TNPSC Thervupettagam

கிராமங்கள் நகரங்களாகட்டும்!

September 17 , 2021 1050 days 674 0
  • கிராமங்களில் இருப்பவர்கள் நகரங்களுக்குப் படையெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். கிராம மக்கள் நகரங்களுக்கு வருவதால் நகர வாழ்க்கையில் மிகுந்த நெருக்கடி ஏற்படுகிறது.
  • சாலைகளில் பயணம் செய்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. மளிகைக்கடை, உணவகம் போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் முண்டியடித்துக் கொள்கிறார்கள். மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை குறைந்தபாடில்லை.
  • பேருந்துகளில் காலை மாலை நேரங்களில் ஆடு மாடுகளை அடைப்பது போல் மக்களை ஏற்றிச் செல்கிறார்கள். அதிகமான குடியிருப்புகளால் நிலத்தடி நீர்வளம் குறைந்து கொண்டே வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மிதக்கின்றன.

நாடு சமநிலை பெறும்

  • கோடைக் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனை சமாளிக்க முடியாமல் அரசு நிர்வாகம் திணறுகிறது. நகரங்களின் சுகாதாரம் சீர் கெடுகிறது.
  • இதனால் நோய்கள் பரவுகின்றன. வருங்காலங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
  • கிராமங்களில் முன்பெல்லாம் பனைஓலை வேய்ந்த வீடுகளும் தென்னங் கீற்றுக் கொட்டகைகளும் ஓட்டு வீடுகளுமாக இருந்தன. ஆனால் இப்போதெல்லாம் அப்படியான சில வீடுகளைப் பார்ப்பதே அரிதாக உள்ளது.
  • நகரங்களுக்கு இணையான கான்கிரீட் கட்டடங்களை கிராமம் தோறும் பார்க்க முடிகிறது. ஏழைகளும், அரசாங்கத்தின் வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிகளாகி தங்களது வீட்டை கான்கீரிட் வீடுகளாக மாற்றிவருகிறார்கள்.
  • கிராமத்து ஊருணிகளிலும் கண்மாய்களிலும் குளித்துவந்த மக்கள் இப்போது வீட்டுக்கு வீடு தாங்களே ஆழ்குழாய்க் கிணறு அமைத்து நகரங்களுக்கு இணையாக தண்ணீர் வசதியைப் பெற்றுள்ளார்கள்.
  • அனைவருக்கும் இலவசக் கழிப்பிடம் என்ற அரசாங்கத் திட்டங்களையும் பயன்படுத்தி ஏழை நடுத்தர மக்கள் வீட்டுக்கு வீடு கழிப்பறைகளை அமைத்து வருகிறார்கள்.
  • கிராமங்களில் எரிவாயு உருளை விநியோகம் செய்யப்படுகிறது. சமையலுக்குரிய எல்லா இயந்திரங்களையும் கிராம மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
  • தொலைக்காட்சியில் அனைத்து அலைவரிசைகளையும் நகரங்களுக்கு இணையாக கண்டு களிக்கிறார்கள். தொலைத் தொடர்பைப் பொறுத்தவரை வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் அலைபேசி பயன்படுத்துகிறார்கள்.
  • அருகில் உள்ள நகரத்துக்கு சாலை வசதி அளிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் அனைவரின் வீட்டிலும் இருசக்கர வாகனம் உள்ளது. கூடுதல் வசதி உள்ளவர்கள் நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளார்கள்.
  • கிராமத்துப் பெண்களும் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். கிராமத்துக் குழந்தைகள் நகரப் பள்ளி மூலம் நல்ல கல்வி பெறுகிறார்கள். நகரவாசிகளுக்கு சமமாக படிப்பை முடித்து நல்ல வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.
  • இப்படியாக நகரத்துக்கு இணையான ஏராள வசதிகளை கிராமங்கள் பெற்றிருந்தும் ஏன் நகரங்களில் சென்று வசிக்க இன்னும் சிலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்?
  • கிராமங்கள் நகரங்களின் கட்டமைப்பு வசதியில் எண்பது சதவிகிதத்தைத்தான் எட்டியிருக்கின்றன. மீதமுள்ள 20 சதவிகிதம் இன்னும் எட்டப்படாமல் இருக்கிறது. இந்த இருபது சதவிகிதம்தான் மிக முக்கியமானது.
  • இது நிறைவடைந்தால் கிராமங்கள் அனைத்தும் நகரங்களுக்கு இணையான வசதிகளைப் பெற்றுவிடும். குடியிருக்க இப்படி மக்கள் சாரைசாரையாக நகரை நோக்கி படையெடுப்பது நின்றுவிடும்.
  • இதனால் நகரநெரிசலைக் குறைக்கலாம். கிராமங்கள் மேலும் வளர்ச்சி பெறும். நகரங்களில் உள்ள மருத்துவமனைகளை மனதில் கொண்டு சிலர் குடியேறுகிறார்கள்.
  • ஏனென்றால் திடீரென ஒருவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை எழுமாயின் அருகில் மருத்துவமனை இருந்தால்தான் அவர் உயிர் பிழைக்கமுடியும். கர்ப்பிணி பெண்களுக்கும் இதே நிலைதான்.
  • எல்லா கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தாலும் அங்கு எல்லா நோய்களுக்கும் சிகிச்சை கிடைக்காது. அரசு மருத்துவக் கல்லுரியில் படித்தவர்கள் கட்டாயமாக பணிபுரியவேண்டிய நிர்பந்தத்தால் ஆரம்ப நிலை மருத்துவர்களே அதிகமாக பணிபுரிகிறார்கள்.
  • அவர்களும் தங்கள் ஒப்பந்தம் முடிந்தவுடன் தனியாக மருத்துவம் பார்க்க சென்றுவிடுகிறார்கள். ஆகையினால் காய்ச்சல், தலைவலி இவற்றுக்குமட்டுமே இவை பயன்படுகின்றன.
  • இதைச் சரி செய்ய என்ன செய்யலாம்? இருபது கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை அமைத்து அது 24 மணி நேரமும் இயங்கினால் மக்கள் நகரங்களுக்கு செல்வதைக் கண்டிப்பாக தவிர்ப்பார்கள்.
  • இதற்கு தன்னார்வமுள்ள மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனையை கிராமத்தை சார்ந்து அமைக்க முன் வரவேண்டும். அரசாங்கம் அவர்களின் மொத்த கட்டுமானப்பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டுத் தொகையில் குறிப்பிட்ட விழுக்காட்டை மானியமாக வழங்க வேண்டும்.
  • அடுத்ததாக கல்வி வசதி. பலர் தங்களது பிள்ளைகளுக்கு உயர்தரக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நகரில் குடியேறுகிறார்கள். நகரத்தின் மிகப்பெரிய நெரிசலுக்கு இது முக்கியமான காரணமாகிறது. இதையும் மாற்ற முடியும்.
  • புதிதாக பள்ளி கல்லூரிகளைக் கட்டுபவர்கள் கிராமங்களை ஒட்டி அமைத்தால் மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க மாட்டார்கள்.
  • ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் ஒருவர் வசிக்கும் மாவட்டத்தில் கல்வி வசதி இருக்கும்போது அவர் அடுத்த மாவட்டத்துக்கு செல்வதை தடை செய்ய வேண்டும். கிராமங்களில் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் புதிதாக அமைக்கப்படவேண்டும்.
  • மேலும் இணைய வசதிக்கான அலைபேசி கோபுரங்கள் நகருக்கு இணையாக அமைக்கப்பட வேண்டும். மத்திய - மாநில அரசுகள் கிராமங்களில் அலைபேசிக்கான சிக்னல் முழுமையாக கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
  • இவ்வாறான செயல்பாடுகள் கிராமங்களை முழுமையாகச் சென்றடையுமானால் கிராமங்கள் நகரங்களுக்கு இணையான தகுதியைப் பெறும். மக்கள் நகரங்களை நோக்கிப் படையெடுப்பது குறையும்.

நன்றி: தினமணி  (17 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்