TNPSC Thervupettagam

காவிரியின் ஈரத்தைக் காக்க...

May 6 , 2024 251 days 220 0
  • அனல் தகிக்கிறது. ஆறுகளில் பொட்டுத்தண்ணீர் இல்லை. புனல் பெருக்கெடுத்த நதிகள் பாயும் திருவையாற்றில் 1776இல் 22 ஓடக்காரர்கள் இருந்துள்ளனர். அதே ஆறுகளில் இப்போது அனல்தான் கானல் நீராகக் கண்களை மறைக்கிறது. மத்திய நீர் ஆணையக் குறிப்பின்படி, தென் இந்திய நீர்த்தேக்கங்களில் 17% மட்டுமே நீர் உள்ளது. எப்போதும் கொதிக்கும் தண்ணீர் தாவாவாக காவிரி மாறிவிட்டது.

வழக்குகளின் வரலாறு:

  • சுதந்திர இந்தியாவில் பல நதி நீர் தாவாக்கள் (பிணக்குகள்) ஏற்பட்டன. நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, அவை தீர்ப்பை விரைந்தும் தந்தன. 1990இல் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றமும் பின்னர் உச்ச நீதிமன்றமும் இறுதித் தீர்ப்பைக் கூற 28 ஆண்டுகள் ஆகின. வரலாற்றின் காலப்பேழையைத் திறந்தால் தொடக்கக் காலங்களில் காவிரி பிறப்பெடுத்த கர்நாடகத்தின் குடகு மலையில் மக்கள் குடியேற்றமோ, பாசனமோ அதிகம் இல்லை. அப்போதெல்லாம் நதியின் பயன்பாடு தமிழகப் பகுதிகளில்தான்.
  • 1800களில் மைசூர் - சென்னை அரசுகளுக்கிடையே காவிரிப் பிரச்சினை தொடங்கியது. இருதரப்புப் பிரதிநிதிகளாக பிரித்தானியர்களே பேச்சுவார்த்தை நடத்தினர். மேகேதாட்டுவில் 66 டிஎம்சி தண்ணீரைத் தடுக்க அரவமே இல்லாமல் இப்போது கர்நாடகம் அனைத்து முஸ்தீபுகளும் செய்துவிட்டது. தொடக்கத்தில் 11 டிஎம்சி-யைத் தடுக்கக்கூட சென்னை அரசு ஒப்பவில்லை. 1807இல் மைசூர் சமஸ்தானம் காவிரியைப் பயன்படுத்த அனுமதி கோரியது. பாசனம் பாதிக்கப்படும் எனக் கூறி சென்னை இசையவில்லை.
  • காவிரியின் குறுக்கே கண்ணம்பாடியில் நீர்த்தேக்கம் அமைக்க முதலில் 11 டிஎம்சி கொள்ளளவுக்கு அனுமதியும், தேவைப்பட்டால் 41 டிஎம்சி-யைத் தேக்க அணை கட்ட அனுமதியும் கோரியது. பிற்காலத்தில் பெரிய நீர்த்தேக்கம் கோர மாட்டோம் என்றும் மைசூர் அரசு உறுதியளித்தது. ஆனால், உறுதிமொழியை மைசூர் காப்பாற்றவில்லை. பிரச்சினை எழுந்தது.
  • இதைத் தீர்க்க 1913இல் நீதிபதி ஹென்றி கிரிஃபினை பிரிட்டிஷ் அரசு நியமித்தது. அதன் தீர்ப்பு 1916இல் மைசூருக்குச் சாதகமாக வந்தது. மறுமுறையீட்டிலும் மத்திய அரசின் தீர்ப்பு சென்னைக்குப் பாதகமாக அமைந்தது. சென்னை அரசு விடாமல் லண்டனில் இருந்த இந்திய அரசின் செயலருக்கு (Secretary of the State) மேல்முறையீடு செய்தது. தேம்ஸ் நதிக்கரையின் தீர்ப்பு, மத்திய அரசின் தீர்ப்பை ரத்துசெய்து சென்னைக்குச் சாதகம் செய்தது. மேகேதாட்டுப் பிரச்சினையில் அதே முயற்சிதான் இப்போதைய தேவை.
  • மைசூர் அரசு சென்னை அரசிடம் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக, 1924இல் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, மைசூர் அரசு 44.827 டிஎம்சி நீரையும் சென்னை அரசு 93.5 டிஎம்சியையும் பயன்படுத்தலாம். இந்த ஒப்பந்தம் சென்னை மாகாணத்துக்குப் பாதுகாப்பு அரணாக அமைந்தது. காவிரியின் கீழ்ப்பகுதியில் பழைய பாசனத்துக்குக் கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தர வேண்டிய நீரைக் கொடுத்த பிறகு, கூடுதலாகக் கிடைப்பதைத்தான் மைசூர் பயன்படுத்த முடியும். இத்தகு ஒப்பந்தங்கள் காலனிய இந்தியாவில் மைசூர் மீது திணிக்கப்பட்ட அநீதி என்கிற கண்டனங்கள் எழுந்தன.

போதிய கவனமின்மை:

  • சுதந்திர இந்தியாவில் 1956 நதிநீர் தாவாச் சட்டம் உருவானது. காவிரி நடுவர் மன்றமும் அதன் தீர்ப்புகளும் வந்தன. விடுதலை இந்தியாவில் இந்தத் தீர்ப்புகளும் கீழ்ப்படுகை மாநிலமான தமிழகத்துக்கு உரிமை தந்திருக்க வேண்டும். நீர் ஆதாரங்கள் குறித்த சர்வதேச விதிகள், 1966இன் ஹெல்சிங்கி விதிகளையே இந்திய நீதிமன்றங்கள் பின்பற்றின. ஹெல்சிங்கி விதியின் 7ஆவது கூறு தற்போதைய வடிநிலப் பகுதியில் இருக்கும் ஒரு பிரதேசம் ஏற்கெனவே பயன்படுத்திய தண்ணீரின் அளவைத் தடுக்கக் கூடாது என்பதாகும். அவ்வாறான தீர்ப்பைப் பெறுவதில் தமிழக அரசிடம் தற்போது போதிய கவனம் இல்லை.
  • நைல் நதி பிறக்கும் இடம் எத்தியோப்பியா, சூடான் பகுதிகள் ஆகும். ஆனால், அந்நதியின் நன்கொடை கீழ்ப்படுகை நாடான எகிப்துதான். இது காவிரியில் தமிழகத்துக்கும் பொருந்தும். கர்நாடகத்தைக் காங்கிரஸ், பாஜக எந்தக் கட்சி ஆண்டாலும் தமிழக உரிமைகளைப் பறிப்பதுதான் அவர்களின் அரசியலாக இருக்கிறது. இப்போதும் மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக காங்கிரஸ் அடம்பிடிக்கிறது; ‘அதில் தவறு இல்லை, அதற்கு கர்நாடகத்தை அனுமதிக்க வேண்டும்’ என்று மத்திய நீர்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகிறார்.

தமிழ்நாடு செய்ய வேண்டியவை:

  • காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி, காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதுதானே தவிர, மேகேதாட்டுவை நிறைவேற்றுவதல்ல. 15 ஆண்டுகளுக்கு அந்தத் தீர்ப்பில் எந்த மாற்றமும் கூடாது என்பது தீர்ப்பின் ஒரு கூறாகும். ஆயினும் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தார், மேகேதாட்டு அணை கட்ட ஆதரவான நிலை எடுக்கிறார். கர்நாடக முதல்வராகவும், பின்னர் இந்தியப் பிரதமராகவும் இருந்த தேவகெளடா காவிரி நடுவர் மன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்த சிக்கதேவ் முகர்ஜியைப் பதவியிலிருந்து நீக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனைப் பின்பற்றி, தமிழக அரசும் மேலாண்மை ஆணையப் பொறுப்பிலிருந்து ஹல்தாரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மேகேதாட்டு திட்டத்தைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டதாகக் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பகிரங்கமாகக் கூறுகிறார். மௌனம் பதிலல்ல. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழக முதல்வர் கூட்ட வேண்டும். மேகேதாட்டு அணைத் திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வுசெய்ய மத்திய நீர் ஆணையத்திடம் ஒப்படைப்பது தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் (01.02.2024 அன்று நடந்தது) முடிவை ஏற்கவில்லை என்றும், இதனை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் தமிழக அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
  • மேற்கூறிய கூட்ட நடவடிக்கைகளை இல்லாநிலையாக்க அரசு வழக்குத் தொடர வேண்டும். மேகேதாட்டு அணை மூலமாக 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய கர்நாடகம் திட்டமிடுகிறது. தமிழகம் பெறும் மாதாந்திர நீர் விகிதத்துக்குக் கர்நாடகத்தின் நீர்மின் திட்டம் ஊறு விளைவிக்கக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. இதனைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் கவனப்படுத்த வேண்டும்.
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்தின் நிலத்தடி நீரை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டது. கர்நாடகத்தின் நிலத்தடி நீரைக் கணிக்கவில்லை. உண்மையில், கிட்டத்தட்ட 1,000 ஏரிகளுடன் நிலத்தடி நீரில் செல்வந்தனாக பெங்களூரு விளங்குகிறது. பெங்களூருவில் ஏற்கெனவே துங்கபத்ரா, நேத்ராவதி நதிகள் பாய்கின்றன. அந்நகரின் தேவை 20 டிஎம்சி நீர் என்றால், அங்கு 30 டிஎம்சி கிடைப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. பெங்களூருவின் மூன்றில் ஒரு பகுதி மட்டும்தான் காவிரி வடிநிலப்பகுதியில் வருவதாகவும், நிலத்தடி நீரைக் கொண்டு பெங்களூரு 50% குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யலாம் என்றும் காவிரி நடுவர் மன்றம் கூறுகிறது.
  • தன்னுடைய தம்பி டி.கே.சுரேஷ் போட்டியிடும் பகுதிகளில் காவிரி நீரைக் கொணர்வதாக டி.கே.சிவகுமார் வாக்கு சேகரிக்கிறார். தமிழகம் தாகத்தில் தவிக்கும்போது, கர்நாடகத்தில் புதிய பகுதிக்குக் காவிரி நீரைக் கொண்டுபோவதைத் தடுக்க வேண்டும். சட்டபூர்வமாக இப்பிரச்சினைகளை அணுகத் தேர்தல் காலத்தில் திமுக நடத்திய ‘War room’ போன்ற வடிவங்கள் இப்போது தேவை. மேலும், தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மேலாண்மை) சட்டம், 2003ஐ உரிய திருத்தங்களுடன் உயிர்ப்பிக்க வேண்டும். தமிழகம் காவிரியை மட்டுமே நம்பியுள்ளது. தமிழக உரிமைகளைக் காக்க நீதிமன்றத்தில் ஆங்கிலேயர் எடுத்த முயற்சிகளை, விடுதலை இந்தியா பின்பற்றும் ஹெல்சிங்கி விதிகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசுமுன்னெடுத்தால் காவிரி ஈரமாக இருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்