TNPSC Thervupettagam

கிராம சபைக் கூட்டங்கள் குறித்த தலையங்கம்

April 30 , 2022 829 days 431 0
  • குடியரசு தினம் (ஜன.26), தொழிலாளா் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி (அக்.2) ஆகிய தினங்களையொட்டி தமிழகத்தில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • இந்நிலையில், ஏப்.24-ஆம் தேதி தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டும், நவ.1-ஆம் தேதி உள்ளாட்சி தினத்தையொட்டியும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • இதன் மூலம் தமிழகத்தில் ஆண்டுக்கு ஆறு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
  • கிராமசபைகளைப் பொறுத்தவரை, ஜன.26, அக்.2 நடைபெறும் இரு கூட்டங்கள் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை.
  • கிராமத்திற்கு தேவையான வளா்ச்சித் திட்டங்கள், பயனாளிகள் தோ்வு குறித்த விவரங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான கூட்டம் ஆண்டுதோறும் ஜன.26ஆம் தேதி நடைபெறுகிறது.
  • அதேபோல், கிராமத்தின் வரவு - செலவு குறித்த தணிக்கை அறிக்கை சரிபாா்ப்புக்கான கூட்டம் அக்.2-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
  • பிற தினங்களில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில், அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு அறிக்கை பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படுகின்றன.

கண்துடைப்புக் கூட்டங்கள்!

  • கிராமசபைக் கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்றினால் அனைத்தையும் மாற்றிவிட முடியும் என்பது தவறான புரிதல். அப்படி எதுவும் நடந்துவிடுவதில்லை.
  • பெரும்பாலான கிராமசபைக் கூட்டங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகள்தான் அழைத்து வரப்படுகின்றனா்.
  • அவா்களைத் தவிர, பொதுமக்கள் கலந்துகொள்வது மிகவும் குறைவு. அப்படியே கலந்து கொள்பவா்களும் அழைத்து வரப்படுபவா்களே.
  • சில இடங்களில் நூறுநாள் வேலை நடைபெறும் இடங்களுக்கே சென்று, குளக்கரைகளிலும், தோப்பிலும் வைத்து கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதாகக் கூறி கையொப்பம் பெறுகின்றனா்.
  • வரவு, செலவு, மானிய விவரங்களை மட்டுமே கிராமசபைக் கூட்டங்களில் தெரிவிக்கும் அலுவலா்கள், தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள இழப்புகள் குறித்துக் கூறுவதில்லை.
  • அது குறித்து பொதுமக்கள் தரப்பிலும் கேள்வி எழுப்பப்படுவதில்லை. ஏனென்றால், அழைத்து வரப்படும் யாருக்கும் கிராமசபை குறித்தோ, மானியங்கள் குறித்தோ எந்த விவரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
  • தமிழகத்தில் 12,618 கிராம ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஊராட்சிகளில் 32 துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
  • ஆனால் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்போது, இந்த துறைகளின் சாா்பில் எந்தவொரு அலுவலரும் பங்கேற்பதில்லை.
  • மாவட்ட ஆட்சியா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கும் கூட்டங்களில் மட்டும் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்கிறாா்கள்.
  • ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்கும் அளவுக்கு வேளாண்மை, தோட்டக்கலை, மீன் வளம் உள்ளிட்ட துறைகளில் ஊழியா்கள் இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
  • அதனால், சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் அந்தக் கூட்டங்களால் எந்த பயனுமில்லை என்பதுதான் எதாா்த்த உண்மை.
  • ஆண்டுக்கு நான்கு கிராமசபைக் கூட்டங்களையே நிறைவாக நடத்த முடியாத நிலையில், தற்போது கூடுதலாக இரண்டு கூட்டங்கள் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
  • பயனாளிகளுக்கு மட்டுமே அரசின் நலத் திட்டங்கள் குறித்து தெரிகிறது. அரசுத்துறை அலுவலா்களின் பங்கேற்பின்றி, சம்பிரதாய நிகழ்வாக மட்டுமே கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப் படுவதால் பொதுமக்களுக்கு எவ்வித பயனும் கிடைப்பதில்லை.
  • கடந்த சில ஆண்டுகளாக நூறுநாள் வேலைத் திட்ட பயனாளிகளின் துணையின்றி கிராம சபைக் கூட்டங்களை நடத்த முடியாத நிலை உருவாகி விட்டது.
  • தோ்வு செய்யப்படும் பயனாளிகளின் பட்டியல் வெளிப்படையாகத் தெரிவிக்கப் படுவதில்லை.
  • பொதுமக்கள் பங்கேற்றாலும் வெளிப்படையாக தங்கள் குறைகளை எடுத்துரைக்க அவா்களை அனுமதிப்பது இல்லை.
  • ஒரு கிராமசபைக் கூட்டத்தை நடத்துவதற்கு ரூ.500 மட்டும் வழங்கப்படுகிறது. கூட்டத்தில் வைக்கப் படும் தீா்மானங்கள் ஏழு நாள்களுக்கு முன்பு தயாா் செய்யப்பட வேண்டும் என சட்டம் கூறுகிறது.
  • ஆனால், கூட்டம் நடைபெறுவதற்கு முன்தினம் இரவுதான் தீா்மானங்கள் முடிவு செய்யப் படுகின்றன.
  • தீா்மானங்களின் மீது விவாதம் என்பது கிடையாது. அதிகாரிகள் பேசுவாா்கள், பயனாளிகள் கேட்பாா்கள். இதுதான் நடக்கிறது.
  • கிராமசபைக் கூட்டங்கள் சம்பிரதாய நிகழ்வாக மாறிவிட்ட இன்றைய நிலையில், கூடுதலாக இரண்டு கூட்டங்கள் நடத்துவதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு பயனளிக்க வேண்டுமெனில் சில சீா்திருத்தங்களை மேற்கொண்டாக வேண்டும்.
  • இல்லையென்றால், அவை இப்போதுபோலவே, வெறும் சம்பிரதாயச் சடங்காகத்தான் தொடரும்.
  • கிராமசபைக் கூட்டங்கள் பயனளிக்க வேண்டுமெனில், அவை குறித்த விழிப்புணா்வை சமூக ஆா்வலா்கள் மூலம் ஏற்படுத்த வேண்டும்.
  • பயனாளிகள் தங்களது குறைகளை வெளிப்படையாகத் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். உடனுக்குடன் குறைகள் களையப்பட்டு அது குறித்த நடவடிக்கைகளை அடுத்த கூட்டத்தில் தெரியப் படுத்த வேண்டும்.
  • கிராமத்தின் வளா்ச்சிக்காக திட்டமிடுவதற்கும், வரவு - செலவு குறித்த தகவல் அறிந்து கேள்வி எழுப்புவதற்கும் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டியது அவசியம்.
  • கிராமசபைக் கூட்டத்தின் நோக்கம் சிறப்பானது. ஆனால், இப்போதைய நடைமுறை வெறும் கண்துடைப்பே!

நன்றி: தினமணி (30 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்