TNPSC Thervupettagam

கால்நடைகளும் விபத்துகளும்

November 3 , 2022 646 days 329 0
  • அண்மைக்காலமாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. விரைந்து வரும் வாகனங்களுக்கு குறுக்கே சாலையில் திரியும் மாடுகள், தெருநாய்கள் திடீரென வருவதால் இது போன்ற விபத்துகள் நிகழ்வது பெருகி வருகிறது.
  • மேலும் சாலைகளில் கிடக்கும் அவற்றின் கழிவுகள் மூலமாகவும் விபத்துகள் ஏற்படுகின்றன. இவை தவிர, சாலைகளில் திரியும் கால்நடைகளின் கொம்புகள் பொதுமக்கள் மீது படுவதாலும் அவற்றின் கனத்த உடல் பகுதிகள் இடிப்பதாலும் கூட விபத்துகள் ஏற்படுகின்றன.
  • பெருநகரங்கள் மட்டுமல்லாது சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் கூட இது போன்ற விபத்துகள் நடைபெறுகின்றன. கால்நடைகளை வளர்ப்பவர்களின் பொறுப்பற்ற தன்மையே இதற்கான முக்கியக் காரணம். கால்நடைகளால் ஏற்படும் வாகன விபத்துகளால் கால்நடைகள் மட்டுமன்றி விபத்துக்குள்ளான நபர்களும் கொடுங்காயங்களுக்கு ஆளாவதுடன் சில சமயங்களில் உயிரும் பறிபோகின்ற நிலை ஏற்படுகிறது.
  • வீட்டில் வளர்க்க வேண்டிய கால்நடைகள் எவ்வித கட்டுப்பாடின்றியும் மக்கள் நடமாட்டமும் அதிக வாகன நெருக்கமும் மிகுந்த சாலைகளில் அலையும்போதுதான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன. இந்திய அளவில் கால்நடைகளின் எண்ணிக்கை சுமார் 514 மில்லியன் (51.4 கோடி) உள்ளது. அதிக அளவு கால்நடை செல்வத்தை கொண்டிருக்கும் நாம் அதை வளர்ப்பதிலும் கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும்.
  • கால்நடைகளை உணவுக்காகத் தெருவில் அலையவிடுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளை அவற்றை வளர்ப்பவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள கால்நடைகளை மேய்ச்சலுக்கு பிறகு அவற்றை வளர்ப்பவர்கள் மாலை நேரங்களில் தொழுவத்தில் கட்டும் பழக்கம் இன்றளவும் உள்ளது. இதனால் அங்கெல்லாம் இரவு நேரங்களில் கால்நடைகளின் நடமாட்டத்தை சாலைகளிலோ பிற இடங்களிலோ காண இயலாது.
  • மாறாக நகர்ப்புறங்களில் உள்ளவர்கள், தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் மீது பொறுப்பும் அக்கறையும் காட்டாமல் அவற்றைத் தொழுவத்தில் கட்டும் பழக்கம் இல்லாமல் இருப்பதால் கால்நடை விபத்துகள் பெருமளவு நடைபெறுகின்றன. தமிழகத்தில், சென்னையில் மட்டும் ஆண்டுதோறும் 30 % விபத்துகள் கால்நடைகளால் ஏற்படுகின்றன. இதில் 40 % நபர்களுக்கு இறப்பும் 100 % நபர்களுக்கு காயமும் ஏற்படுகின்றன.
  • அதே போல் விபத்தை ஏற்படுத்தும் கால்நடைகளும், விலங்குகளும் கூட காயத்தையும் மரணத்தையும் எதிர்கொள்கின்றன. 2011 முதல் 2021 வரை நாகபுரியில் மட்டும் 11,915 கால்நடைகள் விபத்துக்குள்ளாகி கொடுங்காயம் அடைந்துள்ளதாக அங்குள்ள "விலங்குகள் ஒருங்கிணைப்பு அமைப்பு' என்ற தன்னார்வ நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • 2017-18 ஆம் ஆண்டு வாக்கில் பஞ்சாபில் மட்டும் நாள்தோறும் சுமார் 1,06,000 கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிந்ததாகவும் இதனால் ஏற்பட்ட விபத்துகளால் சுமார் 300 வாகன ஓட்டிகள் இறந்திருப்பதாகவும் "பஞ்சாப் கௌ சேவா' என்ற கோசாலா அமைப்பு தெரிவித்துள்ளது.
  • தில்லி, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் சுமார் 58 % சாலை விபத்துகள் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள், தெரு நாய்கள் காரணமாகவே நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளால் சுமார் 10,000 நாய்கள் இறப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதை தடை செய்யும் வகையில் நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் அவ்வப்போது அபராததொகையையும் தண்டனையையும் அறிவித்தாலும் கால்நடை வளர்ப்பவர்கள் அவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. தமிழ்நாடு நகர்புற விலங்குகள் - பறவைகள் சட்டம் 1997-இன்படி சாலைகளில் கால்நடைகளைத் திரியவிடும் உரிமையாளருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 5,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கலாம்.
  • 1960-ஆம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழும் கால்நடைகளை சாலைகளில் திரிய விடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை உள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் கால்நடை வளர்ப்பவர்கள் எதையும் பொருட்படுத்தாத நிலையே உள்ளது. கால்நடைகளை தெருவில் திரியவிடும் உரிமையாளர்கள் அரசு நிர்வாக அமைப்புகளின் விதிமுறைகளையும் அறிவுரைகளையும் ஏற்க வேண்டும். கால்நடைகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் வீட்டிலேயே தீவனங்களைக் கொடுத்து அவற்றை வெளியில் சுற்றுவதை தடுக்க வேண்டும்.
  • தற்சமயம் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருப்பதால் இனி வரும் நாட்களில் மழையின் தாக்கம் அதிகமாகக்கூடும்.
  • இது போன்ற சமயங்களில் கால்நடைகள் தெருவில் உலவும் போது அவற்றின் சாணம், சிறுநீரால் சாலையின் வழுக்குதன்மை அதிகரிக்கும்.
  • அதனால், வாகன விபத்துகளின் எண்ணிக்கையும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பும் கூடலாம். நகர்ப்புறங்களில் கால்நடை வளர்ப்பவர்கள் இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு தங்கள் கால்நடைகளை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
  • நகர்ப்புறங்களில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் வகையில், நகரின் முக்கியப் பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் கால்நடைகள் மேய்வதற்கு உரிய ஏற்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.
  • இதற்கான தொகையை கால்நடை உரிமையாளரிடம் வசூலிக்கலாம். உரிமையாளர் இல்லாமல் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கண்டறிந்து அவற்றை வளர்க்க முன்வருபவர்களிடம் ஒப்படைத்து அதனால் வரும் தொகையை அரசுக் கருவூலத்தில் சேர்க்கலாம்.
  • எல்லாவற்றிற்கும் மேலாக கால்நடைகளைத் தெருவில் திரியவிடுவது தவறு மட்டுமல்ல பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தானதும் கூட என்பதை கால்நடை வளர்ப்போர் உணர வேண்டும்.

நன்றி: தினமணி (03 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்