TNPSC Thervupettagam

கீழடி என்பதே எங்கும் பேச்சு

January 18 , 2020 1821 days 924 0
  • தேனீக்களின் இயல்பு தேனைச் சேகரிப்பதுதான். ஆனால், சேகரிக்கப்பட்ட தேனின் பயனாளிகள் தேனீக்கள் இல்லை என்றாலும், தொடர்ந்து தேனீக்கள் தேனைச் சேகரித்துக்கொண்டே இருக்கும். தொல்லியல் ஆய்வாளர்கள் தேனீக்களைப் போன்றவர்கள். கல்வெட்டு, சிற்பம், அகழாய்வு, சுவடியியல், நாணயவியல், அருங்காட்சியகவியல் போன்றவை தொல்லியல் எழுத்துலகத்தின் பிரிவுகள். வரலாற்று மன்றங்கள், தொல்லியல் கழகங்கள், மரபுநடைக் குழுக்கள் எனப் பல அமைப்புகள் ஓசையின்றி இயங்கிக்கொண்டிருக்கின்றன.

கீழடி ஆய்வு

  • ‘கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ எனும் நூலைத் தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை தொல்லியல் பற்றி அறியாதவர்கள்கூடப் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் தவிர, கீழடி பற்றி வேறு சில நூல்களும் வெளிவந்துள்ளன. நிவேதிதா லூயிஸின் ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’ (கிழக்கு பதிப்பகம்), சு.வெங்கடேசனின் ‘வைகை நதி நாகரிகம்!’ (விகடன் பிரசுரம்), அமுதனின் ‘ஆதிச்சநல்லூர் - கீழடி: மண்மூடிய மகத்தான நாகரிகம்’ (தினத்தந்தி பதிப்பகம்), நீ.சு.பெருமாளின் ‘கீழடி: தமிழ் இனத்தின் முதல் காலடி’ (மேன்மை வெளியீடு), காந்திராஜனின் ‘கீழடி - மதுரை: சங்க கால தமிழர் நாகரிகம் ஓர் அறிமுகம்’ (கருத்துப் பட்டறை), சி.இளங்கோவின் ‘தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்: கீழடி வரை’ (அலைகள் வெளியீடு).
  • ஒடிசா அரசின் ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஜர்னி ஆஃப் அ சிவிலைசேஷன்: இண்டஸ் டு வைகை’ எனும் ஆங்கில நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. பாலகிருஷ்ணனின் இன்னொரு நூலான ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ நூல், பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கும்.

மொழிபெயர்ப்பு

  • புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியரான க.இராஜனின் ‘இயர்லி ரைட்டிங் சிஸ்டம்: அ ஜர்னி ஃப்ரம் கிராஃப்டி டு பிராமி’ நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
  • தொல்லியல் அறிஞர் வேதாசலத்தின் நான்கு நூல்கள் (தஞ்சாவூர் தனலெட்சுமி பதிப்பகம்) வந்துள்ளன.
  • ‘பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன்’, ‘பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு’, ‘பாண்டிய நாட்டு சமுதாயமும் பண்பாடும்’, ‘பாண்டிய நாட்டு வரலாற்று முறை சமூக நிலவியல்’. ரா.கோவிந்தராஜ் எழுதிய ‘தமிழ்நாட்டு எழுத்து வளர்ச்சி’, சுப்புராயலு பல்லாண்டுகளாக ஆய்வுசெய்து தொகுத்த ‘இடைக்கால ஊர்கள்’ நூல்களைத் தமிழகத் தொல்லியல் ஆய்வுக் கழகம் வெளியிட்டுள்ளது.
  • தமிழகத் தொல்லியல் நூல் வரலாற்றில் முதன்முறையாகப் பழங்கால ஊர்கள் பற்றிய தொல்லியல் நிலவரை நூல் வெளியிடப்படுவது இதுவே முதன்முறை.
  • குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய ‘இராஜேந்திர சோழன்’ என்னும் நூலை தஞ்சை அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆய்வறிஞர் குடவாயிலின் வாழ்நாள் லட்சியம் என்றே இந்நூலைக் கூற வேண்டும். சொ.சாந்தலிங்கம், பொ.இராசேந்திரன் இருவரும் இணைந்து எழுதிய ‘செம்பியன் மாதேவி: வாழ்வும் பணியும்’ நூலைப் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கரு.இராசேந்திரன் கண்டெடுத்துள்ள புதிய கல்வெட்டுக்களைத் தொகுத்து ‘புதுக்கோட்டை கல்வெட்டுக்கள்’ நூலைப் பதிப்பித்துள்ளார்.

மின் நூல்

  • ‘திருவண்ணாமலை மாவட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்’ என்னும் கையேட்டை, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் வெளியிட்டுள்ளது. இது தவிர, ‘பிரம்மதேசம்’, ‘வரலாற்றில் மாமண்டூர்’ ஆகிய இரு நூல்களை மின்னூலாக வெளியிட்டுள்ளது.
  • வேறு சில நூல்கள்: ஏழுமலை. கலைக்கோவனின் ‘பௌத்த வரலாற்றில் காஞ்சீவரம்’ (நீலம் பதிப்பகம்), வஞ்சியூர் க.பன்னீர்செல்வத்தின் ‘நடுவில் நாட்டு அரசுகளின் வரலாறு’, சாந்தினிபியின் ‘கல்வெட்டுகளில் தேவதாசியர்’ (விஜயா பதிப்பகம்), ‘கல்வெட்டு அகராதி’ (மர்ரே ராஜம் நிறுவன வெளியீடு). சேகர் பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், மெய்யப்பன் ஆய்வகம் உள்ளிட்ட வேறு சில பதிப்பகங்களும் தொல்லியல் தொடர்பான புத்தகங்களை வெளியிட்டுள்ளன.
  • 2019-ல் இலங்கை அரசின் இந்து சமய கலாச்சாரத் துறையினர் ‘இலங்கைத் தமிழ் சாசனங்கள்’ எனும் தலைப்பில் இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுகளை வெளியிட்டுள்ளனர். இது புத்தகக்காட்சியில் கிடைக்க வாய்ப்பில்லை. அடுத்த முறை இலங்கைத் தமிழ்ப் பதிப்பகங்களுக்குச் சில அரங்குகளை பபாசி ஒதுக்க வேண்டும் என்பது தொல்லியல் ஆர்வலர்களின் விருப்பம்.

நன்றி: இந்து தமிழ் திசை (18-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்