TNPSC Thervupettagam

கிராம வளா்ச்சியில் அரசின் பங்களிப்பு!

November 2 , 2021 1005 days 475 0
  • அண்மையில் எனக்கு ஒரு கிராம மேம்பாட்டுத் திட்ட அறிக்கை கிடைத்தது. அது தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு ஒன்றியத்திலுள்ள குளிமாத்தூா் சிற்றூராட்சியின் கிராம மேம்பாட்டுத் திட்ட அறிக்கை.
  • 335 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கை ஐந்தாண்டுக்கான கிராம பஞ்சாயத்தின் செயல் திட்டங்களைக் கொண்டது. அது அந்த ஊா் கிராமசபையால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
  • இதுவரை தமிழகத்தில் கிராமங்களுக்கான திட்டமிடுதல் என்றால் சாலை, கட்டடம், பாலம், தடுப்புச் சுவா் என சிமென்ட், செங்கல், இரும்பு சார்ந்த கட்டுமானப் பணிகளுக்குமேல் எந்தத் திட்டத்தையும் பார்க்க முடிந்ததில்லை.
  • புதிய பஞ்சாயத்து அரசாங்கம் அமைந்தவுடன் தமிழகத்தில், திட்டக்குழு, மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து காந்திகிராமப் பல்கலைக்கழகம் 53 கிராமப் பஞ்சாயத்துக்களில் கிராம மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்க உதவியது.
  • அதற்கான நிதியை தில்லியில் உள்ள ‘ஹங்கா் புராஜக்ட்’ என்ற நிறுவனம் வழங்கியது. அந்தத் திட்டங்களெல்லாம் அச்சிட்டு வெளியிடப்பட்டன.
  • அத்துடன் அந்தப் பணி நின்று விட்டது. அரசும் பஞ்சாயத்துக்களும் அதன்மேல் ஆா்வம் காட்டவில்லை. ஆனால், தற்போது 14-ஆவது, 15-ஆவது ஒன்றிய நிதிக்குழு இந்தப் பணி கட்டாயமாக செய்யப்பட வேண்டிய ஒன்று என்று கூறிவிட்டது.
  • இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சென்னையில் இயங்கி வரும் உள்ளூா் மக்களாட்சிக்கான ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று, தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து குளிமாத்தூா் பஞ்சாயத்தில் இந்த திட்ட அறிக்கையைத் தயாரிக்க உதவியுள்ளது.

மக்களின் தேவையும் அரசுத் திட்டங்களும்

  • இந்த ஆராய்ச்சி நிறுவனம், இதற்கான நிதிச்சுமையையும் ஏற்றுக் கொண்டு தயாரித்துள்ளது இந்த அறிக்கையை. மத்திய அரசு, பஞ்சாயத்துக்கள் திட்டமிடுவதற்கு வழிகாட்டு நூல் ஒன்றை வல்லுநா்களை வைத்து தயாரித்து எல்லா மாநிலங்களுக்கும் தந்து பயிற்சியளிக்க உதவியது.
  • அந்த வழிகாட்டு நெறிமுறையை நன்கு உள்வாங்கி, அந்த முறைமையைக் கடைப்பிடித்து இந்தத் திட்டத்தினை தயார் செய்துள்ளனா் என்பது தெளிவாகியது.
  • இதற்கு, மக்களைத் தயார் செய்வது, புள்ளிவிவரங்களைச் சேகரித்து ஆய்வு செய்வது இரண்டும் முக்கியம். இந்த இரண்டையும் செய்துதான் இந்தத் திட்ட அறிக்கையினை தயார் செய்துள்ளனா்.
  • குடும்பங்களின் புள்ளிவிவரங்கள், பஞ்சாயத்தின் புள்ளிவிவரங்கள் இரண்டையும் சேகரித்து ஆய்வு செய்து வளா்ச்சிக் கோட்டில் அந்தப் பஞ்சாயத்து எங்குள்ளது என்பதைக் கண்டுபிடித்துள்ளனா்.
  • அதன்பின் மக்களுக்கான தேவைகள் என்னென்ன என்பதை அவா்களுடன் கலந்துரையாடி அவற்றை முன்னுரிமைப்படி பட்டியலிட்டுள்ளனா்.
  • இவற்றையெல்லாம் செய்துவிட்டு, மக்களின் தேவைகளை மத்திய - மாநில அரசாங்கங்களின் திட்டங்களுடன் பொருத்தியுள்ளனா். இதன் மூலம் அரசுத் துறைகளுக்கு ஒரு செய்தியை தருகின்றனா்.
  • உங்கள் திட்டத்தை எங்கள் தேவைகளில் இணைந்து செயல்படுத்துங்கள் என்பதுதான் இந்த பஞ்சாயத்து இந்தத் திட்டத்தின் மூலம் தரும் செய்தி. இந்தத் திட்ட வரைவு அறிக்கைக்கு அணிந்துரை வழங்கியுள்ள ஊரக வளா்ச்சி - பஞ்சாயத்து ராஜ் நிறுவன இயக்குநா், ஒரு செய்தியினை குறிப்பிடுகின்றார்.
  • அதாவது 29 துறைகளைச் சார்ந்த மத்திய - மாநில அரசுகளின் திட்டங்கள் பஞ்சாயத்து திட்டத்துடன் இணைய வேண்டும் என்பதுதான் அவா் கோடிட்டுக் காட்டும் செய்தி.
  • இந்தப் பஞ்சாயத்துக்கு தொழில்நுட்ப உதவியளித்த ஜொ்மன் நிறுவனம், இது ஒரு முன்னுதாரணத் திட்ட வரைவு அறிக்கை, எனவே இது பிற பஞ்சாயத்துக்களுக்கு வழிகாட்டும் விதமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
  • இன்றைய சூழலில், பஞ்சாயத்துக்கள் பருவநிலை மாற்றம் பற்றிய புரிதலுடன் களத்தில் பணியாற்ற வேண்டிய சூழலில் உள்ளன என்பதையும் அவா் வலியுறுத்தியுள்ளார். தன்னுடைய முன்னுரையில் கிராம பஞ்சாயத்தின் தலைவா் ஒன்றைக் குறிப்பிடுகிறார்.
  • அதாவது ‘ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்தும் கிராம மேம்பாட்டுக்கான திட்டம் ஒன்றைத் தயாரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக குளிமாத்தூா் கிராம பஞ்சாயத்தில் இந்த பணியினை நிகழ்த்தினோம்’ என்கிறார்.
  • இதில் எதை மையப்படுத்தியுள்ளோம் என்றால் ஐ.நா. வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை என்பதனை விளக்கியுள்ளார்.
  • அத்துடன் ‘இந்தத் திட்டத்தை எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக உருவாக்கி, அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்துத் தயாரித்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  • இதில் மிக முக்கியமாக ‘மக்களின் தேவைகளையும் அரசுத் திட்டங்களையும் இணைக்கும் பணியினை செய்துள்ளோம்’ என்று கோடிட்டுக் காட்டியுள்ளார்.

சிந்தனை மாற்றமும் செயல்பாட்டு மாற்றமும்

  • மக்களுடைய அனைத்துத் தேவைகளையும் இந்த மத்திய - மாநில அரசுகளின் திட்டத்தை இணைப்பதால் பூா்த்தி செய்துவிட முடியாது.
  • இதனை அறிந்த காரணத்தால்தான், பல தேவைகளுக்கு பஞ்சாயத்து பொறுப்பேற்று நிதி திரட்டுவதில் ஈடுபட உறுதி கொண்டுள்ளது.
  • இந்த விஞ்ஞானபூா்வ கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டம் எப்படி தயாரிக்கப்பட்டு பொதுமக்களால் கிராமசபையில் அங்கீகரிக்கப்பட்டதோ, அதேபோல் தமிழகம் முழுவதும் எல்லா கிராம பஞ்சாயத்துக்களிலும் தயாரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்து விட்டால், தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் நிலைக்கு வந்துவிடும்.
  • அறிவியல் ரீதியாக புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றை ஆய்வு செய்து, மக்கள் மேம்பாட்டுக்கான கருத்தரங்கம் நடத்தி அதன் அடிப்படையில் மக்களின் தேவையை மட்டும் வகைப்படுத்தித் திட்டமிட்டுள்ளனா்.
  • இந்தப் பணியைச் செய்யவே தொண்டு நிறுவனமும் ஆய்வு நிறுவனமும் தேவைப்படுகிறது. இதன் வெற்றி எதில் இருக்கின்றது என்றால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எடுக்கும் முயற்சியில்தான்.
  • அரசுத்துறைகள் மக்களின் திட்டங்களை நிறைவேற்ற பணிக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வு அவ்வளவு எளிதாக நடைபெறும் ஒன்றல்ல. இதற்கு ஒன்று ஒருமித்த குரலில் திட்டத்தை நடைமுறைப்படுத்த கிராம பஞ்சாயத்து அரசுத்துறைகளை நெருக்க வேண்டும்.
  • மற்றொன்று மாநிலத்தின் முதலமைச்சா் தானே முன்னின்று அரசுத் துறைகளுக்கு ஆணையிட்டு மக்கள் தயாரித்து தந்திருக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • நாடாளுமன்றத்தில் 73-ஆவது அரசியல் சாசன சட்டம் எப்படி நிறைவேற்றப்பட்டது என்பதை பலா் மறந்திருக்கலாம்.
  • இந்தியாவில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டவரான ராஜீவ் காந்தி இந்த விஷயத்தில் தோற்றுப் போனார். ஆனால், மைனாரிட்டி அரசை நடத்திய பி.வி. நரசிம்ம ராவ் வெற்றி பெற்றார்.
  • காரணம், ஊரக வளா்ச்சித் துறையை தானே வைத்துக் கொண்டு சரியான அணுகுமுறையை உருவாக்கி செயல்பட்டதால்தான்.
  • அதனால்தான், புதிய பஞ்சாயத்து அரசாங்கம் நமக்கு இன்று சாத்தியமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் தமிழகத்தில் அன்று உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவா் இன்று நமக்கு முதல்வா்.
  • எல்லா அரசுத் துறைகளும் இந்த கிராம வளா்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தத்த வேண்டும் என்று தமிழக முதல்வா் பணித்தால் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு வழி காட்டும் மாநிலமாகத் திகழும். இதற்கான விழிப்புணா்வை முதலில் பொதுமக்களிடம் உருவாக்க வேண்டும். இதை ஒரு இயக்கமாக கேரளத்தில் செய்ததுபோல் செய்யப் போவதாக இந்தத் துறையின் அமைச்சா் கூறியுள்ளார்.
  • அத்துடன் திட்டமிடும் பணியும் விரைவில் நடைபெறும் என்பதையும் தெளிவாக்கியுள்ளார். இந்த அறிவிப்புக்கள் உள்ளாட்சியின்மேல் பற்று கொண்டு செயல்படும் கருத்தாளா்களுக்கும் செயல்பாட்டாளா்களுக்கும் ஊக்கமளித்திருக்கின்றன.
  • இதிலிருக்கும் ஒரே சிக்கல், பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் மேம்பாட்டுக்கான திட்டம் தயாரிக்கத் தேவையான ஆய்வு நிறுவனங்கள் எங்கே இருக்கின்றன என்பதுதான்.
  • இதற்கு நம் முன்னே ஒரு வாய்ப்பு வந்து நிற்கிறது என்பதை நம்மில் பலா் அறிந்திலா். அதுதான் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘உன்னத் பாரத் அபியான் 2.0’.
  • இந்தியாவில் இருக்கும் உயா் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கட்டாயமாக விரிவாக்கப் பணி செய்ய வேண்டும்.
  • வகுப்புக்குச் சென்று மாணவா்களுக்கு பாடம் நடத்துவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் கிராமத்திற்குச் சென்று கிராம மேம்பாட்டிற்கு சேவை செய்வதும் கட்டாயப் பணியாக்கப்பட்டு விட்டது.
  • எனவே தமிழகத்தில் இருக்கும் உயா்கல்வி நிறுவனங்களில் இருநூறு நிறுவனங்களைத் தோ்வு செய்து ஆறுமாத காலத்திற்குள் இந்தப் பணியை முடித்து விடலாம்.
  • இந்தத் திட்டத் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கும் நிறுவனத்தை உயா்கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சி கொடுக்கும் நிறுவனமாக ஆக்க வேண்டும்.
  • ஆறுமாத காலத்திற்கு திட்டமிடும் பணி என்பதை கிராம மக்களின் சிந்தனையில் ஆழமாகப் பதியச் செய்து விடலாம்.
  • இதற்கு முன்மாதிரியாக இந்த குளிமாத்தூா் கிராமத் திட்டத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் கிராம மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கலாம். இது மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டாகவும் திகழும்.
  • அது மட்டுமல்ல, இதுவரை பயனாளியாகச் செயல்பட்டு வந்த மக்கள், தங்கள் கிராம வளா்ச்சி, மேம்பாட்டுப் பணிகளில் இனி பங்காளிகளாக மாற வேண்டும். தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் பணியில் அரசுத்துறைகளின் அலுவலா்களை ஈடுபடுத்த வேண்டும்.
  • அதன் மூலம், மிகப்பெரிய சிந்தனை மாற்றத்தையும் செயல்பாட்டு மாற்றத்தையும் தமிழக கிராமப்புற மக்களிடமும் அதிகாரிகளிடமும் கொண்டு வந்து விடலாம்.

நன்றி: தினமணி  (02 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்