TNPSC Thervupettagam

கிளாஸ்கோ பருவநிலை மாநாடு: இலக்குகளை எட்டுமா உறுப்பு நாடுகள்?

November 2 , 2021 1005 days 486 0
  • பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் பருவநிலை மாநாட்டை (சிஓபி26) உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது.
  • பருவநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் அவையின் உடன்படிக்கை 1994-ல் நடைமுறைக்கு வந்தது. இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள நாடுகளின் வருடாந்திர மாநாடு இது.
  • பிரிட்டனுடன் இத்தாலியும் சேர்ந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. இதில் பங்கேற்கும் 200 நாடுகளும் முக்கியமான ஒரு கேள்விக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளன.
  • புவி வெப்பமாதலை 2030-க்குள் கட்டுப்படுத்தும் வகையில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு ஒவ்வொரு நாடும் என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தப்போகின்றன என்ற கேள்விதான் அது.
  • பெட்ரோலியம், நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களின் மிதமிஞ்சிய உபயோகத்தால், அவற்றிலிருந்து வெளியேறும் பசுங்குடில் வாயுக்கள் புவி வெப்பமாவதற்குக் காரணமாகின்றன.
  • புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்த பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் பாரிஸில் நடந்த மாநாட்டில் டிசம்பர் 12, 2015 அன்று ஒருமித்த கருத்தை எட்டின. அந்த உடன்பாடு நவம்பர் 16, 2016 முதல் நடைமுறைக்கும் வந்தது.
  • அதன்படி, தொழிற்புரட்சிக்கு முந்தைய சராசரி வெப்பநிலையைக் காட்டிலும் 2 டிகிரி செல்சியஸை புவியின் சராசரி வெப்பநிலை எட்டிவிடாமல் குறைக்கவும் அதன் முதற்படியாக 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலையைக் குறைப்பதற்கான முயற்சிகளை எடுக்கவும் இலக்குகள் தீர்மானிக்கப்பட்டன.
  • உலக நாடுகளின் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் திட்டங்கள் பல்வேறு தொழில் நுட்பங்களை உள்ளடக்கியதாக இருக்கக்கூடும்.
  • என்றாலும், நிலக்கரியிலிருந்து மின்னுற்பத்தி செய்வதைக் குறைத்தல், மின்சக்தியால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், மரங்களின் எண்ணிக்கை குறைவதைக் கட்டுப்படுத்துதல், பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடனடி பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கும் கடற்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திட்டமிடுதல் ஆகியவை அவற்றின் ஒரு பகுதியாக இருக்கும்.
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவது சிரமம் என்பதால் வளர்ந்த நாடுகள் அவற்றுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் கிளாஸ்கோ மாநாட்டில் வைக்கப்படலாம்.
  • ஆண்டொன்றுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்குவதாக 2009-ம் ஆண்டிலேயே வளர்ந்த நாடுகள் உறுதியளித்திருந்தாலும் இதுவரையில் அதைக் காட்டிலும் குறைவாகவே நிதியுதவிகளை அவை அளித்துவருகின்றன. 2025-க்குள்ளேனும் இந்த நிதியுதவிகள் உறுதியளித்தபடி கிடைக்க வேண்டும்.
  • கிளாஸ்கோ மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள், அரசுகளின் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் என்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள்.
  • தவிர பெட்ரோல், டீசல் பயன்பாட்டை உடனடியாக உலகம் முழுவதும் நிறுத்த வேண்டும் என்று குரல்கொடுத்துவரும் சூழலியல் பாதுகாப்பு அமைப்புகளும் அங்கு ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன. ஏற்கெனவே, உலகின் சராசரி வெப்பநிலை 1.1 செல்சியஸ் அதிகரித்துவிட்டது.
  • புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாகச் செயல் படுத்தா விட்டால் அதன் எல்லையில்லாத தீங்குகளிலிருந்து உலகம் தப்பிக்கவே இயலாது என்பது ஜீரணிக்க முடியாத உண்மை.

நன்றி: இந்து தமிழ் திசை (02 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்