TNPSC Thervupettagam

காலமும் ஒரு கால்வாயும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

October 27 , 2023 386 days 239 0
  • ஹர்க்கத் அல் முக்காவாமா அல் இஸ்லாமியா என்பது ஹமாஸின் முழுப்பெயர். இஸ்லாம் மதத்தைச் சார்ந்த எதிர்ப்பு இயக்கம் என்பது இதன் பொருள். தொடக்கத்தில் (1970-களின் இறுதியில்) இஸ்லாமிய காங்கிரஸ் என்ற பெயரில் காசா பகுதியில் அறியப்பட்ட பொதுநல இயக்கம்தான் பின்னாளில் ஹமாஸானது என்று ஒரு வரியில் அதன் சரித்திரத்தைச் சுருக்கி விட முடியும். உண்மையில் ஹமாஸின் உருவாக்கத்துக்குப் பின்னால் ஒரு பெரிய சம்பவம் உள்ளது.
  • ஒரு வகையில் மொத்த மத்தியக் கிழக்கு தேசங்களையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்த சம்பவம்தான். ஆனால், ஹமாஸை அது பாதித்த விதம் வேறு. ஜூலை 26, 1956-ம் ஆண்டு எகிப்தின் அதிபர் கமால் அப்துல் நாசர், எகிப்தின் ஊடாகச் செல்லும் சூயஸ் கால்வாயை நாட்டுடைமை ஆக்குவதாக அறிவித்தார். இதிலென்ன இருக்கிறது? இங்கே பக்கத்தில் கர்நாடகத்தில் இருந்து வரும் காவிரியையே தடுத்து வைத்து அம்மாநில அரசு ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு தேசத்தின் வழியாக ஓடுகிற கால்வாயை அத்தேசம் தனது உரிமை என்று சொல்லிக்கொள்ள என்ன தடை என்று தோன்றலாம். விஷயம் அத்தனை எளிதானதல்ல.
  • ஏனெனில் சூயஸ் கால்வாய் என்பது நாமறிந்த கால்வாய்கள் போன்றதல்ல. அது ஒவ்வொரு நாளும் ஏராளமான சரக்குக் கப்பல்கள் செல்லும் ஒரு பிரம்மாண்டமான நீர் வழித் தடம். பிரிட்டன் முதல் அத்தனை ஐரோப்பிய தேசங்களும் இந்தியப் பெருங்கடலுக்குத் தங்கள் வர்த்தகக் கப்பல்களை அனுப்ப வேண்டுமானால் சூயஸ் கால்வாய் வழியாக மட்டுமே அனுப்ப முடியும். ஏனெனில் எகிப்தின் வடக்கே மத்திய தரைக் கடலையும் கிழக்கே செங்கடலையும் இணைக்கும் ஒரே நீர் வழி அதுதான். எகிப்து தனது வடக்குப் பக்கக் கதவை இழுத்து மூடிவிடுகிறது. இனி ஐரோப்பிய கப்பல்கள் எதுவும் சூயஸ் கால்வாய் வழியைப் பயன்படுத்த முடியாது. வேறு வழி பார்த்துக் கொள்ளுங்கள் என்றால் என்ன நடக்கும்? ஐரோப்பிய நாடுகள் மூன்று தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டியிருக்கும்.
  • அதாவது, வடக்கு அட்லாண்டிக் கடல் வழியைப் பிடித்து, ஐலசா பாடிக்கொண்டே தெற்கு அட்லாண்டிக் கடல் வழிப் பாதையைத் தொட்டு ஆப்பிரிக்காவை முழுதாக ஒரு சுற்று சுற்றிக்கொண்டு இந்தியப் பெருங்கடலை அடைய வேண்டும். புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், சென்னை அண்ணா சாலைக்குக் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு வரை சென்று அங்கிருந்து திருச்சிக்குப் போய் விமானம் ஏறி மீனம்பாக்கம் வந்திறங்கி, மெட்ரோ பிடித்து அண்ணா சாலைக்கு வருவது போல. எனக்கென்ன? இனி உங்கள் தலையெழுத்து அதுதான் என்று சொல்லிவிட்டார் நாசர். காரணம் இஸ்ரேல்.
  • அன்றைய தேதியில் எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் ஏகப்பட்ட வாய்க்கால் வரப்புத் தகராறுகள் இருந்தன. எதுவுமே லேசில் தீராத பிரச்சினை. இஸ்ரேலுக்கும் வர்த்தக வழி என்றால் அதே சூயஸ் கால்வாய்ப் பாதைதான் என்பதால் அதை இழுத்து மூடிவிட நாசர் நினைத்தார். ஆனால் இஸ்ரேல் மட்டுமா பாதிக்கப்படும்? சூயஸ் கால்வாய் வழி இல்லாது போனால் இஸ்ரேலுக்கு நேரும் இழப்பைப் போல பிரிட்டனுக்கு நூறு மடங்கு அதிக இழப்பு இருக்கும். ஆனால் பிரிட்டன் இஸ்ரேலை ஆதரிக்கும் தேசம். கஷ்டத்தில் பங்கு வகிக்கத்தான் வேண்டும் என்று நாசர் சொன்னார். சூயஸ் கால்வாய் வழித்தடம் என்பது ஒரு கூட்டு நிறுவனக்கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருந்தது. பிரிட்டனும் பிரான்ஸும் 1869-ம் ஆண்டு அது திறக்கப்பட்டதிலிருந்து நடத்திக்கொண்டிருந்தன. அதில்தான் கை வைத்தார் நாசர். நாட்டு நலன் கருதி, நைல் நதியின் குறுக்கே ஓர் அணை கட்டியாக வேண்டும். வேறு வழியில்லாமல் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்குகிறேன். அவ்வளவுதான். ஒரே வரி. ஒரே ஒரு அறிக்கை. முடிந்தது விஷயம். யுத்தம் ஆரம்பமானது.
  • அந்தப்பக்கம் பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல். இந்தப்பக்கம் எகிப்து மட்டும். ஆனால் வென்றது எகிப்துதான். அது ஒரு வரலாறு காணாத வெற்றி. நாசர் என்ற தனி மனிதரை உலகம் முழுதும் திரும்பிப்பார்த்த தருணம் அது. நெஞ்சில் துணிவு மட்டும் இருந்தால் போதும்; எப்பேர்ப்பட்ட ஏகாதி பத்திய சக்திகளையும் வீழ்த்த முடியும் என்பதே அந்தச் சம்பவம் தந்த பாடம். உலகம் அதைப் படித்துவிட்டுக் கடந்து சென்றது. ஹமாஸ், படித்துவிட்டுப் பயிற்சி செய்ய ஆரம்பித்தது.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்