TNPSC Thervupettagam

காவிரி நீரும் கடைமடை விவசாயமும்

June 12 , 2021 1326 days 544 0
  • காவிரிப் படுகை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். அதன் வளா்ச்சியும், தளா்ச்சியும் தமிழ் மக்களை சாதிக்கவும், பாதிக்கவும் செய்கின்றன. அதன் ஆதாரமாக விளங்குவதே காவிரி நதியும், மேட்டூா் அணையும் ஆகும். அவற்றை நம்பியே காவிரி டெல்டா விவசாயம் காலங்காலமாக நடந்து வருகிறது.
  • ஜூன் 12 என்பது பல காலமாக மேட்டூா் அணை திறக்கப்படும் நாளாகும். இந்த ஆண்டும் ஜூன் 12 (இன்று) அணை திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சா் கடந்த வாரம் கூறியது காவிரிப் பாசன விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளித்த செய்தி.
  • அறிவிப்பை வெளியிட்ட ஜூன் 3 நிலவரப்படி மேட்டூா் அணையின் நீா்மட்ட அளவு 97.13 அடியாகவும், அணையின் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் இருந்தது.
  • இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களுக்குப் பாசனத்துக்காகத் தண்ணீா் திறக்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சா் அறிவித்தார்.
  • இதனால் திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, கடலூா் மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்.
  • மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா், கடைமடைப் பகுதி வரை முழுமையாகச் சென்று சேரும் வகையில் தூா்வாரும் பணிகள் நடப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • இதன்படி டெல்டா மாவட்டங்களில் ரூ.65.11 கோடியில் 547 இடங்களில் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது. இதனால் அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் தேவையான அளவு தண்ணீா் சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகள் இன்னும் முடிவடையாததால் குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணை திறக்கப்படுவது தள்ளிப் போகும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு முதலமைச்சரின் அறிவிப்பு அதிர்ச்சியளித்தது.
  • கடந்த 2012 முதல் 2019 வரை, போதிய தண்ணீா் இல்லாததால் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 அன்று மேட்டூா் அணை திறக்கப்படவில்லை.
  • கடந்த ஆண்டு போதுமான அளவுக்கு நீா் இருந்ததால் அணை ஜூன் 12 அன்று திறக்கப் பட்டது. ஏறத்தாழ 1.25 லட்சம் ஹெக்டோ் அளவுக்கு குறுவை சாகுபடி நடைபெற்றது.

தூா்வாரும் பணி

  • ரூ.65 கோடி மதிப்பீட்டில் தூா்வாரும் பணிகளைச் செய்ய மே 18 அன்று அரசாணை வெளியிடப் பட்டது. எனினும் சில நாள்களுக்கு முன்புதான் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன.
  • ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு கடைசி நேரத்தில் அவசர கதியில் தூா்வாரும் பணிகள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. இவ்வாறு தாமதமாகத் தொடங்கி பணிகள் அரைகுறையாக இருக்கும் போது தண்ணீா் வருவதால் ஆங்காங்கு தண்ணீா் தேங்கி நின்று, கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் செல்வதில்லை.
  • இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ‘தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் தூா்வாரும் பணிகளை முன்னதாகத் தொடங்க முடிய வில்லை.
  • இருப்பினும் இப்போது தூா்வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குறுவை சாகுபடிக்கு வசதியாக அணை திறப்பும் அறிவிக்கப்பட்டு விட்டது’ என்று கூறுகின்றனா்.
  • தண்ணீரை வீணடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று காலமெல்லாம் பேசுகிறோம். திட்டங்கள் போடுகிறோம். செலவுகளும் செய்கிறோம். ஆனால் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகவே போய்விட்டன. நமது தேவைக்கும் அதிகமான தண்ணீா் கிடைத்தும் அதனைத் தேக்கி வைக்க நமக்குத் தெரியவில்லை.

இழப்பீட்டுத் தொகை

  • காவிரி டெல்டா விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டாமா? கடந்த ஆண்டு நிவா், புரெவி புயல்களின் தாக்கத்தால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கின.
  • அதனால், விவசாயிகள் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளானார்கள். அப்போது டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 5.04 லட்சம் விவசாயிகளுக்கு முதல் கட்டமாக ரூ.598 கோடியும், இரண்டாவது கட்டமாக 7.9 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,116 கோடியும் இடுபொருள் இழப்பீட்டு மானியமாக வழங்கப்பட்டன.
  • இதைத் தொடா்ந்து காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தரும் நடவடிக்கையில் வேளாண் துறை, புள்ளியல் துறை, வருவாய் துறை, காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை முனைப்புடன் இறங்கின.
  • எனினும் சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாக அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன. இப்போது பயிர்ச் சேத மதிப்பீட்டுப் பணிகளை காப்பீட்டு நிறுவனங்கள் மந்த கதியில் மேற்கொண்டு வருகின்றன.
  • தற்போது பொது முடக்கம் காரணமாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனா். மேட்டூா் அணையும் இன்று திறக்கப்பட இருக்கிறது.
  • எனவே குறுவை சாகுபடியைத் தொடங்க வசதியாக பயிர்க் காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழை காரணமாக சேதமடைந்த, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து 100 விழுக்காடு முழுமையான இடுபொருள் இழப்பீடாக, ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 70 விழுக்காட்டு விவசாயிகளுக்கு இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 30 விழுக்காட்டு விவசாயிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.
  • அறுவடை செய்து முடித்த நான்கு மாதத்திற்குள் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
  • ஆனால் அந்தத் தொகையை விடுவிக்காமல் மௌனம் காப்பது விவசாயிகளுக்கு வேதனை தருகிறது. இந்த வேதனையை காப்பீட்டு நிறுவனங்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகின்றன?
  • இதே காப்பீட்டு நிறுவனங்கள், பேரிடா் காலத்தில் விவசாயிகளால் பிரீமியம் செலுத்த இயலாதபோது அதற்கு கால நீட்டிப்பு செய்து தரத் தயங்கியதால் பல விவசாயிகள் காப்பீடு செய்யாமல் விட்டுவிட்டனா்.
  • எனவே அறுவடை முடிந்து குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் இந்தத் தொகையை வழங்க வில்லையானால் அதை வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

எப்போது வாழவைக்கப் போகிறோம்?

  • குறுவை சாகுபடிக்குத் தேவையான விதை நெல், உரங்கள் தயார் நிலையில் உள்ளன. குறுகிய கால விதை நெல் கோ 51, ஆடுதுறை 36, ஆடுதுறை 37, அம்பை 16, ஆடுதுறை 43, ஆடுதுறை 45, திருப்பதி சாரம் 5 ஆகியவை வேளாண் உற்பத்தி நிலையங்களிலும், தனியாரிடத்திலும் போதிய அளவுக்கு இருப்பு உள்ளன.
  • குறுவை சாகுபடிக்கு 5,600 டன் விதை நெல் தேவைப்படுகிறது. இதில் இதுவரை 3,155 டன் விதை நெல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
  • தற்போது கையிருப்பில் 2,911 டன் உள்ளது. பழைய விலையிலேயே யூரியா, டி.ஏ.பி. உள்பட அனைத்து உரங்களும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தரமான விதைகள், உரங்கள் வழங்கப்பட்டால்தான் அதிக விளைச்சல் கிடைக்கும். எனவே விவசாயிகளுக்குத் தரமான விதைகள், கலப்படமற்ற உரங்கள் விநியோகம் செய்யப்ப டுகிறதா என்பதை வேளாண் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அவா்கள் செய்யும் தொழிலில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.
  • காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கு அடியில் உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகிய கனிமங்களை எடுப்பதற்கு எண்ணெய் நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டபோது, இந்தத் திட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடுமையான போராட்டங்களை நடத்தினா்.
  • முதலில் அரசாங்கம் மக்களுக்கு எதிராகவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் நின்றது.
  • இறுதியில் விவசாயிகளின் தொடா் போராட்டத்தால் விளைநிலங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தமிழக அரசு தடை விதித்தது.
  • அத்துடன் காவிரி டெல்டா மாவட்டங்களை ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல’மாக அன்றைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பெரும் வரவேற்பு அளித்தனா்.
  • ஆனால், டெல்டா மாவட்டங்களில் இப்போது நிலைமை தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே செயல்பட்டு வரும் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், சோப்பு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
  • எண்ணெய் நிறுவனங்கள் பூமிக்கடியிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கும்போது வெளியேறும் கேஸைக் கொண்டும், அத்துடன் சிலிக்கான் மணலை மூலப் பொருளாகக் கொண்டும் சோடியம் சிலிகேட் என்ற சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகள் தனியாரால் தொடங்கப்பட்டுள்ளன.
  • சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்து காற்றில் பரவும் துகள்கள் அருகில் உள்ள வயல்களில் படா்ந்து நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களை வளர விடாமல் தடுத்து விவசாயத்தையும், நிலத்தையும் பாதித்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனா்.
  • விளைநிலம் வளம் குறைந்து கொண்டே வந்தால் மகசூல் பாதிக்காமல் என்ன செய்யும்? அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
  • ‘கிராமங்கள் அழிந்தால் இந்தியாவும் அழிந்துவிடும். இந்தியா அதன் பிறகு இந்தியாவாகவே இருக்காது. உலகத்திடம் அதற்குள்ள லட்சியமும் வீணாகி விடும். இனியும் சுரண்டுவது இல்லை என்று ஏற்பட்டால்தான் கிராமங்கள் புத்துயிர் பெறுவது சாத்தியம்’ என்று கூறினார் காந்தியடிகள்.
  • ‘உழவா்களே உலகத்தின் அச்சாணி’ என்று குறள் கூறுகிறது. அந்த அச்சாணியாகிய விவசாயிகளை நாம் எப்போது பாதுகாக்கப் போகிறோம்? நமக்கும், நாட்டுக்கும் உணவளிக்கும் உழவா்களையும், அவா்கள் வாழும் கிராமங்களையும் எப்போது வாழ வைக்கப் போகிறோம்?

நன்றி: தினமணி  (12 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்