TNPSC Thervupettagam

கிரிப்டோ நாணயங்களுக்கு மணி கட்டுவது எப்படி?

February 22 , 2021 1232 days 553 0
  • கிரிப்டோ நாணயம் (கிரிப்டோகரன்ஸி) தொடர்பாகச் சட்டம் இயற்றவிருப்பதாக அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. அப்படிச் சட்டமியற்றினால், இது போன்ற நாணயப் பரிமாற்ற முறைகள் இந்தியாவில் எந்த அளவுக்குச் சட்டபூர்வமானவை என்பதில் தெளிவு ஏற்பட்டு விடும்.
  • அவற்றைச் சட்டபூர்வமான நாணயமாகக் கருதவில்லை என்று அரசு அவ்வப்போது கூறிவந்தாலும், இது தொடர்பில் இன்னும் குழப்ப நிலையே நீடிக்கிறது. இந்த நாணயத்தின் மதிப்பு அதிக அளவு ஏற்ற-இறக்கங்களுக்கு உள்ளாகக்கூடியவை, சட்டத்துக்குப் புறம்பான இணையதளப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படுபவை, முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருப்பவை என்ற புரிதல் பலரிடமும் இருக்கிறது.
  • என்றாலும் அரசு இன்னமும் ஒழுங்காற்று விதிமுறைகள் எதையும் உருவாக்கியிருக்கவில்லை.
  • இந்திய ரிசர்வ் வங்கி 2018-ல் வங்கிகளுக்கெல்லாம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. கிரிப்டோ நாணயத்தைக் கொண்டு வணிகம் செய்பவர்களுக்கு வங்கிகள் சேவையளிக்கக் கூடாது என்று அதில் கூறப்பட்டிருந்தது.
  • எனினும் இதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்தியாவில் கிரிப்டோ நாணயம் தடை செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தொடர்ந்து கூறிவந்திருந்ததால், அந்தச் சுற்றறிக்கை, அரசின் முந்தைய அறிவிப்புக்குப் பொருந்தும்படி இல்லை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
  • தடை விதிக்கப்படாத ஒன்றைப் பயன்படுத்தினால் சேவையை மறுப்பது சரியல்ல என்பதே உச்ச நீதிமன்றத்தின் நிலை. தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அமைப்புகள் ஏதும் கிரிப்டோ நாணயப் பரிவர்த்தனையால் பாதிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.
  • நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் அரசு, இது தொடர்பாக ஒரு சட்டத்தைக் கொண்டுவரவிருப்பதாகச் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்தார். இதற்கென்று கட்டுப்பாடுகள் விதிப்பதில் உள்ள சிக்கலைப் பற்றியும் அவர் பேசியிருக்கிறார்.
  • “கிரிப்டோ நாணயங்கள் உண்மையில் நாணயங்களும் அல்ல, சொத்துகளும் அல்ல, பங்குப் பத்திரங்களும் அல்ல, சரக்குகளும் அல்ல.
  • அவற்றைப் பரிவர்த்தனை செய்பவர்களை அடையாளமும் காண முடியாது என்பதால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நேரடியான சட்ட வழிமுறைகள் ரிசர்வ் வங்கி, செபி போன்றவற்றிடம் இல்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
  • கிரிப்டோ நாணயங்கள் சட்டபூர்வமானவையா என்பது பற்றி தெளிவு இல்லாத சூழலிலும், அதற்கென்று இந்தியாவில் வாடிக்கையாளர்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
  • இந்த நாணயங்களில் மிகவும் பிரபலமான பிட்காயினின் விலை புதிய உச்சங்களைத் தொட்டிருப்பதாலும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் போன்றோரின் ஆதரவு பிட்காயினுக்கு இருப்பதாலும் இந்த நாணயங்கள் மீது மேலும் மேலும் கவர்ச்சி கூடிக்கொண்டுதான் போகும்.
  • ஆகவே, சட்டம் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது. கிரிப்டோ நாணயங்களைக் கொண்டு பரிவர்த்தனைகள் செய்யும் பெரிய மனிதர்கள், அரசில் செல்வாக்கு செலுத்தி அவற்றைத் தடை செய்துவிடாமல் ஆனால் - ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளை மட்டும் கொண்டுவரும்படி பார்த்துக்கொள்வார்கள் என்றே தோன்றுகிறது.
  • கச்சிதமான ஒழுங்காற்று நெறிமுறைகளைக் கொண்டுவருவதே நல்லது. ஏனெனில், தடை என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. கிரிப்டோ நாணயங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதும், இணையக் கட்டுப்பாடு நிலவுவதுமான சீனாவிலும்கூட கிரிப்டோ நாணயங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டதாகக் கூற முடியாது.
  • ஆகவே, கண்காணிப்பு வழிமுறைகளை உருவாக்குவதே நல்ல நகர்வாக இருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (22-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்