- காவிரிப் படுகைக்கு இந்தப் பசலி (ஜூலை 2023 - ஜூன்2024) இதுவரை காணாத அதிசயங்களும் விநோதங்களும் அவலங்களுமாகக் கழியப்போகிறது. பசலி என்பது ஒரு விவசாய ஆண்டு.
- தஞ்சாவூருக்குக் கிழக்கே களஞ்சேரி என்ற கிராமத்தில் மாட்டுக் கிடை ஒன்று வெண்ணாற்று மணலில் அடைந்திருந்ததை ஜனவரி முதல் வாரத்திலேயே பார்த்தேன். மணல் ஈரமாக இருந்தால் மாடு படுக்காது. காவிரியின் கிளையான வெண்ணாறு வறண்டுபோய் பொதி மணலாகக் கிடந்தது. பொங்கலுக்கு முன் காவிரி இப்படி வறண்டுபோவது விநோதம். பிப்ரவரி நடுப்பகுதி வரை ஒரு ஓரமாகவாவது தண்ணீர் சிலிர்த்து ஓடுவது வழக்கம்.
இப்படியும் ஒரு துயரமா
- ஜனவரி 28 அன்று மூடப்பட வேண்டிய மேட்டூர் அணையை இந்தப் பசலியில் அக்டோபர் 10 அன்றே மூடிவிட்டதால் காவிரியும் கிளை ஆறுகளும் வறண்டு கிடக்கின்றன. சம்பாவுக்கும் பின்பட்டத் தாளடிப் பயிருக்கும் இன்னும் மூன்று வாரங்களுக்குத் தண்ணீர் வேண்டியிருக்கும். இந்தத் தேவையின் நெருக்கடி வெண்ணாற்றின் கடைமடையில் உச்சம்.
- அணையை மூட வேண்டிய நேரத்தில், அதைத் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம் அறிவிக்க நேரும் அவல விநோதம் காவிரிப் படுகையில் இப்போது நிகழ்ந்திருக்கிறது.
- டெல்டாவில் சம்பாவும் தாளடியும் எந்தக் கட்டத்தில், எவ்வளவு பரப்புக்கு இருக்கின்றன என்பதை அரசு கவனித்து வந்திருந்தால் காலப் பிற்பாடான இப்போதைய தன் பரிவு சார்ந்து அது சங்கடப்பட்டிருக்க வேண்டாம். குறிப்பாக, இந்த ஆண்டு நிலவரத்தை அரசு உற்றுக் கவனிக்க அவசியம் இருந்தது.
- இரண்டு டி.எம்.சி. தண்ணீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். இதை மூன்று வாரங்களுக்கு முன்பே செய்திருந்தால் விவசாயிகளின் இன்னலைத் தவிர்த்திருக்கலாம். இன்னும் ஒரு வாரத்தில் கடைமடைக்கு வரப் போகும் இந்தத் தண்ணீர் வழக்கமான ஆற்றுப் பாசனம்போல் வயல்களில் எக்கண்டமாகப் பாயாது.
- கல்லணையில் ஆறுகளுக்கு இடையில் எளிதாக மடைமாற்றலாம். ஆனால், கிராமங்களில் திட்டுத் திட்டாக நிற்கும் பயிருக்கு அந்தந்த இடத்துக்கு ஏற்பத் தண்ணீரைக் கொண்டுசேர்க்க பெருமுயற்சி வேண்டும். காவிரி ஆறாக இருக்கும் போது நமக்கு என்னென்ன செய்ய இயலுமோ அவையே அது பாசன வாய்க்கால் என்று தன் நிலையில் தாழும்போது கடினமாகும்.
பாசன வாய்க்காலான காவிரி
- ஆறு என்றும் பாசன வாய்க்கால் என்றும் நான் வேறுபடுத்திக் காட்டுவதால் காவிரி பற்றிய நம் புரிதலுக்கு என்ன ஆதாயம் என்று நீங்கள் கேட்கலாம். ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றிலிருந்து வேண்டும் போது பாசன வாய்க்காலைத் திறந்து அந்தந்த கிராமங்களுக்குத் தண்ணீர் பெறுவோம்.
- இது கிராம மட்டத்தில் நடக்கும் நீர் நிர்வாகம். ஆனால், காவிரியை ஒரு பாசன வாய்க்காலாக்கி கிராம மட்டத்திலான நீர் நிர்வாகத்தை மேட்டூர் அணைக்கே இடம் மாற்றிக்கொண்டால் என்ன நடக்குமோ, அதுதான் இப்போதெல்லாம் நடக்கிறது. இன்றைய நீர் நிர்வாக மாதிரி விவசாயிகளின் துயரத்தை அதிகரிக்கும்.
- செப்டம்பர் முடிய முதல் நான்கு மாதங்களுக்கு மேல்மடை மாநிலமான கர்நாடகத்துடன் போராட வேண்டும். அடுத்த நான்கு மாதங்கள் நம் அரசாங்கத்துடன் மல்லுக்கு நிற்க வேண்டும். இன்று விவசாயிகளின் நிலைமை இது என்றால், காவிரியின் நிலை என்ன? அக்டோபர் முதல் வாரம் வரை காவிரி ஆற்றுப் பாசன வாய்க்காலாக இருந்தது.
- அதன் பிறகு கனமழை பெய்தால் அந்தத் தண்ணீருக்குக் காவிரி வடிவாய்க்காலாகவே இருக்கட்டும் என்று விட்டுவிட்டோம். ஆக, காவிரி ஒரு பசலியின் முதற் பாதி பாசன வாய்க்கால், இரண்டாவது பாதி வடிவாய்க்கால்! காவிரி எப்போதும் ஆறாகவே ஓடுவது பற்றி அரசுக்கு அக்கறை குறைவு.
- காவிரி, தன் கிளை ஆறுகள், சிற்றாறுகள், வாரிகள், வாய்க்கால்கள், கன்னிகள், ஓடைகள் என்கிற பின்னலில் புரண்டு, ஓடி, சிலிர்த்து, சுவறி (ஊறிப் பரவுதல்) பெரிய இயற்கைச் சூழலை உருவாக்கிப் பராமரிக்கிறது. விவசாயமும் அந்தச் சூழலின் ஓர் அங்கம். ஆண்டுக்கு எட்டு மாதங்கள் காவிரியை நாம் செயற்கையாக வறளவைத்தால் அதன் சூழலியல் என்னவாகும் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
பிரச்சினைக்கு அரசும் பங்களித்தது
- டெல்டாவில் ஓர் ஆண்டின் பாசன நீர்த் தேவை 330 டி.எம்.சி.இந்த ஆண்டு அக்டோபர் 10 அன்று மேட்டூர் அணையை மூடும்வரை விடுவிக்கப்பட்ட நீரோ 92 டி.எம்.சி. எஞ்சிய தேவையான 238 டி.எம்.சி. குறை நீரை நிலத்தடி நீரையும் மழையையும் வைத்தே சமாளிக்க விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்று கொள்ள வேண்டும்.
- இருந்தாலும் வழக்கத் துக்கு முக்கால் பங்காவது சம்பா விளைந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை. இந்த ஆண்டின் அதிசயம் இது. அணை மூடிக் கிடந்தாலும் இந்த அதிசயம் நிகழும் என்று அரசு சும்மா இருந்தது பேரவலம்.
- பல இன்னல்களோடு விவசாயிகள் இந்தப் பசலியில் சாகுபடியை நிறைவேற்றினார்கள். சிலஇடங்களில் சம்பா பகுதியைத் தரிசாகப் போட வேண்டியிருந்தது. குறுவை நட்டவர்கள் பலர் தாளடியைக் கைவிட்டார்கள். சிலர் குறைந்த காலம்எடுக்கும் நெல்லுக்கு மாறினார்கள்.
- ஒருமுறை தெளித்து அது தண்ணீரில்லாமல் பழுதாகி, மறுமுறை தெளித்து அதுவும் அப்படியே பழுதானது. கிரையத்துக்கு நாற்று வாங்கி நட்டார்கள். கார்த்திகை நடுப்பகுதி வரை சம்பா, தாளடி நடவு மழையைக் காணக் காண நடந்தது. டீசல் செலவு செய்து ஆற்றிலிருந்து பல முறை தண்ணீர் இறைத்தார்கள். முளைத்த பயிர் வறட்சியால் வீணாகி டிசம்பர் நடுப்பகுதியில் நாற்று வாங்கி நட்டார்கள்.
தீர்வை எங்கே தேடலாம்
- இப்போது மேட்டூரின் நீர்மட்டம் உதவக்கூடியதாக இருக்கும்போது டெல்டா விவசாயிகள் அணையைத் திறக்கப் போராட வேண்டியிருப்பது கவலையளிக்கிறது. ஆயக்கட்டின் நீர்த்தேவை ஏன் உரிய காலத்தில் அரசு மட்டத்தில் எதிரொலிப்பதில்லை?
- உள் மாநிலக் காவிரி நீர்ப் பகிர்மானத்துக்குக் கோட்பாடுகள் வேண்டும். அவற்றின் அடிப்படையில் நீர்விடுவிப்பையும், அளவையும் தீர்மானிக்க ஒரு நிரந்தர அமைப்பு தேவை. இன்றைய சூழலில், இவற்றுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் பரிந்துரையைச் சார்ந்திருப்பது பொருத்தமானதல்ல.
- அப்போதைக்கு அப்போது குழுக்கள் அமைப்பதும், முடிவு செய்வதும் தீர்வல்ல. நீர் மேலாண்மை நீர் ஆதிக்கம் ஆகலாமா? இப்போதைய இன்னல்கள் போன்று முன்பு வந்ததில்லை என்பதற்கு, காவிரியில் அப்போது தண்ணீர் வந்தது என்பது மட்டும் காரணமல்ல.
- பயிர் வகையும் சாகுபடிப் பட்டங்களும் ஆயக்கட்டுகளில் ஏறத்தாழ ஒரே சீராக இருந்தன என்பதும் ஒரு காரணம். பிப்ரவரியில் மேட்டூர் அணையைத் திறக்கத் தேவை உருவாவதும் அதற்கு டெல்டா விவசாயிகள் போராட வேண்டியிருப்பதும் இப்படி ஓர் அமைப்பின் அவசியத்தைச் சொல்கிறதல்லவா?
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 02 – 2024)