TNPSC Thervupettagam

காவிரிக்கு உருவாகும் மூன்றாவது படுகை

March 10 , 2021 1415 days 708 0
  • காவிரிக்கு ஏற்கெனவே பழைய படுகை (பழைய டெல்டா), புதுப் படுகை (புது டெல்டா) என்று இரண்டு உண்டு. காவிரியும் அதன் கிளையான வெண்ணாறும் அவையாகவே உருவாக்கியது பழைய படுகை. 1930 வாக்கில் கல்லணைக் கால்வாய் வெட்டி, புதுப் படுகையை நாமாக உருவாக்கிக்கொண்டோம்.
  • சென்ற மாதம் காவிரியின் உபரி நீரால் உருவாகும் மூன்றாவது படுகைக்கான வேலை மரபாகத் தொடங்கியிருக்கிறது. இந்த மூன்றாவது படுகை காவிரியின் மேல்மடையான கட்டளைக் கதவணையிலிருந்து வினாடிக்கு ஆறாயிரம் கன அடி தண்ணீர் வாங்கும் 250 கிமீ நீளமுள்ள ஒரு ஆறு வழியாக உருவாகும். அது வடக்கு தெற்காகப் பாய்ந்து, சோழ நாட்டின் தெற்கு எல்லையான வெள்ளாற்றில் விழுந்து, பிறகு வைகையில் விழுந்து, அங்கிருந்து குண்டாறு பகுதிக்குச் செல்லும். இதன் பாசனப் பரப்பு எட்டே கால் லட்சம் ஏக்கருக்கு மேல். இது பழைய படுகையின் பாசனப் பரப்பில் நெருக்கி முக்கால் பங்கு. இந்தத் திட்டம் பின்னால் வரப்போகும் கோதாவரி - காவிரி இணைப்பின் கடைசி அந்தாயம்.

ஆண்டு நிறைவு

  • காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கிச் சட்டம் செய்து சரியாக ஒரு வருடம் ஆகிறது. அந்த ஆண்டு நிறைவைக் கொண்டாடத்தான் படுகை தொடங்கும் கல்லணைக்கு மேல், காவிரியின் வலது கரையிலிருந்து 6,000 கன அடி நீரை வாங்கிக்கொள்ளும் ஆறு உருவாகிறது. இது பழைய படுகைக்குப் பாதுகாப்பாகவோ, கொண்டாட வேண்டியதாகவோ அமையாதே என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால், இந்தப் பின்நவீனத்துவ காலத்தில் எது எது எப்படி இருக்கும், பாதுகாப்பும் கொண்டாட்டமும் என்ன வடிவம் எடுத்துக்கொள்ளும் என்று நம் கற்பனைக்கு எட்டுமா?
  • காவிரிக்கு உருவாகும் மூன்றாவது படுகைக்கு ஒரு சிந்தனை அடித்தளம் உண்டு. காவிரியில் உபரி நீர் இருக்கிறது. உபரி நீர் வீணாகக் கடலுக்குச் செல்கிறது. வீணாகாமல் இருக்க அதை மற்ற ஆறுகளின் வடிநிலத்துக்கு மாற்றி விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும் - இதுதான் அந்தச் சிந்தனை. இந்தக் கூற்று ஒவ்வொன்றிலும் பிரச்சினை உண்டு.
  • காவிரி ஒரு பற்றாக்குறை ஆறு என்ற சராசரி நிலையில் நின்று நான் இதை விவாதிக்கவில்லை. பற்றாக்குறை, உபரி என்பதெல்லாம் நாம் பயன்படுத்தும் நீரின் அளவைப் பொறுத்தது. அளவை வைத்துப் பேசுவது ஆற்றை நம் வீட்டு அண்டாவாக வைத்துக்கொண்டு பேசும் பேச்சு.
  • அப்போது, “கட்டளைக் கதவணையில் காவிரியிலிருந்து நீரைத் திருப்பாதீர்கள். முக்கொம்புக்குக் கீழே கொள்ளிடத்தின் இடது கரையிலிருந்து தண்ணீரைத் திருப்பிக்கொள்ளலாம்; அதுதான் உண்மையான உபரி நீர் என்று நான் சொல்வதுபோலாகும்.

வெள்ளம் உபரி நீராகுமா?

  • பொதுவாகவே, ஓடும் ஆற்றுக்கு உபரி நீர் ஏது? கரை கொள்ளாமல் தண்ணீர் வந்தால் அது வெள்ளம், உபரியல்ல. தண்ணீர் கணக்கில் வெள்ளத்தை வரவுத் தலைப்பிலோ, செலவுத் தலைப்பிலோ சேர்க்க முடியாது. காவிரியில் நான்கு லட்சம் கன அடி வெள்ளம் ஆண்டில் நான்கு நாட்களுக்கு ஓடக்கூடும். 6 ஆயிரம் கன அடி நீரை வாங்கிக்கொள்ளும் ஆறு, நான்கு நாட்களில் எவ்வளவு நீரை வாங்கிக்கொள்ளும்? ஐந்தாவது நாள் அது மேட்டூர் அணையின் இருப்பிலிருந்து தனக்குத் தண்ணீர் பெறவேண்டிவரும்.
  • 12 லட்சம் ஏக்கருக்குப் பாசனம் தருவது காவிரியும் வெண்ணாறும். சென்ற அக்டோபர் மாதம் அவற்றில் சராசரியாக ஒரு நாளுக்குத் தலா நாலாயிரம் கன அடியை ஒட்டியும், நவம்பரில் இரண்டாயிரத்தை ஒட்டியும் தண்ணீர் திறந்திருக்கிறார்கள். இந்த இரண்டு மாதங்களிலும் மேட்டூர் நீர் மட்டம் 100 அடியைத் தொட்டுக்கொண்டிருந்தது.
  • இந்த நிலையில், மேட்டூரில் உபரி இருக்கிறது என்றால், அதன் தர்க்க நியாயத்தை நீங்கள்தான் புரிந்துகொண்டு சொல்ல வேண்டும். உபரி உண்டு என்பது புறவய ஆய்வு நமக்குச் சொல்லும் வகையைச் சார்ந்த விஷயம். காவிரியில் ஓடும் உபரியை மறித்துத் திருப்ப வேண்டும், அதை விவசாய நுகர்வுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற மற்ற இரண்டும் நம் கருத்து என்ற அகவயப்பட்ட விஷயம், ‘முன்னேற்றம் என்பது பற்றிய மனித குலக் கருத்தைச் சார்ந்தது.

வெள்ளமும் வேண்டியதே!

  • காவிரிக் கரையில் 10 அடிக்கு ஒரு குழி வெட்டினால், அந்த 10 அடிக்குள் கடந்த காலத்தில் வெள்ளமாக வந்து ஒன்றன்மேல் ஒன்றாகப் படிந்திருக்கும் மூன்று வண்டல் பார்களையாவது காணலாம். வெள்ளம் வந்து பரந்து நின்றதால் உருவானதுதானே காவிரிப் படுகை!
  • வெள்ள நீரைக் காவிரியில், அதன் கிளைகளில், வாய்க்கால்களில் ததும்பத் ததும்ப ஓட விடுவதுதான் அதைப் பயன்படுத்துவதாகும். அப்படி ஓடியதால், “நான் வெள்ளத்தால் உருவான பூமியாக்கும்! என்று தோண்டிய இடமெல்லாம் சர்க்கரையாக, தூவாளியாக இப்போதும் புன்னகைக்கிறது காவிரிக் கரை. கோடியக்காட்டில், காவிரியின் அந்தக் கடைக்கோடியில்கூட வெள்ளத்தின் எக்கல்களைப் பார்த்திருக்கிறேன்.
  • அத்தியாவது பூக்கும், ஆற்றில் மீனைப் பார்க்க முடியாது என்று இருந்தது நிலைமை. இந்த ஆண்டு ஜனவரியில் வாய்க்கால்களிலும், ஆற்றுத் தலைப்புகளிலும் குஞ்சு மீன்களாக இருக்கும் கச்சப் பொடியைப் பார்த்தேன். காவிரியில் ஓட்டம் தொடர்ந்து இருந்ததால் அவை எப்படியோ உலகத்துக்குள் மீண்டும் வந்துவிட்டன.
  • வெள்ளத்தை ஆற்றோடு ஓடவிடுவதற்கும் உயிர்ப் பன்மைக்கும் நான் வேறு தொடர்பைக் காட்ட வேண்டாம். காவிரிக்கு மூன்றாவது படுகை ஒன்று வருவதால் நாளைக்கே இடர்ப்பாடு வந்துவிடாது. ஆனாலும், ஆற்று வெள்ளத்தை உபரி நீராக, நுகர்பொருளாகப் பார்க்கும் சிந்தனைக்கு நாம் எப்போதும், எல்லா இடத்திலும் அஞ்சத்தானே வேண்டும்!

நன்றி: தி இந்து (10 – 03 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்