- சரித்திரம் ஒரு கறாரான கணக்கு வாத்தியார். தயவு தாட்சண்யம் பார்க்காமல் உள்ளதை எடுத்து வைக்கும். நாம் திகைக்கலாம். புலம்பலாம். ஆவேசமடையலாம். கொண்டாடலாம் அல்லது தூக்கிப் போட்டு மிதிக்கலாம். ஆனால் எதையும் மாற்ற முடியாது.
- காஸாவின் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு இருக்கிறது. அது, இஸ்ரேலின் இயற்கை எரிவாயு வளத்தைக் காட்டிலும் அதிகம். ஆனால் எடுப்பதற்கு இஸ்ரேல் உதவாது. அதை எடுப்பதற்குத் தடையும் செய்யும். இந்நிலையில் பாலஸ்தீனர்களுக்கு உதவ இதர ‘சகோதர’ முஸ்லிம் நாடுகள் முன்வரலாம் அல்லவா? அவர்கள் எண்ணெய் எடுப்பதிலும் எரிவாயு எடுப்பதிலும் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். கணக்கற்ற கோடிகளில் கொழிப்பவர்கள். மேற்கத்திய நாடுகள் பலவற்றின் உதவியுடன் அதற்கான தொழில்நுட்பத் தன்னிறைவை அடைந்தவர்கள். செய்தார்களா என்றால் கிடையாது! போர்களில் உதவாமல் போனால் கூட சில பொருத்தமான காரணங்களை அதற்கு சொல்ல இயலும். பொருளாதார ரீதியில் பாலஸ்தீனர்கள் சிறிது மூச்சு விட்டுக்கொள்ள இயற்கையே தந்த ஒரு வாய்ப்பிலும் அவர்கள் வெற்றி அடைவதற்கு யாரும் உதவ முன்வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
- பாலஸ்தீன அத்தாரிடி என்னென்னவோ செய்து பார்த்தது. யார் யாரிடமோ மத்தியஸ்துக்குச் சென்றார்கள். இறுதியில் அன்றைய பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேர் ஒரு சமரச ஏற்பாட்டு வரைவை முன்வைத்தார்.
- எரிவாயுவை எடுக்கலாம். ஆனால் எகிப்து உட்பட வேறெந்த நாட்டுக்கும் அதனை ஏற்றுமதி செய்யக் கூடாது. இஸ்ரேலுக்குதான் விற்கலாம். அதுவும்சந்தை மதிப்பைக் காட்டிலும் குறைவான விலைக்கு விற்க வேண்டும்.தவிர, விற்று வரும் பணம் உடனடியாகபாலஸ்தீன அத்தாரிடியிடம் வழங்கப்பட மாட்டாது. பாலஸ்தீனர்களின் எதிர்கால நலனுக்காக அந்தப் பணத்தை அமெரிக்காவில் உள்ளஃபெடரல் வங்கியில்தான் போட்டு வைக்க வேண்டும். பிறகு நல்லகாரியங்களுக்கு வங்கி அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாலஸ்தீனர்களுக்கு வழங்கும். அதாவது, எரிவாயு விற்று வரும் பணத்தில் யாரும் ஆயுதம் வாங்கிவிட முடியாது.
- உலகில் வேறெங்காவது இப்படிப்பட்ட மத்தியஸ்தம் நடை பெறுமா, அதை மக்கள் ஏற்பார்களா, இதிலெல்லாம் சிறிதளவேனும் நியாயம் உள்ளதா என்று கணப்பொழுது சிந்தித்தால் இந்தப் பிரச்சினையின் அடிமுடி புரிந்துவிடும்.
- ஆனால், அப்படிப்பட்ட நிபந்தனைகளையும் ஏற்பதற்குப் பாலஸ்தீனர்கள் அன்றைக்குத் தயாராகவே இருந்தார்கள். மிகச் சிறிய அளவிலாவது பொருளாதார சுதந்திரம் அவர்களுக்குத் தேவையாக இருந்தது. விருந்துண்பதற்கு அல்ல. பசி தீர்வதற்கு.
- சொன்னால் வியப்பாக இருக்கும். மம்மூத் அப்பாஸின் ஃபத்தா அரசாங்கம் செயல்பட்டு கொண்டிருந்த போது அவர்கள் இந்த ஏற்பாட்டை ஒப்புக் கொண்டிருந்தால் கூட வியக்க ஒன்றுமில்லை என்று நகர்ந்து விடலாம். கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று ஹமாஸ் ஆட்சியமைத்தபோது இஸ்மாயில் ஹனியாவும் பிரிட்டன் முன்வைத்த இந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பதாகவே சொன்னார். இதன்மூலம் கிடைக்கக் கூடிய சொற்ப அளவு ராயல்டி தொகையைக் கொண்டு மக்களுக்கு ஏதாவது செய்ய முடிந்தால்கூடப் போதும் என்கிற எண்ணமே காரணம்.
- ஆனால், இஸ்ரேலியப் பிரதமர் இஹுத் ஓல்மர்ட் அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. ராயல்டி பணத்தை அவர்களிடம் நேரடியாகத் தருவதை அனுமதிக்க முடியாது. பணத்தை எங்களுக்கே அனுப்புங்கள். பாலஸ்தீனர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை நாங்கள் வழங்குகிறோம் என்று சொன்னார்.
- ஹமாஸ் இதனை ஏற்க மறுத்துவிட்டது. விளைவு, உடனடியாக இஸ்ரேலிய அரசு காஸா எல்லையில் படைகளைக் கொண்டு குவித்தது. மறுபுறம் பாலஸ்தீன பகுதிகளின் மீது பல்வேறு விதமான (பொருளாதாரம் சார்ந்த) தடைகளையும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
- உதாரணமாக, எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்த உணவுப் பொருட்கள் உடனடியாகத் தடை செய்யப்பட்டன. வர்த்தக ரீதியில் பாலஸ்தீனர்கள் யாருடனும் தொடர்பு கொள்ளவே முடியாதபடி என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் ஆத்ம சுத்தியுடன் செய்தார்கள். இதன் உச்சம், காஸா கடற்கரையோரப் பகுதிகளில் நடைபெற்று வந்த மீன்பிடித் தொழிலையும் தடை செய்தது.
- பிராந்தியத்தில் என்ன நடக்கிறது என்பதே வெளியுலகத்துக்குத் தெரிய வராமல் கண்ணும் கருத்துமாக அவர்கள் அடைகாத்துக் கொண்டிருந்த போது, முதல் முதலாக செஞ்சிலுவைச் சங்கத்திடம் இருந்துதான் ஒரு தகவல் வெளிவந்தது. நிலைமை இப்படியே தொடருமானால் சரியான உணவின்றி காஸாவில் வாழும் குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைபாடு மிக்கதொரு தலைமுறையாகிப் போவார்கள். பிறக்கவிருக்கும் குழந்தைகளும் அதே அபாயத்தின் அடுத்தத் தலைமுறைப் பிரதிநிதிகளாவார்கள்.
- ஆனால் இதையெல்லாம் இஸ்ரேல் பொருட்படுத்தவில்லை. ஹமாஸ் அடியோடு நீங்கினாலொழிய பாலஸ்தீனத்தின் எரிவாயுக் கனவெல்லாம் சாத்தியமே இல்லை என்று சொல்லிவிட்டது.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 11 – 2023)