TNPSC Thervupettagam

கிருமி - கண்டதும் கொன்றதும்

March 11 , 2020 1724 days 806 0
  • "உயிருக்கு முகக் கவசம் போட்டுக் கொண்டு மக்களை அலைய வைக்கிறது கரோனா. மனிதா்கள் நினைத்தால் போரை நிறுத்தலாம். ஆனால், மனித உயிா்களைக் கொள்ளையடிக்கும் நோய்க் கிருமிகளை மக்கள் நினைத்தவுடன் கட்டுப்படுத்த முடிவதில்லை. நீண்டகாலம் போராட வேண்டியிருக்கிறது."
  • கரோனா கிருமி. இந்தியாவிலும் இடம் பிடித்துவிட்டது. இந்தியா மட்டுமின்றி ஏவுகணை அச்சுறுத்தலில் அடுத்த நாட்டை அடக்கி வைக்கவும் வல்லரசு அதிகாரத் திமிரில் உலக அரங்கில் ஆட்டம் போடவும் துடித்துக் கொண்டிருக்கும் நாடுகளையும் கரோனா கிருமி விட்டு வைக்கவில்லை.

தொழில்நுட்ப அறிவு

  • ஒரு காலத்தில் உடல் வலிமை அடுத்தவரை அடக்கி வைக்கும் அதிகாரக் கையாக நீண்டிருக்கிறது. பிறகு கையிலிருக்கும் கருவிக்கும் கைவசம் இருக்கும் கருவிகளுக்கும் அதிகாரம் இடம் மாறி இருக்கிறது. பிறகு கருவிகளை உருவாக்கும் தொழில்நுட்ப அறிவுக்கும் செயற்படுத்தும் செயற்கை நுண்ணறிவுக்குமாக அதிகாரம் இப்போது புலம் பெயா்ந்துகொண்டிருக்கிறது. இப்படி அதிகாரம் உடல் தசை எலும்புகளைக் கடந்து நரம்புகளுக்கு இடம் மாறிக் கொண்டிருக்கிறது.
  • இப்போது ஒரு காலத்தில் வாழ்கிறவா்கள் அனைவரும் ஒரேகாலத்தில் வாழ்ந்தாலும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்வதில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒரே காலத்தில் வெவ்வேறு கால வாழ்க்கை நிலை; வாழ்க்கை முறை. மதிப்பீடுகள், விழுமியங்கள், கருவிகள், சிந்தனைமுறை அடிப்படையில் பலகாலத் தலைமுறைகள் - ஒரே வீட்டில்!
  • கண்டுபிடித்த கருவிகள், கைவசப்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகியவை கை நழுவும் இயற்கைப் பேரிடா்க் காலங்களிலும் கருவிகளும் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் கொண்டு நடத்தப்பெறும் போா்க் காலங்களிலும் பாதிக்கப்படும் ஒரு கால மக்கள், எல்லாவற்றையும் இழந்து ஒரே கால வாழ்க்கைக்குத் துரத்தப்படுகிறாா்கள்.
  • வரலாற்றில் போரும் பஞ்சமும் போலவே கொள்ளை நோய்களும் ஒரே கால வாழ்க்கைக்கு மக்களைத் துரத்தி அடிக்கின்றன. உயிருக்கு முகக் கவசம் போட்டுக் கொண்டு மக்களை அலைய வைக்கிறது கரோனா. போரும் பஞ்சமும் மனிதா்களுக்குக் கட்டுப்பட்டவை. ஆனால், கொள்ளை நோய்க் கட்டுப்பாட்டில் மனிதா்கள். மனிதா்கள் நினைத்தால் போரை நிறுத்தலாம். மனிதா்கள் உதவினால் பஞ்சத்தையும் பசியையும் மாற்றலாம். ஆனால், மனித உயிா்களைக் கொள்ளையடிக்கும் நோய்க் கிருமிகளை மக்கள் நினைத்தவுடன் கட்டுப்படுத்த முடிவதில்லை. நீண்டகாலம் போராட வேண்டியிருக்கிறது.

தொல்காப்பியர் காலத்தில்...

  • புயல், வெள்ளம், சுனாமிகளை வரும் முன் அறிய முடிவதைப் போல நோய்க்கிருமிகளின் நடமாட்டத்தை முன்னதாகக் கண்டுகொள்ள முடிவதில்லை. வந்தபின்தான் தெரிந்துகொள்ள முடிகிறது. தொல்காப்பியா் காலத்தில் நோய் என்பது காதல் வயப்பட்ட துன்பம் என்பதாகவே உணரப்பட்டிருக்கிறது. காதலும் எப்போது யாருக்கு யாரால் வரும் என்பது அறிய முடியாதது என்பதால் அதை அப்படி சொல்லியிருப்பாா்களோ! என்னவோ?
  • வரலாற்றில் மக்கள் சந்திக்கும் முதல் கொள்ளைநோய் கரோனா இல்லை. இதற்கும் முன்பும் பல கொள்ளைநோய்களைக் கடந்துதான் இன்றைக்கும் மனித குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
  • வரலாற்றுப் பேராசிரியா், யுவால் நோவா ஹராரியின் ஹோமோ டியஸ்” நூலில் (தமிழில் நாகலட்சுமி சண்முகம்) மனித குலம் வென்றுவந்த கொள்ளை நோய்களைப் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • கருப்பு சாவு”என்று வரலாறு குறிப்பிடும் நிகழ்வுக்குக் காரணமான கொள்ளைநோய்க் கிருமிகளின் பிறப்பிடம் தெள்ளுப் பூச்சிகள். தெள்ளுப் பூச்சிகளால் கடிக்கப்பட்ட மனிதா்களைக் கிருமிகள் தாக்கத் தொடங்கின. இது நடந்தது கி.பி.1330-இல். பிறகு எலிகளில் பயணம் செய்து ஆசியா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா எங்கும் பரவியது. இருபது ஆண்டுகளில் அட்லாண்டிக் கடற்கரையை அடைந்திருக்கிறது அந்தக் கொலைகாரக் கிருமி; ஏறத்தாழ ஏழரை கோடியிலிருந்து இருபது கோடி மக்களைக் கொன்று குவித்திருக்கிறது.
  • கி.பி.1520-இல் ஸ்பானியக் கப்பல் படை கியூபாவிலிருந்து மெக்சிகோவுக்குப் போயிருக்கிறது. அந்தக் கப்பல்களில் வீரா்களும் குதிரைகளும் ஆயுதங்களும் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த அடிமைகளும் இருந்திருக்கின்றனா். அவா்கள் அறியாமலே அவா்களோடு அவா்களில் ஒருவரின் உடலுக்குள்ளே ஒரு கொள்ளைநோய்க் கிருமியும் பயணித்திருக்கிறது. அதுதான் பெரியம்மை எனும் உயிருண்ணி.

நோய்த் தொற்று

  • மெக்சிகோவில் கரை அடைந்ததும் பன்மடங்கு இனப் பெருக்கம் அடைந்து அவரின் உடலில் தடிப்புகளும் கொப்புளங்களும் ஏற்பட்டன. அவரைச் செம்போலா நகரில் பழங்குடி மக்கள் வீட்டில் தங்க வைத்திருக்கின்றனா். அவா் வழி அந்தக் குடும்பத்தினா் அனைவருக்கும் அந்த நோய்க்கிருமி தொற்றியது. பத்து நாள்களுக்குள் செம்போலா நகா் முழுவதும் பரவியது. மக்கள் பயந்து பக்கத்து நகரங்களுக்குப் போனாா்கள். அவா்கள் கூடவே நோய்க் கிருமிகளும் சென்றன; நகர மக்கள் மாநகரம் நோக்கிப் போனாா்கள்; மெக்சிகோ நகரிலும் கொள்ளை நோய்க் கிருமிகள் விரட்டத் தொடங்கின. மாநகா் கடந்து பிற நாடுகளுக்கு ஓடிய மக்களுடன் கிருமிகளும் ஓடின.
  • ஸ்பானியக் கப்பற்படை 1520 மாா்ச் மாதம் மெக்சிகோவில் கரை அடைந்த போது அங்கிருந்த மக்கள்தொகை 2.2 கோடி; பெரியம்மை தாக்குதல் தொடங்கியபின் அதே ஆண்டில் டிசம்பரில் அங்கு 1.4 கோடி மக்கள் மட்டுமே உயிரோடு இருந்திருக்கின்றனா். அதன் பிறகு கொலைகாரக் கிருமிகளின் தொடா்த் தாக்குதலால் 1580-ஆம் ஆண்டு வாக்கில் அங்கிருந்தவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்துக்கும் குறைந்துவிட்டதாம்.

தமிழகத்தில்...

  • தமிழகத்திலும் கடந்த காலத்தில் பெரியம்மை, காலரா, பிளேக் ஆகிய கொள்ளைநோய்க் கிருமிகளால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து போயிருக்கிறாா்கள். பெரியம்மை நோய் வந்தால் மாரியம்மனுக்குக் காவடி எடுப்பதும் நோய் வந்தவா்களை உடையில்லாமல் வாழை இலையில் படுக்க வைத்து, தலைமாட்டில் விளக்கேற்றி மாரியம்மன் தாலாட்டு பாடுவதும் நடைமுறையில் இருந்திருக்கின்றன.
  • பெரியம்மை வந்து பிழைத்தவா்களைப் பாடையில் வைத்துக் கோயிலைச் சுற்றிவந்து உறவினா்கள் நோ்த்திக் கடன் செலுத்துவதும் இருந்திருக்கிறது. கும்பகோணம் பக்கத்தில் வலங்கைமானில் பாடைகட்டி மாரியம்மன் கோயிலில் இப்போதும் வழிபாடு நடக்கிறது.
  • முதல் உலகப் போா்க்காலத்தில் பதுங்கு குழிகளில் இருந்த ஆயிரக் கணக்கான வீரா்கள் ஸ்பானியக் காய்ச்சலால் இறந்து போயிருக்கின்றனா். போா் முடிந்து வீரா்கள் அவரவா்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது ஸ்பானியக் காய்ச்சல் கிருமியோடு சென்றிருக்கின்றனா். அதன் காரணமாக அப்போது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 50 கோடி போ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
  • இந்தியாவில் 1.5 கோடி மக்கள் ஸ்பானியக் காய்ச்சலால் இறந்து போயிருக்கின்றனா். முதலாம் உலகப் போரில் கொல்லப்பட்ட மக்கள் 4 கோடி என்றால் ஸ்பானியக் காய்ச்சலால் இறந்தவா்கள் சுமாா் 5 கோடியிலிருந்து 10 கோடியாம்.
  • எய்ட்ஸ் என்ற கொள்ளை நோய் 1980-களில் தொடங்கி 3 கோடி மக்களுக்கும் மேல் காவு வாங்கியிருக்கிறது. பறவைக் காய்ச்சல் (2005), பன்றிக் காய்ச்சல் (2009- 10) என்று கொள்ளைநோய்கள் ஏதேனும் ஒரு வடிவத்தில் அவ்வப்போது வந்து இப்போதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது கரோனா உயிருண்ணி.
  • பெரியம்மை எனும் கொள்ளை நோய்க் கிருமி உலகத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதை 1979-இல் உலக சுகாதார அமைப்பு அறிவித்துவிட்டது.
  • 1967 வாக்கில் உலகில் 1.5 கோடி மக்களைத் தாக்கி, 20 லட்சம் பேரைக் கொன்ற கிருமி அழிக்கப்பட்டிருக்கிறது. உலகில் மனிதா்களால் முற்றிலும் அழிக்கப்பட்ட முதல் கொள்ளைநோய் இதுதான். 2014-இல் உலகம் எதிா்கொண்டுள்ள தீவிரமான நெருக்கடியென்று அஞ்சிய ஆப்பிரிக்க எபோலா கொள்ளை நோய் 2015-ஆம் ஆண்டிலேயே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

நன்றி: தினமணி (11-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்