TNPSC Thervupettagam

கிராமம் உயர பொருளாதாரம் உயரும்

June 25 , 2021 1133 days 476 0
  • இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50 கோடி பேர் கிராமப்புறங்களில் வசிப்பதால் நம் நாட்டினில் ஏற்பட்டுள்ள இரண்டாம் அலை கரோனா தீநுண்மித் தொற்று, "உலகின் முதல் கிராமப்புறப் பெருந்தொற்றாக' இருக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.
  • மே 1 முதல் 24 வரை இந்தியாவில் புதிய கரோனா நோயாளிகள் கிட்டத்தட்ட 78 லட்சம் பேர் இருந்தனர். இது இதற்குமுன் எந்த மாதத்திலும் பதிவாகாத உட்சபட்ச எண்ணிக்கையாகும்.
  • இந்த காலகட்டத்தில் உலக அளவில் பதிவான புதிய நோயாளிகளில் இருவரில் ஒருவர் இந்தியர். அப்போது உலகில் இந்நோயால் நிகழ்ந்த மரணங்களில் ஒவ்வொரு மூன்றாவது மரணமும் இந்தியாவில் நிகழ்ந்தது.
  • நமது நாட்டில் ஒவ்வொரு இரண்டாவது புதிய நோயாளியும் கிராமப்புற மாவட்டங்களில் கண்டறியப் பட்டனர். அதேபோல் பதிவான ஒவ்வொரு இரண்டாவது மரணமும் இந்திய கிராமப்புறங்களில் நிகழ்ந்தது.
  • இந்தியாவில் ஆறு கோடியாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை கரோனா தீநுண்மியினால் கடந்த ஒரு வருடத்தில்13.4 கோடியாக (சுமார் இரு மடங்கு) அதிகரித்துள்ளது என்று உலக வங்கி தரவுகளின் அடிப்படையிலான ஆய்வு கூறுகிறது.
  • கரோனா தீநுண்மியின் முதல் அலை கிராமப்புறங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தவில்லையாதலால், பெரும்பாலானோரின் கருத்து இது நகர்ப்புறங்களில் பரவும் ஒரு நோய் என்றே இருந்தது.
  • சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு கொண்ட இந்திய நகர்ப்புறங்களே அதிகப்படியான நோயாளிகளால் திணறிய நிலையில், கிராமப்புறங்களில் இரண்டாவது அலை ஏற்படுத்திய பாதிப்பு மிக மோசமாக இருந்தது.
  • ஏழைகள் அதிகமாக இருக்கும் இந்திய கிராமப்புறங்களில் கரோனோ தீநுண்மியின் பரவலைக் கணிப்பதும் கட்டுப்படுத்துவதும் கடினமாக இருப்பதால் கடந்த ஆண்டை விட இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் என்பது பொருளாதார வல்லுனர்களின் கணிப்பு.
  • ஒரு நாட்டின் உழைக்கும் வயது மக்கள்தொகையின் விகிதமான தொழிலாளர் பங்கேற்பு விகிதம் நமது நாட்டில் கரோனா தீநுண்மியின் முதல் அலைக்கு பின் 2019-20-ஆம் ஆண்டில் சராசரி அளவான 42.7 சதவீதத்திலிருந்து 39.9 சதவீதமாகக் குறைந்தது என்று இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • வேலை இழப்பு, வேலையின்மை ஆகியவை முதல் அலை போலன்றி இம்முறை கிராமப் புறங்களில் அதிக அளவில் காணப்படுவதாக "இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்' கூறுகிறது.
  • இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் சமீபத்திய தகவல் 2021, மே மாதம் மூன்றாவது வாரத்தில் நமது நாட்டின் நகர்ப்புறங்களில் வேலையின்மை 14.71 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 14.34 சதவீதமாகவும் இருந்ததாகத் தெரிவிக்கிறது.

பொருளாதாரத்தை உயர்த்துவோம்

  • இந்தியாவிற்கு ஏறத்தாழ 46% வருவாய் தரும் கிராமப்புறங்களில் நீடிக்கும் கரோனா தீநுண்மியின் இரண்டாவது அலை, அங்கு வசிக்கும் முறைசாரா, குறைந்த வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள் மீது பொருளாதார தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • இந்திய கிராமப்புற முறைசாரா தொழிலாளர்கள் தீநுண்மியின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உத்தரவாதமற்ற வேலைகளை செய்து வாழ்ந்து வருகின்றனர்.
  • தீநுண்மிப் பரவல் அவர்களுக்கோ அவர்கள் குடும்பத்தாருக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் போது அவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியினை சந்திக்க நேரிடும்.
  • நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் கிராமப்புறங்களில் தேவையிலும் நுகர்விலும் உண்டான பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் ஆழ்ந்த முடங்கு நிலையினை நோக்கி நகர்வதற்கு முக்கிய காரணம் என்று தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் 2020-21 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவு கூறுகிறது.
  • இந்த காலகட்டத்தில் விவசாயத்துறை மட்டுமே 20.40 லட்சம் கோடி ரூபாயுடன் சாதகமான வளர்ச்சியினை பதிவு செய்தது.
  • விவசாயத் துறையின் வளர்ச்சி, கிராமப்புற அரசாங்க திட்டங்கள் காரணமாக முதல் அலையின் போது கிராமப்புற பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
  • ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்பியதால் விவசாயத் துறையில் வேலைவாய்ப்பு 3% அதிகரித்தது.
  • அதிக விளைச்சல் இருந்தபோதிலும் சாதகமற்ற வர்த்தகம் குறைந்த வருமானத்தையே விவசாயத் துறைக்கு வழங்குகிறது. குறைந்த வருமானமும் நுகர்வும் சாதகமற்ற வர்த்தகத்திற்கு காரணமாக அமைகின்றன.
  • 2019-20, 2020-21 நிதியாண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.10.56 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
  • அதாவது 7.3% வீழ்ச்சி அடைந்துள்ளது. தனியார் நுகர்வு இல்லாமல் பொருளாதார வளர்ச்சி இருக்காது என்ற சூழலில், பொருளாதார மந்தநிலை தனியார் நுகர்வு பெருமளவில் குறைய வழிவகுத்தது.
  • இந்தியாவில் 50 சதவீத தொழிற்சாலைப் பணி, கட்டுமான பணிகள் கிராமப்புறங்களில் நடைபெறுகின்றன.
  • குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பினை தரும் இத்துறைகள் பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப் பட்டன. இதுவும் கிராமப்புறத் தொழிலாளர்களின் வருமானத்தில் சரிவினை ஏற்படுத்தியது. இதனால் தனியார் நுகர்வும் குறைந்தது.
  • நம்நாடு நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் சூழலில் 2019-20-ஆம் ஆண்டில் ரூ.83,21,701 கோடியாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57.1 சதவீதம்) இருந்த தனியார் நுகர்வு செலவு 2020-21-ஆம் ஆண்டில் ரூ.75,60,985 கோடியாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56 சதவீதம்) குறைந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் தனியார் நுகர்வு செலவு 2019-20-ஆம் ஆண்டில் ரூ.62,056 ஆக இருந்தது. அதுவே 2020-21ஆம் ஆண்டில் ரூ.55,783 ஆக குறைந்தது.
  • இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். விவசாயம் போற்றும் கிராமங்களே நமது தேசத்தின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தி. விவசாயம் போற்றுவோம்; கிராமம் காப்போம்; இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவோம்.

நன்றி: தினமணி  (25 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்