழல் நிலவியது. குறைவான ஊதியம், அடிப்படை வசதிகளின்றி பணிபுரியும் சூழல், காவலர்களின் உணர்வுகள் புண்படும்படி நடத்தியது போன்றவை காவலர்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தின. இந்தச் சூழலில், காலனித்துவ காவல் அமைப்பினைச் சீர்படுத்துவதற்காக காவல் ஆணையம் ஒன்றினை ஆங்கிலேய அரசு ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கான காவல் சட்டத்தை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1861-ஆம் ஆண்டு இயற்றியது.
  • ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவந்த இந்திய காலனி பகுதிகளில் பணியமர்த்தப்பட்ட காவல் உயரதிகாரிகளுக்கான பயிற்சி இங்கிலாந்தில் கொடுக்கப்பட்டது. அவ்வாறு பயிற்சி எடுத்துக் கொண்டவர்களின் வழிகாட்டுதலின்படி, ஏனைய காவல் அதிகாரிகள், காவலர்களுக்கான பயிற்சி இந்தியாவில் கொடுக்கப்பட்டது. உயரதிகாரிகளின் ஆணைகளுக்குக் கீழ்படிதல், ஒழுக்கம், நேர்மை போன்றவை காவல் பயிற்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
  • 1861-ஆம் ஆண்டின் இந்திய காவல் சட்டத்தைத் தொடர்ந்து, குற்றத் தடுப்பு, குற்றப் புலன்விசாரணை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன. உலக நாடுகளுக்கு முன்னோடியாக 1897-ஆம் ஆண்டில் கைரேகைக் கூடம் ஒன்றினை கொல்கத்தாவில் அமைத்து, குற்றப் புலனாய்வில் கைரேகையைப் பயன்படுத்தும் முறைக்கு ஆங்கிலேய காலனித்துவ காவல் அமைப்பு வித்திட்டது.
  • சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றத் தடுப்பு, பழைய குற்றவாளிகளைக் கண்காணித்தல், ஒவ்வொரு கிராமத்திலும் நிகழும் முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை காவல் நிலையங்களில் ஆவணப்படுத்துவதையும் காலனித்துவ காவல் அமைப்பு நடைமுறைக்குக் கொண்டுவந்தது.
  • சிக்கலான குற்ற வழக்குகளில் புலன் விசாரணை செய்வதற்காக சி..டி. என்றழைக்கப்படும் குற்றப் புலனாய்வுத்
  • துறையை 1902-ஆம் ஆண்டில் இந்திய நிர்வாகத்தை கவனித்துவந்த ஆங்கிலேய அரசாங்கம் ஏற்படுத்தியது.
  • இதைத் தொடர்ந்து, காவல் நிர்வாகத்திற்குத் துணைபுரியும் வகையில் உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்காக 1929-ஆம் ஆண்டில் "எஸ்.பி.சி..டி' என்று அழைக்கப்படும் உளவுத் துறையும் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் இன்றுவரை இவ்விரு துறைகளும் மாநிலக் காவல் துறையில்
  • முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.
  • இன்றைய சூழலில், தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல், உள்நாட்டு பாதுகாப்பு, பேரிடர் மீட்பு, புலன் விசாரணையில் தடய அறிவியல் மற்றும் கணினியின் பயன்பாடு, சைபர் குற்றங்களைத் துப்பறிதல், மகளிரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்தியக் காவல் துறை விரிவடைந்துள்ளது.
  • அதே சமயம், இன்றைய காவல்துறை காலனியாதிக்கத்தின் கீழ் இயங்கிவந்த காவல் அமைப்பின் செயல்பாடுகள் சிலவற்றில் இருந்து பின்தங்கிய நிலையில் இருப்பதைக் காணமுடிகிறது.
  • ஜாதி ரீதியாக காவல் துறையினர் செயல்படுவதும், தங்களின் ஜாதியைச் சார்ந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், பிற ஜாதியினர் மீது பழிவாங்கும் விதத்தில் நடவடிக்கை எடுப்பதும் ஜனநாயக நாடாகத் திகழும் நம் நாட்டில் காணமுடிகிறது.
  • குறிப்பாக, ஜாதி மோதல்கள் அதிக அளவில் நடைபெறுகின்ற மாவட்டங்களில், சில குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த காவல் அதிகாரிகளைப் பணியமர்த்தக் கூடாது என்ற ஆணையை கால் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. ஜாதி ரீதியாகச் செயல்படுவதில் இருந்து காவல்துறை மீள்வதற்கான சூழல் தென்படாத நிலை நிலவுகிறது.
  • கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தின்போதும், அதைத் தொடர்ந்து ஆங்கிலேய நாடாளுமன்ற நிர்வாகத்தின் போதும் இந்தியாவில் ஊழல், கையூட்டு போன்ற குற்றச் செயல்களில் இந்தியர்கள் மட்டுமின்றி, ஆங்கிலேய அதிகாரிகள் சிலரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் வங்காளத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் குறிப்பிடத்தக்கவர். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குத் திரும்ப அழைக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு அவர் உட்படுத்தப்பட்டார்.
  • இரண்டாம் உலகப் போர் (1939 - 1945) நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ராணுவத்திற்குத் தேவையான பொருள்களை கொள்முதல் மற்றும் விநியோகம் செய்ததில் நடைபெற்ற ஊழல், கையூட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்வதற்காக "சிறப்பு காவல் நிறுவனம்' என்ற அமைப்பை 1941-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆங்கிலேய நிர்வாகம் ஏற்படுத்தியது.
  • காலனியாதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலையடைந்து 76 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஊழல், கையூட்டு போன்றவற்றிலிருந்து இந்தியா விடுதலை பெறமுடியாத நிலை இருந்து வருகிறது. ஊழல், கையூட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையில் "கையூட்டு கலாசாரம்' தங்குதடையின்றி நடைமுறையில் இருந்து வருகிறது. பதவி உயர்வும், காவல் பதக்கங்களும் கையூட்டு வாங்குபவர்களுக்கும் வழங்கப்படுகின்ற அவல நிலை காவல்துறையில் நிலவி வருகிறது.
  • ஆங்கிலேயர்களின் கைப்பாவையாக இருந்த காவல் அமைப்பு, இந்திய விடுதலைக்குப் பின்னர், ஆளும் கட்சியின் சார்பு அமைப்பாக மாறியிருப்பதைக் காணமுடிகிறது. காவல்துறையில் ஆளும்கட்சி ஆதரவாளர்கள், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் என்ற பிரிவினை வேரூன்றி இருப்பதையும் காணமுடிகிறது. ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, முந்தைய ஆட்சியில் முக்கியப் பதவிகளில் இருந்த காவல் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதும், தண்டிக்கப்படுவதும் நடைமுறையாகிவிட்டது.
  • பணியில் ஜாதி உணர்வு, கையூட்டு கலாசாரம், அரசியல் கட்சிகள் சார்ந்து செயல்படுகின்ற காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு பரிபாலனம் ஆகியவற்றினால் நாட்டின் ஜனநாயகம் சீர்குலைந்துவிடும் அபாயம் தவிர்க்க முடியாதது ஆகும்.

நன்றி: தினமணி (11 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்