TNPSC Thervupettagam

காவிரிப் படுகை: நிரந்தர நிம்மதிக்கு என்ன வழி?

April 11 , 2023 599 days 331 0
  • காவிரிப் படுகையில் உள்ள கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகள், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக உழவர்கள் நடத்திய ஆவேசப் போராட்டங்களால் சில ஆண்டுகளுக்கு முன் அதிர்ந்துகொண்டிருந்தன. 2020இல் காவிரிப் படுகைப் பகுதியைப் பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்ததும் உழவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
  • இந்நிலையில், மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் காவிரிப் படுகையில் உள்ள மூன்று பகுதிகள் உள்பட 101 வட்டங்களில் நிலக்கரி எடுக்கும் ஏல அறிவிப்பை மார்ச் 29 அன்று வெளியிட்டது. காவிரிக் கழனி உழவர்களின் உணர்வுகள் எரிமலையாகத் தகிக்கத் தொடங்கின.
  • தமிழ்நாடு அரசும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துவந்த நிலையில், ஏல அறிவிப்பை ரத்து செய்வதாக ஏப்ரல் 8 அன்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தது, உழவர்களுக்குப் பெரும் ஆறுதல் அளித்திருக்கிறது.

கோபத்தின் பின்னணி:

  • கோவிட்-19 காலகட்டத்தில் ஏற்பட்ட சுணக்கத்துக்குப் பின்னர் வேளாண்மையைப் புரட்டிப் போட்ட சில மாற்றங்கள் நிகழ்ந்தேறின. தென்மேற்குப் பருவமழை பழுதின்றிப் பெய்ததால் குறுவை, சம்பா, தாளடி, கோடைப்பாசனம் என 24 மணி நேரமும் உழவர்கள் கழனியிலும் களத்திலும் நின்றனர். சாகுபடிப் பரப்பு, உற்பத்தி ஆகியவை மிகுந்தன.
  • தமிழ்நாட்டின் உணவுத் தேவையில் 34% மட்டுமே காவிரிப் படுகையில் கிடைத்தது. எஞ்சிய தேவையை நிறைவேற்ற ஆந்திரம், கர்நாடகம், ஹரியாணா மாநிலங்களிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. தமிழ்நாடு தனது உணவுத் தேவையைச் சுயபூர்த்தி செய்து கொள்ளும் திசையில் நடைபோடத் தொடங்கியது.
  • நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார வல்லுநர் பால் ரோமர், “இந்தப் பூமியில் எந்த வளத்தையும் நாம் புதிதாக உருவாக்கப்போவதில்லை. அனைத்தும் ஏற்கெனவே இருக்கின்றன. நாம் செய்ய வேண்டியது அவற்றின் உருவத்தை, பருமனை, பயனை நம் வசதிக்கேற்ப மறுசீரமைப்பு செய்வதுதான்” என்கிறார்.
  • காடுகளில் உள்ள செடி, கொடி, மரங்கள் எந்தத் தொழில்நுட்பமும் இல்லாமல் வளர்கின்றன. வளர்ச்சிக்குத் தேவையான மண், நீர், காற்று, சூரிய ஒளி ஆகியவற்றைத் தாவரங்கள் நேரடியாகவே எடுத்துக்கொள்கின்றன. மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உணவை இயற்கைதான் கொடுத்தது.
  • உணவு வகைகளில் அறிவியல் பல மாற்றங்களைச் செய்தது. எனினும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நிலக்கரி மனிதர்களின் உணவாக ஆகாது. நிலக்கரி எடுப்பது தொடர்பான அறிவிப்பைக் காவிரிப் படுகை விவசாயிகள் கடுமையாக எதிர்த்ததன் பின்னணி இதுதான்.

விலைமதிப்பற்ற வளம்:

  • குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி, மலைச்சாரல்கள் வழியே பாய்ந்து மலைகளில் உள்ள பல தாதுப்பொருள்களையும் வளம் கொழித்த வண்டல் மண்ணையும் சுமந்து, மனிதர்களின் ஆகப்பெரிய தேவையான உணவுத் தேவையைப் பூர்த்திசெய்தது. “விவசாய நிலம் என்பது ஒரு விலை மதிப்பற்ற வளம். அது பத்திரப்படுத்தப்பட வேண்டும்” என்கிறார்கள் வல்லுநர்கள்.
  • அமெரிக்காவில் உணவு உற்பத்திக்கு இருமுறை மானியம் தரப்படுகிறது. ஒரு ஹெக்டேர் விவசாய நிலத்துக்கு அமெரிக்காவில் 32 டாலர் மானியமாக வழங்கப்படுகிறது; சீனா 30 டாலர், ஜப்பான் 35 டாலர், தென் ஆப்பிரிக்கா 24 டாலர், ஐரோப்பிய ஒன்றியம் 82 டாலர் வழங்குகின்றன. இந்தியாவில் வழங்கப்படும் மானியம் 14 டாலர் மட்டுமே. இது விவசாயத்தில் அரசு காட்டும் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.
  • வேளாண்மை, காவிரிப் படுகையின் பிறப்புரிமையாகும். 48,000 வேளிர்குல மக்களுக்காகக் காட்டை அழித்து, வாழத் தகுந்த நிலமாக்கிய சோழர்கள் ஆட்சியைப் ‘பெரிய புராணம்’ பேசியது. இந்நிலத்தில் மனிதர்கள் வாழும் வகையில் காடு கொன்று நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கிச் சாகுபடியைப் பெருக்கியதைப் ‘பட்டினப்பாலை’ இயம்பியது.

பாதிப்புகள் அதிகம்:

  • எனினும், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் காவிரிப் படுகை தன் இயல்பைக் காப்பாற்றிக்கொள்ள நெடும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. 2018 அக்டோபர் 1 அன்று காவிரிப் படுகையில் 4,099 சதுர கி.மீ. பரப்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்ற ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தாவோடு இந்தியப் பெட்ரோலியத் துறை ஒப்பந்தம் செய்தது.
  • எண்ணெய்க் கிணறுகள், மீத்தேன், ஷேல் எரிவாயு என காவிரிப் படுகையின் மேனி தொடர்ந்து எரிந்தது. எண்ணெய்த் துரப்பணத்தில் (Oil Drill) வெளியாகும் கழிவுகள் ஆபத்தானவை என்று அரசு ஆவணம் குறிப்பிட்டது. ஆபத்தான கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) திருத்த விதிகள், 2002ஐ அரசே வகுத்துள்ளது.
  • ‘எண்ணெய்க் கிணறுகளின் உள்வெடிப்பால் அடிநிலம் நொறுங்கும். எண்ணெய் எரிவாயுத் திட்டங்களால் உயிர்ப்பன்மைச் சூழல் அழியும். நீராதாரம் பாதிக்கப்படும்’ என ஐநா சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரிக்கிறது. மத்திய நிலத்தடி நீர் அமைப்பு, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை காவிரிப் படுகையில் நிலத்தடி நீர் கலங்கலாகிப் பெரும் பாதிப்பு அடைந்தமையைச் சுட்டியது. வயல்களின் வயிறுகளும் விளைந்த நெற்பயிரும் எரிவாயுக்களால் தீப்பிடித்தன.
  • இந்தச் சூழ்நிலையில், அக்காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா, ‘அழிவை உருவாக்கும் மீத்தேனை எடுக்க அரசு அனுமதி தராது’ என அரசாணை பிறப்பித்தார். எனினும் ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி’ நிறுவனத்துக்கோ காவிரிப் படுகையை நிலக்கரிச் சுரங்கமாக மாற்றும் திட்டம் நிரந்தரமாக இருந்தது, இப்போதும் இருக்கிறது.
  • “தீப்பற்றக்கூடிய மீத்தேன் வாயுவை நிலக்கரி படிவப் பகுதியிலிருந்து நாங்கள் வெளியேற்றி விடுவதால், நிலக்கரி எடுக்கும்போது அது அபாயமற்றதாக இருக்கும்” என அதன் அதிகாரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • சட்டம் என்ன சொல்கிறது? - தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம், 2020 விதிகள் 4(1), (2)இன்படி, காவிரிப் படுகைப் பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க முடியாது. யாரேனும் அமைத்தால் விதிகள் 16, 17இன்படி அது தண்டனைக்குரியதாகும்.
  • பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், தஞ்சை மாவட்டம் வடசேரி பகுதி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதி, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி பகுதி ஆகியவற்றுக்கு ஏல நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியிருந்தார்.
  • இந்நிலையில், ஏப்ரல் 8 அன்று பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதற்குச் சற்று முன்னர், நிலக்கரி எடுக்க அனுமதிக்கும் ஏல அறிவிப்பை ரத்து செய்வதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தது கவனம் குவித்திருக்கிறது.
  • நிலக்கரிச் சுரங்க அறிவிப்பு மனித குலத்தோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. காவிரிப் படுகையில் வெளிநாட்டுப் பறவைகள் வலசைவரும் பகுதிகள் உள்ளன. பல்லுயிர்ப் பன்மைத்துவமும் தாவரங்களின் உயிர்வாழ்தலும் நிலக்கரிச் சுரங்கங்கள் அமைந்திருந்தால் விபரீதத்தை எதிர்கொண்டிருக்கும். நல்வாய்ப்பாக அந்த அபாயம் விலகியிருக்கிறது.

அரசின் கடமை:

  • சோலையும் பாலையும் இயற்கையின் வார்ப்புகள். சோலை ஒன்றைப் பாலையாக மாற்றுவது நீதியாகாது. நிலவளம், நீர்வளம் ஆகியவற்றின் மீதான படையெடுப்பை வளர்ச்சியின் பெயரால் நவீனப் பொருளாதாரம் நடத்தக் கூடாது. உழவர்களின் உணர்வுகளை உள்வாங்கி மத்திய அரசு சரியான ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அதேவேளையில், காவிரிப் படுகை வேளாண்மையின் கழுத்தில் அவ்வப்போது வைக்கப்படும் ஆயுதம் நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும்.

நன்றி: தி இந்து (11 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்