TNPSC Thervupettagam

காவிரி மறுசீரமைப்பு ஆணையம்: சிந்திக்க வேண்டிய தருணமிது

May 8 , 2022 822 days 545 0
  • கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டுப் பகுதியில் அண்மையில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. மூலக்கூறுகளின் மறுஉற்பத்தி, மரபியல், உயிரியல் உள்ளிட்ட தலைப்புகளில் இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனமும் கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட வெளிநாட்டு அறிவியல் ஆய்வு நிறுவனங்களும் காவிரி நீரில் பரிசோதனை நடத்தியுள்ளன.
  • தேங்கிய நீர், மாசுபடுத்தப்பட்ட அளவில் வேறுபடும் நீர் ஆகியவற்றில் குறிப்பாக மீன்களை மையப்படுத்தி மூன்று வகையிலான ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. மீன்களின் கருவில் உருவாகியுள்ள நச்சுத்தன்மை, நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு, நுண்ஞெகிழி வேதித் தன்மை குறித்துத் திடுக்கிட வைக்கும் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • தோற்றுவாயிலேயே காவிரி, கழிவுநீராக மாறிக்கொண்டிருப்பது குறித்து முன்பே பல விவாதங்கள் நடந்திருக்கின்றன. பெங்களூரு நகரிலிருந்து கழிவுநீர் காவிரியில் திருப்பப்படுகிறது. தினசரி சுமார் 60 கோடி லிட்டர் கழிவுநீர் காவிரியில் கலக்கிறது. முந்தைய கர்நாடக சிறுபாசன அமைச்சர் சிவ்ராஜ் தாவ்டாங்கி கர்நாடக மேலவையில் இதனைக் கூறினார்.
  • கர்நாடகத்தில் குடகு, ஹாசன், சிக்மகளூர் மாவட்டங்களிலேயே கழிவுகள் காவிரியில் கலக்கின்றன. இங்கு ஏராளமான ஏக்கரில் காப்பித் தோட்டங்கள் உள்ளன. அவற்றிலிருந்து வேதி உரங்களும் பூச்சிமருந்துக் கழிவுகளும் காவிரியில் நேரடியாகக் கலக்கின்றன.
  • இவை மூலம் ஒவ்வொரு பருவத்துக்கும் 4,730 டன் பயோ ஆக்சிஜன் டிமாண்ட் (பி.ஓ.டி.) காவிரியில் சேர்கிறது. ஆற்றுநீரில் இருக்க வேண்டிய பி.ஓ.டி.யின் அளவு 3 மில்லிகிராம்தான். ஆனால், இப்போது 29 மில்லிகிராம் (பி.ஓ.டி. அளவு) உள்ளது. நிர்ணயிக்கப்பட்டதைவிட இது கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம்.
  • மேலும், குடகு, மைசூர், மாண்டியா மாவட்டங்களில் போதுமான அளவு கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. குடகுக்கு ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இவர்கள் குப்பைக் கூளங்களைக் காவிரியில் கொட்டுகிறார்கள். தொழில் மண்டலப் பகுதியாக இருக்கும் மைசூரிலும் கழிவுகள் காவிரியின் தூய்மையைக் கெடுக்கின்றன.
  • 2015 நிலவரப்படி 88.9 கோடி லிட்டர் கழிவுநீர் பினாகினி, தென்பெண்ணை ஆறுகள் மூலமாகவும், 59.3 கோடி லிட்டர் கழிவுநீர் அர்க்காவதி, காவிரி ஆறுகளில் கலந்தும் தமிழ்நாடு வருகின்றன. இத்தகவலை கர்நாடக மேலவையில் அப்போதைய சிறுபாசன அமைச்சர் சிவ்ராஜ் கூறினார். பெங்களூருவில் உள்ள ரியல் எஸ்டேட் முதலாளிகள் புதிய வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் நீரை மேலும் மாசுபடுத்துகிறார்கள்.
  • இவ்வாறு ஆண்டுக்கு சுமார் 5,40,200 மில்லியன் லிட்டர் கழிவு காவிரியில் கலக்கிறது. இதனை கர்நாடக அரசு பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. 2015 நிலவரப்படி கர்நாடகத்தின் நகரப் பகுதியில் நாள் ஒன்றுக்கு உருவாகும் 1,30,416 மில்லியன் லிட்டர் அளவு கழிவுநீரைச் சுத்திகரிக்கும் திறனை கர்நாடகம் பெற்றிருக்கிறது.
  • அங்கே, தினமும் 3,777 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உருவாகிறது. 2,472.84லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் விடப்படுகிறது. கர்நாடகப் பகுதியில் காவிரி 320கி.மீ. ஓடுகிறது. இந்தப் பகுதி முழுவதிலும் உள்ள குடியிருப்புகளின், தொழிற்சாலைகளின் கழிவுகள் காவிரியில்தான் கலக்கின்றன. கர்நாடகப் பகுதியில் காவிரியில் விளையும் பயிர்கள் தமிழ்நாடு முழுவதும் சந்தைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் துத்தநாகம், ஈயம், செம்பு, காட்மியம் போன்ற வேதிப்பொருட்கள் அதிகமாக இருக்கின்றன.
  • காவிரியில் கழிவுநீர் கலப்பது தமிழ்நாட்டிலும் நடக்கிறது. காவிரியின் கர்நாடகப் பகுதியில் 61 தொழிற்சாலைகள் உண்டு என்றால் தமிழ்நாட்டில் 1,139 தொழிற்சாலைகள் காவிரிக் கரையில் உள்ளன. இந்தத் தொழில்கள் பெரும்பாலும் ஜவுளி, சர்க்கரை, காகிதம், தோல் பதனிடுதல் போன்ற, வேதிப்பொருட்களுடன் தொடர்புடையவை ஆகும். இவற்றின் மூலம் ஒரு நாளைக்கு 87,600 கியூபிக் மீட்டர் கழிவுநீர் காவிரியில் கலக்கிறது. மேலும், திடக்கழிவின் அளவு (டி.டி.எஸ்.) 1,450 மி.கி/1 என்ற அளவில் உள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் அனுமதித்ததைவிட 3 மடங்கு அதிகம்.
  • ஓடும் நீரில் வேதிப்பொருளும் கழிவும் கலப்பது ரகசியம் அல்ல. சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். 05.06.2015-ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இதே காரணத்துக்காக கர்நாடக அரசின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், மத்திய அரசுத் தரப்பில் அதன் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்த பதிலில் கழிவுநீர் குறித்த பல அம்சங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இந்த வழக்கு வேகம் கொள்ளவில்லை.
  • காவிரியின் மாசு குறித்து 29 இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் 21 இடங்களும் கர்நாடகத்தில் 8 இடங்களும் ஆய்வில் அடங்கும். காவிரியில் அர்க்காவதி கலக்கும் இடம், அது கலப்பதற்கு 200 மீட்டர் தூரம் முன்பும் பின்பும் உள்ள இடங்களில் நீர் மாதிரி ஆய்வு செய்யப்பட்டது. நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மாசு இருப்பது பரிசோதனையில் தெரிந்தது.
  • இது பெங்களூருவிலிருந்து அர்க்காவதி ஆற்றில் கலக்கும் மழை நீர், சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவுநீர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. முன்பே குறிப்பட்டதுபோல் கர்நாடகத்தின் மேலவையிலேயே கர்நாடக அரசு இதனை ஒப்புக்கொண்டது. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் தினமும் குடிநீர், ஆழ்குழாய்க் கிணறு மூலம் 1,950 மில்லியன் லிட்டர் நீர் பயன்படுத்தப்படுகிறது. இதில் 148 கோடி லிட்டர் கழிவுநீராக ஆறுகள், கால்வாய்கள் வழியாகத் தமிழ்நாட்டுக்கு வருகிறது.
  • மாசுபாடான இத்தகைய நீரால், நீரின் வண்ணமும் தன்மையும் மாறுகின்றன. டைபாய்டு, மஞ்சள் காமாலை, சிறுநீரகப் பாதிப்பு என்று உடல்நலப் பாதிப்புடன் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. கர்நாடகத்தின் கழிவுநீர் வடிகாலாகவும் தமிழ்நாடு மாறியிருக்கிறது. பெங்களூருவிலிருந்து 1,482 மில்லியன் லிட்டர் கழிவு காவிரியில் கலக்கிறது.
  • 1,400 மில்லியன் லிட்டர் கழிவுநீர் காவிரியில் கலந்து தமிழ்நாட்டைப் பாதிக்கிறது. குடிநீருக்காகவும் வேளாண்மைக்காகவும் காவிரி நீரை நம்பிக் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். ஒருபுறம் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரை வழங்க மறுக்கிறது. கொடுக்கும் நீரும் உயிர்களையும் பயிர்களையும் அரிக்கிறது.
  • மறுபுறம், தமிழ்நாடு கர்நாடகத்திடம் தூய்மையான நீரைப் பெறுவதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை. சொல்லப்போனால், தமிழ்நாட்டில் ஓடும் காவிரி நீரையும் அசுத்தப்படுத்தும் கொடுமை இங்கேயும் நடக்கிறது. தூய்மையான நீரைப் பெற தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்திலுள்ள வழக்கைத் துரிதப்படுத்த வேண்டும். நிவாரணம் பெறுவதற்குத் தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாய வழக்கையும் தமிழ்நாடு அரசு அணுக வேண்டும். மத்திய அரசும் தன் பங்குக்குத் தண்ணீர்ப் பங்கீட்டிலும் அதன் தூய்மையிலும் கடமையை ஆற்ற வேண்டும்.
  • காவிரி தீரத்தில் ஓடிவந்த நீரும் படிந்த வண்டலுமே உரமாக மாறி விளைச்சலை அமோகமாக்கின என்ற தகவலை 1893-ல் எஃப்.ஆர்.ஹெமிங்வே எழுதி வெளியிட்ட தஞ்சை மாவட்ட விவரச் சுவடி தருகிறது. யூரியா, சல்பேட் என எந்த வேதியுரமும் அப்போது தேவைப்படவில்லை. ‘பொன்னி’ என்று போற்றப்படும் காவிரியின் மேனி முழுவதும் இப்போது நீலம் பாரித்துக் கிடக்கிறது. காவிரியைத் தூய்மைப்படுத்த காவிரி மறுசீரமைப்பு ஆணையத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

நன்றி: தி இந்து (08 – 05 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்