TNPSC Thervupettagam

கிறிஸ்டின்சென்: அறியப்படாத சமூக ஊடக முன்னோடி!

October 21 , 2024 89 days 117 0

கிறிஸ்டின்சென்: அறியப்படாத சமூக ஊடக முன்னோடி!

தொழில்நுட்ப எழுத்தாளர்:

  • வார்ட் கிறிஸ்​டின்சென் (Ward Christensen) அமைதியாக இறந்திருக்​கிறார். அவரது மறைவு குறித்துக் குறும்ப​திவுகளோ, குறும் காணொளிகளோ அதிகம் இல்லாமல், சமூக ஊடகத்தின் பேசுபொருளா​காமல் போனதை நம் காலத்து முரண் என்றுதான் சொல்ல வேண்டும். புகழ் வெளிச்​சத்தை நாடாதவ​ராகவே வாழ்ந்து மறைந்த, தனது கண்டு​பிடிப்​புக்காக ஒருபோதும் மார்தட்​டிக்​கொள்ளும் இயல்பைக் கொண்டிராத கிறிஸ்​டின்சென் இதைப் பொருட்​படுத்​தி​யிருக்க மாட்டார் என்பது மட்டும் அல்ல, தனது மரணம் தொடர்பான பரபரப்​பின்மையை விரும்பவே செய்திருப்​பார்.
  • அதுவே அவரது இயல்பு. தன்னைவிட, தனது கண்டு​பிடிப்பு தொடர்​பாகவே மற்றவர்கள் பேசுவதை கிறிஸ்​டின்சென் விரும்​பியிருக்​கலாம்​. எனினும், ‘பிபிஎஸ். கண்டு​பிடிப்​பாளரும் நம் ஆன்லைன் யுகத்தை வடிவமைத்​தவருமான கிறிஸ்​டின்சென் மரணம்’ என்னும் ‘அர்ஸ் டெக்னிகா’ தொழில்​நுட்பச் செய்தித் தளத்தின் இரங்கல் செய்தியின் தலைப்பே அவரைப் பற்றிக் கச்சிதமாக உணர்த்தி​விடு​கிறது.

முன்னோடிச் சேவை:

  • பிபிஎஸ் என்பது ‘புல்​லட்டின் போர்டு சிஸ்டம்’ (Bulletin board system) எனப்படும் தகவல் பலகை அமைப்பைக் குறிக்​கும். 1978ஆம் ஆண்டு கிறிஸ்​டின்​சென், தனது நண்பரான ரேண்டி சூயசுடன் (Randy Suess) இணைந்து உருவாக்கிய தகவல் பலகை சேவைதான், இன்றைய சமூக ஊடகச் சேவைகளுக்கான முன்னோடிச் சேவைகளில் ஒன்று என்பது பலரும் அறியாதது. சமூக ஊடக முன்வரலாற்றின் முக்கிய நிகழ்வு​களில் ஒன்றாக அமையும், தகவல் பலகைச் சேவையை ஒரு விதத்​தில், முதல் சமூக ஊடகச் சேவை என்றுகூடச் சொல்லலாம். அதற்குச் சில ஆண்டு​களுக்கு முன்னரே, கம்ப்​யூட்டர் மெமரி எனும் சமூக ஊடக முன்னோடி முயற்சி மேற்கொள்​ளப்​பட்​டிருந்​தா​லும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான முதல் டயல் அப் தகவல் பலகை அமைப்பாக, கிறிஸ்​டின்சென் – சூயஸ் உருவாக்கிய சிபிபிஎஸ் (CBBS) அமைந்தது.
  • அமெரிக்​காவின் சிகாகோ பகுதி கணினி ஆர்வலர்​களுக்கான தகவல் பரிமாற்ற அமைப்பாக, இந்தச் சேவையை அவர்கள் உருவாக்​கினர். அப்போது அந்நகரில் பெரும்​பாலானோரை வீட்டுக்குள் முடக்​கிப்​போட்​டிருந்த பெரும் பனி வீச்சுக்கு நடுவே இதை உருவாக்​கினர். தொலைபேசி மூலம் கணினியை அணுகி, அதன் வாயிலாக மற்றவர்​களுடன் தொடர்​பு​கொள்ளும் வகையில் தகவல் பலகைச் சேவை அமைந்​திருந்தது.
  • இது எல்லாமே அந்தக் காலக்கட்​டத்தில் புதுமை என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதாவது, பயனாளிகள் தங்கள் வீட்டில் இருந்த கணினியி​லிருந்து தொலைபேசி வாயிலாக, தகவல் பலகை அமைப்பைத் தொடர்​பு​கொண்டு, அதில் தகவல்களை இடம்பெற வைக்கலாம். ஏற்கெனவே சக பயனாளிகள் பகிர்ந்த தகவல்​களைப் படித்​துப்​பார்க்​கலாம்.

சமூக ஊடகத்தின் தொடக்கப் புள்ளி:

  • ஏற்கெனவே பழக்கத்தில் இருந்த, பொதுவெளியில் தகவல் பகிர்​வுக்கான பாரம்பரிய வடிவான கரும்பலகை சார்ந்த அறிவிப்புப் பலகை சேவையின் ஆன்லைன் நீட்டிப்பாக இந்தச் சேவை உருவானது. தகவல் பலகைச் சேவையில் இருந்தே ஃபேஸ்​புக், டிவிட்டர், யூடியூப் எனப் பரந்து விரியும் சமூக ஊடகச் சேவைகள் உருவான​தாகக் கருதலாம்.
  • ஆம்! தகவல் பலகை அமைப்பு, சமூக ஊடகத்தின் தொடக்கப் புள்ளி​களில் ஒன்று! தகவல் பலகை இணையத்​துக்கு முந்தைய சேவை அல்ல என்றாலும், இணையம் சாராமல் உருவான சேவை என்பது கவனிக்​கத்​தக்கது. ஆம், இணையம் என்பது நாம் அறிந்த வகையில் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல், ராணுவம், ஆய்வு - கல்வி சார்ந்த பயன்பாட்டுக்கு மட்டுமே அறியப்​பட்​டிருந்த காலத்​தில், மக்களுக்கான தகவல் பரிமாற்ற வசதியாகத் தகவல் பலகை அறிமுக​மானது.
  • பர்சனல் கம்ப்​யூட்டர் எனச் சொல்லப்​படும் தனிநபர் கணினிகள் அப்போதுதான் அறிமுகம் ஆகி, பரவலாகத் தொடங்கி​யிருந்தன. தொழில்​நுட்பப் பித்தர்​களைக் கடந்து, மக்களில் பலரும் ஆர்வத்​துடன் கணினியைப் பயன்படுத்தத் தொடங்கி​யிருந்​தனர். கணினியை இயக்கவே, ஓரளவாவது கோடிங் திறன் தேவை எனக் கருதப்பட்ட நிலை. கணினியில் நிரல் எழுதலாம், வீடியோ கேம் விளையாடலாம் என்றிருந்த நிலையில், தொலைபேசி ‘மோடம்’ எனும் சாதனத்​துடன் இணைத்துத் தகவல் பகிர்​விலும் ஈடுபடலாம் என்னும் புதிய சாத்தி​யத்தைத் தகவல் பலகைச் சேவை உண்டாக்​கியது.

நினைத்​துப் ​பார்க்க முடியாத அற்புதம்:

  • இதற்குத் தேவையான நிரலை எழுதி​யதோடு, மோடம் வாயிலாகக் கணினிகள் கோப்புப் பரிமாற்றம் செய்து​கொள்​வதற்கான படிமுறையையும் கிறிஸ்டின்சென் உருவாக்​கினார். தகவல் பலகை அமைப்பின் மையமாக, இந்தச் சேவையின் நிரல் கொண்ட கணினி விளங்​கியது. தொலைபேசி​யுடன் இணைக்​கப்பட்ட இந்தக் கணினியை, பயனாளிகள் தங்கள் கணினி வாயிலாகத் தொலைபேசியில் அழைத்து அணுக முடிந்தது. கணினி நிரல் உருவாக்கிய டிஜிட்டல் தகவல் மேடையில் அவர்கள் தகவல்​களைப் பரிமாறிக்​கொள்ள முடிந்தது.
  • உள்ளூர்ப் பரப்பில் இருந்த கணினி ஆர்வலர்கள், ஆன்லைன் பரப்பில் சந்தித்துத் தங்களுக்குள் உரையாட முடிந்தது யாரும் நினைத்​துப்​பார்க்க முடியாத அற்புதமாக அமைந்தது. அப்போதைய தொலைபேசி தொடர்புக் கட்டணத்​தையும் பொருட்​படுத்​தாமல் கணினி ஆர்வலர்கள் பலரும் சிபிபிஎஸ் தகவல் பலகையில் இணைந்து இந்தச் சேவையைப் பிரபலமாக்கினர்.
  • இதன் விளைவாக, பர்சனல் கம்ப்​யூட்டர் ஆர்வலர்​களுக்காக நடத்தப்​பட்டு வந்த தொழில்​நுட்ப இதழான ‘பைட்’ (Byte), பிபிஎஸ் சேவை பற்றிய கட்டுரையை வெளியிட்டது. சூயசுடன் இணைந்து கிறிஸ்​டின்சென் எழுதிய இந்தக் கட்டுரை​யில், தகவல் பலகை சேவை விரிவாக அறிமுகம் செய்யப்​பட்​டிருந்​ததோடு, அதை உருவாக்​கிக்​கொள்​வதற்கான வழிமுறையும் விளக்கப்பட்டிருந்தது.
  • இந்தக் கட்டுரையை வாசித்து, தகவல் பலகைச் சேவையால் ஈர்க்​கப்பட்ட பலரும், தங்கள் பகுதியில் இதே போன்ற தகவல் பலகையை உருவாக்​கிக்​கொள்ளும் முயற்​சியில் ஈடுபட்​டனர். விளைவு, அடுத்த சில மாதங்​களில் அமெரிக்க நகரங்​களில் தகவல் பலகை அமைப்புகள் நூற்றுக்​கணக்கில் உருவாயின. ஒவ்வொரு பலகையும் அந்தந்தப் பகுதிக்கான உள்ளூர் ஆன்லைன் மேடையாக விளங்கியது.
  • இதன் அடுத்த கட்டமாக, உலகின் மற்ற நாடுகளிலும் தகவல் பலகை வசதி விரிவடைந்தது. 1980களின் மத்தி​யில், டாம் ஜென்னிங்ஸ் (Tom Jennings) என்னும் மென்பொறி​யாளர் தனித் தகவல் பலகைகளை ஒன்றிணைத்து பரஸ்பரம் தொடர்​பு​கொள்​ளக்​கூடிய படிமுறையை உருவாக்​கினார். இதன் பயனாக உலகம் முழுவதும் இருந்த தகவல் பலகைகள் இணைந்து ஃபிடோநெட் (FidoNet) எனப்படும் பயனர் வலைப்​பின்னல் உருவானது.
  • தொலைபேசிகளையும் மோடம்​களையும் கொண்டு இணைக்​கப்பட்ட ஃபிடோநெட் வலைப்​பின்னல், உலகம் முழுவதும் இருந்த கணினிப் பயனாளிகள் தகவல் பரிமாற்​றத்​துக்கு வழிசெய்தது. ஃபிடோநெட் சார்ந்து, பல்வேறு தலைப்புகள், நோக்கங்கள் சார்ந்த பிரத்யேக வலைப்​பின்னல்​களும் உருவாகின.
  • உதாரணம், ‘பீஸ் நெட்’ (PeaceNet) என்னும் அமைதி வலை, ‘இகோ நெட்’ (EcoNet) என்னும் சூழல் வலை. தகவல் பரிமாற்றம் தவிர, கோப்புப் பகிர்வு, மென்பொருள் தரவிறக்கம், விவாதம் உள்ளிட்​ட​வற்றுக்கும் இந்தச் சேவையைப் பயன்படுத்​திக்​கொண்​டனர். ஒரு காலக்​கட்​டத்தில் ஃபிடோநெட் சேவையும், அதில் இணைந்​திருந்த ஆயிரக்​கணக்கான தகவல் பலகை சேவைகளும் பயனாளிகள் மத்தியில் பிரபலமாக இருந்தன.
  • தகவல் பலகை அமைப்பை நடத்துபவர்கள் ‘சிஸ்ஆப்’ எனக் குறிப்​பிடப்​பட்​டனர். தகவல் பலகை உலகுக்கு என, ‘போர்ட்​வாட்ச்’ போன்ற பிரத்​யேகப் பத்திரி​கைகளும் வெளிவந்தன. இவை எல்லாம், வெப் (web) எனச் சொல்லப்​படும் வைய விரிவு வலை, 1993இல் பொதுப் பயன்பாட்டுக்கு வந்து இணையத்தைப் பிரபல​மாக்கு​வதற்கு முன் நிகழ்ந்தவை. இணையத்​துக்கு வெளியே இருந்த இன்னொரு வலை என சொல்லக்​கூடிய ஃபிடோநெட், பின்னர் இணையம் மூலம் அணுக வழிசெய்​யப்​பட்டது.
  • வலை பரவலாகத் தொடங்கிய பிறகு, தகவல் பலகைச் சேவைகளின் முக்கி​யத்துவம் குறைந்து, ஒரு கட்டத்தில் அவை செல்வாக்கை இழந்தா​லும், பயனாளி​களுக்கு இடையிலான தகவல் தொடர்பு, கருத்துப் பரிமாற்றம், உருவாக்கம் உள்ளிட்​ட​வற்றைச் சாத்தி​ய​மாக்கும் சமூக ஊடகச் சேவைகளுக்கு முந்தைய முன்வடிவ​மாகத் தகவல் பலகை விளங்​குவதை மறந்து​விடக் கூடாது.

தன்னலமற்ற சேவை:

  • கிறிஸ்​டின்சென் தனது உருவாக்​கத்தால் பணமோ, புகழோ சம்பா​திக்க முயல​வில்லை. அதை விரும்பவும் இல்லை. தகவல் பலகை அமைப்பு உலகம் முழுவதும், பரந்து விரிவடைந்த நிலையில், தனது ஆக்கம் பற்றிப் பெருமிதமோ உரிமையோ கோராமல், மென்பொருள் வல்லுநராக, அமைதி​யாகத் தன் பணியைச் செய்து​கொண்​டிருந்​தார். அவரது சகாவான சூயஸ் சில ஆண்டு​களுக்கு முன் இறந்த நிலையில், அக்டோபர் 11இல் கிறிஸ்​டின் சென் 78 வயது வயதில் இயற்கை எய்தினார்.
  • கிறிஸ்​டின்சென் பற்றி​யும், அவரது ஆக்கம் பற்றியும் அறிய, தகவல் பலகைச் சேவை தொடர்பான ஆவணப்படத் திட்டத்​துக்காக அமைக்​கப்பட்ட இணையதளத்தை (http://www.bbsdocumentary.com/) அணுகலாம்​.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்