- கடந்த ஜனவரி 31-ல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டது. இதனால், பிரிட்டனைச் சார்ந்து இயங்கிய வெளிநாடுகளின் தொழில் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. பிரிட்டனைச் சார்ந்து அவை இயங்கியதில் அந்த நாடு ஐரோப்பிய யூனியனில் இருந்ததும் ஒரு காரணம். ஆகவே, பிரிட்டனைத் தவிர்த்த வேறு வாய்ப்புகளை அந்நாடுகள் தேடிக்கொண்டிருக்கின்றன. இதில் இந்தியாவும் அடங்கும். பிரிட்டன் மக்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வாக்களித்து மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில் அயர்லாந்தை நோக்கி இந்தியாவும் பிற நாடுகளும் நகர ஆரம்பித்திருக்கின்றன. அயர்லாந்தில் மட்டும் சிறிதும் பெரிதுமாக 100 இந்திய நிறுவனங்கள் இருக்கின்றன. தற்போதைக்கு இரு நாடுகளுக்கும் இடையில், ஆண்டுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 31,183 கோடி ரூபாய் அளவில் வணிகம் நடக்கிறது. தொழில்துறை உறவு மட்டுமல்லாமல் அயர்லாந்துடன் கல்விரீதியிலான நட்புறவும் வலுவடைந்துவருகின்றது. அயர்லாந்துக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
குறைந்திருக்கிறது நிலக்கரி மின்னுற்பத்தி
- நிலக்கரியைக் கொண்டு தயாரிக்கப்படும் மின்சக்தியின் அளவு கடந்த ஆண்டு குறைந்திருக்கிறது. 2018-19-ல் மின்னுற்பத்திக்கு நூறு கோடி டன் நிலக்கரி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதனால் 198.5. கிகாவாட் அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது முந்தைய ஆண்டைவிட 2.5% குறைவு. பொருளாதார மந்தநிலையால், ஆலைகளில் முழுக் கொள்ளளவுக்கு உற்பத்தி நடைபெறாததால் மின்சாரத்துக்கான தேவை குறைந்தது.
- அத்துடன் காற்றாலை, சூரியஒளி கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்ததாலும் கரி மின்சாரத்தின் பங்களிப்பு குறைந்தது. கரும்புச் சக்கை, நிலவாயு ஆகியவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதும் கடந்த ஆண்டு குறைந்தது. ஆனால், அணு மின்சார உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 6.3% அதிகமாக இருந்தது. காற்று, சூரியஒளி மூலம் தயாரித்த மின்சாரம் 85.9 கிகாவாட்.
- முந்தைய ஆண்டைவிட 16% அதிகம். நிலக்கரியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கரித்தூள் மாசைக் குறைக்க வேண்டும் என்கிற லட்சியத்தில் புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இதில் உற்பத்திச் செலவு மற்றவற்றுடன் ஒப்பிடும்போது குறைவாக இருக்கிறது. எனவே, இதன் பங்களிப்பை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
காஷ்மீரில் தொழிலுக்காக இடம் வாங்க முடியுமா?
- காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்த பிறகு வெளிமாநிலத்தவர்கள் அங்கே நிலம் வாங்க முடியும் என்று கூறப்பட்டது. ஆனால், அது இன்னும் சாத்தியம் ஆகவில்லை என்பதுதான் உண்மை. ஏனெனில், 2016-ல் ஜம்மு - காஷ்மீர் தொழில்துறைக் கொள்கை ஒன்று வகுக்கப்பட்டது.
- இந்தக் கொள்கையின்படி அரசாங்கமானது முதலீட்டாளர்களுக்கு 90 ஆண்டு குத்தகைக்கு மட்டுமே நிலத்தைத் தரும் என்று தெரிகிறது. ஜம்மு - காஷ்மீர் மறுவரையறை சட்டம் 2019-ன்படி, ஐந்து பழைய சட்டங்கள் இன்னமும் நீடிக்கின்றன.
- இந்தச் சட்டங்களின்படி எந்தத் தொழில்நிறுவனமும் ஜம்மு-காஷ்மீரில் நிலங்களைத் தங்களுடைய உடைமையாக ஆக்கிக்கொள்ள முடியாது. தொழில்கள் தொடங்க ஜம்மு - காஷ்மீர் திறந்துவிடப்பட்டாலும் அங்குள்ள இயற்கைச் சூழல் காரணமாகக் கனரகத் தொழில்கள் தொடங்கப்படுமென்று எதிர்பார்க்க முடியாது.
- ஆகவே, உணவு பதப்படுத்தல், வேளாண் பொருட்களைப் பதப்படுத்தல் போன்ற தொழில்கள் அங்கே தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மருத்துவத் துறையிலும் கல்வித் துறையிலும் முதலீடுகள் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (26-02-2020)