TNPSC Thervupettagam

கி.ரா. - நூற்றாண்டின் சாட்சியம்

May 21 , 2021 1167 days 654 0
  • கி.ராஜநாராயணன் நவீனத் தமிழ் இலக்கியத்தின் தனித்துவமிக்க குரல் மட்டும் அல்ல; ஒரு நூற்றாண்டின் சாட்சியமும் அவர். தனது 98 வயதில் உற்சாகமாகப் புதிய நாவலை எழுதி வெளியிட்டார். அடுத்த மாதம் 99 வயதிலும் ஒரு புதிய நாவலை வெளியிடத் திட்டம் கொண்டிருந்தார்.
  • எழுத்துதான் அவரது ஒரே இயக்கம்; விருப்பம். வற்றாத ஜீவ ஊற்றுகளில் எப்போதும் நீர் சுரந்தபடியே இருக்கும் என்பார்கள். அப்படியானதுதான் கி.ரா.வின் எழுத்து வாழ்க்கை.
  • “நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணில்தான். இந்தப் புழுதியை நான் தலையில் வாரி வாரிப் போட்டுக்கொண்டும் என் கூட்டாளிகளின் தலையில் வாரி இறைத்தும் ஆனந்தப் பட்டிருக்கிறேன். இந்தக் கரிசல் மண்ணை நான் ருசித்துத் தின்றதற்கு என் பெற்றோரிடம் எத்தனையோ முறை அடிவாங்கியிருக்கிறேன். இன்றைக்கும் தெவிட்டவில்லை இந்த மண்” என்றொரு குறிப்பை கி.ரா. எழுதியிருக்கிறார். இதுதான் அவர் எழுத்தின் ஆதாரம்.

மறக்கவியலா கதாபாத்திரங்கள்

  • கரிசல் மண்ணையும் அதன் மனிதர்களையும் அவரைப் போல விரிவாக எழுதியவர் வேறில்லை.
  • உலகம் கண்டுகொள்ளாத அந்தச் சம்சாரிகளை, விவசாயக் கூலிகளை, ஏழை எளிய மனிதர்களைத் தனது கதைகளின் முக்கியக் கதாபாத்திரங்களாக்கி உலகறியச் செய்தார் கி.ரா.
  • அயிரக்கா, தொட்டண்ணா, பீச்சாங்கை ராமசாமி, கோமதி, தோழன் ரங்கசாமி, அண்ணாரப்ப கவுண்டர், பப்பு தாத்தா, நாச்சியார் தூங்கா நாயக்கர், பேரக்காள், தாசரி நாயக்கர், பிள்ளையாரப்பன், ராமசுப்பா நாயக்கர், மங்கத்தாயார் அம்மாள், சென்னம்மா தேவி, ஜோஸ்யம் எங்கட்ராயலு, மண்ணுதின்னி ரெங்க நாயக்கர், பச்சைவெண்ணெய் நரசய்யா, பயிருழவு பங்காரு நாயக்கர், வைத்தி மஞ்சையா, வாகடம் புல்லையா போன்ற கதாபாத்திரங்களை யாரால் மறக்க இயலும்?
  • கி.ரா.வின் கதைகளில் வரும் பெண்கள் வலிமையானவர்கள். போராட்ட குணமிக்கவர்கள். கடுமையான உழைப்பாளிகள். குடும்பத்தை அவர்களே சுமக்கிறார்கள்.
  • குடும்பம் வறுமையை அடையும்போதும், பிள்ளைகள் நோயில் விழும்போதும், கடன் சுமையால் குடும்பம் வீழ்ச்சியடையும்போதும் பெண்கள் அடையும் துயரத்துக்கும் வேதனைக்கும் அளவேயில்லை.
  • அதைத் தன்னுடைய எழுத்தில் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் கி.ரா. அதே நேரம், அவர்களின் தனித்துவமிக்க அழகு, திருமணக் கனவுகள், சந்தோஷங்கள், சஞ்சலங்களை அசலாகப் பதிவுசெய்திருக்கிறார்.
  • கி.ரா.வின் சிறுகதைகளில் வரும் சிறார்கள் அபூர்வமானவர்கள். வறுமையில், பசியில் வாடியபோதும் அவர்கள் தங்களுக்கேயான விளையாட்டுகளை, சந்தோஷங்களை மறப்பதில்லை.
  • அவரது முதற்கதையான ‘கதவு’ சிறுகதையில் தங்கள் வீட்டுக் கதவை ஜப்தி செய்து கொண்டுபோவதை அறியாத சீனிவாசனும் அவன் நண்பர்களும் அந்தக் கதவை தூக்கிக் கொண்டு போகிறவர்கள் பின்னால் ஆடிக்கொண்டு போகிறார்கள். அபூர்வமான காட்சி அது.
  • இதுபோலத்தான் ‘கோபல்ல கிராமம்’ நாவலில் திருடன் கழுவேற்றப்பட்ட நிலையில் அவனைச் சுற்றிப் பிள்ளைகள் நடனமாடுகிறார்கள். அப்படித் தானும் விளையாட முடிய வில்லையே என்று திருடன் ஏங்கி அழுகிறான்.
  • ‘கதவு’ கதையில் வரும் லட்சுமியும் சீனிவாசனும் வீட்டின் வறுமையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், விளையாட்டுத்தனம் வயதின் விளைவு. அதை மாற்றிக் கொள்ளவில்லை.
  • அதே சிறுவர்கள்தான் முடிவில் கைவிடப்பட்டுக் கிடக்கும் கதவைத் தொட்டுக் கண்ணீர்விடுகிறார்கள். அது வீட்டின் கதவில்லை. நம் மனசாட்சியின் கதவு. அதைத் தனது கதையின் வழியே தொட்டுத் திறந்து இந்த விவசாயிகளின் கஷ்டத்துக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வியைப் பொதுச் சமூகத்திடம் எழுப்பினார் கி.ரா.
  • இடதுசாரி இயக்கங்களுடன் இருந்த தொடர்பும் நட்பும் கி.ரா.வின் பார்வையைச் செழுமைப்படுத்தியது. விவசாயிகளுக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றிருக்கிறார். விவசாயிகளின் உரிமைக்கான குரலே அவரது கதைகளின் அடிநாதமாக ஒலிக்கிறது.

அரவணைத்துக்கொண்ட புதுவை

  • வாய்மொழி வரலாற்றைப் பொது வரலாறு ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதை மாற்றித் தனது படைப்புகளின் வழியே வாய்மொழி வரலாற்றின் உண்மைகளை வரலாற்றின் சாட்சியங்களாக மாற்றினார் கி.ரா. ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்லபுரத்து மக்கள்’ இரண்டு படைப்புகளும் இதற்கான சிறந்த உதாரணங்கள்.
  • புதுவை பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டு கி.ரா. இடம்மாறிப் போகிறார் என்ற கேள்விப்பட்டவுடன் கோவில்பட்டி இலக்கிய நண்பர்கள் பலருக்கும் ஆச்சரியம்.
  • அவரால் எப்படி ஒரு நகரில் வசிக்க முடியும் என்று பேசிக்கொண்டார்கள். டால்ஸ்டாய் தனது யஸ்னயா போல்யானா பண்ணையிலிருந்து மாஸ்கோவுக்கு இடம்பெயரும்போது அது ஒக் மரத்தை இடம்விட்டு இடம் பெயர்த்துக்கொண்டு போனதுபோல இருந்தது என்று ஆய்வாளர் வில்சன் எழுதியிருக்கிறார்.
  • அப்படியான இடப்பெயர்வுதான் கி.ரா.வின் புதுவை வருகையும். ஆனால், அந்தக் கடற்கரைச் சூழலும் அன்பான மனிதர்களும் ஆர்வமான மாணவர்களும் கி.ரா.வுக்குப் பிடித்துப்போனார்கள். பாரதியை ஏற்றுக்கொண்டதுபோலவே கி.ரா.வையும் புதுவை ஏற்று அரவணைத்துக்கொண்டது.
  • கி.ரா.வின் நினைவுகள் துல்லியமானவை. காட்சிகளை விவரிக்கும்போது அந்தச் சூழலை ஒலியோடு விவரிப்பார். ஏதாவது உணவின் ருசியைப் பற்றிச் சொல்லும்போது நம் நாக்கில் நீர் சுரக்கும்.
  • சொந்த வாழ்க்கையின் நெருக்கடிகளைப் பற்றி ஒருபோதும் அவர் பேசியதில்லை. கி.ரா.வின் சிரிப்பு அலாதியானது.
  • மழைக்குப் பின்பு வரும் வானவில்போல யோசனைக்குப் பிறகு அவர் முகத்தில் சிரிப்பு துளிர்ப்பதைக் கண்டிருக்கிறேன்.
  • கரிசல் நிலத்துக்கே உரிய உணவு வகைகளை, அவற்றின் செய்முறைகளை, சாப்பாட்டு ருசியை, தண்ணீர் ருசியை வியந்து வியந்து எழுதியிருக்கிறார்.
  • பால்சாக்கிடம்தான் இப்படியான வாசனையான எழுத்துமுறை இருந்தது என்பார்கள். அந்த நுட்பம், துல்லியமான விவரிப்பு, சுவாரஸ்யமான கதை சொல்லும் முறை அவரது எழுத்தின் தனித்துவம் என்பேன்.
  • சுந்தர ராமசாமி தொடங்கி ஜெயகாந்தன் வரை தனது சமகாலப் படைப்பாளிகளுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார் கி.ரா.
  • அவர்களுடன் கடித உறவைப் பேணிவந்தார். எழுத்தாளர்களைத் தன் ஊருக்கு வரவேற்று உபசரித்திருக்கிறார். அவர் வீட்டுக்குச் செல்லாத முக்கியப் படைப்பாளிகளே இல்லை எனலாம்.

நாட்டார் கதைகள்

  • இசையில் தீவிர ஈடுபாடு கொண்ட கி.ரா. முறையாக கர்னாடக சங்கீதம் கற்றிருக்கிறார். ஆனால், இசைக் கலைஞராக மாறவில்லை. இசையில் அவரது ரசனை உயர்வானது.
  • விளாத்திகுளம் சாமிகளுடன் இருந்த நட்பு இதற்கு முக்கியமான வழிகாட்டுதலாகும். இளையராஜாவுடன் கி.ரா.வுக்கு இருந்த நட்பு தனித்துவமானது. இளையராஜாவுடன் கர்னாடக இசை குறித்து ஆழ்ந்த உரையாடலை நடத்தியிருக்கிறார்.
  • நாட்டுப்புறக் கதைகளை இலக்கியமாக யாரும் அங்கீகரிக்காத காலத்தில் அவற்றைத் தேடித் தொகுத்து ஆராய்ந்தவர் கி.ரா.
  • அதுபோலவே கரிசல் வட்டாரச் சொற்களுக்கென ஒரு அகராதியைத் தொகுத்திருக்கிறார்.
  • தமிழில் அது ஒரு முன்னோடி முயற்சியாகும். ‘கரிசல்காட்டுக் கடுதாசி’ என அவர் ‘விகடன்’ இதழில் எழுதிய தொடரும் அதற்கு ஆதிமூலம் வரைந்த ஓவியங்களும் மறக்க முடியாதவை.
  • கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும் இடைசெவலைச் சார்ந்தவர்கள். நெருக்கமான நண்பர்கள். சிறந்த எழுத்தாளர்கள். ஒரு சின்னஞ்சிறிய கிராமத்திலிருந்து இருவர் சாகித்ய அகாடமி விருது பெற்றிருப்பது வியப்பூட்டும் விஷயம். இப்படி இந்தியாவில் வேறு எங்கும் நடந்ததில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (21 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்