- புதுச்சேரி முதல்வர், 2020-21-க்கான நிதிநிலை அறிக்கையில் ‘மேம்படுத்தப்பட்ட காலைச் சிற்றுணவு மற்றும் ஊட்டச்சத்துத் திட்ட’த்தை வரும் நவம்பர் முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.
- இதன் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலைச் சிற்றுண்டியாக இட்லி, கிச்சடி, பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்படும்.
- புதுச்சேரியைப் பொறுத்தவரை, பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்குவது 2002-லேயே தொடங்கப்பட்டது. முதலில் பால், பிரட்டோடு ஆரம்பித்த காலை உணவுத் திட்டம், பின்பு பால், பிஸ்கட் என்று மாறி 2013-14-லிருந்து நூறு மில்லி லிட்டர் பால் அனைத்து மாணவர்களுக்கும் தரப்படுகிறது.
- ஒரு சிறு யூனியன் பிரதேசம் தனக்குள்ள நிதியை வைத்துக்கொண்டு இப்படி ஒரு திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது உண்மையில் சவாலான விஷயம்தான்.
- இப்போது மேம்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்துக்காக ரூ.6 கோடியை ஒதுக்கியுள்ளனர்.
- 2019-20 திருத்திய மதிப்பீடு ரூ.41.58 கோடி சத்துணவுத் திட்டத்துக்காகச் செலவிடப்பட்டுள்ளதாக வருவாய்க் கணக்கு வரவினங்கள் தெரிவிக்கின்றன.
- இது 2020-21-ல் ரூ.52.95 கோடியாக அதிகரிக்கப்படும் என்றும் அறிக்கை கூறுகிறது.
- ஏற்கெனவே, மதிய உணவு வழங்குவதற்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்துக் கட்டமைப்புகளும் செயல்பாட்டில் உள்ளதால், இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் எந்தவிதச் சிக்கல்களும் நிர்வாகரீதியாக வரப்போவதில்லை. தமிழகமும் இத்தகைய கட்டமைப்புகளுக்குப் பேர்போனது.
சிறந்த நடவடிக்கை
- ஆறு மாதங்களுக்கும் மேலாக நாம் முடங்கியிருக்கும் சூழலில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பது கவனிக்கப்பட வேண்டியது.
- இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு பெருமளவில் அதிகரித்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், பள்ளி உணவையே ஊட்டச்சத்துக்காக நம்பியுள்ள குழந்தைகள், வேறு ஊட்டச்சத்து கிடைக்கும் வாய்ப்பில்லாமல் அல்லாடுகின்றனர்.
- கரோனா காரணமாக ‘பட்டினிப் பரவல்’ வருவதற்கும், லட்சக் கணக்கான குழந்தைகள் தீவிர வறுமையின் பிடியில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது என்றும் உலக உணவு நிறுவனம் எச்சரித்துள்ளது.
- ஆக, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் களையும் விதமாகப் பள்ளிகளில் மதிய உணவோடு சேர்த்து ஊட்டச்சத்து மிக்கக் காலை உணவு தரப்பட வேண்டியது தற்போதைய தேவை.
- இதைப் பூர்த்திசெய்யும் விதமான புதுவை அரசின் காலை உணவுத் திட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
- ஒருவேளை சமைக்கப்பட்ட உணவு கொடுக்க முடியாத சூழல் வந்தால், ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று உலர்ந்த உணவுப் பொருட்களையாவது காலை உணவாக வழங்க வேண்டும் என்ற யோசனைகளும் அரசின் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் சொல்கின்றன.
- குழந்தைகளுக்கு உணவு வழங்குதலில் முன்னோடி மாநிலமான தமிழகமும் இந்தத் திட்டத்தை அப்படியே சுவீகரித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
- பள்ளிகள் மூடியிருக்கும் இக்காலத்திலும் தமிழகத்தில் அங்கன்வாடிகள் மூலமாகத் தொடர்ந்து குழந்தைகளுக்கு முட்டை, பருப்பு, சத்துமாவு போன்றவற்றை வழங்கிவருகிறது தமிழக அரசு.
- ஏழை எளிய மக்களைப் பொறுத்தமட்டில் இது மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பு. பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவை வழங்குவதற்கு முன்னோட்டமாகவும் இப்படி உலர்ந்த உணவுப் பொருட்களை பள்ளிகள் மூலமாக வழங்க தமிழக அரசு யோசிக்கலாம். இந்த ஊரடங்கில் பசிக்கும் வறுமைக்கும் எதிரான சிறந்த நடவடிக்கைகளில் ஒன்றாக அது அமையும்.
நன்றி: தி இந்து (29-09-2020)