TNPSC Thervupettagam

கிருஷி 75: இலக்கிய இயக்கம்

August 31 , 2024 6 hrs 0 min 7 0

கிருஷி 75: இலக்கிய இயக்கம்

  • ஒரு சூறாவளிபோல நெல்லைக்கு வந்து சேர்ந்தவர், கிருஷி என்ற ஆசிரியர் ராமகிருஷ்ணன். 50 ஆண்டுகளாக திருநெல்வேலியில் வசித்துவரும் கிருஷிக்குச் சொந்த ஊர் கரிசல்காடான விளாத்திகுளம். இசை மேதை விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள் உலவிய அந்தச் சிற்றூரில் படித்து, வளர்ந்து, நண்பர்களோடு சுற்றி, விளாத்திகுளம் சுவாமிகள் மறைந்தபோது, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு மயானக்கரை வரை சென்றவர் இவர்.
  • அவரது மாமா மகன் பரமசிவன் மூலம் நூலகத்திற்குச் செல்லும் பழக்கம் ஏற்பட்டுப் புத்தக வாசிப்பு தொடங்கியது. எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தும் வீட்டுப் பொருளாதாரச் சூழலால் மேற்கொண்டு படிக்கவில்லை. சாலையில் உள்ள மைல் கற்களுக்கு பெயின்ட் அடித்தார்.
  • மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களோடு சேர்ந்து குழிகள் தோண்டவும், மின் கம்பங்கள் நடுவதுமான பணிகளில் ஈடுபட்டார். ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், திருநெல்வேலியில் இருந்து அழைப்பு வந்தது அவரது வாழ்வின் திருப்புமுனை. இப்படியாக நெல்லை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு வந்து சேர்ந்தார் கிருஷி.
  • படிப்பு முடிந்து கோவில்பட்டியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. அப்போது கோவில்பட்டியில் தெருவுக்குத் தெரு படிப்பகங்கள் இருக்கும். எல்லா தினசரி செய்தித்தாள்களையும் படிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார்.
  • கட்டுரையாளர்கள் ஐ.மாயாண்டிபாரதி, அறந்தை நாராயணன் ஆகியோரின் எழுத்துகள் மீது தீராத காதல் உண்டு அவருக்கு. கோவில்பட்டியில் அப்போது தோழர் பால்வண்ணம் தலைமையில் ஆர்.எஸ்.மணி, ஜவஹர், முத்தையா, கோபால்சாமி ஆகியோர் கொண்ட குழு ஒன்றுண்டு. அதில் சென்று ஐக்கியமானார் கிருஷி.
  • தொடர்ச்சியாய் புத்தகங்கள் வாசிப்பது, எழுத்தாளர் கி.ராஜநாராயணனுடன் இலக்கியம் பேசுவது, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று கழிந்த காலம் அது. அங்குதான் தட்டி போர்டு எழுதும் பழக்கம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நெல்லையில், ஹார்லிக்ஸ் அட்டை டப்பாவில் கறுப்பு மையால் தூரிகை கொண்டு விதவிதமாய் எழுதி, மின் கம்பங்களில் அழகுறக் கட்டிவைக்கப் பழகிக்கொண்டார்.
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலிக் கிளையின் ஆணிவேர் கிருஷிதான். நல்ல படைப்பாளியை, நல்ல ஓவியரை, நல்ல இசைக் கலைஞரை மனம் திறந்து பாராட்டும் வழக்கம் அவருக்கு உண்டு. இவருக்கு தமிழ்நாடு அரசு 2007 இல் நல்லாசிரியர் விருது கொடுத்துக் கெளரவப்படுத்தியது.
  • ‘மழை வரும் பாதை’ என்ற ஒரு கவிதைத் தொகுப்பை கிருஷி வெளியிட்டுள்ளார். அதே நேரம், இவர் சிறந்த வாசகர். இலக்கிய இயக்கமாகச் செயல்பட்டுள்ளார். எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், உதயசங்கர், அப்பணசாமி உள்ளிட்ட பலருக்கு ஆதர்சமாய்த் திகழ்ந்தவர்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்