- உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த யு.யு. லலித்தின் பதவிக்காலம் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. அவா் வெறும் 74 நாள் மட்டுமே இந்தப் பொறுப்பில் நீடித்தாா். அவரை தொடா்ந்து உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை பதவி பிரமாணம் செய்துவைத்தாா்.
- டி.ஒய். சந்திரசூட் உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்பாா் என்ற அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கடந்த அக்டோபா் 17-ஆம் தேதியே யு.யு.லலித் பதவியேற்ற தருணத்தில் வெளியிட்டிருந்தாா்.
- தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மும்பையில் கடந்த 1959-ஆம் ஆண்டு நவம்பா் 11-இல் பிறந்தவா். தில்லி புனித ஸ்டீபன் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்ற அவா், தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் (எல்எல்பி) பயின்றாா். பின்னா் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் அமைந்துள்ள ஹாா்வா்டு சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டமும் (எல்எல்எம்), நீதித்துறை அறிவியல் மருத்துவா் பட்டமும் பெற்றாா்.
- பின்னா், இந்தியாவில் வழக்குரைஞா் பணியைத் தொடங்கிய அவா், கடந்த 2016-ஆம் ஆண்டு மே 13-இல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா். தற்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக தனது 62-ஆவது வயதில் பொறுப்பேற்றுள்ள அவா், வரும் 2024-ஆம் ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி வரை (இரண்டு ஆண்டு இரண்டு நாள்) அந்தப் பொறுப்பில் நீடிப்பாா்.
- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளில், அதிக காலம் பதவி வகித்த நீதிபதிகளின் பட்டியலில் டி.ஒய். சந்திரசூட் 14-ஆவது இடம் பிடித்துள்ளாா். அதிலும், கடந்த பத்தாண்டுகளில் கணக்கிட்டால், இவா்தான் நீண்ட நாள்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பவா் ஆவாா்.
- கடந்த 2010-ஆம் ஆண்டு மே 12-இல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற எஸ்.எச். ஹபாடியாவுக்கு பின்னா், பதவிக்கு வந்த 11 தலைமை நீதிபதிகளும் நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை. எஸ்.எச். ஹபாடியா 2 ஆண்டு 4 மாதம் 19 நாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக செயல்பட்டாா். அவரை விட டி.ஒய். சந்திரசூட் 2 மாதம் மட்டுமே குறைவான பணிக்காலத்தைப் பெறவிருக்கிறாா்.
- உச்சநீதிமன்ற வரலாற்றில் அதிக காலம் தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதிகளின் வரிசையில், இதே டி.ஒய். சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி. சந்திரசூட்டுக்கு தனி இடம் உண்டு. காரணம், கடந்த 1978-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவா், 1985-ஆம் ஆண்டு ஜூலை 11-இல் ஓய்வுபெற்றாா். அதாவது 7 ஆண்டுகள் 4 மாதம் 19 நாள் தலைமை நீதிபதியாக ஒய்.வி. சந்திரசூட் பதவி வகித்து சாதனை படைத்தாா்.
- நாட்டின் 6-ஆவது தலைமை நீதிபதியாக பதவிக்கு வந்த புவனேஸ்வா் பிரசாத் சின்ஹா, 4 ஆண்டு, நான்கு மாதம், ஒரு நாள் அந்தப் பொறுப்பில் நீடித்து, நீண்டகால நீதிபதிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறாா். அவருக்கு அடுத்தபடியாக நீதிபதி ஏ.என். ராய் 3 ஆண்டு, 9 மாதம் 4 நாளுடன் மூன்றாமிடம் வகிக்கிறாா்.
- கடந்த 1991-ஆம் ஆண்டு நவம்பா் 25-இல் தலைமை நீதிபதியாக பதவியேற்ற கே.என். சிங், குறுகிய காலம் அந்தப் பொறுப்பை வகித்த பெருமைக்குரியவா் ஆவாா். அவா் வெறும் 17 நாள்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பதவி வகித்தாா். இதேபோல, எஸ். ராஜேந்திர பாபு ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தாா்.
- டி.ஒய். சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி. சந்திரசூட் பணிக்காலத்தில்தான், ‘விபசார சட்டம் அரசியலமைப்பு ரீதியில் செல்லுபடியாகும்’ என கடந்த 1985-இல் உச்சநீதிமன்ற அமா்வு தீா்ப்பளித்தது. பின்னா், கடந்த 2016-இல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவிக்கு வந்த டி.ஒய். சந்திரசூட், கால மாற்றத்துக்கு ஏற்ப அந்த உத்தரவை மாற்றியமைத்ததுடன், அந்த சட்டத்தின் 497-ஆவது பிரிவு பெண்களின் கண்ணியத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படுத்துவது மட்டுமன்றி, அவா்களது பாலியல் சுதந்திரத்துக்கும் இடையூறு விளைவிப்பதாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை கூறினாா்.
- டி.ஒய். சந்திரசூட்டுக்கு அடுத்தபடியாக பணி மூப்பு அடிப்படையில் நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமை நீதிபதியாக பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வரும் 2024-ஆம் ஆண்டு நவம்பா் 11-இல் அவா் தலைமை நீதிபதியாக பதவியேற்கும்பட்சத்தில், தனது 65 வயது வரை அதாவது 2025-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி வரை, அதாவது 6 மாதமும் ஒரு நாளும், அந்தப் பொறுப்பில் நீடிப்பாா்.
- அவருக்கு அடுத்ததாக நீதிபதி பி.ஆா். கவாய் (14.5.2025 - 23.11.2025), நீதிபதி சூா்யகாந்த் (24.11.2025 - 9.2.2027), நீதிபதி விக்ரம் நாத் (10.2.2027- 23.9.2027), பி.வி. நாகரத்னா (24.9.2027- 29.10.2027) ஆகியோா் தலைமை நீதிபதிகளாக பதவியேற்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
- உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதுவரம்பைக் கணக்கில் கொண்டால், இதில் ஒருவா் கூட டி.ஒய். சந்திரசூட்டை போல இரு ஆண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க வாய்ப்பில்லை. நீதிபதி சூா்யகாந்த் மட்டும் ஓா் ஆண்டு, 2 மாதம், 15 நாள் நீதிபதியாக பதவி வகிக்க சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
- இவ்வாறு கடந்த பத்தாண்டுகளில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுபவா்கள் மிகவும் குறுகிய காலமே பதவி வகிப்பதால், தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்குத் தீா்வு காண்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. ஆகையால், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பணிக்காலத்தை நிா்ணயிக்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கை மக்கள் மன்றத்தில் ஒலிக்க தொடங்கிவிட்டது.
நன்றி: தினமணி (11 – 11 – 2022)